காதல் வெளியிடை final 2(2)

 

டுத்தென்ன கொல்கத்தாவிலிருந்தும் சற்று தொலைவிலிருந்த சகாயனின் தாத்தாவினுடைய அந்த பண்ணைத் தோட்டத்தில் அடுத்த இரண்டாம் நாள் விமரிசையாகவே நடந்து கொண்டிருந்தது அவர்களது திருமணம். காலையில் பவன் நித்து திருமணமும் மாலையில் சஹா ஷ்ருஷ்டி மண வைபவமும் என ஏற்பாடு.

சகாயனுக்கு சிறு வயதிலிருந்தே அவனது பெற்றோரின் குணாதிசயங்களோடு ஒரு ஒட்டுதல் கிடையாது. அவனது அப்பாவுக்கோ தன் தகப்பனாரோடு பேச்சு வார்த்தை கூட கிடையாது. அடிப்படையில் சகாயனுக்கும் அவனது தாத்தாவுக்கும்தான் ஒரே வகை சுபாவம்.

அந்த நிலையில்தான் சகாயனின் அண்ணன் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க.. அதை அவனது பெற்றோர் தங்கள் அந்தஸ்த்தை வைத்து மூடி மறைக்க…அதில் சகாயனுக்கும் அவனது வீட்டுக்குமான சண்டையில் அவன் கொல்கத்தாவில் இருக்கும் தன் தாத்தா வீட்டோடு வந்தவன். ஏறத்தாழ 10 வருடமாகிறது.

இப்போது அவனது அம்மா உயிருடன் இல்லை. தாத்தா வீட்டுக்கு வந்த பின் அவன் அப்பாவோடு எந்த தொடர்பும் இல்லை. இடையில் இவன் ஒரு கோர்ஸ் விஷயமாக சென்னையில் தங்கி இருந்த போது ஒரே ஒரு முறை கல்லூரி கேம்பசில் வைத்து  பார்த்தவர்தான்… என்ன காரியம் ஆக வேண்டும் என இவனை தேடி வந்தாரோ…? அந்த ஒரே ஒரு நிகழ்வை வைத்து நித்து வாழ்வையே கேள்விக்குறியாக்கி அவளது குடும்பத்தையே துவம்சம் செய்து வைத்திருக்கிறார்.

ஆக அப்பாவை திருமணத்துக்கு அழைக்காததும் அவனுக்கு விஷயமாக படவில்லை. கூப்டா வந்து கல்யாணமா நடக்க விடுவார் அவர்? தாத்தா முழு சந்தோஷமாய் முன் நின்று செய்வதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

தொழில் மற்றும் மன ரீதியான நட்புகளை மட்டும் விழாவுக்கு அழைத்திருந்தனர் அவனும் அவனது தாத்தாவும். அதோடு ஒரு மாதம் போல் கழித்து சஹாவின் உடல் நிலை முழுவதும் சரியான பின் உறவினர்களை அழைத்து தனியாக ஒரு ரிஷப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருந்தனர்.

பவன் சஹாவிற்கு குழந்தைப் பருவம் முதல் அண்டை வீட்டினன். அந்த வகையில் அவனது குடும்பமே சகாயனுக்கு நன்கு பழக்கம். இதில் ஒரு கட்டத்தில் பவன் குடும்பம் புவனேஷ்வருக்கும் சகாயன் கொல்கத்தாவிற்கும் குடிபெயர… பவன் சென்னையிலேயே தன் படிப்பை தொடர என்ற நிலை வந்தாலும் இன்னுமே அந்த நட்பு தொடர்வதால் பவனது வீட்டோடு இணைந்து விழாவை திட்டமிடுவது சஹாவுக்கு இலகுவாகவே இருந்தது.

பவன் வீட்டில் திருமணவிழாவை வெகு விமர்சையாக கொண்டாட விருப்பம் உள்ளவர்கள்… ஆக பலப் பல செயல்முறைகளுடன் கோலகலமாக நடந்தேறி இருக்கிறது முழு வைபவமும். சகாயன் ஷ்ருஷ்டி இருவருக்கும் பெரிதான அளவில் விழா எடுக்க அவ்வளவாய் ஈடுபாடும் இல்லை… அதோடு வெகு சீக்கிரமாய் நடத்தி முடிக்க அவர்களுக்கு ஆவல் இருந்ததால், இந்த எல்லாமே பொருந்தி வர, இன்றே திருமணம்.

பரபரவென பறந்து கொண்டிருந்தது நாள். இதோ பவனுக்கும் நித்துவுக்குமான விழா அழகாக நிறைவேற… மதிய உணவு முடித்து புதுமணதம்பதியர் அவர்களுக்காய் கொடுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்த நேரம்… அவர்களிடமாய் வந்தார் பவனின் அம்மா.

ஒரு கணம் மற்ற யாரும் அருகில் இல்லை என்பதை பார்வையால் ஊர்ஜிதப் படுத்திவிட்டு “உங்க ரெண்டு பேருக்குமே தெரியும் நம்ம தவிர இங்க சஹா பையன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே இல்லனு… அதனால நீங்க ரெண்டு பேரும்தான் எல்லாத்தையும் முன்ன நின்னு கவனிக்கனும்… இதெல்லாம் புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு தெரியும்.. இருந்தாலும் சொல்ல தோணிச்சு..” என இருவருக்குமாக சொன்னவர்…

“நித்துமா… நீ போய் ஷ்ருஷ்டி கல்யாணத்துக்குன்னு எடுத்த புடவைய கட்டிட்டு உடனே ரெடியாகி வந்துடுமா… வீட்டாளா நின்னு, வர்ற கெஸ்ட்ட நீயும் பவனுமா ரிசீவ் செய்தாதான் நல்லா இருக்கும்… இப்பவே ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க…” என நித்துவுக்கு சொல்லி

“தாத்தா தனியாளா நின்னு கவனிச்சுட்டு இருக்கார்டா… இப்ப வரைக்கும் அங்க நின்னது நம்ம சஹா பையனேதான்… இன்னும் ரெண்டு மணி நேரம்தான இருக்கு கல்யாணத்துக்கு… இப்பதான் பிடிச்சு அனுப்பி வச்சுட்டு வர்றேன்… சீக்கிரமா நீயும் ரெடியாகி வந்துடுபா” என மீண்டுமாய் தன் மகனுக்குமாய் சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.

ஏற்கனவே நித்து இதையெல்லாம் யோசித்திருந்ததுதான். சஹாவின் உறவினர்களை இங்கு விழாவுக்கு அழைத்தால் நித்து பவன் கல்யாணத்தில் அவர்கள் எதாவது வார்த்தையை விடலாம்… எதோ வகையில் நித்துவுக்கு கஷ்டமாக இருக்க கூடும் என தாத்தாவும் சஹாவும் அதை தவிர்த்துவிட்டார்கள் என்பது அவளது புரிதல்.

ஆக இவளும் பவனும்தான் எல்லாவற்றையும் இங்கு பொறுப்பெடுத்து செய்ய வேண்டும்… அதை இப்போது அவளது மாமியாரும் சொல்ல… நித்துவுக்கு பவனின் அம்மாவிடம் பயம் என்று இல்லை… ஆனால் நிச்சயமாய் அவரின் வார்த்தைகள் சற்று அதீத முக்கியம்தான் அவளுக்கு…

ஆக “சீக்கிரம் ரெடியாகுங்கப்பா” என பவனுக்கு ஒற்றை வரியில் விடை கொடுத்து, அவனை அடுத்த அறைக்கு கைகாட்டிவிட்டு, மணமகளறை என அவளுக்கு சற்றுமுன் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று, அவள் வேக வேகமாகவே கிளம்பத் தொடங்கினாள்.

காலையில் இவளுக்கு இட்ட மேக்கப்… அதை அப்படியே வைத்திருக்க வழி இல்லாமல் கசியத் தொடங்கி இருந்தது அது. முகம் கழுவிவிட்டு மீண்டுமாய் மேக்கப் அதுவும் சற்று சிம்பிளாய் இட்டுக் கொள்ளலாம் என்ற முடிவில்…

அடுத்து மாற்ற வேண்டிய உடையை எடுத்து அறையிலிருந்த படுக்கையில் வைத்துவிட்டு அங்கிருந்த அட்டாச் பாத்திற்குள் சென்று… கட்டி இருந்த திருமண உடையை மாற்றி ஒரு டவலை சுற்றிக் கொண்டு… முகம் கால் கை எல்லாம் கழுவிக் கொண்டு இவள் மீண்டுமாய் அறைக்குள் வந்தவள் அப்படியே “ஹூப்” என திகைத்துப் போய் நின்றுவிட்டாள்.

வேற என்ன விஷயமா இருக்க முடியும்?

கட்டில் மேல் கால் ஆட்டியபடி சிறு விசிலடிப்புடன் அமர்ந்திருந்தது அவளுடையவன்.

இவளைப் பார்க்கவும் அவனிடமிருந்து துள்ளலாய் வருகிறது ஒரு “வாவ்” .

“நான் ஏதோ கொஞ்சமா எதிர்பார்த்தேன்…” சொல்லியபடி அவன் கண்களை இவள் மீது ஏற்றி இறக்க…

ஓடிப் போய் பாத்ரூம் கதவுக்குப் பின்னால் நின்றிருந்தாள் இவள். “ஐயோ இங்க எப்டி வந்தீங்க நீங்க?” தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு அவள்.

“இங்க வா அத விளக்கமாச் சொல்றேன்” என வகையாய் வருகிறது அவனது பதில்.

“அடி வாங்கப் போறீங்க… அம்மாட்ட சொல்லிடுவேன்…”

“நல்லா ஐடியாவா இருக்கே… கண்டிப்பா சொல்வோம்” தன் மொபைலை எடுத்தான் அவன்…

“அம்மா… ஒரு ஹெல்ப்மா… நித்து ரூம்லதான் சோட்டு ஜ்வெல்ஸ் இருக்காம்… போய்…“ அவன் சொல்லிக் கொண்டு போக… ‘எடுத்துட்டு வந்து தர முடியுமா?’ எனக் கேட்டு அவன் அம்மாவை இங்கு வர வைக்கப் போகிறான் என இவளுக்கு புரிகிறதே…

அலறாத குறையாக ஓடி வந்து இவனது கையிலிருந்த மொபைலை பிடுங்கி இருந்தாள் அவள்.

அடித்து பிடித்து மொபைலைப் பார்த்தால் அது ஸ்விட்ச் ஆஃபிலிருந்தது. அவன் அழைத்திருக்கவே இல்லை.

மேல் உதடு மேல் ஒரு விரலை மடக்கி வைத்து, குலுங்கும் சிரிப்பை இதழ் பிரிக்காமல் அடக்கி வைத்து, நகைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து முடிந்த மட்டும் முறைத்தாள் அவனவள்.

“நீ டவல தலையில கட்டினாலே எனக்கு பிடிக்கும்” அவன் ஏதோ சொல்லத் துவங்க அவ்வளவுதான் அவனது இந்த வார்த்தைகளில் மீண்டுமாய் கதவிற்குப் பின்னால் இவள்.

“ப்ளீஸ் பவன் லேட் ஆகுது நான் கிளம்பனும்” சிணுங்கினாள்.

“நானும் அதையேதான் சொல்றேன்… லேட் ஆகுது… சீக்கிரம் கிளம்பனும்…”

“ஹான்”

“அதனால என் டீல மட்டும் முடிச்சுட்டு போய்டுறேன்”

‘அப்டி என்ன டீல்?’ மனதுக்குள் மட்டும் கேட்டுக் கொண்டாள்.

“அப்போ என்ன சொன்ன? என் அம்மா செய்தத நான் செய்ய முடியாதுன்னு சொன்னல்ல…”

சொன்னபடி எழுந்து அவளை நோக்கிச் செல்லத் தொடங்கி இருந்தான் அவன்.

அன்றே இப்படி ஒரு நிலை வரும் என இவளுக்கும் தெரியும்தானே… அந்த நினைவில் நெற்றியில் தன் கை வைத்திருந்தாள் அவள். கண்களோ மூடி இருக்க… முகத்தில் வெட்கமும் கூடவே புன்னகையும்.

இவளுக்கு மிக அருகில் அவன் வந்திருக்கிறான் எனப் புரிய… நெற்றியிலிருந்த அவள் கை அதுவாக இறங்கி அவள் கண்களின் மீது அமர்ந்து கொள்கிறது.

நெற்றியில் வார்த்தெடுப்பான் என்பது அவளது எண்ணம். அவன் அம்மா செய்தத செய்யப் போறதாதானே சொல்லிட்டு இருக்கான்..

அவனோ “பவன்” என்ற இவளது சிணுங்கலின் பின்ணணியில்… கண்களை மூடி இருந்த அவளது கையை பற்றி மெல்ல எடுத்து அதன் புறங்கையில் இதழ் இட்டான்.

வெகுவான ஜென்டில் மேன் வகை செயல். ஏறி இருந்த படபடப்பு இப்போது சுத்தமாய் இறங்கி இருந்தது இவளுக்கு. சே எதுக்கு இப்போ இவ்ளவு டென்ஷனானேன் என்றும் இருக்கிறது.

மெல்லமாய் இப்போது கண் திறந்து கொண்டாள். கிளம்பிடுவான்தானே இப்போ என்ற நினைப்பு அவளுக்கு.

அவனோ “இப்ப நீ” என்றான்.

முழி விழி விரித்தபடி புரையேறியது அவளுக்கு…

“அடுத்தவங்க செய்ய முடியுறத நான் செய்றதுல என்ன இருக்கு…? யாரும் செய்ய முடியாததல்ல நான் செய்யனும்… யாரும் இப்டி கேட்க முடியாதுல்ல” அவள் தலையை தட்டிவிட்ட படி அவன் விளக்க..

மூச்சடைத்தபடி இவள்.

“இப்ப நீயா வந்து எனக்கு“ அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரிகிறதுதானே இவளுக்கு.

இதற்குள் கை நீட்டி அவன் வாயில் கைவைத்து பேசுவதை நிறுத்தினாள். அவன் சொல்வதே இவள் மனதில் காட்சியாய் விரிந்து வைக்கிறதே!

அவன் சுபாவம் தெரியும்… நிச்சயமாய் அவன் சொல்வதை செய்யாமல் அவன் விடப் போவதில்லை… வெட்கம் தவிர அதில் எதிர்ப்பென்றும் இவளுக்கும் எதுவும் கிடையாது.

இரண்டு நொடி தயங்கியவள்… அவன் இதழ்கள் மேலிருந்த இவளது கையை நகர்த்தி அவன் கண்களின் மீது வைத்து மறைத்தாள். இறுக தன் விழிகளை இமைகளால் பொதிந்தபடி… மெல்லமாய் அவன் கன்னத்தை தன் இதழால் ஸ்பரிசிக்க.. அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு.

எப்போது அவன் அவளை இடையோடு வளைத்தான் என்றோ… எந்நேரம் அவள் இதழில் அவன் களம் கண்டான் என்றோ இருவருக்கும் தெரியாது.

“நித்துமா சோட்டு ஜ்வெல்ஸ் இங்க இருக்குது போல” என்றபடி இவளது அறையின் கதவு பவனது அம்மாவால் இப்போது தட்டப்படும் போதுதான்… இடம் நிலை சூழல் எல்லாம் புரிய…

இவள் துள்ளிப் போய் தூர நின்றாள் எனில்… அவன் இப்போதுமே சிரித்தான்.

“ஐய்யோ இந்த ரூம்குள்ள எப்டி வந்தீங்க…? அப்டியே இங்க இருந்து போய்டுங்க” கிசுகிசு குரலில் இவள் மிரட்டலும் கெஞ்சலுமாக பதற…

“எப்டியா…? இதே இந்த கதவு வழியாதான்… நீ உள்ள வந்த வேகத்தில பின்னால வந்த என்ன கண்டுக்கவே இல்ல… நானும் சரி நல்லதுக்குதான்னு உட்கார்ந்துகிட்டேன்… இப்ப போகனும்னா இதே கதவு வழியாதான் போகனும்..” அறையின் வாசலை காண்பித்துக் கொண்டே அவன் சொல்ல…

இவளுக்கு ஏறி எகிறுகிறது இதயம்…

“ஐயோ இப்ப என்ன செய்ய?” அழுதே விடுவாள் போலும் இவள்.

“அம்மா நித்து கிளம்பினதும் அவளையே ஜ்வெல்ஸை கொண்டு வந்து கொடுத்துட சொல்றேன்மா” இவன் தன் அம்மாவுக்கு பதில் சொல்லிக் கொண்டே அறை வாசலை நோக்கி போக…

இவன் கதவை அடையும் முன்னமும் கூட “சரிடா கண்ணா… லேட் ஆகாம பார்த்துகோங்க” என்றுவிட்டு போய்விட்டார் அவன் அம்மா.

“அடியே நித்து மாதா நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு… நான் உன் வீட்டுக்காரன்” சொல்லியபடி அவன் கதவை திறக்கப் போக…

ஒரு நொடிக்குப் பின்தான் பதற்றத்தில் தான் என்ன காமடியெல்லாம் செய்து வைத்திருக்கிறேன் எனப் புரிய சிரிக்கத் தொடங்கினாள் நித்து. போய் தன்னவன் முதுகோடு செல்லமாகவே சாய்ந்தாள்.

திரும்பி அவள் நெற்றி முட்டினான் அவன். “இப்ப ரெடியாவோம்… அப்றமா நம்ம கவனிப்போம்” என்றுவிட்டுப் போனான்.

டுத்து அதது என நிர்ணயித்திருந்த நேரத்தில் களிப்பும் கலகலப்புமாய் எந்த இடையூறும் இன்றி முழு சந்தோஷமாய் நடந்தேறியது சகாயன் ஷ்ருஷ்டி திருமணம். இரண்டே நாளுக்குள் என்றாலும் பூர்ணிமா மற்றும் மோனியின் வருகைக்கு ஏற்பாடு செய்திருந்தான் சஹா. கப்பலின் மேஜிசியனையும் அழைத்திருந்தான்.

ஆக ஒரே சிரிப்பு மழை.

“நாங்க ஏலியன்ஸ் இல்லைனு என்னலாமோ கதை சொல்லி என்னை நம்ப வச்சுகிட்டு இருக்ற என் ஃபேவரிட் ஏலியன்ஸ் இவங்கதான்…” என மோனி தன் ஃபியான்சி ப்ரீதமுக்கு இவர்களை அறிமுகம் செய்தாள்.

ஆம் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. காதல் வகை திருமணம்தான். கப்பலில்தான் ப்ரீத்தம் இவளைப் பார்த்ததாம். அப்போதே பிடித்துப் போக… அடுத்த சில சந்திப்புகளில் மோனியும் விரும்பத் துவங்க… இரு வீட்டிலும் பேசி நிச்சயம் முடிந்திருக்கிறது.

இரவில் ரிஷப்ஷனும் முடிந்து விருந்தினர் அனைவரும் விடை பெற… குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமாய் வீட்டின் வரவேற்பறைக்கு வரும் போதே நேரமாகி இருந்தது.

வீட்டிற்குள் வரவும் உட்கார்ந்து பேசினார்கள் என்று கூட ஏதுமில்லை… “சரி எல்லோரும் போய் தூங்கலாம்… எல்லோருக்கும் ரெஸ்ட் வேணும்..” என சபையை கூடவிடாமலே கலைத்த பவனின் அம்மா…

“நித்துமா அவன் ரூம் கீசர வழக்கமா ஆஃப் பண்ண மறந்துடுவான்… முடிஞ்சா நீ பார்த்து ஆஃப் பண்ணிடுமா… ஷ்ருஷ்டி பொண்ணு சஹா எதுவும் டேப்லட் போடனும்னா மறக்காம போடச் சொல்லு” என ரெண்டே வரியில் வெகு கேஷுவலாய் இவர்கள் நால்வருக்கும் விடை கொடுத்தார்.

எங்கோ கிளம்பிப் போவது போல் இல்லாமல்… நால்வரும் அப்படியே பேசிக் கொண்டே மாடி ஏறி வந்தனர். இடது ஓர அறையான சஹாவின் அறைபுறம் ஷ்ருஷ்டி திரும்ப… வலது ஓரம் பவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல வேண்டிய நித்து தங்கையைப் பார்த்து விடை பெறும் வண்ணம் சின்னதாய் தலை அசைத்துவிட்டு சென்றாள்.

பவனும் சஹாவும் ஒருவர் மொபைலை இருவருமாக இன்னும் நோண்டிக் கொண்டு இரண்டு அறைக்கும் இடைப் பட்ட பகுதியில் நின்று கொண்டிருக்கின்றனர். பவனும் நித்துவும் மறு நாள் கிளம்பும் ஹனி மூன் ட்ரிப்கான எதோ பதிவு சரியாய் இருக்கிறதா என்பதைத்தான் அவர்கள் ஆராய்வது.

ஷ்ருஷ்டிக்கு இந்த வகை அறைப் ப்ரவேசம் ரொம்பவும் பிடித்தது. அறையிலும் அலங்காரம் படோபடம் என எதுவும் இல்லை. அடர் ப்ராவ்ன் நிற மர வேலைகள் அதில் வெண்ணிற விரிப்புகளும் திரைகளும் என எளிமையாய் ஆனால் வெகு நேர்த்தியாய் இருந்தது அறை.

“பொதுவா எனக்கு சிம்ப்ளா இருக்கது பிடிக்கும்… அதுக்காகவே அந்த புவனேஷ்வர் வீட்ட வாங்கினேன்… அதுக்காக கிராண்டா இருக்கது பிடிக்காதுன்னும் கிடையாது… அதான் ஷிப்ல அந்த ரூம் பிடிச்சுது” சஹா முன்பு பேசும் போது குறிப்பிட்டதை நினைத்துக் கொண்டாள்.

அவன் ரசனைகளின் வழியாய் அவன் மனதை உணர முயன்ற வண்ணம் அறையை சுற்றி வந்தவள், நேரம் செல்லவும் வெளியே நிற்கும் அவனை ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு படுக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

சில பல நிமிடங்களே கடந்திருக்கும். அவன் இப்போது அறைக்குள் நுழைந்து கதவை தாழிடுவது இவளுக்குப் புரிகிறது… சத்தம் கேட்டு இவள் எழுந்து கொள்ள நினைக்கும் முன்னும்… கடகடவென வந்தான் போலும்… வந்த வேகத்தில் அப்படியே இவள் மடியில் முகம் புதைத்திருந்தான்.

இவள் கட்டிலின் தலைப் பகுதியில் அமர்ந்து ஹெட் ரெஸ்ட்டின் மீது சாய்ந்து அமர்ந்திருக்க… படுக்கையில் படுத்து அவள் மடியில் முகம் புதைத்த வண்ணம் அவன்.

தெய்வமே!!! இவளுக்குள் பொங்கி ப்ரவாகிக்கும் இந்த அன்பு நதிக்கு என்ன பெயர்?? இந்த உணர்வின் மனித விளக்கம் எதுவாம்?

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ?? அவனோ அசைவின்றி கண் மூடிக் கிடந்தான். தலையில் அடி என்பதால் கடந்த இரண்டு நாட்களாய் அவன் சரியாய் படுத்திருக்க கூட மாட்டான். காயக் கட்டுகளிக்கு இடையில் தெரிந்த தலையில் மென்மையாய் தன் கையை வைத்துக் கொண்டாள்.

எதுவும் கொடுக்கப்படவும் இல்லை, எங்கிருந்தும் எடுக்கப்படவும் இல்லை. ஆனால் இவளுக்குள் ஏதேதோ நிரம்பிக் கொள்கிறதே! செழித்தாள்.

இப்படியே இரவெல்லாம் இருந்துவிடக் கூட இவளுக்கு இதயமெங்கும் நினைவுண்டு.

எதோ ஒரு கணத்தில் இப்போது இவளை இருந்த நிலையிலேயே கை நீட்டி அவன் இடையோடு வளைத்துக் கொள்ள…

பாலாறாய் பாவைக்குள் பக்குவமாய் பயணிக்கிறது பாதுகாப்பின் பரம உணர்வொன்று… கொள்கிறாளா கொடுக்கிறாளா? யார் சொல்வார் இவளுக்கு?

சில நிமிட செலவில் சின்னதாய் தலை உயர்த்தி அவள் இடைப் பகுதியில் முகம் புதைத்து அவன் இன்னுமே சுருள…

வெடித்தேறுதே இளையவள் தேகமெங்கும் இதன் பெயர் என்னதென எடுத்தியம்ப இயலாத சுந்தரப் பெருங்கடல்கள். இதயம், இவள் மனம், இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் என எங்கும் தோம் தோம் எனும் ஒலிப் பின்னல்கள். அத்தனையும் சுகம்.

தாயின் அரவணைப்பு, தந்தையின் பாதுகாப்பு, குடும்பம் தரும் கூட்டணி உணர்வு என எதையும் அறியாமல் வளர்ந்தவள் அவள். ஆக இத்தனை சுகத்திற்கே இது அதீதம் எனும் எண்ணம் கொள்ள… இந்நேரம் பட்டென வெடிக்கிறது பயம் ஒன்று அவளுக்கு.

‘சுகப்பட இவளுக்கு என்ன தகுதி இருக்கிறது?

கண்ணுக்கு கண்… பல்லுக்குப் பல்தானே

வாளெடுத்த இவள் வாளாலேதானே சாக வேண்டும்? வாழ்வேன் என எப்படி நினைக்கலாம்?’ மிரண்டாள்.

விபரீதம் என கூக்குரலிட்டதே இவள் மனம்… அது இனிமேல்தான் வரும் போலும்.

சகாயன் வாகாக படுக்க ஒரு தலையணையை வைத்துவிட்டு மெல்ல எழுந்து கொண்டாள் ஷ்ருஷ்டி. இதில் சற்றாய் தூக்கம் கலைந்த அவனோ “சாரி… கால் வலிச்சுருக்குமே… நீயும் தூங்கு” என தன்னருகில் கை காட்டிவிட்டு முழு தூக்கத்திற்குள் நழுவினான்.

கடந்த சில நாட்களின் அலைச்சலுக்கும்… இன்றைய நாளின் அத்தனை நிகழ்வுக்கும் இவளுக்குமே தூக்கம் அள்ளிக் கொண்டு போக வேண்டும்தான்…

ஆனால் ‘தப்பு செய்துட்டு எப்படி நல்லா இருக்க முடியும்னு நினைக்கிறேன்…? அதுவும் யார கஷ்டப் படுத்தினனோ அவனாலயே சந்தோஷ பட முடியும்னு எப்படி நினச்சேன்?’ என்ற நினைவு கும்மியடிக்க… அதை எல்லாம் அடக்கிப் போட்டு இவள் தூங்கச் செல்ல வெகு நேரமாயிற்று.

அடுத்த பக்கம்