தண்நிலவே….

சம்மதம் தருவாய் தண்நிலவே

நிலவு தொடங்கி நீளும் உலகு முழுதும்

உலவும் இந்த மனம் முழுவதும் உன் நினைவே

 

மெல்ல வந்தாய் என் உலகில்

மௌனம் தந்தாய் என் மொழியில்

தென்றல் செய்தாய் என் நினைவில்

சாரல் பெய்தாய்  என் வழியில்

என்றெல்லாம்

செப்பிடுவேன் தினம் நூறு பொய்மை

அது உனக்காகும் இனிமை என்றால்

 

கால் கொண்ட புயலாய்

உடல் கொண்ட  நெருப்பாய்

உயிர் பறிக்க வந்தாய்

காதல் நோய் தந்தாய்

கடும் விஷமென  கொன்றாய்

என்றிடுவேன் இன்று மட்டும்

அதுதானே உண்மை.

 

சாகா வரம் கேட்கவில்லை

சந்தோஷம் அதுவும் கேட்கவில்லை

கனி மொழி

காதல் விழி

எதுவும் தேவையில்லை.

 

நொடி தோறும் உன் விழியில்

நூறு முறை சாக வேண்டும்

காதல் எனைக் கொல்லும்

கடும் வேதனை தினம் வேண்டும்

கோபம் சொன்னாலும்

அதை சொல்வது

நீ என் மீது என்றாக வேண்டும்

 

வருவாய் வழித்துணையாய் மலர்விழியே

சம்மதம் தருவாய் தண்நிலவே