காற்றாக நான் வருவேன் 3 (3)

மறுநாள் அபிஷேக்கின் பெற்றோர் இப்பொழுது வசிக்கும் வீட்டிற்கு செல்வதாக திட்டம்.

நேரில் சென்று திருமணம் நடந்த விதத்தை விவரித்தால் புரிந்து கொள்வார்கள் என அபிஷேக் நினைத்தான். மேலும் இவன் தனக்காக பெண் பார்க்கிறான் என ஏற்கனவே அம்மாவிடம் தெரிவித்து இருந்தான். அதை பற்றி நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ அம்மா பேசியதே இல்லை. உன் திருமணம் உன் இஷ்டம், என்பது போலவேதான் இதுவரை அவர் நடந்து கொண்டிருக்கிறார், அதனால் இத் திருமணத்தை எதிர்க்க மாட்டார் அம்மா. அப்பாவிடம் இவன் பேசி சில காலமாயிற்று. எப்பொழுதும் உள்ள கதைதான்.

இம்முறை தன் பெற்றோருடன் சில நாட்களாவது தங்க வேண்டும். தன் மனைவியுடன் அம்மா நன்கு பழக வேண்டும். அது இரு பெண்களுக்கும் நல்லது. இவ்விதமாக திட்டமிட்டுதான் அபிஷேக் தயனியுடன் தன் வீட்டிற்கு கிளம்பியதே!

பிரயாணத்தில் தயனி தூங்கிவிட்டாள். பின்னே இரவு முழுவதும் தூங்காமல் இருந்தால்…? தன் வீட்டின் பெரிய மதில் சுவரை தாண்டி, போர்டிகோவை நோக்கி தன் லேம்போவை வேகம் குறைத்து செலுத்திய அபிஷேக்,  புது மனைவியை எழுப்ப தொடங்கினான்..

“ஹேய் தயனி, தயனிமா வீடு வந்தாச்சு பாரு…”

“ம்..”, என்ற சத்தத்தை தவிர வேறு எந்த பதிலும் அவளிடமிருந்து இல்லை.

“முத முதல்ல அம்மா உன்னை பார்க்கிறப்ப இப்படியா தூங்கி வழிய போற…?”

அவ்வளவுதான் திடுதிப்பென எழுந்து அமர்ந்தவள், வேக வேகமாக பதட்டத்துடன் தன் உடையை சரி செய்து கொண்டாள். முக்காடு ஒழுங்காக இருக்கிறதா?

“ ஹேய்…இப்ப எதுக்கு இது?” அவள் முக்காடை பின் தூக்கிவிட்டான்.

பால் வடியும் அவள் முகம் பார்வைக்கு வந்தது. ஒரு கணம் ரசித்தான். அவள் முகத்தில் செம்மை அடர்ந்து பரவியது. தடுமாற்றத்துடன் அவசரமாக இவன் முகத்திலிருந்து தன் பார்வையை தாழ்த்தினாள்.. இருவர் முகத்திலும் மென் புன்னகை. அவள் பற்களிடம் மாட்டியிருந்த அவளது அடி உதட்டை மெல்ல தன் இரு விரல்களால் விடுதலை செய்தான். நொடியில் செவ்வானமாய் சிவந்தவள், முகத்தை வெளிபுறமாய் திருப்பி கொண்டாள்.

அடுத்த வினாடி, வீலென்ற அவளது அலறலில் வெளிறியது அவள் முகம். வாசலில் நின்றிருந்த அவனது அம்மா அவசரமாக தன் அருகில் நின்றிருந்த காவலாளியின் கையிலிருந்து M 16 ரைஃபிளை பிடுங்கியபடி கத்தினார்.

“ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு  கடைசியில என்னையே கடிக்க வந்துட்டியா…?” உறுமினார் அவன் தாய். அவர் கையிலிருக்கும் ரைஃபிள் குறிபார்ப்பது யாரை?  இவனையா?

“ஒழுங்கா அவள இங்க விட்டுட்டு ஊர் போய் சேர்” இரைந்தார் அவனது அம்மா.

எல்லாம் இவனுக்கு புரிந்தது உயிர் வலிக்க வலிக்க புரிந்தது.

தயனியை ஏமாற்றிய அத்தை இவனது அம்மாதான். தயனிக்கு திருமண நாடகம்  நடத்தியது இவனுடன்தான். ஐயோ! தயனி ஏற்கனவே இவனை பார்த்து பயந்து கொண்டிருக்கிறாளே! இனி…

சட்டென அவள் கையை பற்றினான். சில்லிட்டு விரைத்திருந்தது அது.

“எனக்கு நிஜமாவே எதுவும் தெரியாதுடா….ப்ளீஸ் என்ன நம்பு தயனி” கெஞ்சினான். ஆனால் அதற்கு மேல் அவனால் அவள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. அன்னையின் கையிலிருக்கும் ரைஃபிளின் எல்லையை விட்டு விலக வேண்டுமே!

சட்டென காரை வளைத்து வெளி கேட்டை நோக்கி விரைந்தான்.

செக்யூரிட்டியை கேட்டை மூட சொல்லி அன்னை அலறுவது இவனுக்கு கேட்டது. ஆக்ஸிலேட்டரை அழுத்தினான்.

இவனால் முழுவதுமாக நம்பகூட முடியவில்லை.

காரை நோக்கி தாறுமாறாக சுட்டார் இவனது அன்னை “துரோகி…துரோகி” என்று கத்தியபடி.

யாரை கொல்ல ஆசைபடுகிறார் இவனது அம்மா! தன் ஒரே மகனையா? மகனை கொன்றுவிட்டு அளவிடமுடியாத சொத்துகளை யாருக்கு சேர்க்கிறாராம்?

மனதின் வலியில் கண்ணில் ரத்தம் கண்ணீராய் வாராமல் போனது ஆச்சர்யமே! கேட்டை தாண்டி பறந்தது இவனது Lamborghini Aventador

இவன் புஜத்தை இரு கைகளாலும் பற்றி இவன் தோளில் தலை சாய்த்தாள் தயனி.  அத்தனை வேதனையிலும் உள்ளூறியது உயிர். தயனி இவனை நம்புகிறாள்.

“தயனிமா நாம இப்பவே சென்னை போயிடலாம்டா, அடுத்து என்ன பண்றதுன்னு…..ப்ளீஸ்டா…..டிக்கெட்…நம்ம டிக்கெட்டை ப்ரிபோன் பண்ணி இன்னைக்கே மாத்த முடியுதான்னு பாரேன்..ப்ளீஃஸ்…”

இவன் காரோட்ட லஅப்டாப்பில் அவள் மூழ்கினாள். அடுத்த மூன்று மணி நேரத்திலிருந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க, ஏர்போர்ட் செல்லும் வரை விமானமாக பயன்பட்டது அவனது கார்.

லக்கேஜ்களை அள்ளி போட்டுகொண்டு காரை அப்படியே விட்டுவிட்டு ஏர்போர்ட்டில் செக்கின் செய்தனர். அவனது அம்மாவின் திட்டம் என்னவென தெரியாமல் அங்கிருப்பது எவ்வளவு பாதுகாப்பு?

அதன்பின் காத்திருந்த நேரமும் ஒருவித அமைதியின்மையுடன் கழிய, ப்ளைட் டேக் ஆஃப் செய்த பின்னேதான் அமைதி.

கண்களெல்லாம் நிறைந்திருக்க, சிவந்த கண்களுடன், மனம் துடிக்க அமர்ந்திருந்த அபிஷேக்கை பார்த்த தயனி அவனை மெல்ல தன் தோள் மீது சாய்த்தாள். விரல்களால் கேசம் களைந்தாள்.

“அபிப்பா…” என்பதை தவிர வேறு எதையும் அவளால் பேச முடியவில்லை. என்ன சொல்லி ஆறுதல் சொல்ல?

அடுத்த பக்கம்