காதலாம் பைங்கிளி 2

கிருபா வீட்டின் வரவேற்பறை டூப்ளக்ஸ் மாடலில் அமைந்திருக்கிறது. கல்யாண மண்டபங்களில் போல் தரைதளத்தில் நடைபெறுவதை முதல் தளத்திலிருந்தும் பாற்கும் படியாய் ஒரு ப வடிவ  பால்கனி அமைப்பும் அந்த வீட்டின் முதல் தளத்தில் இருக்கிறது.

அந்த பால்கனியில்தான் கிருபா நின்று கொண்டிருக்கிறாள். (ஹம் ஆப்கே ஹை கோன்ல…. சல்மான்கான் சாண்ட்லியர பிடிச்சு தொங்குவாரே…அந்த போல இடம்னு யோசிச்சுகோங்க மக்களே)

இன்று இவளது அக்கா ஷீபாவின் மகள் அபிகயல் @ அபிக்குட்டியின் பிறந்தநாள். அக்காவின் வீடு ஆவடியில் இருக்கிறதுதான். அங்குதான் ஷீபா தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதும்.

ஆனால் ISROவில் பணி புரியும் ஷீபாவுக்கு சில மாத காலம் ஒரு ஆராய்ச்சிக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் தங்கி இருக்கும் சூழ்நிலை.

ஷீபாவின் கணவர் செல்வினும் பகல் நேரங்களில் தன் அலுவலகத்திற்கு சென்றாக வேண்டுமே! ஆக  நான்கு வயது அபி இப்பொழுது கிருபாவின் வீட்டில்தான் இருக்கிறாள். இரவில் அத்தான் செல்வினுமே  குழந்தையுடன் தங்க இங்கு வந்துவிடுவார் என்பதால் அபியின் பிறந்த நாளை இங்கேயே கிருபாவின் வீட்டில் கொண்டாடுவது என முடிவாகி இருக்கிறது. மொத்த கொண்டாட்டத்துக்கும் முழுப் பொறுப்பு இந்த கிருபா சித்திதான்.

ஷீபா இல்லாத குறையை குழந்தை உணர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவும், இய்றகையிலேயே இப்படி விழாக்கள் ஏற்பாடு செய்வதில் வெகு ஈடுபாடு உண்டு என்பதாலும் கிருபா படு மும்முரமாக இந்த விழா ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

உச்சி ரூஃபில் தொங்கும் சாண்ட்லியரை ஒரு ஒட்டடைக் குச்சியின் மூலம் இவள் துடைக்க முயன்று கொண்டிருக்க, அப்பொழுதுதான் சிணுங்குகிறது இவளது மொபைல். வேலையினிடையே எடுத்து அதை காதில் வைத்துக் கொண்டாள் கிருபா.

“ஹாலோ ஆன்டி” என்ற மிஷாவின் குரல் இதற்குள் வெகு பரிட்சயம் இவளுக்கு.

எப்படியும் தினம் ஓரிருமுறை கூப்பிட்டுவிடுவாளே குழந்தை. அதான் சேம் பின்ச் ஃப்ரெண்ட் ஆகியாச்சே இப்போ!

குழந்தையோடு பேசுவதென்பது எப்போதுமே இவளுக்கு பிடித்த விஷயம் என்பதால் படு உற்சாகமாகவே அந்த உரையாடல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறாள் கிருபாவும்.

அப்படித்தான் இப்போதும் “ஹாய் புஜ்ஜீஸ்” என ஏக சந்தோஷ தொனியில் இவள் இணைப்பை ஏற்க,

குழந்தையோ “நான் உங்க வீட்டு கேட்ல நிக்றேன் ஆன்டி… செக்யூரிடி அங்கிள உள்ளவிடச் சொல்லுங்க ஆன்டி… உங்களுக்கும் ப்ரியாணிக்கும் நான் surprise காமிக்கனும்” என்றாள்.

உண்மையில் திகைத்துப் போனாள் கிருபா. காதில் விழுவதை ஒரு கணம் நம்ப கூட முடியாத நிலை அவளுக்கு. இவளைத் தேடி குழந்தை இங்கு வரை வர ப்ரியப்பட்டு இருக்கலாம்தான்… ஆனால் வீட்டில் பெரியவர்கள் இதற்கு எப்படி அனுமதித்தார்கள்? ஒருவேளை குழந்தை ரொம்பவும் பிடிவாதம் பிடித்திருப்பாளோ? சே! வீடியோ கேம் விளையாட நானே என்கரேஜ் செய்து இப்படி ஆக்கிட்டு இருக்கனோ?

இருந்தாலும் அதையெல்லாம் யோசிப்பதைவிட வாசலில் காத்துக் கொண்டிருக்கும் குழந்தையை உள்ளேவிடச் சொல்வது இப்போது முக்கியமானதாகப் பட,

“செக்யூரிட்டி அங்கிள்ட்ட நான் பேசுறேன் புஜ்ஜீஸ்” என இணைப்பை துண்டித்தவள் அடுத்து செக்யூரிட்டியை இன்டர்காமில் அழைத்தாள்.

அதே நேரம் மனதில் அப்பாவின் ‘அலார்ம்ம ஆஃப் செய்ய அப்பா அலவ் செய்ய மாட்டேன்’ மனதிலாட குழந்தையை உள்ளே அனுமதிக்கும் படி செக்யூரிட்டிக்கு சொன்னவள், உடன் வரும் நபரை முழு பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்தாள்.

இவள் பேசி முடித்து முதல் தளத்திலிருந்து படி இறங்கிக் கொண்டிருக்கும் போதே பார்வையில் படுகிறான் குழந்தை கை பிடித்தபடி உள்ளே நுழையும் மீரட். சின்னதே சின்னதாய் ஒரு சலனம் இவளுள் ‘ஒருவேள இவன் என்னப் பார்க்க வர்றதுக்கு குழந்தைய யூஸ் செய்றானோ??!!’

அவளது அத்தனை ஆன்டெனாக்களும் அட்டென்ஷனுக்கு வந்தன.

அவன் நேருக்கு நேராக பார்வைக்கு படவும் அவன் கண்களை கூராக ஆராய்கிறாள் இவள்.

காதல் கத்தரிக்காய் வழிதல் ஜொள்ளு இந்த ரேஞ்சில் ஏதாவது அவனது கண்ணில் தெரிகிறதா என ஜல்லடையாய் சலித்தாள்.

அதன் துளிச் சாயல் கூட ஏதுமில்லை அவனிடம். ஒரு நட்புப் புன்னகை மட்டுமே சிந்தினான். அதில் உண்மையும் இருந்தது.

“ஹாய்!” என்றபடி உள்ளே நுழைந்தவன் முதல் முதலாக வீட்டுக்கு வருபவர்களின் வழக்கம் போல் வெகு சாதாரணமாக வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினான்.

இவளைக் காணவும் மீரட்டின் கையை விட்டுவிட்டு இவளை நோக்கி உற்சாகமாக ஓடி வந்த மிஷாவை சென்று தூக்கிக் கொண்டே “வாங்க” என ஒற்றை வார்த்தையால் அவனை வரவேற்றாள் கிருபா.

அதே நொடி இயல்பாய் பார்வையை சுழற்றிய அவனது முகமோ தீவிரப்பட “ஹேய்” என்றபடி இவளைக் கடந்து மாடி நோக்கி ஓடத் துவங்கினான்.

அனிச்சையாய் மாடியை நோக்கிப் பதறிப் போய் பார்த்தாள் இவள்.

சற்று முன்பு சாண்ட்லியரை துடைக்க முயன்று கொண்டிருந்தாளே இவள்…

இவளும் வீட்டு வேலை செய்யும் வாணியும் சேர்ந்துதான் அதை சுத்தம் செய்ய முயன்று கொண்டிருந்ததே!

இவள் ஃபோன் பேசப் போகவும், ஒரு உயர ஸ்டூலை பால்கனி கைப்பிடி ஓரமாக தூக்கி வந்து போட்டு அதன் மீது ஏறி நின்று வாணி இப்போது துடைக்க முயல,

அத்தனை உயரத்தில் நிற்கவும் வாணிக்கு நடுங்கிவிட்டது போலும்… சற்றாய் தடுமாறி… கண்ணோடு நெற்றி மீது கை வைத்து தன்னை சமாளிக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.

அதில் அந்த ஸ்டூல் வேறு சற்றாய் ஆடத்துவங்கி இருந்தது. சரிந்து விழுந்தால் முதல் தளத்திலிருந்து தரைத் தளத்தில்தான் வந்து விழ வேண்டி இருக்கும் அவள்.

அலரக் கூட வரவில்லை கிருபாவுக்கு, இங்கிருந்து ஓடிச் சென்றெல்லாம் யாரும் ஆடிக் கொண்டிருக்கும் ஸ்டூல் சரியும் முன்னம் வாணியை பிடித்துவிட முடியாது என்பதால் மொத்தமாய் இவள் ஸ்தம்பித்துப் போய் நிற்க,

அதற்குள் அந்த வாணியோ ஒருவாறு சுதாரித்து கண்களை இறுக மூடியபடியே ஸ்டூல் மீதே ஒருவிதமாய் உட்கார்ந்து கொண்டாள். இறங்கும் அளவுக்கு தன்னைத்தானே சமனிலை படுத்த முடியவில்லை போலும் அவளுக்கு.

இதற்குள் அவளருகில் ஓடி இருந்த மீரட்டோ “அக்கா முதல்ல கீழ இறங்குங்க நீங்க” என்றபடி வாணியின் கைபற்றி பத்திரமாக இறங்கவும் உதவினான்.

கிருபா அவன் மீது மரியாதையையும் தாண்டிய அபிமானத்தையும், அபிமானத்தையும் மீறிய மரியாதையையும் இவை எல்லாத்தையும் விஞ்சி மிஞ்சிய எதோ ஒன்றையும்  கண்டாடவும் கொண்டாடவும் துவங்கிய முதற் புள்ளி இதுவாயிருக்குமாயிருக்கும்.

வேலைக்காரிகளை நீங்க போங்க என மரியாதையுடன் பேசுபவர்களை பார்ப்பதே ஒருவகையில் அரிது என்றால், இவளைப் போல அக்கா முறையெல்லாம் வைத்து மீரட்டும் பேசுவது எதோ வகையில் இவளை வெகுவாகவே ஈர்த்தது.

இதற்குள் “முதல்ல உட்காருங்க நீங்க” என அருகிலிருந்த சேர் ஒன்றை வாணி அமர வாகாக இழுத்துப் போட்ட மீரட்டோ… சுற்று முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்த ஒரு ஜக்கிலிருந்து தண்ணீரும் எடுத்து வந்து நீட்டி இருந்தான்.

ரகசியமின்றியே அதை ரசித்தாள் இவள்.

சற்றாய் வாணி இயல்புக்கு வரவும், “நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்கக்கா” என வாணியை அனுப்பி வைத்த கிருபா,

“மிஷா புஜ்லீஸ் ஃபர்ஸ்ட் டைம் வந்துருக்கீங்க… என்ன சாப்டுறீங்க எங்க வீட்ல?” என கேட்டபடி மீண்டுமாய் தரைத் தளத்தை நோக்கி நடக்கத் துவங்க,

வீடிருந்த கோலத்தை கண்டபடி பின் வந்த மீரட்டோ “எதுவும் ஃபங்க்ஷனா வீட்ல? சாரி இந்நேரம் வந்து தொந்தரவு செய்துட்டமோ?” என அக்கறைப்பட்டான்.  தரமான தர்மசங்கடம் அவன் குரலில்.

“நோ… நோ ப்ராப்ளம், வீட்ல ஒரு பார்ட்டி… எனிவே அது ஈவ்னிங்தான்…இன்னும் டைம் இருக்கே… அதுக்குள்ள அரேஞ்ச்மென்ட் செய்து முடிச்சுடலாம்… இப்ப மிஷா பேபிய பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்தான்” எனத்தான் பதில் சொல்ல வருகிறது இவளுக்கு.

என்னதான் மிஷாவை கிருபாவுக்கு பிடித்திருந்தாலும் இந்த சந்திப்புகளை இனியும் தொடரும் வண்ணம் ஊக்கப் படுத்திவிடக் கூடாது என எண்ணி இருந்த கிருபாவால், அதை வார்த்தையில் சொல்ல முடியவில்லை.

எதுவும் பிடிக்கவில்லை அல்லது வேண்டாம் என்றால் மென்மையாக ஆனால் அழுத்தமாக முகத்திற்கு நேராகவே மறுத்துவிடுபவள்தான் கிருபா. ஆனால் இன்று அது அவள் வசப்படவில்லை.

என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி அவன், விருந்தோம்பலுக்கான கண்ணியத்தை இவள் காட்டியே ஆக வேண்டும்… அதனால்தான் இப்படி போலும் என என்னவோ சமாதானம் கண்டுபிடித்து தன்னை சமாளித்தாள்.

இதற்குள் பேசியபடியே மாடியிலிருந்து தரை தள வரவேற்பறைக்கு வந்திருந்ததால், சோஃபாவைக் காட்டி “ப்ளீஸ் உட்காருங்க” என மீரட்டை உபசரித்துவிட்டு,

“டூ மினிட்ஸ்” என்றபடி கையிலிருந்த மிஷாவோடு கிட்சனை நோக்கி திரும்பினாள்.

“மிஷாக் குட்டி இங்க சித்தப்பா கூட இருந்து விளையாடுவீங்களாம்” என இடையிட்டான் அவன்.

மிஷாவை அவனது கண்பார்வையை தாண்டி இவள் கொண்டு செல்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பது சட்டென புரிகின்றது இவளுக்கு.

அடுத்த வீட்டில் தன் அக்கா பெண் அபியையும் இவள் இப்படி கண்பார்வையை தாண்டி அனுப்பிவிட மாட்டாள்தான். அந்த வகையில் மீரட்டின் செயல் புரிந்தாலும், ஒரு வகையில் அது பிடித்தாலும், கொஞ்சம் சுருக் என்கிறது இவளுக்கு.

இவளையல்லவா நம்பமாட்டேன் என்கிறான்! அதுவும் வீடு தேடி குழந்தையை கூட்டிக் கொண்டு வேறு வந்துவிட்டு!

“சண்டேன்றதால இன்னைக்கு வீட்ல எல்லா மெய்ட்ஸும், சர்வென்ட்ஸும் லீவு. நானும் வாணிக்காவும்தான் எல்லாம் செய்யனும்… பார்த்தீங்கல்ல அவங்க ரெஸ்ட் எடுக்கப் போனத…அதனால நான் போய் மிஷாக் குட்டிக்கும் உங்களுக்கும் வெல்லப்பால் கலந்து எடுத்துட்டு வரலாம்னு நினச்சேன்… உங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தா கூட கொடுப்பீங்கதான?!” சின்னக் குரலில் சற்றாய் பொரிந்தாள்.

“வீட்ல பார்டி வச்சுகிட்டு எல்லோருக்கும் லீவா?” அடுத்தோ இப்படி ஒரு கேள்வி ஆச்சர்ய தொக்கலோடு அவனிடமிருந்து வந்தது.

இவள் கோபத்தை அவன் கண்டு கொள்ளவில்லையா? என அதற்கும் இவளுக்கு சின வாசம்.

“அடுத்தவங்கள நாம எப்படி நடத்துறமோ அப்படித்தான் கடவுளும் நம்ம நடத்துவார்… வாரம் ஒருநாளாவது வேலை செய்றவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்தா தான் நமக்கும் ரெஸ்ட் கிடைக்கும்” இன்னும் சிடுசிடுப்பு குறையாமலே இவள் பேச…

பொரிந்து கொண்டிருந்த இவள் முகத்தை ஒருவிதமாய் பார்த்திருந்தான் அவன். ரசிக்கிறான் என சொல்லிவிடலாம்.

ஆனால் அது இந்த ரோட்டோர ரோமியோ வகை ரசனை இல்லை… பெண்மையை சுணங்கச் செய்யும் பார்வையும் இல்லை அது. இவள் குழந்தைகளைப் பார்ப்பாளே அந்த வகைப் பார்வை.

‘என்னப் பார்த்தா இவனுக்கு குழந்தை போலவா தெரியுது?’ என அதற்கும் இவளுக்குள் முறுக்கிக் கொண்டாலும், அடி மனதில் சந்தோஷத் திரவம் ஒன்று சதுர் வீச்சாய் சுரந்து சாயம் தோய்க்கிறதே உயிரின் ஒவ்வொரு புறமும்! மென்மையின் வர்ணம் பெண்மையின் உள்ளே!

இவள் முறுக்குவது அவனுக்கும் புரிந்தது போலும், சட்டென இயல்பாக்கிக் கொண்டான் தன் பார்வையை.

“மிஷாவ…” அவன் என்ன சொல்ல வந்தானோ, அதற்குள் இரண்டு கோப்பைகளில் வெல்லப் பால் எடுத்துக் கொண்டு வாணியே வந்துவிட்டாள்.

இவன் பேசியது அவளுக்கும் கேட்டிருக்கும்தானே!

“உங்கள ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்கா” என கண்டனம் சொன்னாலும் வாணி கொண்டு வந்திருந்த பால் கோப்பைகளை எடுத்து மிஷாவுக்கும் மீரட்டுக்கும் கொடுத்தாள் கிருபா.

மிஷா இப்போது ஏதோ ஏலியனைக் கண்டது போல் அந்த பால்க் கோப்பையை படித்துப் படித்துப் பார்க்க,

முதலில் தான் பருகி முடித்த மீரட், அடுத்து குழந்தையிடம் “கோல்ட் காஃபி போல, இது ஹாட் ஐஸ்க்ரீம் மன்ச்கின்” என பாலுக்கான ப்ரோமைவை ஆரம்பித்தான்.

அதே நேரம் அதுவரையும் தூங்கிக் கொண்டிருந்த அபிக் குட்டி இப்போது விழித்து எழுந்து வந்தவள், கிருபாவின் கைகளில் ஏறிக் கொண்டு, அவளது தோளில் தலை சாய்த்துக் கொண்டு, அங்கிருந்தபடியே வந்திருக்கும் விருந்தாளிகளை நோட்டமிட,

வெல்லத்தையும் பாலையும் இரண்டு ஊராக்கி, அதிலிருக்கும் புரோட்டீனையும் சுகரையும் ஃப்ரெண்ட்ஸாக்கி அடுத்து மீரட் கதை சொல்லி முடிக்கும் போது மிஷாவும் அபியும் அவர்களுக்கான பாலை குடித்து முடித்து, அவனது மடியில் அமர்ந்து கதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆமாம் அவன்தான் கையில் கிடைத்த குட்டி குட்டி ஜாமான்கள் மூலம் ஆக்க்ஷன் மூவி ரேஞ்சில் கதை சொல்லிக் கொண்டிருந்தானே!

உண்மையில் கிருபாவும் கூட எதிரில் அமர்ந்து அந்த கதையில்தான் காணாமல் போயிருந்தாள். அதுமட்டுமா அந்தக்கதைக்கு பார்ட் 2 பார்ட் 3 எல்லாம் கூட இப்பவே இவளுக்குள் ரெடி.

அதோடு இந்த மீரட்மேல் இவளுக்கு இருந்த எக்கசக்க ஒதுக்கமும் இவளுக்குள் கொஞ்சம் குறைந்திருந்தது. அதை அவளுமே உணர்ந்தாள்.

குழந்தைகளிடம் அவன் பழகும் பாங்கை பார்க்கவும் மிஷாக் குட்டி ஆசைப்பட்டதுக்காக மட்டும்தான் மிஷாவை இங்கு கூட்டி வந்திருப்பான் என இவளுக்கு தோன்றத் தொடங்கியது காரணமாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

அதே நேரம் அவன் மீது தனக்கு வந்திருக்கும் மரியாதை மற்றும் சற்றான சிலாகிப்பை அவள் கவனமாய் அசட்டை செய்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements