காதல் வெளியிடை 16

முழுதாய் இரண்டு நாள் முடிந்திருந்தன….அலெக்சாண்டரியா கடலடி பயணத்திற்குப் பின் இது மூன்றாவது நாள்… தன் அறையைவிட்டு ஷ்ருஷ்டி வெளியே வந்ததாக எந்த தகவலும் இல்லை சஹாவுக்கு….

முதல் நாள் அவளைப் போய் தொந்தரவு செய்ய அவனுக்கு துளியும் தோன்றவில்லை….  அவள் ஒன்றும் பல நாள் பயிற்சிக்குப் பின் இந்த அலெக்சாண்டிரியா கடலடியை பார்க்க வரவில்லை….. வெறும் சில தினங்கள் பயிற்சி…. ஆக சர்வ நிச்சயமாய் உடல் வலி கடுமையாய் இருக்கும்….சோர்ந்து போய் தூங்கிக் கொண்டிருப்பாள்…

தூங்கி விழித்தால் அவள் மனதுக்கும் உடலுக்கும் சற்று உற்சாகமாக இருக்கும்… இல்லையெனில் இவனிடம் மனதை  சரிய விட்டுவிட்டோமென தன்னை தானே குற்றவாளியாக்கி குற்ற உணர்ச்சியில் இப்போது குமைவதைக் காட்டிலும் இன்னுமாய் குமைந்து கொண்டிருப்பாளாக இருக்கும்….

சோர்ந்த உடல் எல்லாவற்றையும் சுய தவறாகவே சுட்டி காட்டியும் தொலைக்கும்….. ஆக தூங்கி விழிக்கட்டும்… அடுத்து  கவனித்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டான்….. நேரத்துக்கு அவள்  அறைக்கு சாப்பாடு  அனுப்ப மட்டும் ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தான்….

வழக்கமாக ரூம் சர்வீசை கூட அனுமதிக்காத அவள், சாப்பாடை மட்டும் மறுப்பின்றி வாங்கிக் கொள்ளவும் பொறுமை காப்பது இவனுக்கு வசப்பட்டது…

ஆனால் இரண்டாம் நாளும் அவள் வெளியே வரவில்லை என்பது வெகுவாக இவனை படுத்த துவங்கியது….

ஆனால் சட்டென போய் கதவை தட்டவும் மனம் வரவில்லை அவனுக்கு…. எடுத்தவுடன் கோபத்தில் அவள் எகிறும் படியான ஒரு சூழல் வரவிடுவதில் அவனுக்கு சுத்தமாய் விருப்பம் இல்லை…. எதுவானாலும்  அவனைப் பொறுத்தவரை இந்த முறை எந்த இழுபறியும் இன்றி சுமுகமாக முடிந்தாக வேண்டும்….

ஒன்று அவள் இவன் காதலை  வெளிப்படையாய் ஏற்றுக்  கொள்ளட்டும் அல்லது இவன் அவளது வீட்டில் சென்று பெண் கேட்பதையாவது சரி என ஆமோதிக்கட்டும்…. இல்லை எனில் இவர்கள் திருமணத்திற்கு எதிராக, தடையாக அவள் எதை காண்கிறாள் என்பதை  இவனிடம் சொல்லிவிடட்டும்….. தீர்வில்லாத ப்ரச்சனைகள் இருக்கின்றனவா என்ன…?  ஆக அவள் தடையாக உணரும் காரியங்களை யோசித்து தீர்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் இருந்தது சஹாவின் எண்ணங்கள்….

இப்படி  மனம் விட்டு பேசக் கூடிய சூழல் வேண்டுமானால் அவள் சற்று சாந்தியோடு இவனை எதிர் கொண்டாக வேண்டும்…. முன்பு அவன் காத்திருந்து மிக நிதானமாகவே இவைகளை எல்லாம் செய்ய நினைத்திருந்தான் தான்…. ஆனால் இப்போது அவள் முன்னும் பின்னுமாய் மனதைவிட்டு படும்  இந்த அவஸ்தை….. உடனடியாக  சூழலை சுமுகமாக்கியே தீரவேண்டும் என இவனை ஒரு புறம் நெருக்கிறது என்றால்…

மறு புறமோ திடீரென ஏற்பட்ட சில தட்பவெப்ப மாற்றங்களால் கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு இன்னும் சில தினங்களிலேயே ஷ்ருஷ்டி செல்ல வேண்டிய தீவுக்கு கப்பல் சென்றுவிடும் என்ற புதிய திருப்பம் இவனை கழுத்தை நெரிக்காத குறையாக கட்டாயப் படுத்துகிறது…

அத்தீவிற்கு சென்ற பின் அடுத்த துறைமுகத்தில் ஷ்ருஷ்டி இறங்கி அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப வேண்டும் என்பது அவளது பதியப் பட்ட பயணத் திட்டம்….. அப்படித்தான் அவளுக்கு விசா ஏற்பாடு…. அதை மாற்ற வழி கிடையாது….. ஆக இன்னும் சில தினங்களில் அவள் ஊர் திரும்பிவிடுவாள்….

இவனுக்கோ கப்பல் அதாக கொல்கதா திரும்பும் வரையும் பல துறைமுகங்களில் இறங்கி சுற்றிப் பார்க்க அனுமதி இருக்கிறதே தவிர….. எங்கிருந்தும் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா விமானம் ஏற விசா எடுக்கப்பட்டிருக்கவில்லை…. ஆக இன்னும் சில தினங்கள் மட்டுமே இவனுக்கு ஷ்ருஷ்டியுடன் இருக்கும் படியான வாய்ப்பு…

அடுத்து இவன் அவளை பார்க்க வேண்டும் என்றால் எங்கு போய் சந்திப்பானாம்? எப்படி அவள் சந்திக்க ஒத்துக் கொள்வாளாம் என ஆயிரம் கேள்விகள்…… ஆக அதற்குள்  அவளோடு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியாக வேண்டிய கடு கட்டாயம் இவனுக்கு இருக்கிறது…

காலை வந்துவிடுவாள்… மதியம் வருவாள்…. நிச்சயமா மாலை வந்தே தீருவாள்….. இதோ இரவில் அவள் வராமல் இருக்க மாட்டாள் என இரண்டாம் நாளும் முடிந்து போக…… சஹா மூன்றாம் நாளான இன்று என்ன ஆனாலும் அவளை சந்தித்து விடுவது என முடிவெடுத்து கிளம்பி விட்டான்.

தன் அறையை பூட்டிக் கொண்டு வெளியில் வந்தவன் எதிரில் வந்து நின்றனர் பூரியின் பாட்டியும் மோனியும்….

பூரி பாட்டிக்கு இவனிடம் பேச வேண்டுமாம்…. தமிழோ ஹிந்தியோ சரியாக தெரியாத பஞ்சாபி அவர்….. ஆக அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக மோனி….

இவன் முறையாக வரவேற்று அவர்களை தன் அறைக்கு அழைக்க…

பாட்டியோ வெளியே மேக மூட்டமாய் ரம்யாமாய் இருக்கிறது அங்கேயே இருந்து பேசுவோம் என சொல்லி அங்கு கிடந்த ரெக்ளினரில் அமர்ந்துவிட்டார்…..  மூவருமாக அங்கிருந்தே விஷயத்தை பேசி முடித்தனர்…

பேச்சின் சாரம்சம்  இதுதான்..

சிறு வயதிலேயே திருமணங்களை பேசி வைக்கும் வழக்கம் பூரி குடும்பங்களில் உண்டாம்…. அப்படி பூரிக்காக பேசி வைக்கப்பட்டிருந்தது பாதலையாம்….. அவனுக்கு விஷயம் முன்பே தெரியுமாம்…. பூரி படிப்பு முடியவும் திருமணம் என்று பேச்சாம்… பூரிக்கு இதெல்லாம் சொல்லப் பட்டது  இல்லை எனினும் பாதலிடம் அவள் வெட்டி முறித்துக் கொண்டெல்லாம் பழகுவதில்லையாம்….. இயல்பாகத்தான்  இருப்பாளாம்…. ஆக மறுப்பாள் என யாரும் நினைக்கவில்லை போலும்…. இப்போது அவர்கள் உறவுக்கார திருமணத்திற்குத்தான் இங்கு வந்திருப்பதாம்….. அதில் சின்னதாக பூரி பாதல் திருமண அறிவிப்பையும் செய்துவிடலாம் என எண்ணி பூரியிடம் சொல்லி இருப்பார்கள் போல….. அவள் மொட்டைப் பிடிவாதமாக மறுத்துவிட்டாளாம்…..

“இப்பல்லாம் உங்கட்டயும் அந்த ஷ்ருஷ்டி பொண்ணுட்டயும்தான் பூரி ரொம்ப பழகுறதே…. நீங்க கொஞ்சம் எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா…… தெரிஞ்ச வீட்டுக்கு கல்யாணம் செய்து போறது எவ்ளவு பதுகாப்பு….. அதோட பாதல்க்கு இவ்ளவு நாள் விஷயம் தெரிஞ்சும் கூட  பூரிட்ட கொஞ்சமும்  வரம்பு மீறி நடந்துகாத நல்ல பையன் அவன்…. இதெல்லாம் அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க….” என  கோரிக்கை வைத்தார் பாட்டி…

அதற்கு “பூரி படிப்பு முடிஞ்ச பிறகு கல்யாணத்துக்கு பாருங்க பாட்டிமா….. எந்த மாதிரி மாப்ள பார்க்கனும்னு சொல்லுங்க…. தெரிஞ்ச பஞ்சாபி பசங்களே இருக்காங்க…… நல்ல இடமா நானே நின்னு பார்த்து தரேன்….. ஆனா சொந்தத்துக்குள்ள கல்யாணம் செய்றதெல்லாம் சரி இல்லை பாட்டிமா….. அதனால இந்த பாதல் பேச்சை விட்டுடுங்க…” என்ற வகை பதிலை பாட்டியே முக்கால் மன சம்மதத்தோடு தலையாட்டும் படி விலாவாரியாக விளக்கி பதிய வைத்தான் சஹா.

அடுத்து அவர் விடை பெற்று கிளம்பிய பின்….. மோனியோ….. “என்னமோ என் ஃப்ரெண்ட்ஸ சிங்கிளா இருக்க விடமாட்டேன்னு சொன்னப்ப நிஜம்னு நினச்சேன்…. இப்ப பார்த்தா  பூர்ணிமாவ பாதல வேண்டாம்னு  சொல்ல சொன்னதே  இந்த சாஹாவாத்தான் இருக்கும் போல இருக்கு…” என தான் யூகித்ததை இவனிடம் சற்று கசப்பாக முறுமுறுத்தாள்.

“ஆமா இதிலென்ன சந்தேகம்…. நான்தான் இந்த பாதல் சகவாசமே வேண்டாம்னு பூரிட்ட சொன்னேன்……” சஹாவிடம் இருந்து இப்படியாக வந்தது பதில்..…

அவ்வளவுதான் “பாதல்க்கு என்ன குறச்சல்…. அவன் எவ்ளவு நல்ல டைப் தெரியுமா…?”  என சீறலாய்  சிடுசிடுக்க தொடங்கினாள் மோனி…..  ஆனால் அடுத்த நொடியே சட்டென  பேச்சை நிறுத்தியும்விட்டாள்.

ஏனெனில் அப்போது ஏதேச்சையாய் அவள் கண்ணில் படுகிறாள் சற்று தொலைவில் இருந்து இவர்களை பார்த்தபடி நிற்கும் ஷ்ருஷ்டி…

இந்த ஏலியன் வகை குழப்பம் எல்லாம் தெளிந்த பின் இப்போதுதான் ஷ்ருஷ்டியை மோனி பார்க்கிறாளா… ஆக பாதல் பேச்சை அப்படியே விட்டுவிட்டு….ஷ்ருஷ்டியிடம்  வேக வேகமாக சென்றாள்  மோனி.

போய் அவளது இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டவள். “ரொம்ப சாரி…. நிச்சயமா நான் செய்தது தப்பு” என உணர்ந்து மன்னிப்பும் கேட்டாள்…

முதலில் ஒரு நிமிடம் மோனி எதற்காக மன்னிப்பு கேட்கிறாள் என்றே ஷ்ருஷ்டிக்கு புரியவில்லை…. அது ஷ்ருஷ்டியின் முழியிலேயே தெரிய….. அடுத்து எல்லாவற்றையும் சொல்லி விளக்கி…  கேட்கும் மன்னிப்பை மோனி  தெளிவாய் கேட்டு முடிக்க….

மோனியின் வார்த்தைகளை நட்பு ரீதியாக எதிர் கொண்டு  அதற்கு வாயளவில் ஏற்ற பதிலை சொல்லிக் கொண்டிருந்தாலும்……வலுவற்றவள்  போல் நின்றிருந்த ஷ்ருஷ்டியின் கண்களோ கவனச் சிதறலாய்  அங்கிருக்கும் சஹாவிடமே  அவ்வப்போது சென்று சென்று திரும்பிக் கொண்டிருந்தன…..

சஹாவுக்கோ எப்படி இருக்கிறதாம்?

மோனியிடம் அவன் பேசிக் கொண்டிருந்த நேரம் எதோ உணர்ந்து திரும்பிப் பார்க்க….. அங்கே அவன் பார்வைக்குள் விழுந்தாள் ஷ்ருஷ்டி….

அவ்வப்போது வந்து போகும் ப்ரமையோ என முதல் நொடி தடுமாறிப் போனான் அவன். ஆனால் அடுத்தும் அவள் உருவம் கலையாமல் நிற்கவும்….மோனிக்கும் அவள் பார்வைக்கு கிடைக்கிறாள் என புரியவும்….. வெடித்துக் கொண்டு பூக்கின்றது புதையுண்டு கிடந்த பூக்காடு ஒன்று அவன் இட வல எல்லைகளில்….. சிலீரென தேடிப் பாய்கின்றது அதன் இடையே நதிக் கோடு ஒன்று….

நொடி நொடியாய் அவளுக்காய் காத்திருந்தவன் அல்லவா…. நுரையீரல்களில் சென்று நிரப்பினான் அவள் வந்ததால் தந்துவிட்ட நிம்மதி செறிவுகளை..…

அதுவும் அவளாகவே அவனைத் தேடி வருவதென்றால்???……

இதை இந்த அவளது செயலை இவன் இதயத்தின் எதோ ஒரு மூலைச் செல் எதிர் பார்த்து ஏங்கியதுதான்……இவனை உகுத்தும் வகுத்தும் வாட்டி எடுக்கும் காதல் அவளையும் சற்றாய் சாய்த்துப் பார்க்காதா…? இவனைத் தேடி ஏங்கச் செய்யாதா?

இரண்டு நொடி அவளைக் கண்டுவிட்டால் போதும் என குத்திக் கிழிக்கும் கொடூரத்தை இவனுக்கு செய்து வைக்கும் காதல் அவளை  இரண்டெட்டேனும் இவன் புறமாய் எடுக்க வைக்காதா?  என்றெல்லாம் இவன் ஆசை கொண்டதுண்டானாலும்…….

அப்படியெல்லாம் அசைந்து கொடுத்துவிடமாட்டாள் அவள் என்று ஒரு அஸ்திவாரம் பலத்த அசையாத எண்ணமும் இருந்தது அவனுக்கு….

அதைப் பொய்த்துக் கொண்டு வந்து நிற்கிறாள்……  இது… இது போதுமே….. தித்திப்பாய் சிந்தி சிதறியது செழித்த  பல அருவிப் பொழிவுகள் அவன் உள்ளச் சுவர்களில்…… இன்றோடு இவர்கள் இருவருக்குமான இந்த ஏக்க நோவுகள், கணு அணுவாய் பிளக்கும் காதல் வகை வாதைகள் இல்லாமல் போகக் கூடும்….. அவளிடம் அவளைப் புரிய வைக்க சாந்தமாய் பேசும் இந்த உரையாடல் போதுமாய் இருக்கும்…. இப்படியெல்லாம் ஒரு கணம்  யோசித்தவனின் பார்வையும் மனமுமோ இதற்குள் மற்றொன்றை கவனித்திருந்தது…

கறுப்பு நிற தாவணியும் சாம்பல் நிற பாவடையும் காரணமா….அல்லது உண்மையிலேயே படு பலவீனமாக இருக்கிறாளோ…? இரண்டு நாட்களில் ஏகமாய் இழைத்திருந்தது போல் இருக்கிறாள்…. சாப்பாடை வாங்கிக் கொண்டாளே…. ஆனால் சாப்பிட்டாளா இல்லையா?……. இவ்ளவு பொறுத்திருக்க கூடாது நான்….. எது என்ன ஆனாலும் முதல்ல அவள எழுப்பி சாப்ட வச்சுறுக்கனும்…… என தவித்தான் இப்போது……தன்னை  நொந்தான்….

‘முதல் வேல இப்ப  அவள சாப்ட வைக்கனும்..’ என அவளிடம் சென்று நிற்கவும் செய்தான்.

ஒரு நொடி சஹாவையும் ஷ்ருஷ்டியையும் திரும்பி திரும்பிப் பார்த்த மோனி…. “அப்றமா பார்க்கலாம்…பை ” என அந்த நொடியே விடை பெற….

மோனிக்கு சம்மதமாக தலையாட்டிய ஷ்ருஷ்டியோ இவ்வளவு தூரம் இவனைத் தேடி வந்தவள்…… இப்போது இவனை நிமிர்ந்தும் பாராமல் திரும்பி நடக்க முயன்றாள்…

அவ்வளவுதான் அதுவரை அவன் கட்டி வைத்திருந்த பொறுமையெல்லாம் விட்டுத் தெறித்தோட சட்டென கொதித்துக் கொண்டு வந்தது சஹாவுக்கு…..

அதிலும் இவனை தவிர்த்து அவள் திரும்ப முயன்ற வகையில்….சற்றும் பலமற்று சின்னதாய் தடுமாறி…அதைக் கூட சமாளிக்க திராணியின்றி அருகில் இருந்த சுவரைப் போய் அவள் பற்ற….

கோபமாக ஒரு பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டால் அவளை சமாதானப்படுத்த இனி நாட்கள் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தவன்  சினத்தின் எல்லையை இப்போதோ சீக்கிரமாய் தொட்டு வைத்தான்…

கொந்தளித்தான்…

ஆக  ரெண்டு நாளும் கண்டிப்பா ஒன்னுமே சாப்டல அவ…..அதில் நடக்க கூட முடியாத இந்த நிலமையில் இவன தேடி இங்க வரைக்கும் வந்துட்டு….இப்ப இதுக்குள்ள என்ன தொட்டா சிணுங்கித்தனம்? திரும்ப ரூம்க்கு போய் சாப்டாம கிடக்கவா?

நேரே அவளுக்கு முன்னாக போய் அழுத்தமாக நின்றான்….

“ஒன்னு நீயா  என் கூட வந்துடு….இல்ல கண்டிப்பா நான் உன்ன தூக்கியாவது கொண்டு போவேன்”  திருத்தமாக வந்தன அவன் வார்த்தைகள்.

அதோடு தன் முழுக்கை சட்டையின் கைப் பகுதியை  பார்த்தவன்…. மணிக்கட்டுப் பகுதியிலிருந்து முழங்கை வரைக்காய் அதை அலட்டலின்றி மடித்தும் விட்டுக் கொண்டான்…. ஸ்டைல் வகை காரணத்திற்காக  அந்த பகுதியில் வைத்து தைக்கப் பட்டிருந்த ஸிப்…..  தான் அவளை தூக்கும் போது அவள் மீது காயம் செய்து விடக் கூடாது என அவன் நினைப்பது ஷ்ருஷ்டிக்கு புரிந்தது….

அவன் முகபாவம்…. குரல்… செயல்…. என எல்லாம் அவன் செய்ய நினைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை இவளுக்கு தெள்ளத் தெளிவாக அறிவிக்க….

வேறு வழி இன்றி  சஹாவின் அறையைப் பார்த்து  நடக்க துவங்கினாள் அவள்…..

அவளது பலவீனமான ஒவ்வொரு அடியும் இவன் பொறுமையின் எல்லைகளை அடித்து நொறுக்க…..முயன்று தன்னை கட்டுப்படுத்தியபடி மௌனமாக அவளோடு இணைந்து நடந்தான் சஹா…

பேசினால் என்னதெல்லாம் சொல்லிவிடுவானோ?

அவளும் எதுவும் பேசவில்லை……ஆமா என்னைக்கு பேசினா இப்ப மட்டும் பேசிட?

தன் அறைக்குள் வரவும் முதல் வேலையாக….ஃப்ரிட்ஜிலிருந்த ஆரஞ்சு ஜூசில் முடிந்த அளவு க்ளுகோஸ் கொட்டி வந்து அவளிடம் கொடுத்தான்..

மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் அவள்…..கடகடவென  அதை குடித்தும் முடித்தவள்….. ஏதோ கடமையை நிறைவேற்றி முடித்தது போன்ற பாவத்துடன் ஜூஸ் க்ளாஸை இவனிடமாக நீட்டினாள்…

அவள் கை நடுங்குவதை கோபமும் இயலாமையுமாய் ஒரு கணம் பார்த்தவன்….. அவள் கண்ணில் கலந்து கிடந்த அதீத சோர்வின் நிமித்தம்…..மீண்டுமாய்  தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு…. அவள் கையிலிருந்த க்ளாசை வாங்கிப் போய் உள்ளே வைத்து வந்தான் அவன்.

திரும்பி வந்தவன் கண்ணில்பட்ட காட்சியில் அப்படியே அஸ்திவாரம் வரைக்குமாய் ஆடிப் போய்விட்டான்.

ஆம் இதற்குள் தான் அமர்ந்திருந்த சோஃபாவில்  கேள்வியுருவில் சுருண்டிருந்தாள் ஷ்ருஷ்டி… அதுவும் தன் இரு கைகளையும் கன்னத்திற்கு அடியில் வைத்து இதம் இதமாய் அவள்…

இதில் அவனை தாக்கியது என்னவென்றால்….

ஷ்ருஷ்டியைப் பத்தி இந்த விஷயத்தில் இவனுக்கு நன்றாக தெரியும்…… இவன் மட்டுமாய் இருக்கும்போது இவன் அறைக்கு  வருவதே அவள் வகையில் படு அதீதம்……உண்மையில் அந்த நேர உணர்ச்சி வேகத்தில் இவன் அதை யோசிக்காமல் அவளை இங்கு கூட்டி வந்துவிட்டானே தவிர….. சற்று யோசித்திருந்தாலும் இவனுமே அவளை இங்கு வரச் சொல்லி இருக்கமாட்டான்.

அவளோ இங்கு வேறு யாருமில்லை என தெரியாமல் வந்திருக்கலாம்…. இத்தனை நாளும் யாராவது உடன் இருப்பதுதானே வழக்கம்.

ஆனால் இப்போது அவள் இப்படி நிம்மதியாய் படுத்து தூங்குவதென்றால்??…. முதல் காரணம் தன்னை மீறிய அவளது சோர்வுதான் என்றாலும் இவன் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாள்  அவள் என்பது இவனை ஆட்டிப் போகிறது…..

அதோடு இந்த செயல் அவனுக்கு இன்னொரு ப்ரமையை உண்டு செய்கிறது….. என் சுயத்தோடும் சூழலோடும் போராடி தோற்றுவிட்டேன்…என் எல்லைகளை தாண்டி உன்னை சரணடைந்தேன்…..இனி நீயே கதி என அவள் அறிவிப்பது போல் ஒரு ப்ரமை…..

ஏனெனில் வெகு இயல்பாக கூட யாரிடமும் பழகிவிட முடியாத அவள் சுபாவத்திற்கு இது எத்தனை அதீதம் என்பது இவனுக்கு புரிகின்றதே… மனதளவில் எத்தனை உடைந்திருந்தால் சுய சுவர் மறந்திருப்பாள் அவள்…?? அப்படி என்ன ப்ரச்சனை வதைக்கிறது அவளை???

உண்டாகிய உணர்வுப் பிளம்பை தாங்க மாட்டாதவனாய் அடுத்த கணம் சோஃபா அருகில் தரையில் முழந்தாள் மடக்கி அமர்ந்தவன்

“என்ன ப்ரச்சனைனு சொல்லித்தான் பாரேன்…. அதுக்கு முடிவுன்னே ஒன்னு இல்லாமலாடி போய்டும்….. கண்டிப்பா இருக்கும்…..” அவள் தூக்கத்தை கூட சட்டை செய்யாது சொல்லிக் கொண்டிருந்தான்…

 

அப்போதுதானே தூக்கத்தில் நுழைய துவங்கி இருந்தாள்….  அவன் குரலில் சற்றாய் இமை பிரித்துப் பார்த்தாள் அவள்…

தாய்மைகுட்பட்ட தலைமைத்துவத்துக்குள் காதலுருவாய் கண்ணில் கிடைத்தான் அவன்.

“எதையுமே ஒருத்தரா ஃபேஸ் செய்றதவிட ரெண்டு  பேரா கையாள்ற பலமே அலாதிமா….. உனக்காக நான் வரமாட்டேனாடா….?”

அவன் கேள்வி அவள் காதுகளில் கரைய கரைய…. தாக்கிய உணர்வுச் சுனாமிக்கெதிராய்  தன்னை இழுத்துக் கூட்டி….. அதைதாங்க அவள் வகை தேட….அதில் அவள் இமைகள் சற்றாய் துடிதுடிப்பாய் அடித்துக் கொள்ள……

அதற்குள் அவன் அடுத்த கேள்வியை கேட்டு வைத்தான்.

“நமக்காக நான் வரமாட்டேனா?”

அந்த அவன் கேள்வியில் கொட்டிக் கிடந்த கோடி மலைக் காதல் அவள் இதயக் கதவுகளை சம்மட்டியால் தாக்க…. எதையும் எவ்வகையிலும் நினைக்க முடியாத நிலைக்கு போனாள் இவள்… அவள் விழித் திரையில் எழுந்து வரும்  நீர்ம பளபளப்பை தவிர அவளிடம் ஏதும் இல்லை சலனம்.

அதே நேரம் காதில் விழுகிறது அழைப்பு மணி ஓசை…..

அவ்வளவுதான் அடித்துப் பிடித்துக் கொண்டு பதற பதற எழுந்தாள் அவள்.

இந்நேரம்தான் முழு சூழலும் உறைக்கிறது அவளுக்கு….. அவனும் அவளும் தனியாய்…..அதுவும் படுத்த நிலையில் இவள்….

அவள் முகபாவம் போதாதா அவள் மன எண்ணம் புரிவிக்க அவனுக்கு..?

“அப்டி நம்ம தப்பா நினைக்கிற மாதிரி இங்க யாரும் வந்துடமாட்டாங்க…..” கிட்டதட்ட சீறினான் அவன்.

கோபம் என்று இல்லை…..ஏற்கனவே எதற்காகவோ அத்தனை வேதனையில் இருப்பவள்….இப்ப இதுக்கு வேற பயப்படக் கூடாது என்ற தடுப்புணர்வில் பிறந்த   சீற்றம் அது…..

“மோனி போய் ஆகஷ்ட்ட நீ வந்துட்டன்னு சொல்லி இருப்பாங்க….. இந்நேரம் சாப்ட பொதுவா எதுவும் கிடைக்காதேன்னு அவன் ரெஸ்ட்டரண்டில இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்துருப்பான்… “ சற்று சாந்தமாய் விளக்கம்  சொல்லி இவளை சாந்திபடுத்த முயன்றான்…..

அவன் குரலுக்கே இவளுக்கு அவன் வார்த்தையில் நம்பிக்கை வருகிறதுதான் என்றாலும்….. எப்படியும் இவன் சொல்வது வெறும் யூகம்தானே என்ற பதைபதைப்பும் நெஞ்சோடு நிற்கிறது அவளுக்கு… மோனி இவள புரிஞ்சி…ஆகாஷ்ட்ட சொல்லி என்றெல்லாம் யோசிக்க அபத்தமாக இருக்கிறதுதானே….

“உன்ன பார்த்தாலே யாருக்குனாலும் தெரியாதா நீ பல நாள் பட்னினு…..” இவள் மனம் உணர்ந்தார் போல இப்படி ஒரு காரணம் சொன்ன சஹா…..

அடுத்து அம்மட்டுமாய் நிறுத்த முடியாமல் “அப்டித்தான் அவ்ளவு தூரம் அண்டர்வட்டர் டைவிங் போய்ட்டு அடுத்து இப்டி சாப்டாம கிடப்பாங்க என்ன? இப்படி அறிவாளியா இருக்கவா நீ பி.எச்.டி வேற செஞ்சுகிட்டு இருக்க?”  என பொரிந்தான்.

எதெல்லாம் இவளை விழத்தள்ளும் என இவனுக்கு மட்டும் ஏன் தெரிந்தே இருக்கிறது என யோசிக்கிறது பெண்ணவள் மனது….

அதே நேரம் அவன் சென்று திறந்த கதவின் வழியாக உள்ளே வருகின்றனர்  ஆகாஷும் நிம்மியும்….. அதுவும் சஹா யூகித்து சொன்னது  போல் “மோனி சொன்னாங்க……இந்த டைம்ல சாப்பாடு எங்கயும் கிடைக்காது….” என்ற அதே விளக்கமும் சாப்பாடு பெட்டிகளும் ஆகாஷிடம் இருந்தன.

 

காதல் வெளியிடை 16 (2)