காதல் வெளியிடை 14

கடலின் அடிக் கடைசியில் இருக்கிறார்கள்…. எது எத்தகைய உதவி வேண்டுமானாலும் இவர்கள்  நீரின் மேற்பரப்பை அடைந்தால்தான் உண்டு…..  இந்த சூழலில் ஷ்ருஷ்டி துவண்டு சரிவதென்பது பேராபத்து…..மேல் நோக்கி நீந்தியாக வேண்டுமே……

ஆக அவள் துவண்டு சரிவதை பதற பதற எதிர்க் கொண்டவனாய் சஹா “ஸ்ரீ என்ன என்னாச்சுமா ஸ்ரீ?” என தவிக்க…

அவளோ அந்த சூழலிலும்  ஏதோ அதுதான் அதி முக்கியம் போல் “ “ப்ளீஸ் ஸ்ரீன்னு கூப்டாதீங்கப்பா”  என கெஞ்சினாள்…

ஒரு நொடி இவனுக்குள் எதோ எங்கோ உறுத்துகிறது….. ‘அப்டி என்ன இருக்கு இந்த பேர்ல….?’  என்ற குறுக்கு கேள்வியும் மனதின் நெடுக்காக ஓடுகிறது….

ஆனாலும் அதையெல்லாம் யோசிக்கும் நேரமா இது….? அவள் உடல்நிலை அல்லவா இப்போதைய தலையாய விஷயம்…

ஆக தன் கவனத்தை அவள் ஆரோக்கியம் பற்றி அறிவதில் மாத்திரமே வைத்தான் அவன்…

அதே நேரம் அவன் அடுத்து எதுவும் கேட்கும் முன்னும்…. “ ஏன்பா பயப்படுறீங்க….? இங்க பயப்பட எதுவுமே இல்லை” என ஒரு ஆறுதல் வந்து விழுகிறது அவளவனிடமிருந்து…

அழகாய் திறந்திருந்தது அவளது கண்களும்….

சின்னதாய் சிரித்துவிட்டான் இவன்…. ‘பொண்ணு உடம்பு இல்ல மனசுதான் மயங்கிப் போச்சு போல…’

இதழுக்குள் இட்டு வைத்துக் கொண்ட மென் முறுவலுடன் அவள் கண்களை அது விளைந்து நிற்கும் அவள் முகத்தை பார்வையால் ஸ்பரிசித்தான்….

அவள் இடம் பொருள் காலத்துடன் காதலில் இருப்பது  கசடற புரிகிறது இவனுக்கு…

மெல்ல அவளருகில் அமர்ந்து கொண்டான் இவன்….

குனிந்தபடியே எவ்வளவு நேரம் நிற்பதாம்?

அவளும் தடை ஏதும் சொல்லவில்லை… அதோடு படுத்தபடியே நேர் மேலாக ஆகாயம் நோக்கிப் பார்த்தாள்…..  ஆகாயம் தெரியாதுதான்….ஆனால் மேல் நிற்கும் அனைத்து நீரும்  தாங்கள் கடந்து வந்திருக்கும் உயரமும் புரியுமே…..

உயரம் என்றால் அவளுக்கு பயமே…. ஆக அவசரமாய் தடுத்தான் சஹா…. “அப்டி மேல பார்க்காத ஸ்..…ரொம்ப ஆழமா ஃபீல் ஆகும்….” ஸ்ரீயென சொல்லும் போதெல்லாம் முன்பு அவள் சீறி இருக்கிறாள் என இதற்குள் அவன் யோசித்து விட்டதால் பேரை தவிர்த்திருந்தான் அவன்.

‘கடலுக்குள்ள வந்த பிறகுதான் ‘ஸ்ரீ’ ல அவ எரிஞ்சு விழல’ என்றும் கொண்டுகூட்டு பொருள் கண்டது அவன் மனம்… இங்க ரிலாக்‌ஸா இருக்றதால கண்டுக்கல போல….. ஆனாலும் ஏன்? நேத்து கூட இவனது ‘என்னடா’வில் உருகியவள்…..ஸ்ரீயில்தான் வெட்டிக் கொண்டு போனாள் என்பது இப்போது தெளிவாக புரிகிறது…. அப்படி என்னதான் விஷயமா இருக்கும்…?

“அதான் சொன்னே இங்க பயமே இல்லைனு…. நீங்களும்  என்னை போல பாருங்க…உங்களுக்கும் பிடிக்கும்…” மேல பார்க்காத என்ற இவன் அறிவுரைக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்… அதோடு அவளை விட்டு சற்று தள்ளி….அந்த தூண்களில் கையை வைத்து தட்டியும் காண்பித்தாள்…

அங்கு படுக்க சொல்கிறாள் இவனை…..ஆவல் கொண்ட குழந்தையாய் அவள்….

மெல்லமாய் அவளைப் போல அவளுக்கு இணையாக ஆனால் பிடித்திருந்த கையை கூட விட்டுவிட்டு சற்று நன்றாக விலகியே…. இவனும் படுத்தவன்…அவள் சொன்னவாறே மேல் நோக்கிப் பார்த்தான்…

“பாருங்க சஹா இந்த தண்ணிதான் வானம்…. பாருங்க பாருங்க அந்த மீனெல்லாம் கூட்டமா திரும்புறப்ப எவ்ளவு வெள்ளி போல இருக்கு….இதெல்லாம்தான் நம்ம உலகத்துக்கு நட்சத்திரமாம்…..”

ஆம் அவள் சொல்வது போல்தான் தெரிகிறது காட்சிகள் யாவும்….ஆனால் அவன் மனமோ அதிலெல்லாம் செல்லாமல் ‘நம்ம உலகம்’ என்ற வார்த்தையில் வசப்பட்டு கிடக்கின்றதே….

‘ஏய் சீனிமிட்டாய் என்ன சொல்லிட்டு இருக்கன்னு புரிஞ்சுதான் பேசிட்டு இருக்கியா?’  மனம் துள்ளல் செய்ய மேல் நோக்கிப் பார்ப்பதை தவிர்த்து தன்னருகில் கிடந்தவளை நோக்கி பார்வையை பசியோடு அனுப்பி இருந்தான் இவன்…. காதல் பசி…

எத்தனைதான்  அருகிலேயே இருந்தாலும் மோனியிடம் கூட சேர்ந்து கொள்ளவே விரும்பும் ஷ்ருஷ்டி இவனிடம் எப்போதுமே ஒரு கவனிக்கதக்க விலக்கம் காண்பிப்பதுதான் வழக்கம் என்றாகிவிட்டாலும், நேற்றைய நிகழ்வு இவனை அசைத்திருந்த விதம் அதிகம்….

இவனைப் பார்த்து அவ பயப்படுறதே இவனுக்கு கஷ்டமாக இருக்க…அதில் சட்டென எவ்வளவு எளிதாக வெட்டிவிட்டு வேறு போய்விட்டாள்….அதுவும்  எவ்ளவு சாதாரணமா சொல்லிட்டா ‘உன்ன இனி பார்க்க வர மாட்டேன்’னு….

என்னதான் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும்…. எத்தனையாய் தவித்துப் போனான் இவன்….

போய் என்னதான் ப்ரச்சனை என கேட்கும் உரிமை கூட இல்லாத இந்த நிலை மிக வீரியமாக தாக்கியிருந்தது அவனை….. கோரமாகவும் கூட…. அவனுக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து அவன் குடும்பத்தில் அவன் நிலை எப்போதும் இந்த வகையில்தான்….. ஏன் என்றெல்லாம் எதையும் யாரிடமும் கேட்டு பதில் வாங்கிவிட முடியாது….. இதில்  இவளும் அதையே இவனுக்கு செய்வதென்றால் எப்படி இருக்கிறதாம்?

பாலையாய் பசித்திருந்தான்….

இன்று அதில் காதல் மழை வெள்ளம்….

இன்னுமே மேலேயே பார்த்துக் கொண்டிருந்த ஷ்ருஷ்டியோ “இதுதான் நம்ம வீடாம்……” தன்னை சுற்றியிருந்த நீர்வெளியை ஒற்றைக் கையால் சுற்றிக் காண்பித்தவள் “இங்கயே இருந்துடலாம்  சஹா” என்றபடி மெல்ல இவனை நோக்கி திரும்பினாள்…

இவனது பார்வையை அவளை அறியாமல் உணர்ந்து தன்னிச்சையாக திரும்பி இருக்கிறாள்….

அவளது வார்த்தைகள் இவனை என்ன செய்து வைத்திருக்கிறதாம்…? இவன் ரத்த நாளங்களில் வெடித்து சிதறுகிறது வானவில் வகை உணர்வு குமிழங்கள்……  அதன் நேர்மாறாய்  அவள் வகையில் எப்போது தொட்டாலும் அலைப்புறும் ஒரு மன பாகத்தில் அமைதியின் சாம்ராஜ்யம்….….சத்தமின்றி உதித்த சலசலக்கும் நீரோடை ஒன்று வந்து பாய்கிறது இவன் தாக ஸ்தலங்களில்…..

எத்தனைதான் விலக்கி நிறுத்தியே அவள் இவனிடம் பழகி இருந்தாலும்  அவளது காதலை இவன் அறியாதவன் அல்லவே…. இந்த விலக்கம் எல்லாம் இவளது வெளிச்சுவர்தான்…உள்புறமோ இவனுக்கான இடம் பரிபூரணமாகவே இருக்கிறது என்பதுதானே இவனது உள்ளுணர்வு…..

அதே நேரம்  அவளை தடுத்துப் பிடிப்பதும் ஏதோ  இருக்கிறது என புரிந்தே இருக்கிறான் இவன்……காதல் என்றாலே தவறான ஒன்றென்ற வளர்ப்பு முறை முக்கிய காரணமாய் இருக்கும் என்பது இவனது எண்ணம்….. இவங்க ஊரப் பத்தி இவனுக்கு தெரியாதாமா?

அதோடு இவன் மீதும் ஏதோ ஒன்று தவறாக பதிந்து போயிருக்கிறது அவள் மனதில் என்பதும் அவன் யூகம்….. முதல் இம்ப்ரெஷன்….மோனி விஷயத்தில் இவன் நடந்த விதம் பிடிக்கலையா இருக்கும்…..  ஆக தன்  காதலை தன்னாலயே அனுமதிக்க முடியாமல் தடுமாறுகிறாள் தன்னவள் என்பது இவன்   புரிதல்….…  நேற்று அவள் வெட்டிக் கொண்டு போனதும் இதெல்லாம்தான் யோசித்து வைத்திருந்தான்… இதை சரி செய்யவும் பூர்ணிமா மூலம் இன்றுதான் இவனுக்கு வழியும் கிடைத்திருக்கிறது….

ஆக மோனியிடம் பேசி எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு ஷ்ருஷ்டியிடம் மனம் விட்டு பேசலாம் என முடிவெடுத்திருந்தான் இவன்….

ஆனால் இவளோ இப்போது தனக்கான தற்சிறையை தாண்டி வெளி வந்திருக்கிறாள்….. மந்திரம் செய்யும் ரம்மிய சூழல்  மாயம் செய்கிறது போலும்….

இங்கு வைத்தே எல்லாவற்றையும் பேசிவிட்டால்தான் என்ன என தோன்றிவிட்டது இவனுக்கு…..

இதற்குள் ஷ்ருஷ்டியோ  “என்ன நீங்க ஒன்னுமே சொல்ல மாட்டேன்றீங்க….? போகனும்னு சொல்லிடுவீங்களா?” என பரிதாப பாவத்தில் கெஞ்சல் குழல் வாசித்தாள்.

‘ஏய் சீனி மிட்டாய் இங்கயேதான் இருக்கனும்னா நம்ம வீட்ல ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?….. அதத்தான் நம்ம ஊர்ல மேரேஜ்னு சொல்றாங்க….. நாம கல்யாணம் செய்துப்பமா? ‘ இதைத்தான் இவன் சொல்ல ஆரம்பித்தான்…

“ஏய் சீனி மிட்டாய் இங்கயேதான் இருக்கனும்னா நம்ம வீட்ல ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?….. அதத்தான் நம்ம ஊர்ல…” இவ்வளவு சொல்லி முடிப்பதற்குள் மென்மைக்குள் புதைந்திருந்த அவள் முகம் தீப் பட்ட மலராய் கருக…. பனிக் காற்றாய் வருடிக் கொண்டிருந்த பாவை விழிகள் எதையோ பார்த்து பய நதியாய் பரவ…….அவள் கண்கள் இவன் முகம் மீது நிலைக் குத்த…

இவனுக்கோ தன் பின்னாக எதுவும் ஆபத்தான ஒன்று வந்து கொண்டிருக்கிறதோ… அதையா பார்க்கிறாள் என்ற கேள்வி..…. நிச்சயமாக இவனைப் பார்த்து வரும் பயம் இல்லையே இது என்ற புரிதலில்…..அன்னிசையாய் பின்னால் திரும்பிப் பார்த்தான்….

அங்கு வித்யாசமாக எதுவும் இல்லை……’பின் என்னவாம்….? இன்னும் இவன் கல்யாணத்தைப் பத்தி பேசக் கூட இல்லையே…’ என்ற மன கேள்வியுடன் தன்னவள் புறமாக திரும்ப….

அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிந்துவிட்ட இந்த செயலுக்குள் அவளை காணவில்லை…!!!!

தூக்கிவாரிப் போட இவன் எழும்ப….அதற்குள் அத்தனை வேகமாய் இவன் தலைக்கு நேர் மேலாக கடல்  மேற்பரப்பை நோக்கி விர் விர்ரென விலாங்கு மீனாய் நீந்திக் கொண்டிருந்தாள் அவள்… வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அத்தனை அத்தனை வேகம்….

வளைந்து வளைந்து எழும்பும் அவளது உடலின் ஒவ்வொரு அசைவிலும்  மண்டிக் கிடக்கிறது மகா கோபம்…

‘ஹையோ’ என வருகிறது இவனுக்கு…..’இதுக்குள்ள தொட்டா சிணுங்கி சுருங்கிட்டு போலயே… சீனி மிட்டாய்க்கா இவ்ளவு எஃபெக்ட்…. ?! ஆனாலும் நாம இங்கயே  இருப்பமான்னு கேட்கிறதுல இருக்ற காதல விட பெருசாவா இருக்கு இந்த சீனி மிட்டாய் காதல்…?!’ நினைத்துக் கொண்டாலும் சர்ரென மேல் நோக்கி நீந்தியவன் அடுத்த நொடி கை நீட்டி அவள் காலை பிடித்திருந்தான்….

“விடுங்க….விடுங்கன்னு சொல்றேன்….” அவள் பலம் கொண்ட மட்டும் உதறிக் கொள்ள முனைந்தாலும் இவன் அவள் காலை தன் பிடிக்குள்ளேயே வைத்தபடி….இவன் கையிலிருந்த அவளது ஒற்றை ஃபின் ஷூவை மாட்டிவிட்டான்….

அடுத்த நொடி அவள் கையை பிடித்துக் கொண்டு காலை விட்டு அவளோடு நீந்த தொடங்கி இருந்தான்…. “சீனி மிட்டாய்னா அவ்ளவு மோசமாவா இருக்கு….? சரி உனக்கு பிடிச்ச பேரா சொல்லு…” என சீண்டியபடி…

ஒரு கணம் அவள் உடல் மொழியில் ஒரு புரியா பாவத்தை உணர்ந்தான் அவன்…. பின் “நீங்க ஒன்னும் என்ன கூப்டவே வேண்டாம்…” என க்ரீச்சிட்டாள் அவள்…

“அதெப்படி…இரண்டு பேருமா மட்டும் இங்க இருக்கப்ப நான் உன்னை கூப்டாம எப்டி முடியும்?” சிறு சிரிப்போடும்… அவன் சொன்ன காட்சியை மனதில்  கண்டபடி காதல் தவழும் குறும்போடும் இவன் கேட்க….

அவ்வளவுதான் சட்டென இவன் கைப்பிடியில் இருந்த அவள் உடலின் பாரம் கூடுவதை உணர்ந்தான் சஹா…

ஆம் மேலே செல்லும் அவசரத்தில் இவனுக்கு இணையாக நீந்திக் கொண்டிருந்தவள்  தன் அனைத்து செயலையும்  நிறுத்தி இருந்தாள்….  நீந்துவதை நிறுத்தியதால் கடலுக்குள் மூழ்கவும் தொடங்கி இருந்தாள்….இவனது பிடியில் அவள் கை இருந்ததால் அவளது எடை முழுவதையும் இப்போது இவன் தாங்க வேண்டி நேரிட்டிருக்கிறது….

எதிர்பாரா  இச் செயலில் ஒரு நொடி இவனும் கூட மூழ்க தொடங்கியவன்… பின் சமாளித்து அவளையும் தன் பாதுகாப்பு  பிடிக்குள் கொண்டு வந்தான் சஹா.

நீச்சல் என்பது ஒரு வகையில் அனிச்சை செயல்…… நீந்த தெரிந்தவர்கள் தண்ணீருக்குள்  தற்கொலை செய்ய என குதித்தாலும் கூட  தன்னை மீறி நீந்திவிடுவர்…அப்படி  நம் சுய ஆளுகைக்கு உட்படாத செயல் அது…

அதைக் கூட நிறுத்தி இருந்தாள் ஷ்ருஷ்டி…அப்படி ஒரு கொடும் குற்ற மனப்பான்மை அவளுக்கு…. இவ்வளவு நேரம் தான் என்ன சொல்லி வைத்திருக்கிறேன்…..எப்படி நடந்து கொண்டிருக்கிறேன் என்பதே  முழு ஆழத்தோடு இப்போதுதான் புரிவது போல்  ஒரு நிலை அவளுக்கு…. உயிர் வேரில் ஒரு கோடி அமில வார்ப்புகள்……

எதில் நழுவி இருக்கிறாள்? எப்படி செய்தேன் இதை….? என்ன செய்துவிட்டேன் நான்?!!! அதை அவன் புரிந்து வேறு வைத்திருக்கிறானே?!! இந்த எண்ண ஈட்டிகள் குத்தி சொருகி குதறியதில்  செத்தே போனாள் அவள்…

நீச்சலின் இயல்பு பற்றி எல்லாமும் தெரிந்த சஹாவுக்கு அவள் செயலே அவள் மனதை தெரிவிக்காதாமா என்ன?

இதற்கு மேல் அவளிடம் இந்த காதல் விஷயத்தை அழுத்திப் பேசக் கூடாதென தோன்றிவிட்டது அவனுக்கு….

என்னதான் அவளுக்கும் விருப்பமே என்றாலும் கூட  அதைச் சொல்ல கூட  அவளை வற்புறுத்தியது போல் ஆகிவிடக் கூடாதென்பது இவன் மனநிலை……

எப்படியும் மோனி விஷயத்தை சரி செய்துட்டுதானே இவட்ட காதலைப் பத்தி பேச நினச்சான்…..அதையே செய்யலாம் என மனதுக்குள் முடிவெடுத்தவன்….

இப்போது தானும் நீந்துவதை நிறுத்தினான்…

ஆக என்ன நடக்குமாம்…?  இருவரும் இணந்தே மூழ்க தொடங்கினார்…. அப்பொழுது கூட சற்று நேரம் அவள்  அசையக் கூட இல்லை….

ஆனால் அப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியுமாம்?

பின் உணர்ந்தவளாக….” என்ன செய்துட்டு இருக்கீங்க…” என சிடு சிடுத்தபடி மேல் நோக்கி நீந்த துவங்கினாள்… அவன் பிடிக்குள் இருந்த கையை உதறவும் முற்பட்டாள்….

“அம்மணி சித்தம் அடியேன் பாக்கியம்……. நீங்கதான் கீழ போக ஆரம்பிச்சீங்க….. சரி உங்களுக்கு அதுதான் பிடிச்சுறுக்குன்னு நானும் கூட வந்தேன்….” சொல்லியபடி அவனும் அவளோடு இணைந்து நீந்தினான்….

“அக்ரிமென்ட்லாம் போட்றுக்கேன்ங்க…… கூட கூட்டிட்டுப் போகலைனா ஜெயில்ல பிடிச்சு போட்றுவாங்கங்க…” அடுத்த அவன் வாக்கியத்தில் அவளது  கை உதறலும் கூட நின்று போனது….

மீண்டும் கடல் பரப்புக்கு மட்டுமல்ல….கப்பலுக்கே வந்து சேரும் வரைக்கும் ஷ்ருஷ்டி வாயை திறக்கவே இல்லை…..

 

Next page