காதல் வெளியிடை 18

ந்து பற்றிய பவனின் கையை முதல் கணம் முடிந்த வரை முரட்டாட்டமாக உதறிவிடத்தான் நினைத்தாள் நித்து…. ஆனாலும்  அது அவளுக்கும் பவனுக்குமான உறவு ஏதோ ஒழுக்க குறைவான ஒன்று என இவளே எல்லோர் முன்பும்… அதிலும் அதை மகாகேவலம் போல் பேசிக் கொண்டிருக்கும் இந்த க்ளாடியஸ் முன்  காண்பிப்பது போல் இருக்குமே என தோன்ற…… அப்போதிருந்த மூர்க்க கோபத்தில் தானும் பவனது கையை பற்றிக் கொண்டாள்…. அதுவும் அத்தனை உறுதியாக…

‘ஏற்கனவே திட்டம் போட்டு ஒரு கூட்டம் இவள ஏமாத்தியாச்சு…… இப்ப இந்த க்ளாடியசும் அடுத்து இன்னொரு வகையில் திட்டம் போட்டு ஏமாத்திகிட்டு இருக்கான்…..அடிச்சா திருப்பி கேட்க மாட்டான்னு அத்தனை தைரியமா இவங்களுக்கு….?’ என்ற கொதிநிலை கோபம்தான் இவளை இந்நேரம் இங்கு டைல்ஸ் தேடி இப்படியாய் கொண்டு வந்திருப்பதே…..

இதில் அந்த க்ளாடியசோ  தான் செய்த திருட்டு துரோகம் பத்தி கொஞ்சம் கூட அவமான உணர்வு இல்லாமல் இப்படி பேச… பற்றி எரியும் இரும்புக் குழம்பாய் கொந்தளித்தது இவள் உயிர்….

‘நடந்த மொத்த விஷயத்தில் இவ தப்பு என்ன?…. இவ பவனை கல்யாணம் செய்வதில்தான் தப்பு என்ன?  இனி வாழ்க்கைக்கும் இவ வாழவே கூடாதா? யார் செய்த தப்புக்கு இன்னும் இன்னும் இவளுக்கு ஏன் தண்டனை?’ என்றெல்லாம் இவள் மனதில் ஏற்கனவே குமுறிக் கொண்டிருந்த எரிமலையில் இருந்து…

‘தான் என்ன தப்புனாலும் இவளுக்கு எதிரா செய்துட்டு…… இவள இந்த புள்ளியில் அடிச்சா தோத்துடுவா…. வலியில அவமானத்துல சுருண்டு விழுந்துடுவா…… விட்டு ஓடிடுவான்னு நினைக்கிறாங்களா இந்த கேடுகெட்ட மனுஷங்க…  அதையே இவளும் செய்து வைக்கனுமா?  இவ அழனுமா? அவமானம்னு நினைக்கனுமா? பயந்து ஓடனுமா? ஏன்??’ என தீ பிளம்பொத்த நினைவுகள் இப்போது வெடித்துக் கொண்டு கிளம்பி வர…..

“ஆமா நாங்க மேரேஜ் செய்யப் போறோம்….” கர்வம் அதிகாரம் ஆதிக்கம் இவையோடு எஃகு வகை ஏதாலோ செய்யப்பட்ட செம்மையுறு அமைதி அத்தனையும் முகத்தில் குடியிருக்க  இரும்பொலியாய் வந்து நின்றன இவள் வார்த்தைகள்….

“திருடங்கள இன்வைட் செய்ய வேண்டாம்னு உங்கள கூப்டல…” என்று  அடுத்து ஒரு விளக்கம் வேறு….கர்வ பாவம் இன்னும் கூட கொஞ்சமும் குறையவில்லை…

“நாய் குரைக்குதுன்னு நானும் குரைக்க மாட்டேன்….” அவள் மரியாதைப் பதங்களுக்கான காரணமாய் இதையும் சொன்னவள்..

“ஆனா கடிக்க வர்ற நாய அடிச்சு தூக்கிப் போட” என்றபடி சுற்றிலுமாக ஒரு பார்வையை சுழற்றினாள்…. ‘இத்தன பேர் இருக்காங்க’ என்று அதற்கு அர்த்தம் என யாருக்குத்தான் புரியாமல் இருக்க…?

“இப்ப நாம பேசிட்டு இருக்கிறது எங்க டைல்ஸ பத்தி மட்டும்”  எதைப் பத்தி மட்டும் பேச வேண்டும் என கட்டளையும் கொடுத்தாள்.

இதற்கெல்லாம் அடங்குபவனா அந்த க்ளாடியஸ்…..? ஆனால் பிறந்ததிலிருந்து நித்துவை அவனுக்கு தெரியும்…. இயல்பான கிராமத்து வெடுக் வெடுக் வாயடிகளுக்கு கூட பெறாத வாயில்லா பூச்சி…. எலும்பில்லாத மண்புழு….படிச்சுட்டதால கௌரவம்ன்ற பொதிய சுமந்துகிட்டு கட்டாந்தரைய மட்டுமே பார்த்து நடக்கும் பொதி கழுத…… இப்படியெல்லாம் அவளை நினைத்து வைத்திருந்தவனுக்கு….அவளது இந்த பரிணாமம் எப்படி இருக்கிறதாம்?

சில நொடி திக்கி விக்கித்தான் போனான்….. ஆனால்  வெளியூர்க்காரன கூட்டி வந்து ஒரு பொட்டச்சி இவன மிரட்டி சாமான தூக்கிட்டு போய்ட்டா, இவன் இங்க யார நிமிந்து பார்க்க? என அடுத்து சுதாரித்தவன்

வாயை திறக்கும் முன்பாக கூட

“மிஸ்டர் இங்க இருக்க சரக்கு முழுக்க எங்க கம்பெனியோடது…… இதுக்கான விலையும் இன்னும் வந்து சேரல……எங்கட்ட நீங்க வாங்கினதா எந்த எவிடென்ஸும் இல்ல…  திருட்டு கேஸ்தான்……தமிழ் நாடு ஐஜிட்ட பேசிட்டுதான் வரேன்….. இந்தியா முழுக்க உங்கள மாதிரி எத்தனையோ கேசப் பார்த்தாச்சு…. இதோட நிறுத்துகிட்டீங்கன்னா உங்களுக்குத்தான்  நல்லது….” என பவன் விஷயத்தை முடிக்க முயன்றான்….

அதன் பின் க்ளாடியஸ் எதையும் எதிரிடையாக பேசக் கூட இல்லை….  அவனைப் பொறுத்தவரை இவன் டைல்ஸை இப்படி திருடிவிட்டான் என்று கூட நித்து வீட்டில் கண்டு பிடிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை….. நித்து அப்பாவைத் தவிர யாரும் இந்த தொழிலில் தலையிடுவார்கள் என்றெல்லாம் அவன் யோசித்திருக்கவில்லை…. பொம்பிள பிள்ளைங்க என்னைக்கு இதெல்லாம் பார்க்கும் என அவன் யோசிக்கவாம்…? டைல்ஸ வித்த  கம்பெனிகாரன் அதை கொடுத்தவன்ட்ட தான் கேட்பான் என்றும்  க்ளாடியசுக்கு நினைப்பு….

ஆனால் இப்போது இந்தியா முழுதும் தொழில் செய்யும் அத்தனை பெரிய கம்பெனியின் போலீஸ் கேஸை இவன் எதை வைத்துக் கொண்டு எதிர்கொள்ளவாம்? எடுத்ததும் ஐஜின்னு ஆரம்பிக்கான் அந்த கம்பெனிகாரன்…..அவ்ளவு ரேஞ்சுக்கு இழுபட இவன்ட்ட என்ன இருக்காம்?

ஆக “கொஞ்ச டைல்ஸ் வித்துட்டேன் சார்…அதுக்கான காச கூட தந்துடுறேன் சார்….கேசு அது இதுன்னு எதுக்கு சார்….” என்ற ரீதியில் அடுத்து ஒரே தாஜா மழைதான்…

ப்ரச்சனையை ஒரு வகையாய்  முடித்துவிட்டு….. டைல்ஸை இவர்கள் கடையிலேயே இறக்கி முடித்து….. வந்தவர்களுக்கெல்லாம் சேர வேண்டிய சம்பளத்தை பட்டுவாடா செய்துவிட்டு….. காரில் வந்து கொண்டிருக்கின்றனர் நித்துவும் பவனும்…. பவன் அங்கு அந்த க்ளாடியஸ் கடையில் பேச ஆரம்பித்த பின் இவள் அடுத்து எதுவும்  பெரிதாக பேசி இருக்கவில்லை….. பவனிடமோ வாயே திறந்திருக்கவில்லை…. பெரிது பெரிதாய் உள்ளத்துக்குள் ஓத அலையடிக்க அதை மௌனத்தால் தாக்குப் பிடித்தபடி அவள்…

க்ளாடியஸ் வகையில் அவள் பேசியெதெதிலும் தவறு இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை….ஆனால் பவன் வகையில் என்ன செய்துவிட்டாள் இவள்? மனதின் நிறைவை வாய் பேசும் என்பார்களே? அந்த வகையில் இவள் மனதின்  விருப்பத்தைகொட்டிவிட்டாள் போல….. பவனும் கண்டிப்பாக மறுக்கமாட்டான் என இவளுக்கு இருந்த தைரியமும் காரணமாய் இருக்கலாம்… நேத்துதான மேரேஜுக்கு அப்றம் எங்க போகனும்னு ப்ளான் போட்டுகிட்டு இருந்தான் பவன்…. ஆனால் அதுக்கு இவ என்ன சொல்லிட்டு வந்தா? இப்ப என்ன செய்து வச்சுருக்கா?

இவளை என்னவெல்லாமோ குத்தி கிளறி குழப்பிக் கொண்டு  இருக்க….. மழை காரணமாக இடமும் வலமுமாய் விர் விர் என நீரை வழித்து தள்ளிக் கொண்டிருந்த காரின் வைப்பரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் இவள்.

காரை அந்த இருண்ட சாலையின் ஓரமாய் நிறுத்தினான் பவன்…. காரின் உள்புற லைட்டையும் ஆன் செய்து வைத்தான்.

“ப்ச் பவன்…இது நல்லதுக்கு இல்ல…” உள்ள இருக்கவங்க அப்படியே இப்ப வெளியே தெரிவாங்களே… ஆக அவன் செயலை மறுத்தாள்….. ஆனால் அவன் புறம் திரும்பிப் பார்க்கும் தைரியம் கூட இவளுக்கு வர மறுக்கிறது…

“இப்டி நீ பேசாமலே  இருக்றதும் கூடதான் நல்லதுக்கு இல்ல…” பவனிடம் இருந்து இப்படி வந்தது பதில்….

இவளிடம் மௌனம்.

“ஆக கோபம் வந்தா மட்டும்தான் சரியா பேசும் போல நித்துப் பாப்பா” சற்று கிண்டலும் சிறிது கொஞ்சலுமாய் அவன்.

அவனை திரும்பிப் பார்க்காமலே இதைச் சொல்லும் போது அவன் இதழ் மீது எழும்பிய சிறு புன்னகையை மனதில் கண்டாள் இவள்…. கலையவும் செய்தாள்தான்.

“இல்லியே அப்டி கோபம் வர்றப்ப கூட  உன் டைல்ஸ தூக்கிட்டு இடத்த காலி பண்ணுடானு தான உன்ட்ட சொன்னா?” தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இப்போது….

“அந்த க்ளாடியஸ்ட்ட மட்டும்தான் உண்மைய பேசுறா… உன்ட்ட இல்ல”  பரிதாபம் போல் சோகமாய் சொல்லிக் கொண்டான்…

பின் “ இல்லடா எரும… உன் மேல வந்தது கோபமே இல்ல…” என்றான் தன்னை தானே நோக்கி….  இது முழுக் குறும்பு…

“என் நித்துக் குட்டிய இப்போ எப்டி கோபபட வைக்கவாம் நான்?”

இவனது கையைப் பற்றிக் கொண்டு ‘ஆமா நாங்க கல்யாணம் செய்யப் போறோம்’ என அவள் அறிவித்த அந்த நொடியின் தித்திப்பு இன்னும் கூட இவனுக்குள் சுக சுறாவளியாய் சுழன்று கொண்டுதானே இருக்கின்றது…. அது அவன் அகம் முகமெங்கும் மிளிர மிளிர அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ….

இத்தனைக்கு மேல் பொறுக்காமல்….” ப்ளீஸ் பவன்….. நான்தான் உளறி வச்சுட்டேன்….நீங்களாவது புரிஞ்சுக்க மாட்டீங்களா?” என்றாள் நித்து…..சற்று கெஞ்சலாக ஆரம்பித்தவளுக்கு இதற்குள் கண்ணில் நீர் கோர்த்து அழுகை அடியெடுத்து வைக்க முயல்கிறது… அடுத்தவர் மேல் குற்றம் எனும் போது வரும் கோபம்…. குற்றம் நம் மீது எனும் போது அழுகையாய்தானே காட்சி தருகிறது….

“ஹேய் இப்ப எதுக்கு அழுகை….? இப்டி பேச்ச கேட்டுட்டும் அடுத்து  நிம்மதியா என் கூட குடும்பம் நடத்த முடியுமான்னுதான கேட்ட….. இவ்ளவு நேரத்துல அதுக்கு பதில் என் நடவடிக்கைல கிடைக்கலியா உனக்கு? அப்றம் மேரேஜ் செய்துக்க என்ன தடை?”

வார்த்தைகளை விட இந்த விஷயங்களில் தன் செயல் பேச வேண்டும் என நினைத்திருந்த பவனை அவள் கண்ணீர் பேச வைத்தது…. இவ்ளவுக்கு பிறகும் ‘தெரியாம உளறிட்டேன் உன்னால இந்த மேரேஜ்ல சந்தோஷமா  இருக்க முடியாது’னு சொல்ல வர்றாளா என்ன? என்பது அவன் ஆதங்கம்….

“அவங்க கண்டிப்பா டிவோர்ஸ் தரமாட்டாங்க…..”  அவளோ இப்படி வெடித்தாள்.

“அவங்கட்ட மோதவே முடியாது” குலுங்கலாய் அழத் தொடங்கினாள்..  “எனக்கு உங்கள பிடிக்கும் பவன்….. ரொம்பவே பிடிக்கும்……ஆனா அது தப்பு…..” பெரும் குரலெடுத்து புலம்பலாய் ஆரம்பித்த அவள் வார்த்தைகள் சட்டென நின்று போனது…

ஏனெனில் இதற்குள் தனக்கு அடுத்த இருக்கையில் இருந்தவள் கைப் பற்றி தன் புறமாக சற்றாய் இழுத்திருந்தான் பவன்….. இவன் முகத்துக்கு வெகு அருகில் அவள் முகம்….

“நடந்த அந்த ட்ராமாக்கு பேரு கல்யாணமே கிடையாதுன்னு உனக்கே தெரியும்……” சற்றே உறுமலாய் தொடங்கிய அவன்  “இன்னும் ஃப்யூ மந்த்ஸ்ல நம்ம மேரேஜ் லீகலா நடக்கும்….. அதுக்கு முன்னால சட்டப்படி எல்லா க்ளியரன்ஸும் வந்துடும்…. ” அழுத்தம் திருத்தமாக  சொல்லி முடித்தான்….. அடித்து சொல்லும் ஆறுதல் வகையில் அவை….

அவன் கண்ணில் காணப்பட்ட உறுதியில்  இவள் கண்ணீர் அடங்கினாலும்……இதெல்லாம் எப்படி முடியும் என்ற கேள்வி விழாமலே விழித்து நின்றது…

“எல்லாம் நேத்துதான் தெரிஞ்சுது……“ ஒரு விளக்கம் போல் ஆரம்பித்தவன்…… அத்தனையும் விளக்கி முடிக்கும் வரை தவிப்பாளே என நினைத்தானோ “சஹா இருக்கான் நமக்கு….. கண்டிப்பா சரி செய்துடுவான்” என தீர்வை சொன்னான்.

“சஹாவா???” என மனதில் வந்த ஒற்றை வார்த்தை கேள்வியை கூட  இவள் உச்சரித்துவிடும்  முன்….

“நீதான் பேசுறியே உங்க சொந்தகார அண்ணா…..அவன் சஹா…சகயான் தர்மராஜ்” என இவளை அதற்கு மேல் எதுவும் பேசவிடாமல் ஸ்தம்பிக்க செய்த பவன்…..  “அது சஹான்னு உனக்கு தெரியலைனு புரிஞ்சுது….. அவன் நமக்கு செய்வானா மாட்டானா? நீயே யோசி….” என இவள் மூளைக்கு வேலை கொடுத்தான்.

சில நிமிடம் அளவும் காரில் மௌனம் நிலவியது….

பின் மெல்லக் கேட்டாள் நித்து “சாஹாத்தான்ட்ட  நான் பேசனும்” என

மூச்சை நிறுத்தியபடி இவள் முகத்தையே பார்த்திருந்த  பவன் முகத்தில் இப்போது வந்து உதித்த இளகுநகை….அவன் உயிருக்குள் கசிந்து காட்டாறாய் பரவும் நிம்மதியின் வகையை ஒத்திருந்தது….

“கண்டிப்பா…..நெக்‌ஸ்ட் போர்ட்ல அவன் கால் பண்றப்ப நாம  அவன்ட்ட பேசுவோம்….” வாக்கு கொடுத்தான் பவன்.

மூன்றாவது முறையாக அழைப்பு மணி மீண்டும் மீண்டுமாய் அழுத்தப்படவும் வேண்டா வெறுப்பாக சென்று கதவைத் திறந்தாள் ஷ்ருஷ்டி….  எதிரில் நின்றிருந்த சஹாவின் முகத்தில் எரிச்சல் கைது செய்யப்பட்டு கிடந்தது…

இவள் முகத்தைக் காணவும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான் அவன்….. இறுகிய முகத்துடன் என்ன என்ற கேள்வி கூட இன்றி இவள்…

“உனக்கு எதுக்கு கோபம்  வரும்…. ஏன் அப்செட் ஆவ….எப்ப பேசுவ….எப்போ அத நிறுத்துவன்னுல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புரியமாட்டேங்குது ஸ்….” என தொடங்கியவன்…. அந்த ஸ்ரீ அவளைக் கடுப்பேத்தும் என அறிந்தவனாய் பேச்சை அங்கேயே நிறுத்தினான்…

“அன்னைக்கு நிம்மி விஷயம் தெரியவும் என்ட்ட எதுக்கு பேசுறதை நிறுத்தினன்னு நானும் யோசிக்காத வகை கிடையாது….நிம்மி சூசைட் அட்டெம்ட் செய்ததுக்கு உனக்கு கோபம் நிம்மி மேல வந்திருக்கலாம்….இல்ல  எது எப்டினாலும்  இதெல்லாம் இந்த அளவுக்கு வராம ஆகாஷ்தான் பார்த்துருக்கனும்னு நீ அவன் மேலயாவது கோபபட்ருக்கலாம்….. ஆனா  இதுல எதுக்காக என்ட்ட பேச மாட்டேங்குகிற….?”

கல்லென நின்றாள் இவள்…

“அதான கேட்டா என்னைக்கு பதில் சொன்ன நீ…?….. நானும் தினமும்தான் உன்ட்ட கெஞ்சி பார்த்தாச்சே….”

சாஹாவின் இந்த வார்த்தைகளில் இப்போது தன் அறைக்குள்ளாக நகர்ந்தாள் ஷ்ருஷ்டி…. அடுத்து அவள் கதவை பூட்டுவாள் என எதிர்பார்த்த சஹா சட்டென அவளுக்கு முன்னாக உள்ளே சென்று நின்றுகொண்டு..… தீப் பார்வை  ஒன்றைப் பார்த்தான். பின் தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டவனாக….

“சரி நம்ம பத்தி இப்போ பேசி ப்ரயோஜனம் இல்ல…நானும் அதுக்காக வரல….. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் ப்ராஜக்ட் ஐலண்ட்க்காக  ஷிப் நிக்கும்….. நீ வர்றியா இல்லையா?….இதக் கேட்கதான் வந்தேன்…” கேட்டான்.

பதில் எதுவும் சொல்லாத ஷ்ருஷ்டி எங்கோ பார்த்தாள்.

“இதுக்காகத்தான் இவ்ளவு தூரம் வந்திருக்க அறிவே…” என்றவன் இறுதியில் பல்லைக் கடித்து தன்னை அடக்குவது இவளுக்கு நன்றாகவே புரிகின்றது…

இப்போது அவனை முறைத்தாள்

“ஆமா அப்டியே ரொம்ப பயம் பயமா இருக்கு எனக்கு…”  அவன்தான்…

அலட்சியம் போல் கண்ணை வெகு மெதுவாய் மூடி திறந்து கொண்டாள் இவள்..

“சஹாதான் உனக்கு எல்லாம்….. யார் மேல உள்ள கோபத்தையும் அவன்ட்ட தான் நீ காமிப்பன்னே வச்சுகலாம்….. ஆனா இப்ப என் மேல உள்ள கோபத்த ஏன் உன் ப்ராஜக்ட் மேல காமிக்கிற…?”

கேட்டவன் மீது வெறுத்த பார்வை ஒன்றை பாயவிட்டாள்…

“ப்ச்… நம்ம கோபதாபங்கள்ளாம் மொமன்ட்ரிமா..…  இன்னும் ரெண்டு மூனு நாளைல இதெல்லாம் சரியாகி நீ பழையபடி என்ட்ட பேசி பழகத்தான் செய்வ…. ஆனா அதுக்குள்ள ஷிப் போய்டும்….. இந்த நேர உன் மூடுக்காக  உன் ஸ்டடீச பலியாக்காத…… கிளம்பு…” அவனது அடுத்த அஸ்திரம் இது….

இதில் வித்யாசமாய் அசைந்து கொடுத்தாள் ஷ்ருஷ்டி…அவனுக்கு முதுகாட்டி திரும்பிக் கொண்டாள் அவள்…..ஒரு விதமான விரக்தியும் எக்கதாளமுமான புன்னகை  சரிந்தது  அவள் இதழ்களில்….

“இன்னும் 5 மினிட்ஸ்ல கிளம்பி வரேன்…” ஐலண்ட் கிளம்ப சம்மதித்தாள்.

அடுத்த பக்கம்