காதலாம் பைங்கிளி 3(2)

நிவந்த் வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் தள்ளி இருந்தது மீரட் வரச் சொல்லி இருந்த இடம். அதற்காக கிளம்பி கிருபா தன் வீட்டைவிட்டு வெளியே வரும் போதே இவளது காருக்கு பக்கவாட்டில் மடக்கிவிடப்பட்ட சட்டையுடன் தட்டுப் படுகிறது அந்தக் கை.

நிமிர்ந்து ஒரு நொடி பார்த்துக் கொண்டாள். அவன்தான். மீரட். இவள் காருடனயே அவன் வரச் சொல்லி இருந்த இடம் வரைக்கும் பைக்கில் வந்தான் அவன்.

இவள் பாதுகாப்பிற்காகத்தான் இப்படி செய்கிறான் என இவளுக்கு புரியாமல் இல்லை.

அந்த குறிப்பிட்ட இடம் சென்று சேரவும், இவளது காரை ஒரு ஒதுக்கு புறமாக நிறுத்தச் சொன்னவன்,

இன்னும் காருக்குள் இருந்தவளிடம் ஒரு டைவிங் சூட்டைக் கொடுத்து, அவளது உடைக்கு மேலாகவே அணிந்து கொள்ளச் சொன்னான்.

இவள் அதை அணிந்து கொண்டு வெளியே வந்த போது அவனும் அதே கோலத்தில் இருந்தான்.

அது ஒரு ஆள் நடமாற்றம் இல்லாத சாலை. இரு புறமும் அங்கும் இங்குமாய் மரங்கள் இருந்தன. மற்றபடி வேறு எதுவும் இல்லை. சற்று தொலைவில் நூற்றுக் கணக்கான ஏக்கரை வளைத்துக் கொண்டு ஒரு கல்லூரி வளாகம் அமைதிக்குள் கிடந்தது.

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல இங்கு போக்கு வரத்து அதிகமாகும் போலும். அதற்கென சாலையை கடக்க அங்கு ஒரு இரும்பு க்ராசிங் ப்ரிட்ஜ் சாலையின் குறுக்காக  இருந்தது.

மீரட் அந்த ப்ரிட்ஜிக்கு சற்று முன்பாக பல பல இரும்பு ஆணிகள் முட்கள் போல் நிமிர்ந்து நிற்கும் வண்ணம் தைக்கப்பட்டிருந்த ரப்பர் பட்டைகள் மூன்று நான்கை போட்டு வைத்தவன் அடுத்து இவளையும் அழைத்துக் கொண்டு அந்த ப்ரிட்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் அந்த வழியாக வந்தது ஒரு தண்ணீர் லாரி. அது அந்த ஆணிப் பட்டைகள் மேலே ஏறி இறங்கி இஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் டயர் தேய சற்று தொலைவு பயணித்து இவர்கள் இருந்த ப்ரிட்ஜுக்கு நேர் கீழே வந்து நின்றது. பஞ்சர்.

இப்போது லாரி ட்ரைவர் இறங்கி அந்த பஞ்சரான டயரை மாற்றத் துவங்க,

இங்கு லாரிக்கு மேலாக இருந்த பிரிட்ஜிலிருந்து முதலில் லாரியில் மேல் சத்தமின்றி இறங்கினான் மீரட். அடுத்து அவனைப் பின் பற்றினாள் கிருபா.

அந்த டேங்கரின் மேல் மூன்று வட்ட வடிவ பெரிய துவாரங்கள் மூடிகளோடு இருக்க, அதில் நடுவில் இருந்த துவாரத்தின் மூடியை திறந்து வைத்த மீரட், கிருபாவை அதன் வழியாய் லாரியின் தண்ணீருக்குள் இறங்கிக் கொள்ள சொல்லிவிட்டு,

அடுத்த மூடியை திறந்து தானும் இறங்கிக் கொண்டான்.

துவாரத்தின் மூடி வரைக்குமே ஏறத்தாழ தண்ணீர் இருக்க, மீரட் சற்று முன் சொல்லி இருந்தபடி, தலையை மட்டும் தண்ணீருக்கு மேல் வைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் அந்த துவாரத்தின் இரு பக்கத்தையும் பிடித்தபடி தண்ணீருக்குள் மூழ்கிவிடாதபடி தொங்கினாள் கிருபா.

ஒரு வேளை கை பலமின்றி தண்ணீருக்குள் மூழ்கிவிட்டாலும் கூட உள்ளிருந்தே சுவாசிக்க அந்த டைவிங் சூட்டில் வகை இருந்தாலும், க்ருபா கேட்ட த்ரில் இப்போது சில் சில் என அவளது முதுகுத் தண்டில் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

இப்போது பஞ்சரான டயரை மாற்றி இருந்த லாரி ட்ரைவர் லாரியை செலுத்த தொடங்க… இன்னுமே கூடிக் கொண்டு வந்தது த்ரில். காலுக்குள் தண்ணீரை துளாவியபடி சமாளிக்க முயன்று கொண்டிருக்கிறாளே அவள்.

அடுத்த சில பல நிமிட பயணத்திற்குப் பின் அந்த தண்ணீர் லாரிக்குள் இருந்தபடி நிவந்தின் வீட்டு கேட்டுக்குள் எந்த தடையுமின்றி நுழைந்து கொண்டிருந்தனர் கிருபாவும் மீரட்டும்.

அது வழக்கமாக நிவந்த் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வரும் லாரி போலும்.

அது வரும் நேரம் மற்றும் பாதையை கவனித்து இப்படி திட்டமிட்டிருக்கிறான் மீரட்.

அடுத்தென்ன லாரி தோட்டத்தின் ஓரத்திலிருந்த சம்பில் தண்ணீரை பைப்பின் மூலம் ஊற்றத் தொடங்க,

டேங்கருக்குள் மீரட்டும் கிருபாவும் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த துவாரத்திலிருந்து வெளியே வந்தவர்கள், லாரிக்கு அருகிலேயே இருந்த கட்டிடத்தின் பால்கனிக்குள் எளிதாக ஏறி இருந்தனர்.

அதாவது இப்போது கிருபாவும் மீரட்டும் நிவந்தின் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

“இப்ப எந்த ரூம்ல ஜ்வெல் இருக்குதுன்னு கண்டு பிடிக்கணும்” கிருபா இப்போது கிசுகிசுக்க

“காவலை தாண்டி கொண்டு வந்து விடச் சொன்ன, அதை செய்துட்டேன், நான் திருடன் கிடையாது ஜ்வெல்ல எடுத்து தர” என அதே கிசு கிசு குரலில் மறுக்க,

“உங்க ஃபோன் நம்பர்ல இருந்து, எங்க வீட்டுகுள்ள வந்த விடியோல இருந்து எல்லாம் எங்க வீட்ல ரெக்கார்ட் ஆகி இருக்குதுன்னு சாருக்கு மறந்துட்டுப் போல” மீண்டுமாக மிரட்டினாள் கிருபா.

இப்போது இவளை ஒரு பார்வை பார்த்தவன்… என்ன பார்வையோ அது? “நீ இங்கயே வெயிட் செய்… வர்றேன்” என்றுவிட்டு உள்ளே போனான்.

அடுத்து இரண்டு நிமிடம் காத்திருந்தவள், அவன் உள்ளே சென்றுவிட்டான் என உறுதியானதும்,

ப்ளாஸ்டிக் கவரில் பத்திரமாய் சுற்றி, டைவிங் சூட்டிற்குள் வைத்திருந்த தன் மொபைலை எடுத்த கிருபா,

ஒரு எண்ணை அழைத்தாள்.

“நிவந்த் சார் நான் சொன்னனே அந்த அவன் உள்ள வந்துட்டான்… நானும் இங்க உங்க வீட்லதான் ஏதோ ஒரு பால்கனில இருக்கேன்… வாட்டர் லாரி வந்திருக்கே இப்போ, அது வழியாதான் கூட்டிட்டு வந்தான். அந்த லாரி நிக்ற இடத்துக்கு பக்கத்து ரூம்ல நான் இருக்கேன்” என்றாள்.

யெஸ் இது எல்லாமே இந்த மீரட்டை வகையாய் மாட்ட கிருபா வகுத்த திட்டம்.

தொடரும்

ப்ரெண்ட்ஸ் முழுக்கவும் ஆக் ஷன் எப்பிதான்… இருந்தாலும் கதை டர்ன் ஆகிற விதம் இங்க ஓரளவு புரியும்னு நம்புறேன்… கிருபா ஏன் இப்படி செய்கிறாள் என்பதற்கான விளக்கம் அடுத்த எப்பில வந்துடும்…அதற்கு பிறகு கதை ரொமன்ஃஸ் சைடில் பயணிக்கும் என நம்புவோம்.

 

 

Advertisements

13 comments

  1. Wow Semma twist… Avan plan panni kuptu poga solli Ipa plan potu Meerut aa sikkavaikarala.. Avan Vera etho plan la tha vanthu irupan.. Waiting for next epi

Leave a Reply