காதல் வெளியிடை 20 (3)

ன்னொரு முறை அவனைப் பார்ப்பதா?  அதுவும் ஆட்களற்ற இந்த தனிமையில்….. படபடக்க துவங்கிய இவள்….சட்டனெ அருகிலிருந்த காருக்குப் பின் அமர்ந்து கொண்டாள்….. தன்னை மறைத்துக் கொண்டாள்…

ஏதோ அசைவு உணர்ந்தானோ…. இந்த புறமாக ஆராய்ச்சியாய் இரண்டு பார்வைகளை சிந்த விட்ட சஹா… “எரும வந்துகிட்டே இருக்கேன்” என மொபைலில் சொல்லியபடி இவளிருந்த பகுதியை கடந்து போனான்….

‘அவன் சாப்ட வருவான்தானே….? இந்த டைம்க்கு வந்தா கண்டிப்பா அது தான் நடக்கும்….‘ டைனிங் ஹாலுகு செல்லும் தன் முடிவை மாத்தி கடகடவென மொட்டை மாடியைப் பார்த்து படியேறினாள் ஷ்ருஷ்டி…..அவள் மனதில் மீண்டும் கடந்த கால நினைவுகளே…

பூரி கிளம்பிப் போகவுமே இதற்கு மேல் தாங்காது என்பவளாய்…..இனி தனியாய் நிற்பது கூட இவளால் சாத்தியம் கிடையாது என்ற நினைவினளாய் ஷ்ருஷ்டி தன் வீட்டை நோக்கி கிளம்பிவிட்டாள்…..

இந்த கப்பல் நிகழ்வுக்குப் பின் ஷ்ருஷ்டி கல்லூரிக்குப் போக துவங்கியதும்…அவளை ட்ரைவர் அமர்த்தி காரில்தான் அனுப்பிக் கொண்டிருந்தாள் நித்து….. ஆனால் இவள்தான் “எதுனாலும் நானே சமாளிச்சு பழகனும்….அதனால நான் பஸ்லயே போறேன்” என நகர பேருந்தில் வந்து போவதை வழக்கமாக்கி இருந்தாள்.

ஆக இப்போதும் பேருந்தில் ஏறி  இருக்கையில் அமர்ந்ததுதான் தெரியும்…. அடுத்து “ஏய்  உன் டிக்கட்ட காட்டு” என்ற அதட்டலில்தான் சுற்றி இருக்கும் சூழலே அவளுக்கு தெரிந்தது….அதுவரைக்கும் சுயம் மறந்து குழப்பத்துக்குள்ளும் வேதனைக்குள்ளும் உழன்றிருந்திருக்கிறாள் அவள்…

“என்ன எத்தன தடவ கத்றது….டிக்கெட்ட எங்க…? “கத்திக் கொண்டு இருந்தார் அந்த பயணச் சீட்டு பரிசோதகர்…

இவள் இங்குமங்குமாய் டிக்கெட்டைத் தேட…எடுத்திருந்தால்தானே கிடைக்கும்…? அடுத்த நிமிடம் இவளை அந்த பரிசோதகரோடு இறக்கிவிட்டுவிட்டு போய்விட்டது அந்த பேருந்து…

இன்னுமே முழுவதுமாய் சூழ்நிலையை கையாளும் நிலைக்கெல்லாம் இவள் வந்திருக்கவில்லை….. கூடவே காதில் கத்திக்கொண்டிருக்கும் அந்த பரிசோதகர் வேறு…. அவர் எதோ பணம் கேட்க…இவள் தட்டுத் தடுமாறி பேக்கில் தேட…. இருந்த மொத்த காசையும் உரிமையாய் உருவிக் கொண்டார் அவர்….

பயணசீட்டு கத்தை ஒன்று இவள் கையில் கொடுக்கப்பட்டது…. “வீட்டுக்கு போறதுக்கு திரும்ப டிக்கெட் எடுக்க வேண்டாம்…இதுல ஒன்ன காட்டிக்கலாம்….”இவள் மேல் இரக்கப்பட்டு போல…. இதைச் சொல்லிவிட்டு போய்விட்டார் அவர்…

அந்த மொட்டை வெயிலில்  கிடுகிடுத்தபடி ஆளரவமற்ற சாலையில் நின்றிருந்தாள் இவள்…. எங்கு இருக்கிறாள் எனத் தெரியவில்லை…என்ன செய்ய வேண்டும் என எதையும் நினைக்கத் தோன்றவில்லை… பழைய நினைவுகளோடு சேர்ந்து இந்த டிக்கெட் பரிசோதனை படபடப்பும் சேர்ந்து கொள்ள  சற்று தள்ளி இருந்த ஒரு கொடிகம்ப திண்டில் போய் அமர்ந்தாள்….

எவ்வளவு நேரம் இருந்தாளோ…. ஒரு வழியாய் சற்றாய் தேறி நித்துவுக்கு அழைக்கலாமா என இவள் நினைக்க ஆரம்பித்த நேரம்….

அவ்வப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார்களில் ஒன்று இவளுக்கு சற்று அருகில் வந்து நின்றுபோனது…. எதோ ப்ரச்சனை போலும்… ட்ரைவர் இறங்கி காரை குடைந்து கொண்டிருக்க……காரின் ஒரு பக்க ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டபடி உள்ளிருந்த நபர் போனில் பேசுவது இவள் காதில் விழுகிறது… இவள் கவனம் அதில் போனது….

“ஆமா….. ஏசியும் வர்க் பண்ணல…. ரமணி இறங்கி பார்க்றான்…”

“……..”

“அதான் சொல்லிட்டு இருந்தனே சஹாவே அந்த ஷிப்லதான் இருக்கான்….. ஆனா  அவனே நினச்சாலும் நீ கேட்கிற மாதிரி கன்செஷன்லாம் வாங்கிட முடியாது…… ஷிப் கம்பெனிக்கு  என் ஃப்ரெண்ட்ஸும் நானுமா நாலு பேர் பார்ட்னர்ஸ்னு உனக்கும் தெரியுமே….. ஒவ்வொரு ஏப்ரல் மாசமும் போர்ட் மீட்டிங்ல நாங்க நாலு பேருமா ஃபிக்ஸ்‌ செய்ற விலைதான்….அதுக்கடுத்து நாங்களே நினச்சாலும் மாத்த முடியாது…. ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்குன்னு இப்டி ஃபேவர் காமிச்சா கம்பெனி எப்படி நடக்கும்னு இப்படி ஒரு ஏற்பாடு…. தப்பா எடுத்துகாத….

இது காதில் விழ விழ மீண்டுமாய் நடுங்கத் தொடங்குகிறாள் பெண்…. சஹா இவளுக்காக வாதாடி இழப்பீடு வாங்கிக் கொடுத்த விஷயத்தில் இப்படி ஒரு காரணம் இருந்திருக்க முடியுமென இவள் யோசித்திருக்கவே இல்லையே….. அப்ப சஹா செய்த எதுவுமே நாடகம் கிடையாதா?

தரையை நோக்கி குனிந்து அமர்ந்திருந்தவள் மிரண்டு போய் மெல்ல கண்களை மட்டுமாக உயர்த்திப் பார்க்கிறாள்.

காரின் முன்புற கண்ணாடி வழியாய் உள்ளே தெரிந்த அந்த வயோதிக உருவம் சஹாவின் சாயலை எக்கசக்கமாய் கொண்டிருக்கிறது…. அவர் சஹாவினுடைய தாத்தா என உறுதிப்படுத்த வேறு சாட்சி  எதுவும் இவளுக்கு தேவையாய் இருக்கவில்லை….

“ஆமாமா சஹா முழு ட்ரிப்புமே இருப்பான்…. ஆனா யார்ட்டயும் போய் அவன் என் பேரன்னு சொல்லிடாத…..ஷிப் மேனேஜ்மென்ட் நம்மட்ட கொடுக்ற ரிப்போர்ட் படிதான் நிஜமா நடந்துக்கிறாங்களான்னு ரகசியமா பார்க்க அப்பப்ப ஒரு ஷிப்க்கு அனுப்பி வைப்பேன் அவன….அதுக்கு வந்துருக்கான் அவன்….” இவளுக்கு எதிர் திசையை கவனித்தபடி அவர் இன்னும் பேசிக் கொண்டு போக…

தேடி வந்து ஒரு தேவதூதன் கன்னத்தில் அறைந்து உண்மையை சொல்வது போல் ஒரு உணர்வு இவளுக்கு….

பட படவென கன்னத்தில் அறை விழவும்தான் தன் எண்ணங்களில் இருந்து வெளி வந்தாள் ஷ்ருஷ்டி…..அவளை யாரும் அறைந்து கொண்டெல்லாம் இல்லை…பரும் பரும் துளிகளாய் மழை சடசடவென பெய்யத் துவங்கி இருக்கிறது…சற்றாய் முகம் சாய்த்து வானத்தை எங்கோ வெறித்தபடி யோசனையில் இருந்தவளுக்கு அது அறை விழுந்த உணர்வை தந்திருக்கிறது….

அங்கிருந்து அறைக்கு செல்வதற்கென அவசரமாய் மாடிப் படியை நோக்கி இவள் ஓட…. அங்கு கண்ட காட்சியில் அதே வேகத்தில் திரும்பி ஓடி வந்தாள்.

நிம்மி அந்த திருமண அரங்கில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தாள்…. கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆரோனை தட்டிக் கொண்டிருந்தது அவள் கை….. மனம்தான் அங்கே இல்லை…. ஷ்ருஷ்டிக்கும் சஹாவுக்கும் இடையில் என்ன நடந்தது என இவளுக்கோ ஆகாஷுக்கோ சஹா சொல்லவே இல்லை….  என்னதான் அவர்களது குடும்பத்திற்குள் ப்ரச்சனை என்றாலும் இவள் கண் காண ஷ்ருஷ்டியும் சஹாவும் ஒருவரை ஒருவர் விரும்பியது உண்டுதானே…..அப்படியானால் அவர்களது பிரிவிற்கு காரணம் இவள்தானோ என்ற ஒரு உறுத்தல் இவளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது…. இவளோட சூசைட் அட்டெம்ட்கு பிறகுதானே ஷ்ருஷ்டி சஹாவிடம் பேசுவதை நிறுத்தியது…

அதுவும் இவள் ஷ்ருஷ்டியிடம் எதையும் சொல்லாமல் மொட்டையாய் வேறு அழுது வைத்திருக்கிறாள்…அவள் என்னதாய் புரிந்தாளோ…. ஆனால் எல்லாவற்றையும் எப்படி கல்யாணம் ஆகாத சிறு பெண்ணான ஷ்ருஷ்டியிடம் இவள் விளக்க?

இவளுடைய திருமண காரியங்கள் மனதில் ஓடுகிறது…..

ஆகாஷைப் பற்றி இவளிடமும் இவள் வீட்டிலும் முதலில் பேசியது சஹாதான்….. சிறு குழந்தைகள் என்றால் எப்போதுமே வெகு பிரியம் இவளுக்கு…..அதிலும் ஆரோன் அப்போது பிறந்து சிலமாதமேயான குழந்தை எனும் போது அது இரண்டாவது திருமணம் என்பது இவளுக்கு விஷயமாகவே படவில்லை…. குழந்தை மீது ஏற்பட்ட அளவு கடந்த இரக்கம் தான் இவளது திருமணத்துக்கே காரணம்…. இரக்கத்தின் அடிப்படையில் திருமணம் செய்யக் கூடாதென்பது இப்போது தெரிகிறது அப்போது அது விஷயமாகவே படவில்லை….

நல்லா யோசிச்சு முடிவெடு என சஹா சொன்னதெல்லாம் ஆரோனைப் பற்றி யோசிக்க மட்டுமே இவளுக்கு பயன்பட்டது….இரண்டாம் திருமணம் எனவும் இவள் வீட்டில் தயங்க அவர்களைக் கூட கிட்ட தட்ட பிடிவாதம் பிடிக்காத குறையாக நின்று இவள்தான் சம்மதிக்க வைத்தது….

இவளுக்கு சம்மதம் எனத் தகவல் கொடுக்கவும் ஆகாஷ் இவளைத் தொடர்பு கொண்டு பேசியது இவளுக்கு தவறாக படவில்லை….. ஏதாவது அல்லது யாருடைய கட்டாயத்தினாலும் இவள் இத்திருமணத்திற்குள் வரக் கூடாது என எண்ணினான் அவன்….ஆக இவளுக்கு உண்மையிலேயே சம்மதமா என அத்தனை விதமாக கேட்டு தெளிவு படுத்திக் கொண்டான்….. தன்னைப் பற்றியும் முடிந்த வரை சொல்லியும் வைத்தான்…

அதில் தொடங்கிய பேச்சு அடுத்து தினம் தினமுமே தொடர….அப்போது ஆரோனை ஆகாஷ் மட்டுமாய் பார்த்துக் கொண்டிருந்தான்…ஆக குழந்தையைப் பற்றி விசாரிக்க…. இவளுக்கு இந்த பேச்சு தேவைப்பட….  இதில் அவ்வப்போது குழந்தையை சென்று இவள் பார்த்ததும் உண்டு…..அந்த வகையில் ஆகாஷையும் சந்தித்திருக்கிறாள்…. இதில் ஆகாஷிடம் வெகு இயல்பாய் பேசிக் கொள்ளும்  அளவு உறவு நிலை வந்திருந்தது….. ஒரு மாதத்தில் திருமணமும்  நடந்தேறியது…

அன்று இவர்கள் திருமண இரவு…. இவள் அதையெல்லாம் ஒரு விஷயமாகவே யோசித்திருக்கவில்லை…..  அவளைப் பொறுத்தவரை குழந்தை இனி இவள் முழுப் பொறுப்பில் இருக்கப் போகிறான் என்பதுதான் விஷயமாகப் பட்டது…. மனைவியை அப்போதுதான் இழந்திருக்கும் ஆகாஷ் அதிலிருந்து முழுதாய் வெளி வர பலகாலம் ஆகும்…அப்போது மற்றவைகள் இவள் வாழ்விலும் இடம் பெறுமாய் இருக்கும் என நினைத்திருந்தாள்….. அதுதான் அவளுக்கு நியாயமாகவும் பட்டது…..

ஆனால் அது ஒரு மழை இரவு….  குழந்தை துணி நனைகிறதே என இவள் போக…..இவள் நனைகிறாளே என அவன் வர….  எதேதோ நடந்து அழகாய் மென்மையாய் உரிமையாய் துவங்கியது இவர்களது இல்லறமும் அன்றே…

நிச்சயமாய் அது இவள் விருப்பத்தோடு நடந்த ஒன்று என இவளுக்குத் தெரியும்…..மாதக் கணக்காய் கணவன் என அவன் பிம்பத்தைதானே மனதில் பதிந்திருக்கிறாள்….அதோடு திருமணமும் நடந்தாயிற்றே…..அன்றைய நேரம் அது இவளுக்கு தவறாக தோன்றவில்லை….

காதல் இரவுக்குப் பின் அவன் கை வளைவுக்குள்  தூங்கி இருந்தவள் மறுநாள் காலைதான் கண்விழிக்க…. அப்போது நடந்து முடிந்த அனைத்தும் மாபாவமாக பட்டது அவளுக்கு…..குழந்தையைப் பார்த்துக்கொள்ளவென மட்டுமே கல்யாணம் செய்த இவள் இரவு முழுவதும் அந்த சிந்தனை கூட இன்றி தூங்கி இருக்கிறாள்…. அது பாவம் என்றால்….

மனைவியை அப்போதுதான் இழந்திருக்கிற அவன் இவளுடன் இணைந்தது காமவெறியாக மட்டுமே இவளுக்குத் தோன்றியது….

ஆகாஷை அடி முடியாய் வெறுக்க ஆரம்பித்தாள்….தன்னையும்தான்…. அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை…. இரண்டு  நாட்களாய் “என்னாச்சுமா? யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா? என கேட்டுக் கொண்டு அலைந்தவன்…அடுத்த இரண்டாம் நாள் எதுவும் சொல்லாமல் க்ரூஸ் ஷிப்புக்கு அழைத்துப்போய்விட்டான் இவளை…

அதாவது ஹனிமூனுக்கா….? கொதித்துப்  போனாள் இவள்….. அப்ப இவன் இவள கல்யாணம் செய்தது தாம்பத்ய சுகமின்றி இத்தனை நாள் கூட இவனால் இருக்க முடியாது என்பதாலா? அருவருத்தாள் அவனை….. முடிந்தவரை அவனை தவிர்த்தாள்….. ஆனால் குழந்தையிடமோ முழு மொத்தமாய் அண்டினாள்….

அம்மா இல்லாத குழந்தைக்கு அப்பாவையும் இவதான் இல்லாம ஆக்கிட்டாளோ என ஒரு குற்றமனப்பான்மை வேறு…

அப்போதுதான் ஷிருஷ்டி அறிமுகம்…. அவளிடம் குழந்தை சேர்கிறான் என்ற காரணத்துக்காக மட்டுமே இவள் முதலில் பழக ஆரம்பித்தது…..பின் அவளோடு  இருப்பது இவளுக்கு மனதுக்கு பிடிக்கவும் தொடங்கியது…ஆகாஷை தவிர்க்க அது நல்ல வழியாகவும் தோன்றியது…. அவன் பொதுவாக எந்த நேரம் அறைக்கு வருவானோ அதை கவனித்திருந்து ஷ்ருஷ்டியைப் பார்க்க போய்விடுவாள் இவள்….

இவள் யாருடனும் பேசுவதே இல்லை….இப்படி எதெற்கென்றே சொல்லாமல் முகத்தை தூக்கிக் கொண்டு அலைபவள் ஷ்ருஷ்டியுடனாவது சேருகிறாள்  என்றதும் அடுத்து சஹாவும் ஆகாஷும் இவளை அதிகமாய் ஷ்ருஷ்டியுடன் சேர்ந்திருக்க ஊக்குவிக்க தொடங்கினர்…..குறஞ்சபட்சம் ஷ்ருஷ்டிட்டயாவது மனம் திறந்து இவ ப்ரச்சனை என்ன என சொல்லிவிடமட்டாளா என்ற நிலையில் இருந்தான் ஆகாஷ்…

ஆனால் திருமணமாகாத  சின்ன பெண்ணான ஷ்ருஷ்டியிடம் இதை எப்படி பேசுவாள் இவள்?

இதில்  இவள் ஆரோனை மட்டும் அதீதமாய் கவனிப்பதும் காரணமே சொல்லாமல் ஆகாஷை தவிர்ப்பதும் கவலை கோபம் என்பதை தாண்டி கொஞ்சம் கொஞ்சமாய் பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது அவளது கணவனுக்கு….எது ஒன்றும் அதீதமாவதும் சரி இல்லையே…..

ஆகாஷ் நிலமை உண்மையில் மோசம்…..அவன் முதல் மனைவி இறந்தவுடன் அவனது மனைவியின் தங்கையை குழந்தையை காரணம் காட்டி மணம் முடித்து வைக்க நின்றனர் அவனது மனைவியின் பெற்றோர்….  இவன் வருமானம் மற்றும் சொத்தின் அளவுதான் அதற்கு காரணம் என இவனுக்கு தெரியும்…..

இவனுக்கு இருந்த மனவேதனையில் இரண்டாம் மணத்திற்கே விருப்பம் இல்லை இவனுக்கு… இதில் அவன் மனைவியின் தங்கையை அப்படி யோசிக்க கூட முடியவில்லை….. இவன் மாமியாரோ இவன் வீட்டிற்கு புதிதாய் வேலைக்காரி வந்தால் கூட தேடிப் போய் அவளிடம் சண்டை பிடித்து துரத்திக் கொண்டிருந்தது….. ஆள் அமஞ்சுட்டா அடுத்து எப்படி ரெண்டாம் கல்யாணம் செய்வானாம்? தனியாளாய் குழந்தையை வைத்து இவன் போராடிக் கொண்டிருக்க…. அந்நேரம் இவனது மனைவியின் தங்கை இவனிடம் வந்து ஒரே அழுகை…. நான் வேற ஒரு பையன லவ் பண்றேன்….என்ன  உங்கள மேரேஜ் செய்ய சொல்லி வீட்ல கட்டாயப் படுத்துறாங்க….நீங்க வேற கல்யாணம் செய்ற வரைக்கும் என்னை எங்க வீட்ல சித்ரவதை செய்தே கொன்னுடுவாங்க என… அவள்  காலில் இருந்த சூட்டுக் கோலின் தடங்களை பார்த்தவன் சஹாவிடம் இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்க்க சொல்லிவிட்டான்….

நிம்மி பொதுவில் அன்பானவள் அவளுக்கு இரக்க சுபாவம் அதிகம்…. குழந்தைகளிடம் வெகு ஈடுபாடு கொண்டவள் என்ற அடிப்படையில் ஆகாஷ் சூழ்நிலைக்கு அவள் எளிதில் இயைந்து போவாள் என எண்ணித்தான் அவளைக் கேட்டான் சஹா…

சஹாவும் இவனும் திருமணத்திற்கு முன் திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இத் திருமணத்தில் இஷ்டம் என சொல்லிவிட்டு….இப்போது இப்படி நடந்து கொண்டிருக்கிறாள் அவள்…

முதலிரவு இப்படி இருக்க வேண்டும் என ஆகாஷுமே நினைத்திருக்கவில்லை என்றாலும் ஒரு மனைவிக்கு உரிய எதையும் அது காதலாகட்டும் அன்பாகட்டும் உரிமையோ அல்லது எதுவோ அதை நிம்மிக்கு செய்யாது இருக்க கூடாது என்று முடிவு செய்திருந்தான் அவன்…. மணம் முடிப்பது என்ற முடிவுக்கு வந்தால் இவனை நம்பி வருபவளை மனைவியாக நடத்துவது இவனது பொறுப்பல்லவா…

இதில் திருமணத்திற்கு முன் ஒரு மாதகாலமாக இவர்கள் இருவரும் ஒருவரைச் சுற்றி ஒருவர் அன்பு நட்பு அக்கறை நம்பிக்கை எனும் வலையை பின்னிக் கொள்ள அதில் திருமணம் எனும் உரிமையும் சேர்ந்தே எண்ணப்பட்டும் பின்னப்பட்டும் வந்திருக்க….. எதிர்பார சூழலில் மண இரவில் இவன் கைக்குள் வந்து விழுந்தவளுக்கு இவன் கணவனாய் புரிபட….அவனும் அதை மறு சிந்தனை இன்றி தொடர்ந்திருந்தான்…. அது அவனுக்கு காதல் என்பதைவிட நியாயம் என்று பட்டது….. அதுவேதான் அவளுக்கு அநியாயமாகவும் தோன்றி இருக்கிறது…..

திருமணத்தின் மறுநாள் அவன் முதல் மனைவியின் அம்மா எதுவும் பேசிவிட்டார்கள் போல அதுதான் அவள் அப்படி இருக்கிறாள் என நினைத்தான் அவன்…. இவதான் எதையும் சொல்லவே இல்லையே… அப்போதுதான் சஹா இந்த கப்பலில்  ஆகாஷ் ஒரு ரெஃஸ்ட் ரெண்ட் தொடங்க வரட்டும் என அழைத்தான்…. ஆகாஷின் தொழில் ஹோட்டல்…. கப்பலில் ஹோட்டல் ஆரம்பிப்பது என்றால் ஒரு சில மாதம் அங்கு தங்கி இருந்து அதை செய்ய வேண்டி இருக்கும்…..அதற்குள் நிம்மிக்கு இவனும் ஆரோனும், இவனுக்கு இந்த புது குடும்ப வாழ்க்கையும் தகவமைந்துவிடும்…. ஒருவருக்கு ஒருவர்  புரிதல் வரும் வரை குடும்பத்துக்குள் குழப்பம் கொண்டு வரும் சொந்தக்காரர்களைவிட்டு விலகி இருப்பது இவன் சூழ்நிலையில் சரி எனபட….ஆகாஷ் அதற்குத்தான் கப்பலுக்கு வந்தது…..

இதில் நிம்மி ஷ்ருஷ்டியிடம் உடையெல்லாம் கடன் வாங்கிப் போட்டு ஆரோனிடம் அண்டுவதும் இவனை அப்படியே விலக்கி வைப்பதும் ஒருகட்டத்தில் எதுவும் மன நோயின் அறிகுறியோ எனும் அளவுக்கு ரொம்பவுமே அதீதமாக பட…. குழந்தையை நிம்மி பார்க்க வேண்டாம் என்றுவிட்டான் இவன்….. “என்ட்ட முதல்ல நீ ஒழுங்கா பழகு…அப்றம் உன்ன நம்பி குழந்தைய தரேன்” என இவன் சொல்ல

என் இஷ்டப்படி படுக்கையில் வளைந்து கொடுத்தால்தான் குழந்தையை உன்னிடம் தருவேன் என அவன் மிரட்டுவதாக அது புரிந்து வைத்தது நிம்மிக்கு….

சொந்த குழந்தைய காமிச்சு இவள இப்படி மிரட்டனும்னா அவன் எப்படிபட்ட கேடுகெட்டவன்…இவனையா வீட்ல வேண்டாம்னு சொன்னப்ப கூட பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் செய்துகிட்டோம் என ஆகிவிட்டது நிம்மிக்கு….

வெகு தவறான முடிவெடுத்து இந்த திருமணத்தில் வந்து மாட்டிவிட்டதாக உணர்ந்தாள் அவள்…இதை யாரிடமும் பேச கூட அவளுக்கு வழி இல்லை….கப்பலில் இருந்து எங்கு போகவும் மார்க்கம் இல்லை…. உட்சக்கட்ட இயலாமையில் அவள் செய்து வைத்த மூடத்தனம்தான் அந்த தற்கொலை முயற்சி….

தூக்குப் போட்டு தன்னை மாய்த்துக் கொள்ள அவள் முயன்ற நேரம் ஏதேச்சையாய் அதை பார்த்துவிட்டு….. அவள் மறுப்பாய் திமிர திமிர… அவளை காப்பாற்றவென இடையோடு இறுகப் பற்றி  ஆகாஷ் அவளை இறக்கிவிட்ட போது ஏற்பட்டவைதான் ஷ்ருஷ்டி கண்ணில்பட்ட காயங்கள்…மற்றும் கை தடங்கள்….

நித்துவை சகாயன் வீட்டில் செய்து அனுப்பி இருந்த கோலத்தை பார்த்திருந்த ஷ்ருஷ்டிக்கு நிம்மியின் இந்த காயங்கள் அப்யூசாக மட்டுமே பட்டுவைக்க….

தங்களுக்கு இடையில் உள்ள குழப்பங்களை எல்லாம் இந்த தற்கொலை முயற்சிக்குப் பின்…. பேசி தீர்த்து சேர்ந்துவிட்ட ஆகாஷுக்கும் நிம்மிக்கும் தங்கள் வாழ்க்கை எந்த வகையில் ஷ்ருஷ்டி சஹாவை பாதித்தது என்று இன்னுமே புரியவில்லை….

“நிம்ஸ்” என்ற ஆகாஷின் அழைப்பில்தான் சுயநிலைக்கு வந்தாள் நிம்மி….சென்று அவனுக்காக அறைக் கதவை அவள் திறந்துவிட…. தூங்கும் குழந்தையை எட்டிப் பார்த்துக் கொண்ட ஆகாஷ்….. இவளை வெளியே வரும் படி சைகை செய்தான்….

இங்கு வைத்து பேசினால் குழந்தை விழித்து விடுவான் என இருவருக்குமே தெரியும்…. ஆக அவர்கள் அறையை ஒட்டி இருந்த மொட்டை மாடி படிக்கட்டைப் பார்த்து அவன் நகர சென்று நேராய் அவன் மார்பில் புதைந்தாள்  அவன் மனைவி அதுவும் அழுகையோடு…

மொட்டை மாடிக்கு போகும் படிதான்…..ஆனால் முழு வெளிச்சத்தில் இருக்கிறார்கள்….. அதோடு படிக்கட்டுபகுதியில் நின்று அழுதால் அத்தனை தளத்திற்கும் கேட்குமே…..

அவசரமாய் மொட்டை மாடி கதவை திறந்து கொண்டு தன் மனையாளோடு அதன் வெளியே சென்றவன்…. இருண்டிருக்கும் அங்கும் வெளிச்சம் பரவுவதை மறைக்கும் முகமாக அக்கதவை சாத்தி….அக்கதவின் மீதே சாய்ந்து கொண்டான்….

அடுத்த அறையில் இருக்கும் குழந்தை எழுந்துவிட்டால் இவர்களுக்கு கேட்க வேண்டுமே….. ஆக கதவைவிட்டு நகராமல் நின்றவன் தன் மார்போடு சுருண்டிருந்தவளை மெல்லமாய் அணைத்து  சில முத்தங்கள் சிந்தினான் அவள் உச்சந்தலையிலும் இட சென்னியிலும்….

அடுத்த பக்கம்