காதல் வெளியிடை 19 (2)

விக்க தவிக்க கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்து….. இவளிடம் கேட்டுதான் சஹாவுக்கு என்ன  நடந்ததென்பதே தெரிகின்றது….. ‘உங்க கல்யாணத்துக்கு அவ அண்ணனா நான் பொறுப்பு’ என பவனிடம் சொல்லியது சகாயன் என தெரியவுமே இதை இவள் எதிர்பார்த்தாள்தான்…… இருந்தாலும் அதை அனுபவமாக கடந்து செல்கையில் எப்படி இருக்கிறதாம்? எந்த அளவுக்கு அவனை தவறானவனாக நினைத்துக் கொண்டுவிட்டாள் இவளும் ஷ்ருஷ்டியும் என்பது கடுமையாக உறுத்துகிறது இவளை….. அது கூட போகட்டும்….. இப்போது திருத்திக் கொண்டுவிட்ட தவறு அது….

ஆனால்  இப்போது ‘சிமிய நேர்ல வந்து கூட்டிட்டுப் போ நித்து… “ என அழுத்தி அழுத்தி சொல்லும் சஹா ஷ்ருஷ்டிக்கும் அவனுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை சொல்ல மறுக்கிறானே….. அது அல்லவா இவளை அணுவும் கணுவுமாய் கொன்று வதைக்கிறது…. இந்த ஷ்ருஷ்டி வேறு ஃபோனில் பேசக் கூட வரவில்லையே….

சிதைந்து கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி….

“அவன் லவ் பண்றான்மா ஷ்ருஷ்டிய…. பொதுவாவே அவன் கேரிங் பெர்சன்….. இப்ப இதுவும் தெரியவும் கண்டிப்பா ஷ்ருஷ்டிய நல்லா பார்த்துப்பான்…… அவனப் பார்த்துக்கத்தான் இப்ப ஆள் வேணும்…….“ என பவன் சொல்லும் போது ஆறுதலுக்குப் பதிலாக ஏனோ இன்னுமே இவளுக்கு பதறுகிறது….

சஹா மேல அத்தனை வெறுப்பை வைத்திருந்த ஷ்ருஷ்டி அவன் இவள லவ் பண்ற அளவுக்கெல்லாம் ஏன்  பழகினா….?  சஹா கொழுக்கட்டை செய்யக் கேட்டது ஷ்ருஷ்டிக்காக என்றெல்லாம் நினைக்கும் போது திகீர் என்கிறதே இவளுக்கு…

என்னதான் நடந்திருக்கும்? தலை வெடித்துவிடும் போல் இருக்கிறது இவளுக்கு…. ஆரம்பத்திலிருந்து நடந்த ஒன்றொன்றும் மனதிற்குள் மண்டி இடுகிறது இவளுக்கு….

சென்னையில் உள்ள இவளது யுனிவர்சிட்டியில்தான் சகாயனை இவள் முதல் முறை பார்த்ததே….

அன்று கேம்பஸிலிருந்த இவர்களது கம்யூட்டர் சென்டரிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தனர் இவளும் மந்துவும்….

மந்து எனப்படும் மந்தாகிணி  12த் பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் குட்டிப் பெண்…இவ படிக்கிறது பிஜி…. ஆனாலும் இந்த சென்ட்டருக்கு படிக்க வந்த மந்து கூட எப்படியோ  இவளுக்கு ஒத்துப் போய்விட்டது….

ஆக மந்துவை அவ அப்பா கூட வழி அனுப்பிட்டுதான் இவள் ஹாஸ்டலுக்கு போவது வழக்கம்…..அப்படித்தான் இன்றும் மந்து அவ அப்பா பைக்கில் ஏறி அமர….அவளது அப்பா பைக்கை கிளப்ப…

என்ன நடந்தது…எப்படி நடந்தது என உணரும் முன்…… மந்து ‘ஓ’ என துடித்தபடி அலறிக் கொண்டிருந்தாள்…

அவளது கால் பைக் வீலில் மாட்டி இருக்கிறது என அவளது அப்பாவிற்கும் இவளுக்கும் புரியும் முன்….மந்துவின் குதிகால் பகுதியின் குறுக்காக நாலு விரல் நீளத்திற்கு அறுத்துக் கொண்டு சென்று  மாட்டி இருந்தன பைக் வீலின் கம்பிகள்….

அதைப் பார்க்கவுமே இவளுக்கு தலை சுத்தி கொண்டும் வேர்த்துக் கொண்டும் மயக்கம் வருகிறது… “ஐயோ அக்கா எடுத்து விடுங்க…..”என மந்து அலறுவது காதில் விழுந்தாலும் கை எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது….

அப்போதுதான் வந்தான் அவன்… சகாயன். கடகடவென தேவையான முதலுதவி செய்தவன்…. அப்படியே தன் காரில்  மந்துவையும் அவளது அப்பாவையும்… இவள் கையை பிடித்தபடி மந்து அழுததால் போலும்….இவளையும் சேர்த்து அருகில் உள்ள ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய்விட்டான் அவன்.

அந்த இன்சிடென்டில் அவன் இவளிடம் பேசியது கூட கிடையாது என்பதோடு தன் பேரைக் கூட சொல்லிக் கொள்ளவில்லை… அப்படி சூழ்நிலையும் அமையவில்லை….

அடுத்து ஒரு இரண்டு தினங்களுக்குப் பின் அடுத்த மீட்டிங்….. இதுவும் அதே சென்டர் பக்கம் தான்…. இன்னைக்கு மந்து க்ளாஸிற்கு வரவில்லை என்பதால்…..இவளுக்கு செஷன் முடியவும்…. தன்  ஹாஸ்டலைப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள் இவள்….

யுனிவர்சிட்டி கம்பஸில் மரங்களின் அடர்த்தி அதிகம்….அதிலும் குறிப்பாக இந்த இடம் சும்மா வாவ்னு இருக்கும்…. பிங்க் நிற பூக்கள் சிதறிய ஆளில்லா தார்ரோடுகள் அவை…. பூக்களையே  பார்த்தபடி வந்து கொண்டிருந்தவள் முன் திடுமென வந்து நிற்கிறது அந்த கால்கள்…

பதறிப் போய் இவள் நிமிர்ந்து பார்க்க….. சுஜித் நின்றிருந்தான்…..  மனநிலை சரி இல்லாதவன் அவன்…. எப்போதும் அவனது அம்மாவுடன்தான் வாக்கிங் வருவான்….. மந்தாகிணி இவளையெல்லாம் பார்த்தால் சிரித்தபடி எதோ சொல்லுவான்…. இவளுக்கு பார்க்கவே பரிதாபமாக இருக்கும்….

ஆனால் இன்று அவன் முழி முகம் என எதுவும் இயல்பாய் இல்லை என தெரிகின்றது… பயம் வந்து கவ்வுகிறது இவளை…..அதற்கு மேல் எதுவும் யோசிக்கவெல்லாம் இவளுக்கு நேரம் இல்லை…..

பட்டென இவள் கையிலிருந்த கைப்பையை பிடுங்கி இருந்தான் அவன்….. அப்படியே விட்டு ஓடிவிடலாமா என்று இருக்கிறதுதான் இவளுக்கு…..ஆனால் பேக்குகுள்ளதான இவளோட அறை சாவி இருக்குது…..

எச்சில் விழுங்கி…. வரமாட்டேன் என வறண்ட தொண்டையை வரட்டு பிடிவாதமாய் சரி செய்து….

“கீய மட்டும் தந்துடு சுஜிபா…”  என இவள் கெஞ்ச…. சுஜிபா எனதான் அவனது அம்மா அவனை கூப்பிடுவது வழக்கம்….

அந்த சுஜித்துக்கு அது என்னதாக பட்டதோ….. கையிலிருந்த இவளது பையாலையே  படாரென வைத்தான் ஒன்று இவள் முகத்தில்….

வீல் என்றவள்…அடுத்து ஓடத் துவங்கி இருந்தாள்…அவ்ளவுதான்…..இவளை படு முரட்டுத்தனமாய் .இன்னுமாய் ஆக்ரோஷமாய்  துரத்தினான் சுஜித்…

ஒரு கட்டத்தில் கேம்பஸிலிருந்த அடர் மரங்கள் பகுதிக்கு ஓடி இருந்தவள் ஒரு மரத்தின் பின்னாக சென்று ஒழிய…..சில நொடிகளுக்குப் பின் இவள் பின்னிருந்து கழுத்தைப் பிடிக்கிறது அந்த முரட்டுக் கைகள்…. சுஜித்தான்.

அலறத் தொடங்கி இருந்தாள் நித்து….. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை….ஆக வளாகத்திற்குள் வழக்கமாக இருக்கும் ஆள் நடமாட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்று இருக்காது…..அதுவும் இவள் வந்து நிற்கும் பகுதி பொதுவாகவே யாரும் வராத பகுதி….

போரட்டமும் “தம்பி விடுடா…. என்ன வேணாலும் வச்சுகோடா” என்ற அலறலுமாக இவள் கெஞ்சிக் கொண்டிருக்க….இப்போதும் சரியாய் அங்கு வந்தான் அந்த சகாயன்…

என்ன செய்தான் எப்படி செய்தான் என்றெல்லாம் இவள் கவனிக்கும் முன்….அந்த  சுஜித்  சகாயன் கைகளுக்குள் இடம் பெயர்ந்திருந்தான்…..கூடவே அழுகை வேறு இப்போது….. “ஷ்ரீ விடச் சொல்லு ஷ்ரீ….. அம்மாட்ட போகனும்” என…

இரக்கம் வராமலிருக்க இவளென்ன கல்லா? கெஞ்சலாக எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் இவள்…. “ப்ளீஸ் விட்டுடுங்க”

அவனோ இப்போது இவள் முகத்திலிருந்த அடிபட்ட தடயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்…. பேக் வாரோடு அடித்திருந்தானா சுஜித்….. முகத்தில் அப்பட்டமாய் அதன் தடம்

“ரொம்ப வயலண்ட் போலவே….இப்படி அடிச்சுருக்கான்…” சஹா தயங்க…

“அது எப்பவும் எல்லாம் அப்படி கிடையாது… அதோட தெரிஞ்சா  இப்படி நடந்துக்கிறான்?….. அவன் அழுறதா பார்த்தா பாவமா இருக்கு …விட்டுடுங்க “ கிட்ட தட்ட கெஞ்சினாள் இவள்….

முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆணிடம் அழுத்திப் பேசவெல்லாம் அப்போது அவளுக்கு அவ்வளவுதான் தைரியம்….அதோடு அவன் மீது அப்போது மரியாதையும் இருந்ததே….

அந்த நேரம் காதில் விழுகிறது “ஏய் ராஜா….” என்ற ஒருகுரல்…

இவளோடு கூட திடுமென திரும்பினான் அவன்…. “அப்பா” என்றபடி

இரு கையையும் மிகு மரியாதையாய் குவித்து வணக்கம் சொன்னபடி அவள் கண்ணில் காணக் கிடைத்தார் அந்த தர்மராஜ்….. எத்தனை மிருகத்தன்மை அவருக்குள் இருக்கின்றதென்றல்லாம் அப்போது இவளுக்கு தெரியவில்லையே….

“யார்மா நீ?” சற்று தன்மையாகவே விசாரித்தார் அவர்… ஆனால் அவர் பார்வை இவளை எடையிட முயன்றவிதம் ஏனோ கிலி சேர்த்தது இவளுக்கு….

முன்னப் பின்ன தெரியதவங்கட்ட…அதுவும் இத்தனையாய் கைகுவித்து அரசியல்வாதி போல நிற்க்கும் ஒருவரிடம் எல்லாம் கடகடவென பேசிவிட அப்போது நித்துவுக்கு வராதே…

யார் நீ என்ற அவரது கேள்விக்கு ”நா….ம்…நா…ன்…” என்ன சொல்லவென ஒரு கணம் தடுமாறி பின் “என் பேர் ஸ்ரீநிதி….ஊர் கோவில்பட்டி பக்கம்…..கழுகுமலை….இங்க பி.ஜி படிச்சுட்டு இருக்கேன்…”என ஒரு வகையாய் பதில் சொல்லி முடித்தாள்…

அதற்குள் அந்த சுஜித்தின் அம்மா அவனைத் தேடி அங்கு வந்தவர் “தெரியாம ஓடி வந்துட்டான்மா…ஐயோ  உன் முகத்திலயே அடிச்சுருப்பான் போலயே இந்த அறிவில்லாதவன்” என புலம்பியபடி தன் மகனை சஹாவிடமிருந்து தன் கைக்குள் வாங்க….

“ஆன்டி பாவம் ஆன்டி…அவனப் போய் ஏன் திட்றீங்க….” என இவளது இயல்பின்படி வக்காலத்து வாங்கினாள்…

“என்னமோமா…. நீதான் அடி வாங்கிட்டும் இப்டி சொல்லிட்டு இருக்க….. ஆனா இங்க உள்ள பல வானரங்க அவனப் பார்த்தாலே படுத்துது…அதுக்காகவே அவன வீட்டுக்குள்ளயே பூட்டி வைக்கேன்…அவன் தப்பிச்சு தப்பிச்சு ஓடிவரான்….” என இவளுக்கு பதில் கொடுத்துவிட்டு

“இது யாரு உங்க அப்பாவா? நல்லா வளத்துருக்கீங்க உங்க பொண்ண” என அந்த சகாயனின் அப்பாவிடம் வேறு ஒரு பாரட்டை சொல்லிவிட்டுப் போனார் அந்த சுஜித் அம்மா…

பார்த்திருந்த சகாயன் முகத்தில் இவளுக்காய் சின்னதாய் பாராட்டு காணக் கிடைத்தது…. ஆனால் அவனது அப்பாவின் முகமோ ஜொலிக்காத குறைதான்…

“நம்ம ஊருப் பொண்ணாமா நீ…. அங்க யாரு மக?…..” இவளிடமாய் கேட்டு  “ சொல்லி இருக்கனே அங்க நமக்கு எல்லோரும்  சொந்தகாரங்கடா ராஜா” என மகனிடம் மகிழ்ச்சிக்கான காரணத்தை வெளியிட்டார்.

அந்த சகாயன் முகத்திலும் இப்போது முழு மகிழ்ச்சி….

“அப்பா பேரு ராஜசுந்தரம்….டைல்ஸ் கடை வச்சுருக்காங்க….”  சொந்தக்காரங்கன்னு சொன்ன பிறகு வீட்டைப் பத்தி சொல்லாம எப்படி இருக்கவாம்…சொன்னாள் நித்து…

மஹா மஹா உற்சாகமும் உவகையுமாய் பார்த்தார் அந்த தர்மராஜ்…. “அப்படிப் போடு…நம்ம சுந்தரம் பொண்ணாமா நீ….? சின்ன வயசுல பார்த்தது…..மூத்தவளா இளையவளா நீ? “ அவர் இவளிடம் ஆர்பரிக்கும் போதே…

“ஏய் ராஜா இது சுந்தரம் மாமா பொண்ணுடா…சின்னதுல ஊர்ல விஷேஷம்னு போனா இவங்க வீட்ல போய்தான் விளையாடுவ” என மகனுக்கும் அறிவித்தார்…

“ரொம்ப வேகா நியாபகம் இருக்கு…ஒன்னும் நியாபகம் இல்லையே….” என சமாளித்த சகாயன்… “உன்ன மீட் பண்ணதுல சந்தோஷம் ஸ்ரீநிதி” என ஃபார்மலாய் சொல்லி வைத்தான்…

அந்த தர்மராஜோ “ஹாஸ்டல்லதான இருப்ப…..வாம்மா வெளிய போய் ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்டுட்டு வரலாம்… அப்டியே கொஞ்சம் ஊரப் பத்தி உங்க அப்பனப் பத்திலாம்  கேட்டுகிறேன் நான்….. வயசான காலத்துல மனசு ஊரத் தேடுது….வரத்தான் தொழில் வழி விட மாட்டேங்குது…. “ இவளிடம் படு ஆர்வமாய் சொன்னவர்…

”ஏய் ராஜா இங்க எது நல்ல ஹோட்டல்னு வந்து காமி” என மகனை கேட்டார்.

பதறிப் போனாள் நித்து…

என்னதான் சொந்தகாரங்கனாலும்…அதுவும் மாமா பொண்ணுன்னு சொல்லிட்டு….அடுத்து தன்கூட ஹோட்டல்க்கு கூப்டா எப்படி…?

“அச்சோ இல்ல மாமா…அப்டில்லாம் நாங்க வெளிய வர முடியாது….ஊருக்கு வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வாங்க…. “ என பேச்சை முடித்து வழி அனுப்ப முனைந்தாள் இவள்…

இவளது ஊர்க்காரர் தானே அவரும்….இவள் சொல்வது அவருக்கு புரியாதாமா என்ன?

“சரிமா கிளம்புறேன்….உங்க அப்பன்ட்ட என்ன யாருன்னு சொல்லுவ?” என சோதித்தார் அவர்…

தடுமாறித்தான் போனாள் நித்து…

“குவாரி தர்மராஜ் மாமான்னு சொல்லு அவனுக்கு புரியும்…. இப்ப நீ பத்ரமா கிளம்புமா” என இவளை வழி அனுப்பிய அவர்… அதோடு மகனை நோக்கி

“டேய் ராஜா… போய் உன் மாமா பொண்ண பத்ரமா விட்டுட்டு வாடா…. நான் இங்க கார்ல இருக்கேன்” எனவும் சொன்னார்.

அவனோடு இவ போற ஆளாமா? இவள் முழித்த முழியில்….”அதெல்லாம் அவ போய்ப்பா….பை ஸ்ரீநிதி…” என இவளை வழி அனுப்பி வைத்தான் அவன்…

அதன் பின் இவள் அந்த தர்மராஜை பார்க்கவில்லை….ஆனால் அந்த ‘ஏய் ராஜா’  மகனை சில நேரம் இந்த கேம்பஃஸை அவன் கடக்கும் போது பார்த்திருக்கிறாள்….பல ஞாயிறுகளில் சர்ச்சில் கண்ணில்பட்டான் அவன்….

பார்வை நேருக்கு நேராய் சந்தித்துவிட்டால் ஒரு “ஹாய்” வரும் அவனிடமிருந்து மற்றபடி பெரிதாய் எதையும் இருவரும் பேசிக் கொண்டதெல்லாம் கிடையாது..

அப்போதுதான் சில மாதங்கள் கழித்து….  கோர்ஸ் முடிய இன்னும் ஒரு செமஸ்டர் இருந்த நேரம், வீட்டிலிருந்து “உடனே கிளம்பி வா…..நல்ல இடத்துல வரன் அமஞ்சு இருக்கு…” என அழைப்பு வந்தது இவளுக்கு…

அப்போதெல்லாம் அம்மா அப்பா சொல்வதைத் தாண்டி யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாதவள் இவள் என்பதால்….கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும்

“ரொம்ப பெரிய இடம்டாமா…. மாப்ள வேற உன்னத்தான் செய்யனும்னு பிடிவாதமா இருக்காராம்… அப்பா சரின்னு சொல்ற இந்த டைம்லயே உங்க பொண்ண சரின்னு சொல்ல சொல்லிடுங்க அத்தன்னு என்ட்டயே பேசினார்மா…. அவங்க வீட்ல எப்பவும் எதோ பிசினஸில் பெருசா வரவு வர்றப்பதான் நல்ல நேரம்னு யோசிச்சு எந்த  விஷேஷமும் வைப்பாங்களாம்… அதான் இப்பவே கல்யாணம் வைக்கனும்னு தர்மராஜ் அண்ணா சொல்றாங்க….கல்யாணத்துக்கு பிறகு படிச்சுக்க சொல்றாங்க நித்துமா…. நல்ல இடம் உனக்கு இப்பவே அமஞ்சுட்டுன்னா அடுத்து சின்னவளுக்கும் பார்க்க எங்களுக்கு வசதியா இருகும்லமா…” இவளது அம்மா இத்தனை சொன்ன பின்….இவள் என்ன சொல்லிவிடப் போகிறாள்…. இன்னும் 15 நாளில் திருமணம் என சொன்னதைக் கூட பெரிதாய் எடுக்காமல் கிளம்பிப் போய்விட்டாள்…

ஆனால் என்னமோ “பையன் என்ட்ட ஃபோன்ல அவ்ளவு நல்லா பேசினார்….”

“நான் மாப்ளய அவர் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்தேன்….. என்ன தவிர யாரையும் அவர் ரூம்குள்ளயே விடல பாப்பு…. என்ட்ட தங்கமா பழகுறார்….அவ்ளவு மரியாத….ஆனா ரொம்ப உட்காந்து பேச கூட நேரமில்ல…அதுக்குள்ளா ஆயிரம் வேல வருது…சும்மா ஒரு ஒரு வாக்கியத்துல மொத்தப் ப்ரச்சனையும் சரி செய்துன்னு அப்டி அழகா தொழில் செய்றார் “ என அம்மாவும் அப்பாவும் சிலாகித்துக் கொண்டாலும்…..

இவளத்தான் செய்வேன்னு பிடிவாதமா இருந்த மாப்பிள்ளை  இவட்ட மட்டும் பேசவே இல்லை….

இவள் அம்மாவிடம் அதை முனங்கிய போது….”அவ்ளவு பெரிய குடும்பத்துப் பையன் அவனே பொண்ணுட்ட பேசாம ஒழுக்கமா இருக்கான்….உனக்கென்ன “ என அப்பாவிடமிருந்து பதில் வந்தது…..

இவளுக்கு உண்மையில் ஆசை என்பதைவிட அது நெருடலால் பிறந்த கேள்வியே….ஏனெனில் அவன் சென்னையில் ஒரு முறை ஒரு பெண்ணை தன் பைக்கில் வைத்து ட்ராப் செய்தெல்லாம் இவள் பார்த்திருக்கிறாள்…..

ஆண்களிடம் இயல்பாய் பேசாத இவளது  சுபாவத்தைப் பார்த்துதான் இவளிடம் அது வரைக்கும் அவன் வந்து பேசிப் பழகவில்லையே தவிர, பெண்களைக் கண்டால் தவிர்த்து ஓடும் நபரெல்லாம் அவன் இல்லை…இயல்பாய் சிட்டி மக்களைப் போல நட்பாய் பழகுபவன்தான்…. அப்படிப்பட்டவன் நிச்சயத்திற்குப் பின்னும் இவளிடம்  ஏன் பேசவில்லை  என்ற நெருடல்…

இதில் அடுத்து வந்து சேர்ந்தது அந்த கனவு…. ‘ஏதோ அந்த மாப்பிளையிடம் பேச இவள் மொபைலை எடுக்க வேண்டும்…….கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும்…..ஆனால் எடுக்கவே இல்லை….. அதில் இவளது அம்மா எரிந்து பஸ்பமாய் இவள் கண் முன் உதிர்வதாய் கனவு….’

ஏற்கனவே உறுத்திக் கொண்டிருந்த மனமல்லவா அரண்டு போனாள் இவள்…. அதில் அக்கனவின் வெர்ஷன்கள் அடுத்து அடுத்து தொடர…. கெஞ்சி கதறிவிட்டாள் இவளது அம்மாவிடம்….. “எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம்மா….என்ன விட்டுடங்கம்மா” என்பதுவரை…

“கல்யாணம்னா முதல்ல பயமாதான்டா இருக்கும்…அப்றம் சரியாகிடும்…அதுவும் மாப்ள குணத்துக்கு அவர் உன்ன தங்க தட்டுலதான் வச்சு தாங்குவார்” என அம்மாவிடம் இருந்து கிடைத்த ஆறுதலைத் தவிர எந்த பலனும் இல்லை இவள் அழுகைக்கு…

“அப்ப நானா அவர்ட்ட பேசி பார்க்கிறேன்மா…. பேசிட்டா எனக்கும் பயம் போய்டும்ல…” என்ற இவள் வியாக்கியானத்துக்கு அம்மாவே இப்போது முறைத்தார்…

அவ்வளவுதான் கொதிக்க கொதிக்க காய்ச்சலுடன் 7 நாளாய் விழுந்து கிடந்தவளுக்கு  எக்கசக்க க்ராண்டாய் நடந்தது கல்யாணம்..

முந்திய நாள் நிச்சயதார்த்தம்…. எல்லோரிடமும் படுமுறையாய் நடந்து கொண்டான் மாப்பிள்ளைப் பையன்….

இவளிடமும்  கிடைத்த வாய்ப்பில் “என்ன உன்ட்ட பேசலைனு கோபமாப்பா….. நாளைல இருந்து எப்பவும் உன் கூடதான…அதான் எதுக்கு தேவை இல்லாம பெரியவங்க பேச்சை மீறனும்னு பேசல” என இவளிடமும் நல்லவிதமாயே சொல்லி வைத்தான் அந்த மாப்பிள்ளை ஆனந்த ராஜ்…. ஆம் அவன் பெயரை அப்படித்தான் சொல்லி இருந்தனர்…

ஆனா அடுத்த நாள் கல்யாணத்தின் போது  உர்…என்றபடியே  இருந்தான் அவன்…. கல்யாண வாக்குறுதியில் சொல்ல வேண்டிய சில வாக்கியங்கள் தவிர எதற்காகவும் வாயைத் திறக்கவில்லை அவன்…. இவன் அம்மா அப்பாவிடம் எல்லாம் அதற்கு முன் அன்யோன்யமாய் பேசி இருந்தவன் இன்று அவர்களை சட்டை செய்யக் கூட இல்லை….

இதில் 103 டிகிரி காய்ச்சலில் காய்ந்து கொண்டிருந்தவளை “மத்த யார்ட்டயும் ஃபீவ்ர்னு சொல்லாத நித்துமா…ஆனா மாப்ளைட்ட மட்டும் தனியா இருக்கப்ப சொல்லு….அவங்க வீட்டு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி யார்ட்ட சொல்லனும்  யாருக்கு தெரிய வேண்டாம்னு எல்லாம் யோசிச்சு  பார்த்துப்பாரு” என விட்டுவிட்டு அழுத கண்களோடு கிளம்பினார் இவளது அம்மா…

அன்றைய இரவுதான் இவள் வாழ்நாளில் முதல் முதலில் பார்த்த நரகம்…

அடுத்த பக்கம்