காதல் சொல்ல வந்தேன் (2)

 

ஸ்பீடா மீட்டரில் எதேச்சையாய் அவள் கண்பட, அது 140 காண்பிக்க, தன்னிலை உணர்ந்து வேகம் குறைத்தாள். சற்று நேரத்தில்….டம்…என் டயர் வெடிக்கும் சத்தம்… .ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்  காற்று போக்கும் அரவம்..

.ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்…டயர் பிரேக்கை தாங்கிக்கொண்டு தரையில் ஒருபுறமாக இழுபடும் சத்தம். சாலையின் ஓரமிருந்த கைப்பிடி சுவர் அருகில் சென்று இடிக்காமல் நின்றது வாகனம்.

சுற்றிலும் பார்த்தாள். மொத்த சாலையில் இவள் வாகனம் மட்டும் தனியாய்.

சே …இந்த நேரத்தில அப்பா எதுக்கு இங்க வரச்சொன்னாங்க…இந்த டயருக்கு பஞ்சராக வேற இடமே கிடைக்கலையா…? காரைவிட்டு இறங்கி பார்க்கவா…வேண்டாமா..? சற்று தொலைவில் தெரிந்த அந்த குட்டை சுவரில் ஒற்றை மனிதன்.

லுங்கியும் சட்டையுமாக உட்கார்ந்து இருந்தவன் இவள் காரைப் பார்த்து வரதொடங்கி இருந்தான். பிறருக்கு உதவும் மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் போல… ஆனால் தனியாய் இருப்பது பெண் என்று தெரிந்தால் என்ன செய்வான்?

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? மொபைலை எடுத்து அப்பாவை அழைக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் அந்த லுங்கிக்காரன் இவள் காரை நெருங்கி இவள் வலபுற கண்ணாடியில் ஓங்கி ஒரு உதை…

“ஏய்…”இவள் கத்தியபடி இருக்கையில் இடப்புறமாக கண்மூடி சரிந்தாள்.

ஒன்றும் புரியவில்லை. மனோவேகத்தில் இவள் காரின் பின்கதவு திறக்கும் சத்தம். க்ளிக்ச்…… “ஸ்,,ச..” இவள் காரில் இருந்து யாரோ வெளியேறும் சத்தம்…கால் காற்றில் வீசப்படும் சத்தம்…’ஷ்க்க்க்…’ ,  ‘தக்….’அது அந்த கைலிக்காரன் கழுத்தில் இறங்கும் சத்தம்…’ஆஆஆஆ…’அவன் அலறும் சத்தம்….த்தட்ட்ட் அவன் தார்ரோட்டில் விழும் சத்தம்.

“சொல்ற வர எழும்பாத..படுத்துக்கோ  மைவி…..” சுரஞ்சகன் குரல்…இவன் எப்பொழுது இங்கு வந்தான்…? அதுவும் இவள் காருக்குள்…?

இன்னும் சில ஷூக்கள்…..தோட்டாக்கள்…அலறல்கள்…பேச்சு குரல்கள்…சில வாகன ஒலி ஒளிகள்…

இவள் கார்கதவை திறந்தான். “எல்லாம் ஓவர் மைவி..யூ ஆர் ஸேஃப்…எழுந்துக்கோ…”

மைவிழியை முழுவிழியளவு திறந்து பார்த்தாள்.

உதவிகரம் நீட்டினான். ஆனால் அவன் கை பற்றாமல் எழுந்து கொண்டாள்.

 

வன் வாகனத்தில்தான் கிளம்பும்படி ஆகிற்று.

“என்னாச்சு…?” விசாரிப்பதற்கு அவனைத்தவிர வேறு ஆள் இல்லையே கேட்டாள்.

உன் அப்பா இப்போ சி எம் கூட மீட்டிங்கல இருக்காங்க….எப்போ முடியும்னு சொல்லமுடியாது..

உங்க ஸ்கூல் பங்ஷன்ல பாதியில் சி.எம்மை பார்க்க உங்கப்பா கிளம்ப வேண்டி இருக்கும்னு ஏற்கனவே தெரியும்….ஃபங்ஷன் முடிஞ்சதும் உன்னை கூட்டிட்டு போறதுக்காகத்தான் நான் ஃபங்ஷனுக்கு வந்ததே….

இதுல ஆட்டிட்யூடில் டேபிள்னதும்….எதோ சரி இல்லைனு புரிஞ்சிட்டுது…அதான் உன் மொபைல் நம்பரை ஸ்டடி செய்ய சொல்லிட்டு……பட்ரோல்லை விசாரிச்சு… சந்தேகபடுற மாதிரி ஆள் நடமாட்டம் இங்க இருக்கிறதால இந்த ஸ்பாட்லதான் கிட்னாப்  இருக்கும்னு கெஸ் செய்து….எங்க டீமை இங்க வர சொல்லி ஹைடிங்ல இருக்க சொல்லிட்டு…நான் உன் கார்ல வந்துட்டேன்…உன் கார் டயரை பஞ்சர் செய்து அவங்க…” அவன் சொல்லிக்கொண்டு போக நம்ப முடியாமல் இடையிட்டாள் மைவிழி

“எப்படி….எப்படி எனக்கே தெரியாம…என் காருக்குள்ள நீங்க…?”

ஃபர்ஸ்ட் டோல்கேட்ல உன்னை கொஞ்சம் அதிகமா வெயிட் செய்ய வச்சாங்கல்ல…டோல்கேட்ல பவர்கட் பார்த்து இருக்கியா..? இன்னைக்கு இருந்துச்சே… உனட்ட டோல் கலெக்ட் செய்ததிலிருந்து எல்லாம் நம்ம பாய்ஸ்தான்…அப்பதான் உள்ள ஏறினேன்…

நெக்ஸ்ட் டோல்கேட்டுக்கு பிறகு உன் காரை தவிர எதுவும் வந்திருக்காது…நீதான் கவனிக்கலை….

ஆனா ஏன்..? என்ட்ட சொல்லி இருந்தா நான் வராமலே இருந்திருப்பேனே…? “ யோசனையாய் கேட்டவள்

“இவல்லாம் இருந்து எதுக்குன்னு பார்த்துட்டீங்களோ?..” சுயஇரக்கத்தோடு முடித்தாள்.

“அப்படின்னா…நான்…என் டீம் எல்லோரும்…?”

மௌனம் மைவிழியிடம்.

“உன்னை யாரோ கிட்நாப் செய்ய ட்ரைபண்றாங்கன்னு புரிஞ்சிது…சாதாரண லோக்கல் கல்ப்ரிட்ஸ் மாதிரி தெரியலை…எதோ டெரரிஸ்ட் வொர்க்குனு படுது…சோ இப்ப உன்னை தடுத்துட்டாலும் அடுத்தும் ட்ரை பண்ணுவாங்க…இப்படின்னா அவங்கள பிடிச்சு நொங்கெடுக்கலாம்ல..”

கடைசி வார்த்தையை அவன் சொல்லிய விதத்தில் உதடு காய்ந்தது அவளுக்கு. அன்றும் அவள் தந்தை அலுவலகத்தில் அவன் கோபம் பார்த்திருக்கிறாள். இவன் ஒரு அறையில் வந்தவன் மயங்கி விழவில்லையா?

“ஒருத்தனை பிடிச்சாலும்  பல ப்ரச்சனைய தடுக்கலாமே….”

அவன் சொன்னதின் நியாயம் புரிய மௌனம்.

“அ..”அப்பாவுக்கு….எதுவும் ப்ரச்சனையா…?” அப்பாவ மிரட்டதான என்னை கிட்நாப்செய்ய ட்ரை செய்திருப்பாங்க…அப்பா ஸேஃபா இருக்கனுமே எனக்கு…”

இவளுக்கு நடந்த நிகழ்வின் காரணம் உறைக்க அப்பாவை நினைத்து தவிப்பு

“ம்ம்….அங்கிள எதுவும் ப்ராப்லம் இல்லாத இடத்துல வச்சாத்தான் அவருக்கு ப்ரச்சனை. ப்ரச்சனைய எப்படி சால்வ் செய்றதுன்னு யோசிக்கிறதுல மட்டும்தான் உங்கப்பாவுக்கு நிம்மதி… ப்ரச்சனையே இல்லனா…பாவம் அவர் என்ன செய்வாராம்?”

இதற்கு சிரிக்கவா முறைக்கவா?

இதற்குள் அவனது ஜிப்சி ஜீப் அந்த ரிசார்ட்டில் நுழைந்தது.

“இங்க….?”

“உள்ள வந்து பார்….”

ஏறத்தாழ முறைத்தாள்.

“என்னை நம்பலைனா…வீட்டுக்கு போகலாம்….” அவன் முகத்தில் எந்த உணச்சியும் இல்லைதான் ஆனால் அவன் முக வெறுமையை இவளால் தாங்க முடியவில்லையோ…? இறங்கிவிட்டாள்.

யாரையும் அவமதித்து பழக்கம் இல்லை என்பதாலா….இல்லை அவன் மனம் வருந்த கூடாது என்றா…எதனால் இப்போது இவனோடு இங்கே போகிறேன்..?  மனம் பல்லாங்குழி ஆடியது.

ரிஷப்ஷனில் “சுரஞ்சகன் ஐ பி எஸ்” என்ற இவன் வார்த்தையில் “டேபிள் அங்க சார்..” என்றபடி ஒரு கறுப்பு ப்ளேசர் அவர்களுக்கு முன் சென்று வழி காட்டியது. கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.

“நீங்க போங்க …நான் பார்த்துகிறேன்…”

இவன் வார்த்தையின் முடிவில் இவர்கள் இருவர் மட்டுமே.

சற்று தொலைவில் குதித்து விளையாடும் பிள்ளையாய் பெருங்கடல். சுயவிளையாட்டில் இன்பம் கொண்டாடிக்கொண்டு இருந்தது. பார்வையாளர் பௌர்ணமி நிலவு.

அதன் கரையில் அலங்கரிக்கப்பட்டிருந்த வெண்சதுர சிறு மேஜை கொத்து  லவண்டர் பூக்களுக்கும் இதய வடிவ சிறு கேக்கிற்கும் இடம்கொடுத்தபடி நின்றது.

சூழல் நறுமணம் ரம்யம். ஆனால் உயிர்வரை பெரும்பயம்.

இளகாதே இதயமே இவனிடம்.

கொன்று புதைக்கும் கருணைகூட இவனிடம் கிடையாது. கொல்லாமல் புதைத்துவிடுவான். மூச்சு திணறி தவித்து துடித்தது   மறந்துவிட்டதா?

மௌனமாக கேக்கை வெட்டியவள் அடுத்து என்ன செய்யவென தெரியாமல் விழித்தாள். அவனுக்கு கொடுக்க வேண்டுமா…? அவள் மனதில் வலியும் வாஞ்சையும் வஞ்சினமும் சாமர நர்த்தனம்.

கையிலெடுத்தபடி நின்றவள் கை பற்றி அவள் கை மூலமே அதை தன் வாயிலிட்டு கொண்டவன் கண்கள் அவள் கண்களில் அர்ப்பணம்.

பெண் உயிரில் மௌனம் ராஜரீகம். இதயம் துடிக்கவில்லையா என்ன?

ஹஅப்பி பர்த்டே மைவி…

கட்டி அணைத்து கண்ணீர்விட ஒரு மனம் விரும்ப, மற்றொன்று வெடித்து சிதற விருப்பம் தெரிவித்தது. இன்னொன்றோ அவன் கன்னத்தில் இரண்டு அறைவிட ஆசைப்பட எதையும் செயல்படுத்தாமல் இறுகினாள்.

“உன்ட்ட கொஞ்சம் பேசனும் மைவி….ஆனால் இன்றைக்கு வேண்டாம்…நாளைக்கு பேசலாம்.”

அவளை வீட்டில் விட்டு அவன் விடை பெற்றநேரம் அவள் தந்தை வந்திருந்தார்.

 

றுநாள் அவள் விழிக்கும்போதே எனோ ஒருவித கனவு. ஒருவித தவிப்பு உள்ளுணர்வில். ஜெபித்து முடிக்கவும் மொபைல் சிணுங்கியது. யார் இந்த நேரம்…? நினைத்துக் கொண்டே இவள் இணைப்பை ஏற்க

“உன் அப்பா உயிரோட வேணும்னா நான் சொல்றதை செய்” என்றது ஒரு கட்டைகுரல்.

“உன் அப்பா ஆஃபீஸ் ரூமுக்கு கிளம்பி போ…அடுத்து நான் என்ன செய்யனும்னு சொல்றேன்”

இணைப்பு துண்டிக்கப்பட இவள் அவசரமாக அவளது அப்பாவை தேடினாள். எங்கும் அவர் இல்லை. அவர் அறை தாறுமாறாய்கிடந்தது. அவசரமாக தன் அறைக்கு ஓடினாள். மொபைலை அங்கே தானேபோட்டுவிட்டு வந்தாள்.

ரஞ்சனுக்கு கால் பண்ணனும். மனதில் அது மட்டுமே எண்ணம். இவள் அறைக்குள் நுழையும்போதே மீண்டுமாய் மொபைல் சிணுங்கியது.

நடுங்கியபடி எடுத்தாள். எடுக்கும்போதே கவனித்தாள் அவள் மொபைலின் கீழ் ஒரு சீ டி. இவள் வீட்டிற்குள் இன்னும் அந்நியர்கள்??

அந்த சுரஞ்சகன்ட்ட சொல்றதுக்கு முன்ன இந்த சீ டிய பாரு அது புத்திசாலித்தனம்.

அவசரமாக அதைப் படகாட்சியாய் பார்த்தாள்.

அவள் தந்தையுடன் இன்னும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். ஒருவர் ஹைகோர்ட் ஜட்ஜ் மற்றவர் சி.பி ஐ ஆஃபீஸர். அந்த சி.பி ஐ ஆஃபீஸர் கொல்லப்படுவதோடு முடிந்தது அந்த சீடி.

இவள் அலற கூட நேரமின்றி மீண்டுமாய் மொபைல் அழைப்பு..

அவர்கள் சொல்வதை செய்ய ஆயத்தமாகிவிட்டாள் மைவிழி.

கையில் கிடைத்த சல்வாரை அணிந்துகொண்டு இவள் தலை தெறிக்க ஐஜி ஆஃபீஸ் சென்று அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள். கட்டை குரலினிடமிருந்து அழைப்பு.

அடுத்ததாக அவர்கள் சொன்ன தகவல்களுடன் இருந்த அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு இவள் கிளம்ப ஆயத்தமான நேரம் அடுத்த அறையில் சுரஞ்சகனின் சிரிப்பு சத்தம் கேட்டது.

மனம் அவனிடம் ஓடி விட துடித்தாலும் அவன் கண்படாமல் வெளியேறுவது உத்தமம் என தோன்ற விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

இவள் காரில் அவர்கள் சொன்ன இடம் சென்று அங்கிருந்த ஆம்னியில் ஏற, அது கிளம்பியது.

வாயில் துடித்தது இதயம். இவள் முழுதாய் திரும்புவாளா? அவளைப் பற்றிய எண்ணமே அப்பொழுதுதான் வந்தது.

என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவள்?

இவள் அப்பா இன்னும் உயிருடந்தான் இருக்கிறார் என்று என்ன நிச்சயம்?

அப்படியே இருந்தாலும், இந்த ஃபைல் அவர்கள் கை சேர்ந்ததும் இவளை யார் திருப்பி அனுபப்போவதாம்?

பயத்தில் பதற்றத்தில் இவள் எத்தகைய முட்டாள்தனம் செய்துவிட்டாள்?

ரஞ்சனிடம் சொல்லி இருந்தாலாவது எதாவது செய்திருப்பானே…?

ஆம்னியில் இவளுக்கு இருபுறமும் இருந்த தடியன்களைப் பார்த்தாள். இத்தனை சின்ன வயதில் இவர்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது..? இப்பொழுது இவள் என்ன செய்யவேண்டும்?

Next Page