காதல் வெளியிடை Final 2

 

ரு கணம் சஹாவை மீண்டுமாக பார்த்துக் கொண்டாள் ஷ்ருஷ்டி. அவன் தூக்கத்தை கெடுக்கும் வகையில் எதுவும் இல்லை என முழுதும் உறுதி செய்து கொண்டவள்… மெல்ல மெல்ல பூனை நடை நடந்து டென்டைவிட்டு வெளி வந்தாள்… அடுத்த நிமிடம் முதன் முதலில் தரை மிதித்த ரப்பன்ஸ்ல் ரேஞ்சில் அத்தனை உற்சாகமும் உவகை துள்ளலுமாய் நித்துவையும் பவனையும் பார்த்து ஓடினாள்.

“ஏய்… நித்துப் பாப்பா… ஹாய் ஜிஜு…”

முந்திய இரவு பவன் விமானத்திலிருந்து தரை இறங்கியதுமே சஹாவைத்தான் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தான். ஓரளவுக்கு மேல் ஷ்ருஷ்டியும் சஹாவும் தொடர்பிலேயே இல்லை என்றானதுமே பவன் சஹாவின் கார் GPRS மற்றும் மொபைல் சிக்னலை உரிய ஆட்கள் மூலம் ட்ராக் செய்யத் தொடங்கி இருந்தான். ஆக வெகு சீக்கிரமே இந்த குறிப்பிட்ட இடத்தை சஹா ஷ்ருஷ்டி தாண்டவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது அவர்களால்.

ஏற்கனவே முன்பு இந்த இடத்தில் மெயின் ரோட்டை தவிர்த்து இப்படி கிளை சாலையில் பவனும் சஹாவும் வந்தது உண்டு என்பதால்… பாதுகாப்பாக இருந்தால் அநேகமாக இந்த பகுதியில்தான் சஹா தங்கி இருப்பான் என யூகித்து இங்கு வந்திருந்தான் அவன்.

அட்வென்சர் பிரியனான சஹா அவன் அனுபவங்கள் நிமித்தம் நிச்சயமாய் சூழ்நிலையை சமாளித்திருப்பான் என்ற நம்பிக்கை வெகுவாக பவனுக்கு உண்டு. இருந்தாலும் கண்ணால் காணும் வரை பதறும் தானே.

இங்கு வரவும் டென்ட் கண்ணில் படவுமே நித்து பவன் இருவருக்குமே எல்லா வகை நிம்மதியும் வந்துவிட்டதென்றால் ஷ்ருஷ்டி இவர்களைக் கண்டதும் ஓடி வந்த விதத்தில்…

“ரெண்டு நாள்ல மேரேஜ் வச்சுகிட்டு இங்க என்ன சுத்திகிட்டு இருக்கீங்க…?” என அவள் துள்ளலாய் கேள்வி கேட்ட வகையில் இவர்களுக்கு அத்தனை அத்தனை சந்தோஷம்.

பூவுக்கு மட்டுமல்ல பூத்திருக்கும் காதலுக்கும் வாசம் உண்டாம். அதை காதலர்களான பவனும் நித்துவும் ஷ்ருஷ்டியிடம் உணர தவறுவார்களா என்ன? அவளை பார்க்கவும்தான் தெரிகிறதே  அவளுக்குள் எல்லாம் நேராகிவிட்டதென…

அதில் நித்துவுக்கு அடி தடையற்ற மகிழ்ச்சி உண்டாகிறதென்றால் பவனுக்கோ அதோடு சேர்ந்து அவளை சீண்டும் ஆசையும் உண்டாகிறதே…

“என்ன செய்ய ஒரு மாட நம்பி வீட்டுப் பொண்ண அனுப்பினா இப்டித்தான் அலையனும்” முன்னால் வந்து கொண்டிருந்த பவன் விளையாட்டாக சொன்னான்.

“போங்க ஜிஜு… பாவம் அவங்க என்ன செய்வாங்க…? அவ்ளவு ஃபீவர் தெரியுமா… தலை வலி வேற… ரொம்ப கஷ்டபட்டுடாங்க” அறியாப்பிள்ளையாய் பவன் போட்ட தூண்டிலை கவ்வி வைத்தாள் ஷ்ருஷ்டி.

“என்னது ஃபீவரா? இன்னுமா அப்டி சொல்லி உன்ன ஏமாத்திட்டுருக்கான் அந்த மாடு? காலைல மூனு மணிக்கு போன் பண்ணிகிட்டு, வர்றதே வர்ற ரெண்டு பார்சல் மட்டன் ப்ரியாணியோட வான்னு சொன்னான்… அவனுக்கு பீவராமா? போய்ப் பாரு கார்ல ப்ரியாணி இருக்கு”

“ஐய… என்ன ஒரு பொய்… மூனு மணிக்கு அவங்க நல்லா தூங்கிட்டாங்க… நான்தான் பார்த்தனே” ஷ்ருஷ்டியாவது விளையாட்டு கூட சஹாவை விட்டுக் கொடுப்பதாவது…

“எது…? இப்டியா நம்புவ..? இருட்ல போன் ஃபேச எவ்ளவு நேரம் ஆகும்…?” இன்னுமாய் வம்பிழுத்தான் பவன்.

“ஒன்னும் இருட்டுல்லாம் இல்ல… நான்தான் அவங்க பக்கத்துலயே…” பேச்சு வேகத்தில் பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஷ்ருஷ்டி பேச்சை இங்கே நிறுத்திவிட்டாள்.

மூன்று மணிக்கெல்லாம் தூக்கத்தில் சஹா அவனை அறியாமல் தலையை அசைத்து காயத்தில் இடித்துக் கொள்வதும் வலியில் பிறழ்வதுமாயும் இருக்க… அவன் பக்கத்தில் அமர்ந்து தூங்குகிறவன் தலையை வாகற்ற வகையில் திருப்ப விடாமல் அவ்வப்போது தடுத்து பிடித்துக் கொண்டிருந்தது இவள்தான்.

அத்தனை மணி வரையெல்லாம் தீ எரிக்க விறகோ குச்சியோ கிடையாதே… மொபைலைதான் கையில் வைத்துக் கொண்டு அவன் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். அதனால் நேர அளவெல்லாம் நன்றாகவே தெரியும் அவளுக்கு.

ஆனால் இதையெல்லாம் நித்துவிடம் கூட இவளால் சொல்ல முடியுமா என தெரியவில்லை… இதில் பவனிடம் எப்படி உளற?

இப்ப என்ன சொல்லி பேச்சை திருப்ப…? பே பே… என்ற முழியோடு இவள் யோசிக்க… இதே நேரம்

“யார்டா அது என் பொண்டாட்டிட்ட வந்து என்ன கோள் மூட்றது?” என்றபடி வெளியே வந்தான் சஹா.

‘என்னது பொண்டாட்டியா??’  “ஹிக்”

ஷ்ருஷ்டிக்கு விக்கலே வந்துவிட்டது. நித்துவுக்குமே புரையேறியது என்றால்…

பவனோ அதை அப்படியே விட்டு “தலைவலின்னுதான பேச்சு… அம்னீசியான்னு சொல்லவே இல்லயே… என்னப் பார்த்து யாருன்னு கேட்குதே மாடு” என அதை பிக்கப் செய்தான்.

பவன் எதிர்பார்த்தது போலவே “யெஸ் யெஸ் அம்னீசியாவேதான்… என் சிமிகுட்டிய தவிர யாரையும் அடையாளமே தெரியாதாங்கும்… அப்டி ஒரு அம்னீசியா” தன்னவளைப் பார்த்து சின்னதாய் கண் சிமிட்டியபடி சஹாவிடமிருந்து வந்தது பதில். இதற்குள் ஷ்ருஷ்டிக்கு வெகு அருகில் வேறு வந்து நின்று கொண்டான்.

எப்படி இருக்கிறதாம் ஷ்ருஷ்டிக்கு? வந்த விக்கல் நின்று போனது அவளுக்கு.

பவனோ “அவன் தலைல எங்க அடி பட்டுதுன்னு சொல்லு சோட்டு… அந்த இடத்திலேயே ரெண்டு ஓங்கிப் போட்டா திரும்ப எல்லாம் நியாபகம் வந்துடுமாம்… மூவிலல்லாம் அப்டித்தானே சொல்லியிருக்காங்க” என கிண்டலடிக்க…

“சும்மா இருங்க நீங்க… பாவம் அவங்களுக்கு ஏற்கனவே தலைல அடிபட்ருக்கு… இப்ப போய் என்ன பேசிட்டு இருக்கீங்க” நித்து தன்னவனிடம் இப்படி இடை புகுந்தாள்.

“ஹ ஹா நித்து… அவனுக்கு இப்டில்லாம் பேசலாம்னு தெரிய வச்சதே நான்தான்… அவ்ளவு கலாய்ச்சுருப்பேன் அவன… பாவம் பையன் தெரிஞ்சத சொல்லிப் பார்க்கிறான்… ப்ராக்டீஸ் ப்ராக்டீஸ்” சஹா இப்போது பவனுக்கு சப்போர்ட் செய்தான்.

“போடா மாடு… நிஜமாவே உன்ன நாலு போடனும்னுதான் வந்தேன்… அன்ஷிய நான் கொண்டு போய்விடுறேன்… நீ ஃப்ளைட்டுக்கு வான்னு நான் சொல்றப்பவே வந்திருந்தன்னா இப்போ இப்டில்லாம் மாட்டி இருக்க வேண்டாம்ல…” பவனின் குரலில் விளையாட்டுதனமற்ற உண்மை ஆதங்கம் இருந்தது. “ஊரும் தெரியாது லாங்குவேஜும் தெரியாது… இதுல கூட ஒரு பொண்ணு வேற”

“ஏன்… அப்பவும் என்னப் போல நீ இங்க இப்டி மாட்டி இருப்ப… நான் உன்னத் தேடி இப்படிதான் வந்து நிப்பேன்… இதுல என்ன மாறிடப் போகுது…” சஹாவும் கிண்டலின்றி பதில் கொடுத்தவன்

“என்ன எனக்கு கிடச்ச பெர்த் டே ட்ரீட் தான் மிஸ் ஆகி இருக்கும் இல்லையா சிமிக்குட்டி?” என மிக சன்ன குரலில் தன்னருகில் உள்ளவளை சீண்டினான். இல்லை சீண்ட நினைத்தான். அங்கதான் அவ இல்லையே…

‘எப்ப போனா?’ அதன் பின்தான் கவனித்தவனாய் கண்களை சுற்றிலும் சுழல விட்டால்… சற்று தொலைவில் நின்றிருந்த கார் கூட்டத்தைப் பார்த்துப் போயிருந்தாள் அவள்.

வெட்கம் என்பதால் விலகி ஓடுகிறாளோ?

ஷ்ருஷ்டிக்கு அது வரைக்கும் இருந்த உச்ச உற்சாகம் எடையற்ற இலகுத்தன்மை எல்லாம் கொஞ்சம் குறைந்து போய் இருந்தது.

நித்துவோ பவனோ ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக கூட இவள் மனதை குத்த வேண்டும் என்றெல்லாம் பேசவே இல்லைதான்… இருந்தாலும் ‘சஹாவ அடிக்கனும்..ஐயோ என்ன பேசுறீங்க நீங்க..ப்ச் சும்மா சொன்னேன்.. ஆனா நிஜமாவே ரொம்ப கவலையாகிட்டு’ என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொள்ளும் போது… இவளுக்கு மனம் மெல்ல கீழே இறங்கிப் போய்விட்டது.

எப்படியும் அவங்க அளவு நான் கிடையாதுதான..? என்ன காரணமா இருந்தா என்ன… சஹா சாகனும்னு நினச்சேன்தான..? என்ற ஒரு உணர்வு. இவளது குற்றமனப்பான்மை தலைசிதைந்து போனாலும் குற்றுயிரும் குலை உயிருமாய் இன்னும் கிடக்கிறதுதான் போலும்..

இவளுக்கும் சஹாவுக்குமான காதலை இவளுக்குப் புரிகின்றதுதான். அதன் அப்பழுக்கற்ற தன்மையும் வல்லமையும் இவள் முழுதும் அறிந்தே இருக்கின்றாள். கண்டிப்பாக இவளது கல்யாண முடிவையெல்லாம் இவள் மாற்றிக் கொள்ள போவதில்லைதான். இவளும் இவளவனும் இணைந்து வாழப் போகும் வாழ்வில் இவளுக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது… இருவரும்தான் ஒருவரை ஒருவர் நிறைவு செய்யப் போகிறவர்கள்… அதில் இவளுக்கு துளியும் சந்தேகம் இல்லை… ஆனாலும் ஒரு காற்றில்லா அழுத்த மண்டலம் மனதின் ஒரு ஓரத்தில்.

தன் காதலை ஏற்க முடிந்தவளுக்கு தன்னை ஏற்க முடியாத தவிப்பு.

ஆக விலகி வந்திருந்தாள் அவள்.

ஆனால் எவ்வளவு நேரம் நின்றுவிடுவாளாம்… அதுவும் அவனுக்கு தேவை இருக்கும் இந்நேரம். எப்படியும் இவளவன்… முழு வாழ்வும் இவளோடுதான் இருக்கப் போகிறான். அப்போது உலகின் மொத்த அன்பையும் கொட்டிக் கொடுத்துக் கொள்வாள்.. இப்போதும் இனி எப்போதும் அவனை சுவசமாய் நேசித்துக் கொள்வாள். இந்த நினைவு மீண்டுமாய் உற்சாகம் சேர்க்க…

அவனது வார்த்தைகளையும் பார்வைகளையும் ஒவ்வொன்றாய் எண்ணியபடி  தன் மனச் சோர்வை தூக்கிப் போட்டுவிட்டு, பவன் காரிலிருந்து ஃபர்ஸ்ட் எய்ட் பாக்‌சை எடுத்துக் கொண்டு அவர்களிடம் திரும்பி சென்று நின்றாள் ஷ்ருஷ்டி

“ஜிஜு முதல்ல அவங்க தலையப் பாருங்க… நேத்து இருட்ல ஒன்னும் சரியா பார்க்க முடியல” என்றபடி.

அவளது கண்களை தன் பார்வையில் ஏந்தியபடி பக்கத்தில் இருந்த சின்ன பாறையில் இப்போது சஹா அமர்ந்து கொண்டான். அப்பார்வையில் இன்னுமே சுகந்த சாரலாய் இவள் மனம்.

பவன் இப்போது சஹாவின் தலை காயத்தை ஆராய்ந்தான்.

“என்ன மாடு ஜஸ்ட் மிஸ் போல… இல்லனா” என சஹாவின் தலையில் பார்வையை வைத்தபடி ஆரம்பித்த பவனை, சஹா சின்னதாய் கையால் இடிக்க… அதன் அர்த்தம் உணர்ந்து ஷ்ருஷ்டியைப் பார்த்தபடி தன் பேச்சை கைவிட்டான் பவன்.

ஏனெனில் இதற்குள் சற்றாய் நெற்றி சுருக்கி வெகு சஞ்சலமான பார்வையுடன் பவனின் வார்த்தைகளை எதிர்நோக்கி நின்றிருந்தாள் அவள்.

“அதெல்லாம் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… ஜஸ்ட் சின்னதா காயம்… என்ன மூனு இடத்துல அதுவும் பின் மண்டையிலயே அடின்றதால படுக்றப்ப வலிச்சிருக்கும்… இப்ப உடனே ஹாஸ்பிட்டல் போய்ட்டு போய்டலாம்” என இருவருக்கும் பொதுவாக சொல்வது போல் சொல்லி ஷ்ருஷ்டியை ஆறுதல் படுத்திய பவன்…

“எப்படா வெட்டிங் வச்சுகலாம்னு நினச்சுருக்கீங்க?” என நேரடிக் கேள்விக்கு வந்தான்.

இன்னும் இதெல்லாம் சஹாவும் ஷ்ருஷ்டியும் பேசி இருக்கவே இல்லையே… சட்டென சஹாவின் பார்வை ஷ்ருஷ்டியிடம் போகிறது. வெளிப்பட விரும்பாத வெட்கப் பூரிப்பொன்று அவள் வதனத்தில் தங்க மின்னலாய் பூத்தெழ… அடர் திரையாய் ஆவல் அவள் விழித் திரையை வியாப்பிக்க ‘என்ன பதில் சொல்லப் போற நீ?’ என்ற வகை கேள்வி ஒன்று அங்கு உயிர்ப்பெறுகிறது.

அவளைவிடவும் கூட ஆவலாய் ‘எப்ப வச்சுக்கலாம்?’ என்ற கேள்வியை புருவம் ஏற்றி தன் கண்ணால் வினவிய சஹா…

“ரொம்பலாம் டிலே பண்ணாதீங்க… உடம்பு சரியானதும் உடனே இருக்க மாதிரி பார்த்துகோங்க… அதான் ஒன்றர வருஷமா ஒருத்தர ஒருத்தர் நல்லாவே தெரியுமே” என்ற பவனின் இடையீட்டில் அவனை நோக்கித் திரும்பினான்.

“ஆமா இப்ப இருந்தே ப்ளான் செய்ங்க… அப்பத்தான் ஒரு டூ த்ரீ மந்த்ஸ்லயாவது மேரேஜ் வைக்க முடியும்… எல்லாரையும் இன்வைட் செய்து எல்லா அரேஞ்ச்மென்டும் செய்துன்னு எப்டியும் ரெண்டு மாசமாவது டைம் வேணும்” நித்துவும் இப்போதே திட்டமிட துவங்க…

“தாத்தாட்ட முதல்ல பேசுடா… பயங்கரமா சந்தோஷப் படுவாங்க…” பவன் இன்னுமாய் உற்சாகப்பட

அமர்ந்திருந்த சஹா ஒவ்வொருவர் புறமாய் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த வகையில் அவன் கண்களில் ஏதேச்சையாய் படுகிறது அந்தக் காட்சி.

அவன் பக்கவாட்டில் நின்றிருந்த ஷ்ருஷ்டி தன் வலக்கை விரல்களால் இடக்கையில் இருந்த அந்த மங்கிய தழும்பை திரும்பத் திரும்ப தேய்த்துக் கொண்டிருந்தாள். அன்னிச்சையாய் செய்கிறாள் என்பதும் அவள் டென்ஷனில் இருக்கிறாள் என்பதும் இவனுக்கு சொல்லாமலே புரிகிறது.

தீவில் வைத்து தன் கையை வெட்டினாளே அந்த தழும்பு.

ஓ எல்லோரையும் இன்வைட் செய்யனும்னு நித்து சொல்லவும் இவனது தந்தையை யோசித்துவிட்டாளோ…? தாத்தாவ ஃபேஸ் செய்ய கூட கஷ்டமா இருக்கோ அவளுக்கு?

அவள் மனதை சரியாகவே யூகித்தான் இவன்.

“அச்சோ மழை தூறுது… அங்க திங்க்ஸெல்லாம் அப்படியே கிடக்கு…” என்றபடி ஓடாத குறையாக கிளம்பிப் போனாள் அவள்.

‘அப்போ பேசிட்டு இருக்கப்பவும் போனா… அது வெட்கம்னா, இப்ப கேஷுவலா கல்யாணத்தைப் பத்தி பேசி இருக்கமாட்டா… ஆக அப்பவும் இப்படித்தன் வேற எதுக்கோ ஓடி இருக்கா…‘ சஹா யோசிக்க தொடங்கினான்.

அடுத்தும் இவர்கள் அனைவருமாய் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் போதும்… இவர்கள் கார் கதி என்ன ஆனது என அனைவருமாகவே பார்க்கச் சென்ற போதும்… சஹாவிற்கு ஷ்ருஷ்டியின் இந்த தவிப்பு இன்னுமே புரிந்து கொண்டே சென்றது.

அவள் இயல்பாய் மகிழ்வாய் இருக்க முயல்கிறாள்… இவனருகில் அப்படித்தான் இருக்கிறாள். ஆனாலும் எதாவது ஒன்று மாற்றி ஒன்று அவளை கீழே இழுக்கிறது.

ஏனோ நேற்று இரவு ஷ்ருஷ்டியும் இவனும் பேசியது மீண்டுமாய் மனதுக்குள் ஓடியது சகாயனுக்கு.

“என்ன ஏன் ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க தெரியுமா? நான் ஃபர்ஸ்ட் ஸாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தப்ப… எங்க பக்கத்து வீட்ல இருந்தது… சொந்த பெரியப்பா பையன்தான்… அவன் காலேஜ் படிச்சுருப்பான் அப்ப… சைல்ட் அப்யூஸ்னு சொல்வாங்களே… அப்படி என்ட்ட…” பட படவென்று இல்லாமல் விளக்கம் போலும் சொல்லாமல் நிதானமாகவே சொல்லிக் கொண்டு போக…

இவனுக்கோ விஷயத்தின் வீரியத்தில் வெட்டும் அதிர்ச்சியும்… யார் மீதெல்லாமோ கட்டற்ற கோபமும், அவள் மீதோ பால்வகை இரக்கமும், தன்னவள் என்ற உரிமையும், ஒன்றும் செய்ய முடியா இயலாமையின் உச்ச உலைக்களமாய் உள்ளம் எரிந்து எழும்புகிறது… அதை முகத்தில் காண்பிக்கும் முன்பாகவும் கூட

அவளோ அவனை சாதாரணமாய் பார்த்தபடி “இதுல என்னை எதுவும் தப்பா நினைப்பீங்களாத்தான்?” என விசாரித்துக் கொண்டாள்.

அவள் கேட்ட தொனியிலும், அதற்கு முந்தைய அவள் பேச்சிலும், இவன் அவளை எந்த வகையிலும் தாழ்வாகவோ, அவள் வேதனை கொள்ளும் வகையிலோ நினைக்க மாட்டான் என்ற பரிபூரண நம்பிக்கை இருந்தது. அதோடு என்றோ நடந்த ஒரு விபத்தை சொல்லும் வகையில்தான் பேசினாளே தவிர… அழுதால் கசிந்தாள் என்றும் இல்லை.

அதை அவனும் துல்லியமாகவே உணர்ந்தான்.

அவளது இவன் மீதான இந்த நம்பிக்கையும், அவளது இயல்பு நிலையுமே இவனை ஆற்றித் தேற்றுகிறது… வேதனையில் இல்லை அவள். காயத்தை கடந்து வந்துவிட்டாள்.

அவளை இழுத்து அணைக்க சொன்ன மனதை அப்போதைக்கு அசட்டை செய்து “சே… இதுல நீ என்னப்பா செய்வ?” என அவளைப் போன்ற இயல்பு நிலையிலேயே கேட்டான். நடந்த விஷயத்தை அவள் பெரிது படுத்தாத போது இவனும் அதை அப்படியே கையாள எண்ணினான்.

“எனக்கு அதெல்லாம் என்னனு கூட வீட்ல சொல்ல தெரில… ஒரு டைம் அம்மா பார்த்துட்டாங்க… என் சேஃப்டிக்காகன்னுதான் என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்தது… அந்த பையனை எதுவுமே கேட்கல…” சொல்ல வந்ததை தொடர்ந்தாள் அவள்.

“என் அம்மா அப்பா மேல கோபம்னு எல்லாம் எனக்கு எதுவும் கிடையாது… எங்க வெளிய சொன்னா எனக்குதான் பேர் கெட்டுடும்னு யோசிச்சுருப்பாங்க… அவங்களுக்கு அப்டி மட்டும்தான் யோசிக்க தெரிஞ்சிருக்கும்… ஆக அவங்களுக்கு இது சரியான ஐடியவா தோணியிருக்கும்… ஆனா எனக்கு என்னமோ என்னை அவங்க டிஃபென்ட் செய்யாம போய்ட்ட ஃபீல்… என்னமோ எனக்கே பனிஷ்மென்ட் கொடுத்தது போல ஆகிட்டுதுல்ல… அந்த வயசுல ஹாஸ்டல்ன்றப்ப… ஒன்னொன்னையும் நானேதான் எனக்கு செய்துக்கனும்…

ப்ச்… ஆனா நீங்க எடுத்ததும் என்னை மோனிட்ட டிஃபென்ட் செய்தீங்களா… எதோ எங்க அம்மாவ விடக் கூட உங்கட்ட எனக்கு கம்ஃபர்ட்டா ஃபீல் ஆக ஆரம்பிச்சுது… என்ன முதல் முதல்ல டிஃபென்ட் செய்தது நீங்கதான்.”

ஒருமுறை கண் மூடித் திறந்து நடப்புக்கு வந்தான் சகாயன். அவள் மனம் சுகம் பெறும் இடம் எதுவென இவனுக்கு புரிந்தாற்ப் போல் இருந்தது. அவளின் சற்று அளவுக்கு மீறிய உணர்வுப் பிரளயங்களுக்கு இந்த குழந்தைப் பருவ நிகழ்வு கூட காரணமாக இருக்கலாம்… ஆனால் அங்கு கூட இவனது அன்பு அது போதுமானதாகவே இருந்திருக்கிறது.

இப்போதும் கூட தனியாக அவள் சமாளிப்பாள்தான். ஆனால் இவன் அவளுக்காய் எழுந்து நிற்கும் போது பூத்துக் குலுங்குவாளே. அடுத்து என்ன செய்ய வேண்டும் என இவனுக்கு புரிந்தார் போல இருந்தது.

தன்னவளை நாடிச் சென்றான்.

சார்ஜ் ஏற்றப்பட்ட சஹாவின் மொபைலில் ஷ்ருஷ்டி போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். வந்து இருவருமாக முதலில் உட்கார்ந்திருந்தார்களே அந்த பாறையைத்தான் நினைவுச் சின்னமாக பதிவு செய்து கொண்டிருக்கிறாள். கூடவே அங்கு நடந்த ஒவ்வொன்றையும் திரும்பவும் எண்ணிப் பார்த்தபடி…

இவளது முதுகுக்கு மிக மிக அருகில் ஒரு சஞ்சாரம்… வேற யார்? சகாயன்தான் வந்திருப்பான் என இவளுக்குத் தெரியும். ஏதோ ஒரு வெள்ளி ஊஞ்சல் இவள் வான வீதியில் ஆடத் துவங்குகிறதே…

“என்ன செய்யுதாம் என் சீனி மிட்டாய்?” பின்னிருந்தபடியேதான் கேட்டான் அவன். பெண்ணவள் தன்னவன் பார்வைச் சிறைக்குள் கொள்ளும் விடுதலை உணர்வை உயிரில் ஸ்பரிசித்தாள்.

“ம் பார்த்தா தெரியல…? ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கேன்… இங்க வச்சுதான் நீங்க மேரேஜுக்கு கேட்டீங்க… நான் சரின்னு சொன்னேன்… எனக்கு இந்த ஸ்னாபெல்லாம் வேணும்” விடுதலையா வெள்ளி ஊஞ்சலா இரண்டுமேவோ அவனிடம் துள்ளிப் பேசத்தான் செய்விக்கிறது அவளை. சற்று முன்னிருந்த காற்றில்லா மண்டலத்தை மனதுக்குள் காணோமே…

“ஃபோட்டாஸால தாஜ்மஹல் கட்டிட்டு இருக்கேன்னு சொல்லு…” கேட்டபடி இப்போது அவளுக்கு முன்னாக வந்தான் அவன். ஏதோ ஒரு வேக ராகம் மெல்லியதாய் வந்து இடை படுகிறது இவளுள்.

“எனக்கு தாஜ் மஹல்லாம் ஒன்னும் வேண்டாம்…” வெட்டலாய் சிணுங்கினாள்.

“ஆமாமா நம்ம ப்ளானெல்லாம் அதவிட பெருசு” குறும்பு வந்திருந்தது அவன் முகத்தில். ஹனிமூனை அல்லவா குறிப்பிடுகிறான் அவன். அங்கிருந்த பாறையில் சற்றாய் சாய்ந்து கொண்டான்.

அவன் எதைக் குறிப்பிடுகிறான் எனப் புரியாவிட்டாலும் ஏதோ இவளை சீண்டுகிறதே..

“எனக்கு பெருசா எதுவுமே பிடிக்காது” முறுக்கினாள்.

“அப்போ சின்னதா என்னல்லாம் பிடிக்கும்?” சன்னமாய் தலை சாய்த்து அவன். ஒற்றைப் பக்க கன்னத்தில் குழி. நழுவும் இந்த நொடி நிச்சயம் சுகம்தான்… அவனை அள்ளிப் பருகச் செல்லும் இவள் கண்கள் அப்படித்தான் கற்பிக்கின்றன.

ஒரு கணம் ‘போடா’ என்றுவிட்டு போகத் தோன்றினால் மறுபுறம் அவனிடம் விளையாட இவளுக்குமே பிடிக்கின்றதே…

“உங்களை பார்த்துட்டே இருக்க பிடிக்கும்” விளையாட்டு போல் சொல்ல நினைத்து ஆரம்பித்தவள்… சூடான கன்னங்களை கண்டித்து சமாளித்தும், உள்போன தன் குரலை வெளிக் கொணர்ந்துமென போராடிப் போனாள்.

ரசிக்கப்படுதலை ரசிக்கும் ரசனை அவன் கன்னக் கதுப்புகளிலும் கருவிழி ஓடும் விழிகளிலும். ஆனாலும் அவள் சொல்ல வருவதை தடை செய்யாது கேட்டிருந்தான். 27 என மட்டும் மனதுக்குள் முனங்கிக் கொண்டான்.

“இப்டி மனசுக்கு பட்ட எதையும் உங்கட்ட பேச முடியனும்…” சொல்வதால் உண்டாகுதே ‘சொந்தம் இவன்’ எனும் துல்லிய சொர்க்கம்…  அது சொல்வதை இன்னுமாய் தொடரத் தூண்டியது அவளை.

“பகல்ல எப்படியோ… ஆனா காலைல ஈவ்னிங் ரெண்டு டைமும் நீங்க என் பார்வை படுற தூரத்துக்குள்ள இருக்கனும்…”

“முக்கியமா நான் ஹவ்ஸ் வைஃபா இருக்கனும்… இப்படி சின்னதுன்னு ரேங்க் ஆகுற நிறைய பெரிய ஆசைகள் இருக்கு…” இவ்வளவு பேசும் முன் பெருமளவு சமனப் பட்டிருந்தாள் அவள்.

“என்னப் பொறுத்தவரைக்கும் எனக்கு இது பயங்கர passion… இதுல எனக்குன்னு ஒரு ஐடன்டிய உண்டு செய்தாகனும்னு எதுவுமே கிடையாது… இருக்ற காலம் வரைக்கும் நிம்மதியா சந்தோசமா திருப்தியா இருந்துட்டு போனாலே போதும்… இன்ஃபேக்ட் அதுதான் உண்மையில் ரொம்பவும் பெரிய அச்சீவ்மென்ட்டா கூட தோணும்…” என்றவள்

“பெரும்பாலும் என் வாழ்க்கை ஹாஸ்டல்லயேதான் இதுவரைக்கு போயிருக்கு… இனியாவது எப்பவும் நீங்க, நம்ம ஃபேமிலின்னு வீட்ல இருக்கத்தான் ஆசையா இருக்குது” என்றபடி அவன் முகத்தைப் பார்த்தாள்.

ஒரு கணம் அவளை அப்படியே உயிரில் உள்வாங்கிய அவளவன்…

அடுத்து வெகு சாதாரணமாக “பெருசா எதுவும் வெட்டிங் ப்ளான்லாம் இல்லைன்றதால சின்னதா நம்ம மேரேஜ சீக்கிரமா பவன் நித்து கல்யாணத்தன்னைக்கே வச்சுடலாமா?” எனக் கேட்டிருந்தான்.

“ஹான்!!!! ரெண்டு நாள்லயா???!! ஏன்??!!”’ ஷ்ருஷ்டிக்கு தலை வால் புரிகிறதாமா என்ன?

“ஆமா ரெண்டு நாள்லதான்… ஏன்ற காரணத்த மேரேஜுக்கு அப்றமா சொல்வேனாம்… அப்பதான் சரியா சொல்ல முடியும்” அவனது பதில் வந்த தொனியே அவளது பெண்மையில் உழவு செய்ய… அதற்கு மேல் அதைக் கிளற அவளுக்கு வரவில்லை… அதே நேரம் அந்த இன்ஸ்டென்ட் திருமணத்தை மறுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை.

ஏறத்தாழ ஒன்றரை வருடமாக அவனைத் தெரியும்… அதுவும் அவன் மனமும் செயலும் எவ்வளவோ புரியும்… இனி தெரிய வேண்டியதை திருமணம் செய்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்… நத்திங் ராங்.

அதோடு நித்து பவன் திருமணத்திற்குப் பின் அவர்களோடுதான் இவள் சென்னையில் தங்குவதாக ஏற்பாடு… அதுவே இவளுக்கு சற்று அன்கம்பர்ட் உணர்வு… இதில் அவர்கள் இருவரும் தேனிலவுக்கு ஏறத்தாழ ஒரு மாதம் போல செல்கிறார்கள்… இவள் அதுவரை பவனது பெற்றோருடன்  இருப்பதாக ஏற்பாடு… இவளது அப்பாதான் எங்கும் யாருடனும் இருக்க விரும்பவில்லையே… கடையிலயே தங்கிப்பேன்… உங்கள நீங்க பார்த்துகோங்க என்றுவிட்டாரே… பவன்  பெற்றோரிடம் இவளுக்கு நல்ல சுமுக உறவுதான் என்றாலும் அங்கு போய் தங்கி இருக்க தயக்கமாக இருக்கிறது.

அபவ் ஆல் நேத்து நைட் தூங்கவே அவ்ளவு கஷ்டப்பட்டான்… இந்த நிலமைல அவன  பார்க்காம விட்டுட்டு… இன்னும் ரெண்டு மாசமோ மூனு மாசமோ கழிச்சு கல்யாணம் செய்றதுல என்ன பெரிய புத்திசாலித்தனம் இருக்குதாம்?

சம்மதித்திருந்தாள்.

அடுத்த பக்கம்