காதல் வெளியிடை 20

ப்படியாய் செய்து வைப்போம் என ஷ்ருஷ்டி சுத்தமாய் எதிர்பார்த்திருக்கவில்லை….. அவனை நோக்கி திரும்பக் கூடாது என நினைத்து முடிக்கும் முன் திரும்பி இருந்தவளுக்கு….. அவன் பார்வையை கண்ணில் வாங்கிய நொடி சட்டென  கண்ணீர் பூத்து வருகிறது….

அவ்வளவுதான்….. தன் முன் ஓடிக் கொண்டிருந்த ஆரோனை அள்ளிக் கொண்டு அவசரமாய் உள்ளே போய்விட்டாள்…

அதைப் பார்த்திருந்த சஹா முகத்திலும் எந்த மாற்றமும் இல்லை……அடுத்தும் ஆகாஷிடம் சற்று நேரம் நின்று பேசிவிட்டு கிளம்பிவிட்டான்….

அந்த திருமணவிழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ரிசார்டின் பெரும் பகுதி விழாவுக்கென்றும் விளையாட்டுக்கென்றும் உணவுக்கென்றும் உட்கார்ந்து பேச என்றும் வகை வகையாய் பிரிக்கப்பட்டு  வித வித வர்ண துணிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க….. அதன் ஒரு ஓர பகுதியில் மரங்களும் செடிகளும் மட்டுமாய் தோட்டமாய் ஆள் நடமாட்டமின்றி கிடந்தது…..

ஆரோனை தூக்கிக் கொண்டு அங்கு சென்ற பின்தான் ஓரளவு ஆசுவாசப்பட்டாள் ஷ்ருஷ்டி… அதன் ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாடவென கிடந்த ஊஞ்சலில்  ஆரோனை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்… இல்லையெனில் அவன் எப்படி அங்கு இருக்க விடுவானாம்…? மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல இவள் ஆட…..

மனமோ வேக வேகமாக எங்கெல்லாமோ ஓடியது…

ஹா இங்கு வருவான் என இவள் அறிவு துளியும் எதிர் பார்த்திருக்கவில்லை….அவள் அடிமனம் எதிர்பார்த்ததோ? அன்று கப்பலில் இருந்து நித்துவும் பவனும் இவளை அழைத்துக் கொண்டு வந்த சில தினங்களுக்குப் பின் சஹாவுடனான அந்த தீவு நிகழ்வை மட்டும் ஒரே ஒரு முறை நித்துவிடம் சொல்லி அழுதிருக்கிறாள் இவள்…. அப்போது நித்துவும் சஹாவுடனான தனது தற்போதைய அனுபவங்களை விளக்கமாகவே சொல்லி இருந்தாள்…. அதாவது நித்து திருமண விஷயத்தில் சஹா புறம் எந்த தப்பும் இல்லை என இவளுக்கு புரியும்விதமாக  எல்லாவற்றையுமே சொல்லி இருந்தாள்.

ஆனால் அதன் பின் இந்த மொத்த ஒரு வருடத்தில் இவளுக்கு வேதனையாக இருக்கும் என்பதால் சஹாவைப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ நித்துவோ பவனோ இவளிடம் அரை வார்த்தை கூட பேசியது கிடையாது…. இத்தனைக்கும் சஹா பவனின் நெருங்கிய நண்பன் என்றும் இவளுக்கு தெரியும்….

முதல் இரண்டு மூன்று மாதம் வரையுமே இவளுமே சஹாவைப் பற்றி நல்லதற்காகவோ அல்லது தீயதற்காகவோ எதற்காகவும் நினைக்கவும் விரும்பவில்லை….அந்த தெம்பெல்லாம் அப்போது அவளுக்கு இல்லை….

விழுந்து கிடந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும் அப்படி ஒரு காலம் அது இவளுக்கு…. பழி வாங்குவதின் கோரம் அது….முந்திய நொடிவரை நம் பக்கம் முழு நியாயமாகவும் எதிராளியின் எல்லாமே கோர குற்றம் என்று தோன்றினாலும் அவன் உயிருக்கு போராடும் அந்த நொடி எல்லா வகையிலும் அவனுக்கு சற்றும் குறையாத குற்றம் நாம் செய்வதும் என்று வந்து புரியுமே அதை தாங்க முடியாது வீழ்ந்து கிடந்தாள் இவள்…. கொலை செய்ய துணிந்தோமே என்ற ரத்த பாரத்தில் நசுங்கிப் போய் கிடந்தாள்…… அதற்கும் மேலாக அவன் இவள் குடும்பத்திற்கு எந்த தீங்கையும் செய்திருக்கவில்லை என்ற அடுத்த புரிதலில் அணுஅணுவாய் அழுகிப் போய் கங்கலற்ற நெருப்பால் கருகிப் போய் கிடந்தாள்….. நித்துவும் பவனும்தான் அப்போது இவளைப் பார்த்துக் கொண்டது….

விபரம் தெரிந்து முதன் முறை அத்தனை காலம் வீட்டிலிருந்தாள் இவள்…. இரண்டாம் வகுப்பிலிருந்து  எப்போதும் ஹாஸ்டலில் இருந்தவள் ஆயிற்றே……. ஆக அம்மா அப்பா என்ற உறவு தங்கள் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பெரும்பாலும் இவளுக்கு கற்பனையே…. அதை அந்நாட்களில் நித்துவிடமும் பவனிடமும் நிஜத்தில் அனுபவித்தாள் இவள்…. ஆம் இருவருமே இவளை தங்களது சொந்த குழந்தை போலத்தான் பார்த்துக் கொண்டார்கள்….

இவளைவிட இரண்டும் நான்குமாய்தான் அவர்களுக்கு வயது வித்யாசம்… ஆனால் இவள் மிக பலவீனமாய் வீழ்ந்திருந்ததாலோ என்னமோ வெகு வெகு சிறு குழந்தை போலத்தான் இவளை பேணி போஷித்தனர்…. நித்து எப்போதும் இவளுடன் இருந்தாள் எனில் பவன் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்…

எப்போதும் ஏதோ ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தே வளர்ந்திருந்தவள் ஷ்ருஷ்டி…அதில் இந்த குழந்தை வகை பேணுதல் எப்படியோ ஒரு வகையில் மிக மிக பாதுகாப்பாக உணரச் செய்தது இவளை… அதில்தான் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்தாள் இவள் என்றே சொல்ல வேண்டும்…

அந்த காலத்துக்குள் நித்து இவர்கள் தொழிலை சற்றாய் மாற்றி அமைத்து இருந்தாள்… வெறும் டைல்ஸ் விற்பனை என்று மட்டும் இல்லாமல் அதை இவர்களிடம் வாங்கும் நபர்களுக்கு இவளது ஆட்களே பதித்தும் கொடுத்து விடுவார்கள் என்பது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தாள்….

பொதுவாக பதித்து கொடுக்கும் கான்ட்ராக்ட்காரர்கள் கடை முதலாளிகளிடம் அதிக அளவில் கமிஷன் கேட்பதால் விற்பவர்கள் எப்போதும் அதிக விலைக்கு இந்த வகைப் பொருட்களை விற்பது வழக்கம்….நித்துவே பதித்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக் கொண்டதால் அந்த கமிஷனுக்காக விலையேற்ற தேவையின்றி போக…பிறரைவிட நன்றாகவே விலை குறைத்து விற்பனை செய்ய முடிந்தது இவர்களால்…. அதனால் பெரிய பெரிய ஆர்டர்கள் வரத்துவங்க மார்பிள்ஸ் க்ரானைட் சானிடரி வேர்ஸ் விற்பனை என கடை விரிவடையத் துவங்கியது…. கிளைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருந்தாள் நித்து….

கடையின் அனைத்து விஷயங்களையும் கம்ப்யூட்டரில் பதிந்து….ஒரு சிறு காரியம் கூட இவளுக்கு தெரியாமல் கடையில் நடைபெற முடியாதபடி விற்பனை மற்றும் கொள்முதல் முறைமைகளை அமைத்து…. ஏற்ற ஆட்களை ஒவ்வொரு கிளையிலும் வேலைக்கு நியமித்து என…. ஒரு இடத்தில் இருந்தே அனைத்து கிளைகளையும் நிர்வகிக்க கூடிய அளவிற்கு ஏற்பாடுகளையும் செய்திருந்த நித்து…. அடுத்து குடும்பமாக சென்னைக்கு இடம் பெயர்வதற்கு ஆயத்தமாகி இருந்தாள்….

பவனுடன் பின் நாளில் நடக்க இருக்கும் அவளது திருமணத்திற்கும்…. அவளது தொழில்வகைக்கும் இந்த இடமாற்றாம் ஏற்றதாய் இருக்கும் என்பது நித்துவின் முடிவு…

பவனுடனான நித்துவின் திருமண எண்ணத்தை இவர்களது அப்பா ராஜ சுந்தரம்  விரும்பினாரா வெறுத்தாரா என்பது அப்போது  புரியாத புதிரே…. மகள் மறுக்க மறுக்க இழுத்து பிடித்து செய்து வைத்த அவர் செயல் அவள் தலையில் வந்து விடிந்த விதத்தை கண்ட அவர், இப்போது இந்த திருமண முடிவு அவளுடையது என்பதால் எதிராக எதையும்  பேச துணியவில்லை போலும்…. ஆனால் பவனிடம் நச்சு நச்சு என அறித்துப் பிடுங்கிக் கொண்டுதான் இருந்தார்…. அது அவனும் பொய்த்துவிடக் கூடாதே…அடுத்த ரணமாய் ஆகிவிடக் கூடாதே என்ற அக்கறையின் துருவலாயும் சில நேரம் தோன்றும்…இரண்டாவது கல்யாணம்னா அது கேவலம்…அதை செய்ய ஒருத்தன் வர்றான்னா அவனும் கேவலம்ன்ற வகை பேச்சாகவும் ஒரு சிலநேரம் புரியும்…. எது எப்படியோ பவன் அவரை பக்குவமாகவே கையாண்டான்…

மகள் வகை சோகத்தில் போதைக்கு போனவர் என்பதாக குடித்துக் கொண்டு இருந்தவர்….இப்போது விட நினைத்தும் முடியவில்லை என ரிகபிலேஷன் சென்டரில் போய் தங்கி இருந்தார்…. இவர்களோடு அப்போது சென்னை வர மறுத்துவிட்டார்…..

சென்னை வருவது ஷ்ருஷ்டிக்கு சற்று உதறலாய் இருந்தாலும்…..அப்பாவும் வராத சூழலில் நானும் வரமாட்டேன் எனச் சொல்ல இவளுக்கு  மனம் ஒப்பவில்லை… ஆக மறுப்பேதும் காண்பிக்காமல் நித்துவுடன் சென்னை வந்துவிட்டாள் இவள்…

அப்போதுதான் இவள்  சஹாவை மீண்டுமாய் நினைவிற்குள் அனுமதித்ததே….. அவன் பவன் மூலம் இவளை சந்திக்க வழி தேடுவானோ என்ற வகை பயம்தான் சென்னை வர இவள் தயங்க காரணமே… திருவேங்கடத்தில் வந்து சத்திப்பது என்பது ஊரறிய செய்யும் செயல்…..பவனே அதனால்தான் வெகு அளவாக வருவது….முடிந்தவரை கடையோடு தன் வருகையை நிறுத்திக் கொள்வான்…ராஜசுந்தரத்தோடு சேர்ந்துதான் இவர்கள் வீட்டிற்கு வருவதெல்லாம்….. அப்படி சஹா வருவான் எனத் தோன்றவில்லை இவளுக்கு….

ஆனால் சென்னையில் சந்திப்பது என்பது முற்றிலும் வேறு….இயல்பு போல எதேச்சையாய் நடப்பது போல எத்தனையோ இடத்தில் சஹா இவளை வந்து சந்திக்க வழி உண்டு…..  அவன் இவளது நிரந்தர பலவீனம்….இன்னொரு முறை அவனை சந்திக்கும் இதயம் மீதான ஈட்டி குத்து அனுபவத்தை தேடிச் சென்று வாங்க இவள் எக்காலத்திலும் தயாரில்லை…. எத்தனை வகை க்ரோதம் அவனிடம் இருந்தாலும்  அவனது இவள் மீதான அக்கறையை ஜெயிக்க இவளிடம் ஆயுதம் இல்லை…. அதில் அவன் இவளை வீழ்த்தியது வீழ்த்தியதுதான்… தனி மனுஷியாய் இவளை இதுவரை யாரும் இத்தனையாய் நேசித்தது கிடையாது…. இவளது அம்மாவின் அன்பு கூட தோற்கும் இடம் அவன்தான்…. ஆனால் சாத்தானின் காதலியாய் இருந்தால் நரகத்தில்தானே பிறண்டாக வேண்டும்…. அவன் காதல் ரணம்…. நரக ரணம்….

அப்போதைய நிலையில் இவளால் சஹாவை நித்து திருமண விஷயத்தில் குற்றவாளி கிடையாது என முழுதாக நம்ப முடிந்தது  என்றாலும், சஹா மீது நல்லவகையில் எல்லாம் எண்ணம் கிடையாது….அவனைக் குறித்து ஒரு பயமும் இருந்தது இவளுக்கு…..

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை….  இவர்கள் பயணம் செய்த கப்பலே சஹாவுடையது எனும் போது…. இவள் அந்த ட்ரோன் துரத்தலில் கடலில் விழுந்த நிகழ்வில்….கப்பல் நிர்வாகம் இவள் மீது கன்னா பின்னாவென கழுத்தை முறிக்கும் அளவு அபராதம் போட்டதும்…அதற்கு இவளே அவனிடம் உதவி கேட்காத போதும்…. சஹாவே தேடி வந்து கெஞ்சி கெஞ்சி இவளிடம் அனுமதி வாங்கி…. எதோ ஞானி போல இவளுக்காக வாதாடி இவளுக்கும் மோனிக்கும் காம்பன்சேஷன் வாங்கிக் கொடுத்ததும்….. உட்சகட்டமாக இவள் ப்ராஜக்ட் செய்ய என எதற்கு என்றாலும் அவன் கூட மட்டுமே போக முடியும் என அக்ரிமென்ட் போட்டதும்….அதுவும் எது நடந்தாலும் தண்டனை அவனுக்குத்தான் என்பது போல தியாக செம்மலாய் ஒரு உடன்படிக்கை போட்டு…அதையே காரணம் காண்பித்து எப்போதும் இவளை அவன் அருகில் அவனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டானே அதெல்லாம் வெகுவான திட்டமிட்ட நாடகம் தானே…. இவன் கப்பல்ல இவன் வேண்டாம்னு சொல்லியுமா அபராதம் போட்டுடப் போறாங்க…? அதுக்கு என்ன ஒரு நாடகம்????

அந்த நாடகத்தின் நோக்கம் இவள் கூடவே இருக்க வேண்டும் என்ற அவனது ஆசைதான் என்பது இவளது புரிதல்…. இவள் மீது அவனுக்கு இருந்த விருப்பம் காதல்தான் என்பதில் இவளுக்கு சந்தேகமில்லை… ஆனால் நேர்மையற்றவனின் காதல்…..சீக்கிரமே அழிந்தும் போய்விடும்….. எது எப்படியோ அவனது அப்போதைய நோக்கம் இவளை திருமணம் செய்து ஒழுங்காய் வாழ்வதாக கூட இருந்திருக்கும்….ஆனால் அதற்கு என்ன ஒரு க்ரிமினல் ப்ளான்?

அது மட்டுமா? பூரிதான் அவனுக்கு அந்த கடிதம் எழுதும் நபர் என தெரிந்திருக்குமாய் இருக்கும்…..இல்லை என்றால் கூட பூரிக்கு சஹா மீது உள்ள ஈர்ப்பு அவனுக்கு தெரிந்திருக்கும்……அதனால்தான் திட்டமிட்டு அவளையும் கூட அழைத்துச் செல்வது போல் அலெக்சாண்ட்ரியா கடலடி பயணத்துக்கு அழைத்துப் போய்விட்டு…..அவ வரலைனா இவ மட்டும் தனியா சஹா கூட போய்ருக்க மாட்டாளே…அது சஹாவுக்கும் தெரிஞ்சிருக்குமே…ஆக அந்த சஹா இவ  கூட சேர்ந்து சுத்தனும்ன்ற ஒரே காரணத்துக்காக பூரிய அங்க வரைக்கும் கூட்டிட்டுப்போய்ட்டு அங்க வச்சு நீ என் தங்ச்சின்னு சொல்லி அவள ஹர்ட் ஆக்கி… அவ ஃபீல் பண்ணவும் நல்லவன் போல கப்பலுக்கு அனுப்பி வச்சாச்சு…

சஹா தன் காதலுக்காக இதை செய்தான் என எடுத்துக் கொண்டாலும்…..எத்தனை ஒரு கீழ்தரமான திட்டம் இது….அதுவும் பூரி மாதிரி அப்பாவிய யூஸ் செய்துக்கிறதெல்லாம் இவளைப் பொறுத்தவரைக்கும் வக்ரம்….

அந்த அலெக்சாண்ட்ரியா தினத்தில் இது இவளுக்கு நெருடியதே தவிர புரியவில்லை என்றாலும், அடுத்து கப்பல் ஓனர் அவன்தான் என அறிந்தபின் யோசிக்கையில் தெளிவாக புரிய… மிகவுமே வலித்துப்போயிற்று இவளுக்கு…..

எது எப்படியோ அவன் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள எந்த அளவுக்கும் இறங்கி திட்டம் இடுவதில் எக்‌ஸ்பெர்ட்… அதில் அவனும் அவனது அப்பாவைப் போன்றவனேதான்….என்பது இவள் சென்னை குடிவந்த காலம் வரையுலுமான நம்பிக்கை….

இப்படி ஒரு மன நிலையில்தான் சென்னை வந்து சேர்ந்தாள் இவள்…. ஆனால் இங்குமே சஹாவின் நிழல்பட்ட தூசி கூட தலைகாட்டவில்லை…பவனும் வழக்கம் போலவே இயல்பாக பழகினான் இவளிடம்…

ஆக ஒரு வழியாக நிதானமாகி சாஹாவை நினைப்பதையும் தவிர்க்க தொடங்கி இருந்தாள் இவள்….

சென்னையிலுமே ஒரு அலுவலகத்தை அமைத்திருந்த நித்து மிக மிக பிசியாகிய காலக்கட்டம் அது…. அவளுக்கு ரெட்டை பொறுப்பாக இன்னுமே குழந்தை போல் அவள் கைக்குள் இருக்க இவளுக்கு இப்போது மனம் வரவில்லை….. அந்த அளவு அந்த கொலை நிகழ்வில் இருந்து  தெளிந்திருந்தாள் ஷ்ருஷ்டி….அதோடு சஹாவின் தொல்லையும் இருக்காது என்று புரிந்ததால் அப்போது இவளுக்கு கல்லூரி செல்ல எண்ணம் உண்டாயிற்று…..

ஆக மீண்டுமாய் தன் படிப்பை தொடர்ந்தாள்…. பாட்டனியைப் பார்க்கும் போதும் ப்ராஜக்ட் ரிப்போர்ட் எழுதும் போதும் அவன் நியாபகம் வரமலா? வரத்தான் செய்தது….. ஆனாலும் நினைக்க கூடாதவற்றை நினைப்பதின் ஆய பயன் என்ன? சஹா எனும் எண்ணத்தை தாண்டிக் கொண்டாள்…

ஷ்ருஷ்டியின் எண்ணங்கள் இப்படி நடந்தவற்றை அசை போட்டுக் கொண்டிருக்க….. “இங்கயா இருக்க….அங்க மாப்ள வீட்ல இருந்து நலுங்கு செருமனிக்கு வந்தாச்சு” என இவளை வந்து அழைத்தாள் நிம்மி…

பவனின் அம்மாவின் பூர்வீகம் ஆந்திரா….அவர்கள் முறையில் திருமணத்திற்கு முன் மணமகனின் வீட்டு உறவுப் பெண்கள் மாத்திரமாய் வந்து மணப்பெண்ணிற்கு நலுங்கு செய்வார்களாம்…

அதற்காக அவர்கள் வந்துவிட்டனர் போலும்…. முன் நின்று வரவேற்க வேண்டியவள் இவளல்லவா…. ஆக எழுந்து ஓட்டமும் நடையுமாய் சென்று சேர்ந்தாள் ஷ்ருஷ்டி,….

அங்கு சடங்கு துவங்கியது…… உடலெங்கும் நுணுக்கமான சரிகை வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த க்ரேயிஷ் லைலக்  நிற புடவையில் ஒற்றை சுட்டியும் சிறிதளவான நகையுலுமாக நித்து மென் அலங்காரத்துடன்  அங்கிருந்த சிறு மேடையில் அமர்ந்திருந்தாள்….

விழா நடந்து கொண்டிருந்த அந்த சிறு அரங்கு முழுவதும் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பல பருவத்தில் உள்ள பெண்கள்  குழுமி இருந்தனர்… ஆண்கள் வரக் கூடாத விழா போலும்….

ஒவ்வொரு பெண்மணியாக வந்து… நித்து அருகில் வைக்கப் பட்டிருந்த சந்தனமும் மஞ்சளுமான கரைசலை எடுத்து அவள் இரு கைகளிலும் கன்னங்களிலும் பூசி….பின் மஞ்சளில் தோய்த்து வைக்கப்பட்டிருந்த அரிசியை எடுத்து அவள் தலையில் தூவி அவளது திருமண வாழ்கைக்காய் சின்னதாய் ஜெபித்துவிட்டு இறங்கிப் போயினர்…..

ஒவ்வொருவருக்கும் இதழ் பிரியா புன்னகையுடன் சிறு உதடசைவில் நன்றி சொல்லி விடை கொடுக்கும் நித்துவை ஆசை ஆசையாக  பார்த்திருந்தாள் ஷ்ருஷ்டி… எப்போதும் அவளது அக்கா அழகுதான்…இப்போதோ அவள் ஒளி வீசிக் கொண்டிருப்பது போல் படுகிறது…… அது அவளது உள்ளான சந்தோஷத்தின் அளவு… அதை உணர்கையில் இவளுக்குமே மனம் நிறைந்து போகிறது….

இறுதியில் வந்தது பவனின் அம்மாதான்…. “ரொம்ப அழகா இருக்க நித்துமா” என்றவர் செய்முறைகளை புன்னகையும் பொறுமையுமாய் ரசித்து ரசித்து செய்தார்…. சற்று அதிக நேரமே இவள் தலையில் கை வைத்து கண் மூடி ப்ராத்தித்து ஆசீர்வதித்தவர்…. இப்போது நிறைவான உணர்வுடன் “எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கனும்” என்றபடி மருமகளாக வர இருப்பவளின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார்.

முகம் பூரிக்க இதழ் பிரியாமல் புன்னகைத்தாள் நித்து….

“பவன்னா காத்துன்னு அர்த்தம்மா…..அவன் பேரப் போல சின்னதிலிருந்தே காத்து மாதிரிதான் அவன்…..எப்படித்தான் இப்படி அமைதியா இருந்தே அவன சமாளிக்றியோ…..?” மருமகளை சிலாகித்த படியே அவளுக்கு ஒரு நீண்ட தங்க சங்கிலியை அணிவித்தார் பவனின் அம்மா….. அதுவும் முறை போலும்….

“எல்லாம் சட்டு சட்டுன்னு முடிவெடுப்பான்….அப்ப அப்பவே செய்து முடிச்சுடுவான்….. இந்த கல்யாண விஷயம் மட்டும்தான்மா ஒரு வருஷமா வெயிட் செய்து அவன் செய்ற ஒரே வேலை….” அவர் தொடர…

‘உங்க காத்துப் பையன் இதக் கூட ஒரே ஒரு நாள்லதான் முடிவெடுத்தார் அத்த ….’ என நித்து மனதில் சொல்லிக் கொண்ட வேளை….

“யார்மா  இந்த சில் வண்ட அமைதின்னு சொல்லி உங்கள ஏமாத்துனது?” என்றபடி  மேடைக்கு  வந்தது சாட்த் சாட்த் பவனேதான்…

‘டேய்ய்ய்ய்ய்….’என்ற தொனியில் ‘பவன்ன்ன்ன்ன்’ என்றார் அவனது அம்மா..

இதற்குள் கிண்டலும் கேலியும் சிரிப்பொலியுமாய் மாறிப் போனது அரங்கம்….ஆண்கள் கலந்து கொள்ளாத சடங்காயிற்றே இது… ஆனாலும் யாரும் அவனை தடுக்கவெல்லாம் செய்யவில்லை….

“இப்பதானமா என்ன காத்துன்னு சொல்லிட்டு இருந்தீங்க… அப்ப எல்லா இடத்துக்கும் வரனுமே நான்” அவன் அம்மாவுக்கு ஒடிசியில் பதில் கொடுத்தவன் தன்னவள் புறம் சென்றான்….

நித்துவுக்கு  வெட்கமும் கூடவே ஒரு அளவில்லா பூரிப்பும் வந்து சேர்கிறது….. ஆவலும் கண்டனுமுமாய் அவனைப் பார்த்தாள்…. “ஏன்பா இப்டி பண்றீங்க…?” அருகில் வந்து சந்தனத்துக்காய் குனிந்த அவனிடம் முனங்கலாய் சிணுங்கினாள்..

“ஏனா?” இவளிடம் கேட்டவன் “ஏம்மா இதெல்லாம் எதுக்கு செய்றதுன்னு நித்துட்ட சொல்லலியா நீங்க ?” என அவன் அம்மாவை வேறு கேட்டுவிட்டு…

“அரிசின்னா செழுமை…. மஞ்சள்னா ஆரோக்கியம்…… எங்க வீட்ல வந்து வாழ வர்ற உனக்கு இது ரெண்டும் இருக்கும்னு காமிக்கிறதுக்கும்….. இருக்கனும்னு வேண்டிக்கிறதுக்கும் இந்த செருமனி…. அப்டித்தானம்மா…” நித்துவிடம் ஆரம்பித்து அவன் அம்மாவிடம் முடித்துக் கொண்டான்…

மெல்லிசாய் முறைத்தாள் அவனவள்….

அவ என்ன கேட்டா இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்…

“ஹெலோ என் ஆளுக்கு செய்ய நானே வரக் கூடாதாமா…?” இவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் சொல்லிக் கொண்டு…. அவன் ரசனையுடனே முறைகளை தொடங்க…

ஏற்கனவே குளிர்ந்திருந்த சந்தன கரைசல் அவன் தொடுகையில் இன்னுமாய் இவள் மீது சிலீரிட….. முடிந்தவரை அதை வெளிக்காட்டாமல்… “அதெல்லாம் மூனு நாளுக்கு அப்றம்” என அவனைப் போன்றே சிறு குரலில் பதில் கொடுத்தாள் நித்து…

“அதெப்படி இவங்கல்லாம் செய்யலாம் நான்  மட்டும் செய்யனும்னா கல்யாணம் செய்யனும்? செல்லாது செல்லாது” அவள் கைகளில் முடித்தவன் இப்போது அவள் கன்னத்தைப் பார்த்தான்….

“அதெல்லாம் அப்டித்தான்…..அவங்க செய்றதெல்லாம் நீங்க செய்ய முடியாது…” இவள் மறுக்க

“அதெல்லாம் செய்ய முடியும்….இதோ செய்துட்டனே……” என்றபடி இதற்குள் எல்லாம் செய்து முடித்திருந்தவன் அவன் அம்மாவை நோக்கி “இதுக்கு அடுத்து என்னமா?” எனக் கேட்டான்….

“ம்…அடுத்து என்ன கிஸ் செய்தாங்க….” என இவனை சீண்டினாள் அவனவள். அவன் அம்மா அதைத்தானே செய்திருந்தார்….

சட்டென அவள் கண்களைப் பார்த்தான் அவன்…. இவனிடம் பொங்கியது குறும்பு என்றால் படு அமைதியாய் வெகு பவ்யமாய் இருந்த அவளின் கண்களில் மட்டும் அவனைவிடவும் அதிகமாய் குறும்பு கொட்டிக் கிடந்தது…

“சொன்னேன்ல…..அவங்க செய்றதெல்லாம் நீங்க செய்ய முடியாதுன்னு…..”சின்னதாய் கண் சிமிட்டி முழு மொத்தமாய் சீண்டினாள்…

“வம்ப விலைக்கு வாங்குற சில்வண்டு…. இரு உன்ன கவனிச்சுகிறேன்” இவனால இங்க வச்சு வேற என்ன செய்ய முடியுமாம்? செல்லமாய் மிரட்டினான்…

அருகில்தானே நின்றிருந்தாள் ஷ்ருஷ்டி…..அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது சரியாய் காதில் விழாத போதும் முகபாவங்கள் போதாதாமா காதலையும் சீண்டலையும் களிப்பையும் புரிவிக்க…..

முன்பொருநாள் நித்துவை அவள் பார்த்திருந்த கோலத்திற்கு இப்போது பொங்கிப் ப்ராவகித்தது நிம்மதியானதொரு உவகை அவளுக்குள்…. சட்டென சஹாவின் முகம் வந்து போனது அவளுள்…..

அதன் பின் அங்கு அவளால் நின்றிருக்க முடியவில்லை….

தொடரும்….

episode எழுதி முடித்துவிட்டாலும் எடிட்டிங்கில் திருப்தியாகாமல் திரும்ப திரும்ப சுற்றிக் கொண்டிருப்பதால் தாமதமாகிவிட்டது…. மன்னிக்கவும்…இது இந்த எப்பிசோடின் ஒரு பகுதி தான்…இன்னும் இரண்டு பகுதிகள் உண்டு….இன்றே அடுத்த பகுதியையும் பதிவிட்டுவிடுவேன்……  நன்றி

7 comments

  1. Pavan-Nithu pair Semma seendals, loves ah pogudhu ma’am. Idhe madhiri Saha-Shrushti pair um happy aana reunion la paaka waiting. And, Shrushti oda views ku Saha oda counter explanations therinjuka aavala kathutruken..

Leave a Reply