காதல் வெளியிடை final 2(3)

 

காலையில் ஷ்ருஷ்டி தன் தூக்கம் கலையும் நேர இயல்பின் படி சற்றாய் நெளிந்து கொடுக்க… அப்போதே புரிகிறது அவளை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என.

இவளவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஆம் நேற்று இவள் உட்கார்ந்திருந்த வகையில் கட்டிலில் அமர்ந்து இவளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“குட் மானிங் சிமிக் குட்டி” என நாளைத் துவக்கியவன்… எழுந்து கொள்ள முயன்றவளை மெல்லென பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்… அவளை ஒரு கையால் தோளோடு வளைத்து அவள் தலையை தன் தோளோடு சாய்த்தும் கொண்டான்.

இதுவரை இத்தனை அன்யோன்யமாயெல்லாம் அவனுடன் பழகவில்லையே அதில் அவளின் கன்னிமனம் ஒருவகையில் சிலிர்க்கவும் தடுமாறவும் செய்தாலும்… இன்னொரு வகையில் அது இன்னுமே சுகமாக இருக்க… இருந்த தூக்க கலக்கத்தில் இப்போதும் மூட முனைகிறது இவளது கண்கள்.

“சாரிபா நைட் வந்து நிறைய பேசனும்னுதான் நினச்சேன்… ஆனா” என்றவன் அதன் மேல் வார்த்தையில் எதையும் சொல்லாது இவள் புறமாய் திரும்பி இவளது பக்கவாட்டு நெற்றியில் ஏதோ இவளுக்கு வலித்து விடக் கூடாது என்பது போல், அத்தனை பதமாய், மெல்லென இதழ் ஒற்றினான்.

இவளை வளைத்திருந்த அவனது கை அவளது கையின் விரல்களுக்குள் சுகம் பெறும் அரவணைப்போடு பின்னிக் கொள்கிறது

வார்த்தை எதுவுமின்றியே புரிகின்றது இவளுக்கு, நேற்றைய நிலை இவளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே எத்தனை பிடித்திருக்கிறது என.

‘இந்த உறவில் மகிழ்வதென்பது இவள் மாத்திரம் இல்லையே… அவனும்தானே…’ நேற்றைய குழப்ப நினைவில் ஏதோ ஒரு வகையில் இப் புரிதல் இவளுக்கு இதம் சேர்க்கிறது.

ஆனால் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க இவளுக்கு எத்தனை நொடிகள் கிடைக்கின்றனவாம்? பிடித்திருந்த அவன் அணைப்பின் நிறம் மாற… மெல்ல அவளை தன் மார் மீது அவன் பொதிய…

சட்டென நடந்த திருமணம்தான்… ஆக உடனடியாக உறவுக்குள் இறங்கிவிடும் மனோவகை இருவருக்கும் இல்லைதான்… இருந்தாலும் இன்றைய இந்த நிலையில் ஆவல் என்றும் ஒன்று இருக்கும்தானே… அதை அவன் அவள் மீது சில நொடிகள் செலுத்த..

வந்த தூக்கம் எல்லாம் வடிந்து போக… இறங்கி ஓடி இருந்தாள் இவள். சிரிக்க சிரிக்கத்தான்.

வாயால் பழிப்பம் காட்டிவிட்டும் “வந்து கவனிச்சுக்கிறேன்” என மிரட்டிவிட்டும்தான்.

“வெயிட்டிங் ஃபார் இட்” என பதில் வருகிறது அவனிடமிருந்து.

குளித்து கிளம்பி முழு ஆயுத்ததோடு அடுத்து அவள் சென்று நின்றது சமயலறையில்தான். அதே நேரம் அங்கு தாத்தா வருவார் என அவள் எதிர்பார்க்காதது போல அவரும் அவளை எதிர்பார்க்கவில்லை போலும்.

“என்ன கண்ணா, இங்க என்னடா செய்துட்டு இருக்க இந்த நேரத்தில?” என்றபடிதான் உள்ளே வந்தார் அவர்.

‘மன்னிப்பென்பது வேறு… மருமகளாய் ஏற்பதென்பது வேறல்லவா…’ என்று இந்த தாத்தாவை எண்ணி அவள் தயங்கியதெல்லாம் கற்காலத்தில் என்பது போல் கூட அவளுக்கு நினைவில் இல்லை. சகாயனை விடவும் கூட இவளைத்தான் அவர் அதிக சலுகையாய் நடத்துவது காரணமாய் இருக்கும்.

“அது ஒன்னுமில்ல தாத்தா… அவங்களுக்கு பப்பாளி இலை சாறு கொடுக்கலாம்னு நினச்சேன்… “ என பதில் சொன்னாள் இவள்.

சஹாவுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் ஜுரம் வந்து சென்றவுடன் நம்ம பாட்னி மேடத்தின் மூளை இது டெங்குவா இருந்தா என்னாகிறது என யோசித்ததின் பின் விளைவுதான் இந்த ப்ளானிங்.

“பப்பாளி இலையா..? அது கசக்குமேமா? அவன் சும்மாவே எந்த கஷாயம் கஞ்சின்னு எதையும் வாயிலயே வைக்க மாட்டானே” என்ற தாத்தா…

“பொதுவா இப்டி எதாவது குடிக்க சொன்னாலே அவனுக்கு கோபம் வரும்… இதுலெல்லாம் அவன் பிடிவாதம் ரொம்ப அதிகம்… நீ எதுக்கும் அவன்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்து செய்யேன்” என்றார் சற்று தயக்கமாய்.

இவள் பதில் எதுவும் சொல்லும் முன் “மேம் சஹா சார் இந்த இலைய உங்கட்ட கொடுக்க சொன்னாங்க” என்றபடி இவர்களது ஒரு சர்வென்ட் பப்பாளி இலையோடு வந்து நிற்க… தாத்தாவுக்கு தலை சுத்தாத குறை.

ஷ்ருஷ்டிக்குமே ‘இதுக்கு பின்னால என்ன வில்லங்கம் செய்யப் போறான் சஹா’ என ஓடுகிறது அறிவு.

ஏன்னா “ப்பாளி இலையா… கரெக்ட்.. கரெக்ட்… இது நல்ல ஐடியாதான்… ப்ரிகாஷியஸா இருந்துக்கிறது நல்லதுதான்… எம்ப்டி ஸ்டொமக்ல குடிக்கனும்னு சொன்னதா நியாபகம்… நான் வெயிட் பண்றேன்… நீ சீக்கிரம் வா” என சீனாக சொல்லிவிட்டது சகாயனேதான். “சீக்கிரம்  மேரேஜ் செய்யனும்னு சொன்னேனே அது இதுக்கும்தான்…” என ஒரு பிட் வேறு.

‘இங்க தாத்தா என்னனா இப்டி சொல்றாங்க..’ யோசித்தபடியே என்றாலும் சாறுடன்தான் கிளம்பிச் சென்றாள்.

‘மோனிட்ட ஏலியன்னு வரைக்கும் சொல்லி நம்ப வச்ச ஜீவனாச்சே… என்ன செய்யமாட்டான் இவன்?!’ இவள் அறிவு வேறு அலர்ட் மோடில்.

தில் ரூமுக்குள் சென்றதும் முதல் வேலையாக கதவை அவன் தாழ் போட்டு வைத்தான்.

‘ம்.. என்னடா இது என்னமோ இவ குடிக்க மாட்டேன்னு சொல்லி ஓடிடக் கூடாதுன்னு அவன் ஸ்டெப் எடுக்கிற மாதிரியே இருக்குதே’ யோசனையுடனே இவள் சாறிருந்த கப்பை மேஜையின் மீது வைத்தாள். முன்னெச்சரிக்கை உணர்வு வந்திருந்தது இவளுக்கு.

“ஹேய் அங்கயே வச்சுட்டா எப்படி? இங்க வந்து தா” அவன்தான்.

‘என்னதான் செய்யப் போறான்? எதுவும் நார்மலா ஃபீல் ஆகலையே’ என்ற நினைவோடே இவள் சாறோடு அவனிடம் செல்ல…

கட்டிலில் அமர்ந்திருந்த அவன் இப்போது கையில் கப்பை வாங்கிக் கொண்டவன்… அருகில் நின்ற இவளை ஒரு கையால் வளைத்துக் கொள்ள…

‘அம்மாடி நம்மளத்தான் குடிக்க வைக்கப் போறானா???!!!’ என இவள் பீதி அடைந்த நேரம்… சமத்துப் பையனாய் அவனே குடித்திருந்தான்.

‘வாவ் குட் பாய்’ எனக் கூட இவள் சொல்லி இருப்பாள்தான்… ஆனால் அதற்கெல்லாம் யார் நேரம் கொடுப்பதாம்?

“ஸ்… அம்மா” என அவன் வாயையும், பின் தொண்டை வயிறு என பிடித்தபடி துடிக்க..

அவன் ட்ராமா போடுவான் என்பதையெல்லாம் கூட மறந்து இவள் “என்னப்பா ஆச்சு?” என பதறிப் போய் குனிய…

“நீ கொடுத்தா கூட இது கசக்குது…” என ஒரு பரிதாப பாவத்தில் சொன்னவன்… “ஆனா அதுக்கும் ஒரு சொலுஷன் இருக்கு” என்றபடி… அதை அவள் புரிந்து கொள்ளும் முன்பாக அவள் இதழ்களில் இறங்கி இருந்தான்.

முழு நிமிடம் முக்கால் அளவு கழிய, இப்போது அவன் கையணைப்புக்குள் மெத்தையில் சுருண்டிருந்தவள் அவனை ரெண்டு கைகளாலும் மொத்திக் கொண்டிருந்தாள். யாருக்கும் வலிதான் இல்லை. “போங்கத்தான் நீங்க ஒரு பெரிய பேட் பாய்…”

அவனோ வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

“இதுக்குத்தான் மேரேஜ் சீக்கிரம் செய்ய சொன்னீங்களா” அவள் முறைக்க முயல…

“இல்லையா பின்ன..? நீயும் சிரிச்சுகிட்டு இருக்க… நானும்தான்… அப்றம் வேறென்ன வேணும்?” கிண்டலின்றி சொன்னான் அவன்.

அவன் சொல்வது உண்மைதான்… இருந்தாலும் பழிப்பம் காட்டிவிட்டுதான் எழுந்து கொண்டாள்.

“இதப் பார்க்கிறப்பதான் இப்டில்லாம் ஐடியாவே வருது” அவன் ரெஸ்பான்ஸ் அது.

இதற்குள் எழுந்து அமர்ந்திருந்தவள் மடியில் தலை வைத்திருந்தான் அவன். அவளது ஒரு கையை எடுத்து அவன் நெற்றி மீதும் வைத்துக் கொண்டான். நிரம்பத் தொடங்கினாள் இவள்.

“அதென்ன செவன்  ட்வென்டி செவன்னு எதல்லாமே கவ்ண்ட் செய்தீங்க?” இப்பதான் கேட்கலாமே… கேட்டாள்.

“அது நீ செய்ற நிறைய விஷயம் ரொம்ப பிடிக்கும்னா..சிலது கன்னா பின்னானு பிடிக்கும்… செம்மயா ரிட்டன்ஸ் கொடுக்கனும்னு தோணும்… அதுக்கெல்லாம் கவ்ண்ட் வச்சுருப்பேன்”

“ரிட்டன்ஸா??!!”

“ஆமா ஃபார் எக்‌சாம்பிள்” எனத் தொடங்கி அடுத்து அவன் கொடுத்த விளக்கத்தில் இன்னும் நாலு கொடுத்தாள் இவள். அடுத்த பழிப்பம் காட்டுதலும் நடந்தது. சிரித்துக் கொண்டிருந்தான் இவன்.

அடுத்து சமனபடவும் பேச்சு கஷாயம் பற்றி மீண்டும் திரும்பியது.

“இங்க தாத்தா வீட்டுக்கு நான் வந்த புதுசில்… இங்க உள்ள இந்த க்ளைமேட் ஒத்துக்காம செம கோல்ட் எனக்கு…” தன் கஷாய கதையை சொல்ல தொடங்கினான் அவன்.

“அப்ப இப்டித்தான் தாத்தா ஏதோ ஒரு கஷாயம் குடிக்க சொல்ல… முதல்லயே நான் முடியாதுன்னு சொன்னேன்… அவங்க ஈசியா ஒத்துக்கல… திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தாங்களா… செம கடுப்பாகி குடிச்சுட்டு… அப்றம் அங்க ஃபார்ம் ஓரத்துல ஒரு ஷெட் இருக்குது… அதுல உள்ள பரண்ல ஏறி படுத்துக்கிட்டேன்… மூனு நாள் வீட்டுக்கே வரல… தாத்தா எப்டில்லாமோ கெஞ்சிப் பார்த்து நாலாவது நாள்தான் உள்ள வந்தேன்… அதுக்கப்புறம் இன்னைக்குத்தான்” சொல்லிக் கொண்டே போனவன் பார்வை உயர்த்தி அவள் முகம் பார்க்க..

அவளோ ‘ங்நே’ என ஒரு வகை முழியோடு அமர்ந்திருந்தாள்.

“இப்டில்லாம் செய்து வச்சீங்கன்னா… இப்ப தாத்தாவ நான் எப்டி பார்ப்பேன்..?” முனங்கினாள் அவள்.

“பார்த்துட்டு நீயே சொல்லேன்” என்றான் அவன்.

உண்மையில் அடுத்த முறை தாத்தாவைப் பார்க்கும் போது தர்மசங்கடமாயும் தன்னவன் நினைவில் சற்று சிரிப்புமாயும் உணர்ந்தாள் ஷ்ருஷ்டி. ஆனால் தாத்தாவோ அவளை தர்மசங்கடப் படவெல்லாம் அனுமதிக்கவே இல்லை.

அடுத்த வேளை உணவு நேரத்தில் டைனிங் டேபிளில்தான் இவளை அவர் சந்திக்க நேரிட்டது. இவர்களைப் பார்க்கவும் சின்னதாய் ஒரு நமுட்டு சிரிப்பு அவர் முகத்தில் உதயமானாலும் இந்த பப்பாளிச் சாறு பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிட்டால் அது சஹா கிடையாதே.. “தாத்தா… இன்னைக்கு சிமி எனக்கு பப்பாளி இலை சாறு தந்தா.. குடிச்சனே… இப்ப ரொம்ப ஹெல்தியா இருக்குது” என இவனே வம்பிழுத்தான்.

ஆனா தாத்தாவோ “எங்க ஊர் பொண்ணுடா… முதல் நாளே புலிய புல்ல திங்க வச்சுட்டு பார்த்தியா?” என அவனிடம் சிக்சர் சாத்தினார்.

அதோடு விஷயம் முடிந்தும் போகவில்லை. அதுவே தொடக்கம் போலும் ஆயிற்று.

அதன் பின் வந்த நாட்களில், சகாயன் பொதுவாக அவரிடம் எதற்கு முரண்டுவானோ… என்னதான் தாத்தாவுக்கும் பேரனுக்கும் வெகு நல்லுறவு என்ற போதும் அக்கறை என்ற வகையில் இந்த கஷாய கதை போல் சில முரண்கள் இருக்கத்தானே செய்யும்.. சஹாதான் அட்வென்சர் என்ற பெயரில் சில பலதும் செய்கிறவனயிற்றே… அதெல்லாம் தாத்தாவுக்கு உதறும்தானே..

இப்படி பேரன் முரண்படும் காரியங்கள் எல்லாவற்றிலும் தாத்தா டைரக்ட் அப்ரோச் ஷ்ருஷ்டியிடம்தான். சில வேளைகளில் தாத்தாவின் மனோ நிலை அவரது பயக் காரணங்களை சகாயனிடம் சொல்லி அவனை ஏற்றுக் கொள்ள வைப்பதும், பல நேரம் சஹா புறம் உள்ள முன்னேற்பாடுகள் பாதுகாப்பு முறைகளை தாத்தா திருப்திபடும் வகையில் சொல்லி அவருக்கு நிம்மதி கொடுப்பதும் ஷ்ருஷ்டியின் செயலாக மாறிப் போயின.

அதோடு எப்போதும் எதற்கும் சகாயனுடன் ஷ்ருஷ்டியையும் சேர்த்தே அனுப்பி வைப்பார் தாத்தா. அவள் முன்னிலையில் எதுவும் விபரீத ஸ்டண்ட் அடிக்க மாட்டான் பேரன் என்ற ஒரு புரிதல்… அதோடு ஷ்ருஷ்டியும் ஆபத்தான எந்த முயற்சியையும் அவனை செய்யவிட்டுவிட மாட்டாள் என்ற தெளிதல். அவளே ஒரு காரியத்துக்கு சம்மதித்துவிட்டாள் அது ஆபத்தில்லா ஒன்று என்ற அளவிற்கு அவள் மீது நம்பிக்கை.

இப்படியாய் தாத்தா பேரன் இவள் என்ற ஒரு வட்டம் அமைந்து, பிணைப்பும் பிடிப்பும் பூரிப்புமாய் அது மலர்ந்து, இந்த மூவரின் வாழ்விலுமே அழகிய வண்ணம் சேர்க்க இந்த சிறு நிகழ்வே ஆரம்பம் போல் அமைந்து போனது.

இது ஆரம்பம் என்றால்… இந்த பப்பாளி இலை சாறு நிகழ்வுக்கு சில நாட்களுக்குப் பின் ஷ்ருஷ்டி செய்து வைத்த ஒரு வேலை இதன் அடித்தளம் ஆகிப் போனது.

தற்கெல்லாம் முன் அன்று திருமணத்தின் மறுநாள் மதியம் ஷ்ருஷ்டியின் அப்பா, பவனது அம்மா, அப்பா, ஆகாஷ், நிம்மி என அனைவரும் விடை பெற… அன்று மாலை பவனும் நித்துவும் சகாயனின் வீட்டிலிருந்து நேரடியாக போரா போரா தீவுக்கு ஹனிமூன் கிளம்பினார்கள். அங்கிருந்து அவர்கள் நேரடியாக சென்னையில் இருக்கும் பவனது வீட்டிற்கு தனிக் குடித்தனம் சென்று விடுவதாக ஏற்பாடு.

நித்துவுக்கும் ஷ்ருஷ்டிக்கும் இது ஒரு வித்யாசமான பிரிவு. தங்கையை மணமுடித்து அவளது கணவன் வீட்டில் விட்டு விட்டு கிளம்புகிறாள் அக்கா. திருமணம் முடிந்து தன் கணவனுடன் கிளம்பும் அக்காவிற்கு வழி அனுப்புகிறாள் தங்கை.

எத்தனை மகிழ்ச்சி இருந்ததோ அத்தனை வலியும் இருந்தது இருவருக்குள்ளும். ஒரு உணர்ச்சிகராமான வேளை. ஷ்ருஷ்டியின் அறையில் வைத்து அவளிடம் சொல்லிக் கொள்ள வந்திருந்தாள் நித்து. முகமெங்கும் சிரிப்பும் கண்ணில் மட்டும் கண்ணீருமாய் “அப்றம் நான் கிளம்புறேன் ஷ்ருஷ்டிமா… எப்பவும் சந்தோஷமா இருக்கனும் என்ன” என அவள் ஆரம்பித்தது தான் தெரியும்…

எப்போது எதில் அழத் துவங்கினாள் ஷ்ருஷ்டி என இருவருக்கும் தெரியாது. எதற்கெல்லாம் அழுகிறாள் எனவும் யாருக்கும் புரியாது.

சற்று தொலைவில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த சஹா… அறையைவிட்டு எழுந்து வெளியே போய்விட்டான்.

என்னதாய் இருந்தாலும் அவர்கள் மனம்விட்டுப் பேசிக் கொள்ளட்டும் என்ற நினைவு.

அதோடு தன்னவள் அழுவதை செய்கையற்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு.

மூத்தவள் என்பதாலோ..? நித்துதான் பலதும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஷ்ருஷ்டியின் ஒரே மொழி அழுகை.

“எதுக்காகவும் மனச குழப்பிக்க கூடாது என்னடா… சஹாத்தான் அவ்ளவு தூரம் உன்ன புரிஞ்சிப்பாங்க.. எதுனாலும் அவங்கட்ட மனசு விட்டு பேசிட்டன்னா அவங்க பார்த்துப்பாங்க. சரியா…?!

ஒன் இயர் உன்ன கான்டாக்ட் செய்யாம இருந்தாங்கல்ல… அப்போல்லாம் உன்னப் பத்தி அவ்ளவு கேட்டுப்பாங்க… அதப் பார்த்துட்டு நானே சொல்லி இருக்கேன் அவங்கட்ட… நீங்க ஷ்ருஷ்டிட்ட பேசுங்க… அவ உங்க பக்கம் எதுவும் தப்பில்லன்னு புரிஞ்சுப்பான்னு… ஆனா அவங்க

‘இல்ல… ஒரு மர்டர் அட்டெம்ட் செய்துட்டோமேன்றதே அவளுக்கு ரொம்ப தாங்க முடியாத கில்டியா இருக்கு… இதுல அவ ஒரு நிரப்ராதிக்கு எதிரா இதை செய்துட்டான்னு தெரிஞ்சா இன்னும் மோசமா ஹர்ட் ஆவா… முதல்ல இந்த ஷாக்ல இருந்து அவ வெளிய வரட்டும்… அதுல கொஞ்சம் நார்மல்க்கு வந்த பிறகு என்னப் பத்தி சொல்லலாம்…

அதோட என்னை மேரேஜ் செய்யனும்னு பேசினா என் அப்பாவோட மருமகளா வர்றதாவும் சேர்த்துதானே அர்த்தம் ஆகும்… அப்டில்லாம் ஒரு பேச்சு அவட்ட எடுக்றதுக்கு முன்ன… பவனும் நீயும் சேர்ந்து சந்தோஷமா வாழ்றத அவ பார்க்கனும்.. பவனோட அம்மா அப்பாதான் உன் இன்லாஸ்னு அவ மனசுல படனும்… இல்லனா சிமிக்கு அதுவும் கஷ்டமா இருக்கும்’னு சொன்னாங்க…

அவ்ளவு தூரம் ஒன்னொன்னும் உனக்காக யோசிப்பாங்க ஷ்ருஷ்டிமா… அதான் டூ டேஸ்ல மேரேஜ்னதும் நானும் பவனும் சரின்னு சொன்னோம்…

‘என் கூட இருந்தா என்னால அவள நல்லா பார்த்துக்க முடியும்’னு சொல்லிதான் மேரேஜ்க்கு கேட்டாங்க சஹாத்தான்… அதனால எதுனாலும் அவங்கட்ட பேசு… கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க…” என நீண்ட நித்துவின் பேச்சில் இதுமட்டுமல்ல எதல்லமோ இருந்தது.

ஆனால் இந்த விஷயங்கள் ஷ்ருஷ்டிக்கு புதிது. சகாயன் மீது ஏற்கனவே நம்பிக்கைதான் அன்புதான் இவளுக்கு… இப்போதோ இவள் மனக் குழப்பத்தை சகாயனிடமே பேசிவிட்டால் என்ன என்று தோன்றிவிட்டது.

நித்துவும் பவனும் கிளம்பிய நேரம் ஷ்ருஷ்டியின் கையைப் பற்றிய சகாயன் ஏறத்தாழ அன்று இரவு அவள் தூங்கும் வரையுமே கூட அவள் கையை விட்டான் என சொல்வதற்கில்லை.

இந்த இரவில் அவன் தோளில் சாய்ந்த வண்ணம்தான் ஷ்ருஷ்டி தன் மனக் குழப்பத்தை அவனிடம் சொன்னாள்.

“இந்த லைஃப்… இந்த சந்தோஷம் இதுக்கெல்லாம் நான் தகுதியில்லன்ற மாதிரி அப்ப அப்ப தோணுதுத்தான்…” சாதரணம் போல்தான் சொன்னாள்.

அவனும் சாதரணமாகவே “ஏன்பா?” எனக் கேட்டான்.

“தப்பு செய்தவங்க தண்டனைதான அனுபவிக்கனும்… இது என்ன சம்பந்தமே இல்லாம சந்தோஷமா இருக்றது..?”

அவள் வார்த்தையில் ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் சிறிதாய் முறுவல் மட்டுமே காணப்பட்டது.

“சந்தோஷமா இருக்றதுக்கு கவலப்படுற ஒரே ஆள் நீயாதான் இருப்ப…” அவனது புன்னகை போலவே வந்தது அவனது பதிலும்.

விஷயத்தை எமோஷனாக்க அவன் சுத்தமாய் விரும்பவில்லை என ஷ்ருஷ்டிக்கு இப்போது புரிகிறது.

அவள் ஹர்ட் ஆக கூடாது என்பதற்கு போலும்.

இப்போது இன்னுமே இலகுவாக இருந்தது அவனிடம் பேச.

“ஸ்ட்டோரி புக்ல கூட, ஒரு பொண்ண ரேப் பண்ணவனுக்கே அந்தப் பொண்ண மேரேஜ் செய்தாங்க, அந்தப் பொண்ணு அவனையே அடுத்து லவ் பண்ணிச்சு… அவங்க ஹேப்பியா இருந்தாங்கன்னு படிச்சா எனக்கெல்லாம் கோபமா வரும்… அவன் செய்தது கொடூர க்ரைம்… அதுக்கு பனிஷ்மென்ட்தான் கொடுக்கனும்…” என சொன்னவள் அடுத்த மீதியை சொல்லாமல் விட்டாள்.

‘அப்டி இருக்க மர்டர் செய்ய ட்ரைப் பண்ண நான் உங்கள மேரேஜ் செய்து ஹேப்பியா இருக்றது எப்படி நியாயம்?’ என்பதுதான் அவளது முழுக் கேள்வி.

இப்பொழுதும் அவள் முகம் பார்க்க முனைந்த படி தன் பதிலை துவக்கினான்… அவளோ இவன் தோளில் புதைந்திருந்தாள்.

“ஒரு வீட்ல கொள்ளையடிக்க போனப்ப ஒருத்தன் அந்த வீட்ல உள்ளவங்கள மர்டர் செய்துடுறான்… இன்னொருத்தன் கைல கன்னோட ரோட்ல இறங்கி அவன் மதத்தை சாரதவங்களை எல்லாம் ஷூட் பண்றான்… இன்னும் ஒருத்தன் அவன் நான்வெஜ் சாப்டமாட்டான்றதுக்காக நன்வெஜ் சாப்ட்ட இன்னொரு பையனை கொன்னுட்டான்… இவங்களுக்கெல்லாம் ஒரு ஜட்ஜ் மரணதண்டனை கொடுத்தார்னா அவரை கொலை செய்றவர்னு நாம சொல்லப் போறது இல்லை… அப்டின்னா தீர்புன்னு வர்றப்ப மரணம்ன்றது நியாயமான தண்டனைனும் ஆக முடியுது… இல்லையா..?

ஆனா மேல சொன்ன அதே குற்றங்களை ஒரு பொண்ணு செய்துருக்கான்னு வச்சுப்போம்… அதுக்காக அந்த பொண்ணை யாராவது ரேப் செய்யட்டும் அப்டின்னு தீர்ப்பு கொடுத்தா நம்ம மனசாட்சி ஒத்துக்குமா? அவ செய்தது குற்றம்னா அவளுக்கும் மரணதண்டனை கொடுக்கட்டும் ஆனா அவ பெண்மையில விளையாடக் கூடாதுன்னு நினைக்கிறோம் இல்லையா?

ஏன்னா எந்த நிலையிலும் ஒரு ரேப்ன்றது நியாயப்படுத்தவே முடியாத விஷயம்..

அதான் ரேப் பண்றவன மேரேஜ் செய்றதுன்னு யோசிச்சா நமக்கு கோபமா வருது… உன் வகையில நீ செய்தது மர்டர் அட்டெம்ப்ட் இல்ல… குற்றவாளிக்கு தீர்ப்பு கொடுக்கனும்னு ஒரு ஆதங்கம்… அது அந்த வகையில் நிச்சயமா ஒரு ரேப் கூடயோ, மர்டர் கூடயோ கம்பேர் செய்ய முடியாத விஷயம்… அதுக்காக யார்னாலும் தீர்ப்பு கொடுக்கலாம்னு நான் சொல்ல வரல… ஆனா நீ தீர்ப்பும் கொடுக்கலயே… என் மேல கை வைக்றதுக்கு பதிலா உன்னையல்ல ஹர்ட் பண்ணிகிட்ட…

சோ எனக்கு அங்க தெரியுறதெல்லாம்… நான் உன் வீட்டை நிர்மூலமாக்கினவன்னு நீ நம்புற அந்த சூழ்நிலையில கூட, என் மேல கை வைக்க மனசு வராத, என்ன சுறா பக்கத்துல பார்த்ததும்… விட்டுட்டு போக முடியாத, திரும்பி வந்து என்னை காப்பாத்தினா உன்னை நான் என்ன வேணா செய்ய முடியும்ன்ற நிலைமையில் கூட திரும்பி வந்த, உன் காதல் மட்டும்தான்…” என அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்த சஹா இதோடு பேச்சை நிறுத்தியவன்…

இதற்குள் இவன் மார்பில் புதைந்து குலுங்கிக் கொண்டிருந்தவள் உச்சந்தலையில் மெல்லமாய் இதழ் பதித்து… இன்னுமாய் அணைத்துக் கொண்டான்.

அந்த தீவு நாளின் நினைவிலும்… அடுத்து தன்னவன் சொன்ன காதல் பற்றிய விளக்கத்திலுமாய் அழுதாள் ஷ்ருஷ்டி… ஆனால் முதலாமாவது கொடும் வகை இரண்டாமாவது விடுதலை தரும் வகை.

அன்றைய பேச்சுக்குப் பின் ஷ்ருஷ்டி வெகுவாகவே எடையற்று உணர்ந்தாள். எனக்கு தகுதி இல்லை என்ற உணர்வு அடுத்து அவளுக்கு அப்படி ஒன்றும் தலைகாட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏதோ ஒரு ஓரத்தில் எதுவோ சரியில்லை என்ற ஒரு உறுத்தலாக மட்டும் அது நின்று போயிற்றோ? விபரீதம் நடக்கப் போகிறதென்ற நினைவாகவும் அது இருக்கலாம். ஆனால் அதை அவள் கண்டு கொள்ள கூட நேரமோ சூழலோ இல்லை அவளது சந்தோஷமோ அனுமதிக்கவில்லை.

ஆம் அவள்தான் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டிருந்தாளே தன்னவனோடு. அடுத்து சில நாட்கள் சிட்டாய் பறக்க… தாத்தா சஹா இவள் என்ற இந்த வாழ்க்கையில் திளைத்துப் போயிருந்தாள் ஷ்ருஷ்டி.

செய்ய வேண்டிய ரிஷப்ஷனுக்கும், செல்லப் போகும் ஹனிமூனுக்கும் திட்டமிடவும் தொடங்கிவிட்டனர் இருவரும்.

அப்படி இவர்கள் வீட்டு வரவேற்பறையில் இருந்து மூவருமாக ரிஷப்ஷன் பற்றி பேசிக் கொண்டு இருந்த ஒரு நேரத்தில்தான் அது நடந்தது…

 

அடுத்த பக்கம்