காதலாம் பைங்கிளி 1

முன் நிகழ்வு:

ஷாப்பிங் மாலின் அந்த கடையிலிருந்து வெளிப்பட்ட கிருபா தன் எதிரில் மித வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்த எஸ்கலேட்டரில் இரண்டு இரண்டு படியாய் தாவித் தாவி இறங்கத் தொடங்கினாள். அவள் நடையில் காணப்பட்ட ஒரு வகை துள்ளலும் அவள் முகத்தின் ஒவ்வொரு செல்லிலும் ஒளிந்திருந்த புன்னகையும் அவளது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஓசையின்றி பறை சாற்றியது.

அவள் அப்படித்தான். சந்தோஷம் கொள்ளவோ உற்சாகப் படவோ அவளுக்கு தனிவகை காரணம் தேவையில்லை. ‘எப்போதும் சந்தோஷமாயிருங்கள்’ ரகம்.

சில படிகள் கடந்திருப்பாள்… இப்போது இவள் பின் புறமாக கேட்கிறது அந்தக் குழந்தையின் குரல்… “ஆன்டி போல நானும்…”

அதன் முழு அர்த்தத்தையும் இவள் புரிந்து முடிக்கும் முன்னும் உள்ளுணர்வு உந்த இவள் அனிச்சையாய் பின்னால் திரும்பினால்…

ஒரு நாலு வயது மதிக்கத்தக்க குழந்தை படபடவென படிகளில் பாய்ச்சலாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள். எந்த பேலன்சும் இல்லாமல் எங்கு போய் விழுவாளோ என்ற வகையில் அப்படி ஒரு ஓட்டம் பிள்ளையிடம்.

“மிஷாஆ….” பின்னால் யாரோ குழந்தைக்காக அதிரும் சத்தம். எதையும் சட்டை செய்யாது இதற்குள் தன்னருகில் வந்திருந்த குழந்தையை அன்னிச்சை செயலாய் தாவிப் பிடித்திருந்தாள் கிருபா.

இவளென்ன ஸ்பைடர் மேனா… பிடித்த வேகத்தில் தூக்கிக் கொண்டு பறக்க…

பிடித்து விட்டாளே தவிர… ஓடும் எஸ்கலேட்டரில் கொஞ்சமும் பேலன்ஸ் செய்ய முடியாமல் இவள் விழத் தொடங்க… குழந்தையோடு சேர்ந்து இவளுமே அதே வேகத்தில் உருண்டிருப்பாளாய் இருக்கும்… அதற்குள் ஒரு வலுவான கரம் குழந்தையோடு சேர்த்து இவளை வளைத்திருந்தது.

அழுத்தமாய் சற்றும் அசைய முடியாத விதமாய் இவளை பிடித்திருந்தவன் “இட்ஸ் ஓகே… ரிலாக்‌ஸ்” என சொல்வது காதில் விழவும்தான் மெல்ல கண் திறந்தாள் கிருபா.

இப்போது இவள் கண்ணில் பட்டது மெல்லிய இளஞ்சிவப்பு படர்ந்திருந்த அவனது அழுத்தமான உதடுகளும் இரண்டு மூன்று நாள் வயதுடைய தாடி மீசையும்தான்… விழிகளை உயர்த்தி மொத்த அவனையும் பார்த்தாள். வெல் க்ரூம்ட் என்பார்களே அது போல வாரப் பட்டிருந்த கற்றை முடியும் அவனது பார்வையும் நாசியும் இவனை எங்கோ அவளுக்கு தெரியும் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது.

இவள் பார்வைப் படவும் சின்னதே சின்னதாய் அவன் புன்னகைக்க… நட்புதான் அதிலிருந்தது என்றாலும் அவசர அவசரமாக அவன் பார்வையை தவிர்த்தாள் இவள்.

இப்போது காணக் கிடைத்த அவனது கான்க்ரீட் கையும், கை முட்டி வரை மடக்கி விடப் பட்டிருந்த சட்டையும் இவனை எங்கேயோ இவள் சர்வ நிச்சயமாய் பார்த்திருக்கிறாள் என்ற நம்பிக்கையை தந்தன. ‘எங்கே??!!’

அதே நொடிதான் அவன் தன்னை அணைத்தது போல் பிடித்திருக்கிறான் என்பதும் உறைக்க அனிச்சையாய் இவள் விலக முயல… “ஹேய்”  என்றபடி இவளை இன்னுமாய் இறுகப் பற்றினான் அவன்.

பிறகுதான் இவளுக்கு தான் நின்று கொண்டிருக்கும் நிலையே கவனத்தில் வருகிறது. இதற்குள் எஸ்க்கலேட்டர் தரையை அடைய மூவருமாக தரைக்கு வந்துவிட்டார்கள்.

மார்போடு குழந்தையை பற்றியிருந்த இவளை விட்டு விலகி நின்று கொண்டான் அவன்.

“சா..சாரி” என மெல்ல சொல்லி வைத்தாள் கிருபா. என்ன இருந்தாலும் இவ குதிச்சு குதிச்சு இறங்கப் போய்தான குழந்தைக்கு அப்படி ஆசை வந்திருக்கு… அதுக்குத்தான் இந்த சாரி.

“நான்தான் இன்னும் கவனமா இருந்திருக்கனும்…சட்டுனு மிஷா கைய உருவுவான்னு எதிர்பார்க்கல நான்”  மன்னிப்பு போல் கேட்டவன்

“ஐ’ம் மீரட்” எனத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

‘என்னது மீரட்டா… அது  UP ல உள்ள ஒரு ஊராச்சே… இப்படி கூட பேர் வைப்பாங்களா… இல்ல இவன் எதுவும் கிண்டல் பண்றானா?’ இப்படி எல்லாம் கிருபா யோசித்து முடிக்கும்முன்…

“ஐ’ம் மிஷா” என குறுக்கே புகுந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டது இவள் கையிலிருந்து இறங்கி இருந்த சின்ன வாண்டு. இவளை நோக்கி கை குலுக்கவென கையையும் நீட்டியது அது.

“ஹாய் மிஷா கேர்ள்… நைஸ் மீட்டிங் யூ… உன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… சேம் டைம் கேர் ஃபுல்லாவும் இருக்கனும் ஸ்வீட்டி பை…” என குழந்தைக்கு மட்டும் பதில் கொடுத்த கிருபா…

அந்த மீரட்டிடம் விடை பெறும் வண்ணமாய் சின்னதாய் தலையை மட்டும் அசைத்து விட்டு திரும்பி நடக்க துவங்கினாள்.

நடந்து செல்லும் கிருபாவின் கூச்சி ஜீன்ஸ்.. அவள் தன் டீஷர்ட் மீது அணிந்திருந்த ஷ்ரக்… அவள் வலத் தோளில் ஆடிய ட்ரென்டி back bag… இவைகள் மீது பார்வையை செலுத்திக் கொண்டிருந்த மீரட்டின் முகத்திலிருந்த புன்னகை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

கண்ணோடு முகமுமே சுருங்க அவளை தீவிரமாய் வெறித்தவன்

“முதல்ல இந்த மீனப் பிடிக்கனும்… ” என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அத்தியாயம் 1

ந்த இரவு நேரத்திலும் ஜிகு ஜிகுவென ஒளிவீசிக் கொண்டிருந்தாள் கிருபா. பின்ன உடம்ப சுத்தி இப்படி பளபளன்னு ஏதோ கிஃப்ட் ராப்பர் போல சுத்தி இருக்கிறாளே! உடம்பின் முன்னும் பின்னும் உடலளவு அகல மர பலகைகளை வைத்து கட்டி அதன் மீது இந்த கிஃப்ட் ராப்பர் போன்ற எதோ வகை காகிகதமும் கட்டி என மொத்த அவளே பார்சல் செய்யப்பட்ட பரிசுப் பொருள் போலத்தான் நின்று கொண்டிருந்தாள்.

அவளது வீட்டின் உயரமான காம்பவ்ண்ட் சுவருக்கு சற்று அருகில் இருந்த அந்த மரத்தில்  சாய்த்து வைத்திருந்த ஏணியின் மீது ஏறி… ஏற்கனவே மர உச்சியிலிருந்து கட்டி தொங்கவிடப் பட்டிருந்த கயிறை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தார் அவளது தந்தை சத்யமூர்த்தி.  மகள் நின்ற கோலத்தைப் பார்த்தவர் “இன்னைக்குமா?” எனக் கேட்டவர் “வாணிமா” என உள்நோக்கி குரல் கொடுத்தார்.

“இன்னைக்குமா இல்ல டாடி… இன்னைக்குத்தான்… பாருங்க இன்னைக்கு கண்டிப்பா நம்ம காம்பவ்ண்ட் சுவர எப்படியும் சென்சார் அலார்ம் அடிக்காம தாண்டிடுவேன்… “ அவள் சொல்லிக் கொண்டிருக்க,

இதற்குள் இவளது அக்கா மகள் அபியை பார்த்துக் கொள்வதெற்கென வேலைக்கு இருக்கும் அந்த வாணி இங்கு வந்திருந்தாள்.

அவளை நோக்கி “வாணிமா இந்த கிருபா பொண்ணு இன்னைக்கும் அலார்ம் அடிச்சு அபிய எழுப்பிவிடப் போறாளாம்… போய் நீ அம்மாட்ட இதை  சொல்லிட்டு, அபி ரூம்ல கதவ பூட்டிட்டு இருந்துக்கோ… குழந்தை தூக்கத்தில் விழிச்சுடக் கூடாது” எனச் சொல்லி சத்யமூர்த்தி அனுப்பி வைக்க,

கிருபா காதில் புகை.

“க்ரேட் இன்சல்ட் டாடி… பாருங்க இன்னைக்கு நான் இதுல ஜெயிச்சு உங்க எல்லோரையும் மூக்கு மேல விரலை வைக்க  வைக்கிறேன்…” மங்கம்மா சபதம் ரேஞ்சில் கிருபாம்மா சபதம் ஒன்றை செய்து கொண்டு கிருபா இப்போது ஏணியில் ஏறத் துவங்கினாள்.

“உனக்கென்ன மூக்கு மேலதான விரல வைக்கனும்… பாரு டாடி வச்சுட்டேன்… மிஷன் சக்சஸ்ஃபுல்… ஆப்பரேஷன் அபார்டட்… நீ இறங்கி வா தூங்கப் போகலாம்…” அப்பா சத்யமூர்த்தி சிரிக்காமல் நக்கலடித்தார் இப்போது.

கண் சுருக்கி முறைத்தாள் கிருபா… “ஆல் திஸ் கிண்டல்ஸ் அன்ட் கேலீஸ் வில் என்ட் டுடே… நான் கூகிளே திணர்ற அளவுக்கு அவ்ளவு விஷயம் தேடிப் பிடிச்சு படிச்சு இன்னைக்கு ரெடியாகி இருக்கேன் டாடி… அந்த அமெரிக்ககாரன் கண்டுபிடிச்ச அலார்ம்ம விட இந்த கிருபா அறிவாளின்னு இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்த உலகத்துக்கே தெரிஞ்சுடும்…” சொல்லிக் கொண்டே ஏணியின் உச்சியை அடைந்திருந்தவள், அதற்கும் உயரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிறை இரு கைகளாலும் பிடித்து இழுத்துப் பார்த்துக் கொண்டாள்.

அடுத்த நிமிஷம் கிருபாவின் அம்மா ஜெசிந்தா அங்கு வந்து சேர்ந்த போது… ஸ்வைங் என அந்த கயிறைப் பிடித்து தொங்கியபடி காம்பவ்ண்ட் சுவரின் மேலாக பறந்தாள் கிருபா.

க்யீன் க்யீன் க்யீன் க்யீன்… அலரத் தொடங்கியது அலார்ம்.

“போங்க டாடி… இதெல்லாம் தப்பு…”  ஊஞ்சலாடிய கயிற்றிலிருந்து புஸ் புஸ் என்ற முகத்தோடு மரத்திலிருந்த ஏணியில் கால் ஊன்றினாள் கிருபா.

“ரெண்டே ரெண்டு நிமிஷம்தான் அலார்மை ஆஃப் செய்து வைக்க சொன்னேன் செக்யூரிட்டிட… அதைப் போய் ஆன் செய்ய சொல்லி இருக்கீங்க நீங்க…” என்ன நடந்திருக்கும் என புரிந்து அவள் புலம்ப தொடங்க,

இன்னுமே உதடு தாண்டா புன்னகையோடு நின்றிருந்தார் சத்யமூர்த்தி. கிருபாவின் அம்மாவோ வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார்.

“கழுத இதான் நீ கூகிள்ள கண்டு பிடிச்ச டெக்னிக்கா…?” அம்மாதான்.

“போங்க மம்மி… எல்லாத்தையும் படிச்சுட்டேன்… ஆன் செய்துருக்கப்ப சத்தம் வராம தாண்ட வழியே இல்லையாம்…  அதான் ஆஃப் செய்றதுதான் பெஸ்ட் வழின்னு இப்படி ப்ளான் செய்தேன்… அதுவும் எப்படியும் ஒரு டெக்னிக்தானே… அதைப் போய் கெடுத்துட்டாங்க டாடி”  உர்ர்ர் என்ற முகத்தோடே தரைக்கு வந்து சேர்ந்தாள் மகள்.

“ஒரு சின்னப் பொண்ணு, அதுவும் முதல் குழந்தைக்குப் பிறகு எட்டு வருஷம் தவம் இருந்து பிறந்த உங்க ரெண்டாவது பொண்ணு… இவ்ளவா எஃபெர்ட் எடுக்காளே… ஜெயிச்சுட்டு போட்டும்னு விடாம… பாருங்க மம்மி இந்த டாடி ஓவர் ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க” கிருபா இன்னும் சலித்துக் கொள்ள,

“ஆமா உன் அப்பாதான் உலகத்திலேயே ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாம்… ஸ்டார் டீவில இருந்து சர்டிஃபிகேட் கொடுத்துருக்காங்க… சுவர தாண்டப் போறேன்னு சொன்னதுக்கே நாலு அடியப் போட்ருப்பாங்க மத்தவீட்ல… இங்க என்னடான்னா தன் பொண்ணோட சாகசங்களை நின்னு ரசிச்சுகிட்டு நிக்கார் ஒருத்தர்… அவர் உனக்கு ஸ்ரிக்ட்டா?!” என மகளுக்கு பதில் கொடுத்தார் கிருபாவின் அம்மா.

“என்னங்க நீங்க… இதெல்லாம் சொல்ல மாட்டீங்களா அவள…? “ என தன் கணவரிடம் குறைபடவும் செய்தார்.

“என்ன ஜெசி புதுசா சொல்ற…? எப்பவும் எல்லாத்திலும் இப்படி ஒரு க்யூரியாசிட்டி இருந்தாலும் தனக்கோ அடுத்தவங்களுக்கோ ஆபத்தோ மனகஷ்டமோ வர்றது போல எதையும் அவ செய்யமாட்டான்னு உனக்கும்தான் தெரியுமே… அப்றம் என்ன?” என தன் மனைவிக்கு இப்போது சத்யமூர்த்தி பதில் கொடுக்க,

“தேர் யூ ஆர்… மை ஸ்வீட்டோ ஸ்வீட் டாட்” என அவர் கழுத்தில் போய் கை போட்டு வளைத்திருந்தாள் மகள். “ஹக் செய்ய முடியல டாடி… பலகை தட்டுது” என்றபடி.

“தெரியுதுல்ல கிருபா… அலார்ம ஆஃப் செய்ய அப்பா அலவ் பண்ணமாட்டேன்… போய் தூங்கு” என அப்பாவிடமிருந்து மகளுக்கு பதில் கிடைத்தது இப்போது.

“ஷ்யூர் டாடி” என்றபடி விலகிய அவள்,

கிருபாவின் இத்தகைய வால்தனங்களை எப்போதும் ரசிக்கும் அம்மாவின் தொனி இன்று சற்றாய் மாறி இருப்பதை  கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்ததால், அம்மாவிடம் பெரிதாக அடுத்து எதுவும் சொல்லாமல் “குட் நைட் மம்மி” என மட்டும் சொல்லிவிட்டு வீட்டு வாசலை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

“என்னாச்சு ஜெசி?” என அவளது அப்பா விசாரிப்பது அவளது காதில் கேட்டது.

“இல்லைங்க… அவளுக்கு 22 வயசு ஆகுது… அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கலாம்னும் பேசினோம்… அதெல்லாம் யோசிக்கவும் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு… விளையாட்டுத்தனமாவே வளத்துட்டமோ…? போற வீட்ல இவள புரிஞ்சுப்பாங்களா…? அங்க உள்ள சூழ்நிலைல இவ சந்தோஷமா இருந்துப்பாளான்னு என்னலாமோ தோணுது… இவளும் நம்ம ஷீபா மாதிரியே இருந்திருக்கலாம்” அம்மாவின் புலம்பலும் காதில் விழுகிறது. அக்கா ஷீபா படிப்ஸ் அண்ட் பொறுப்ஸ் அதோடு பரம சாதுவும் கூட.

இப்போது மீண்டும் திரும்பி அம்மாவிடம் வந்த கிருபா தன் அம்மாவை அணைத்த விதத்தில் அவருக்கு எலும்பு வலித்திருக்குமாயிருக்கும்.

“ஐயோ ஜெசி,  மீ சோ சோ வெரி மச் ஹேப்பி யியேஏஏஏஏஏஏ !!!! உலகத்திலயே பெஃஸ்ட் ஃப்ரெண்ட் நீதான்… ஷீபா போல பி எச் டி முடிச்சப் பிறகுதான் மேரேஜ்னு சொல்லாம எனக்கு இப்பவே மேரேஜ் செய்யனும்னு உனக்கு தோனி இருக்கே… எங்கயோ போய்ட்ட… தனியாவே எல்லா சேட்டையும் செய்ய செம போரா இருக்கு… சீக்கிரமே என்ன மாதிரி ஒரு வால் பையனா என்ட்ட மாட்டி வைப்பீங்களாம்… நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து ஜோரா சேட்டை செய்வமாம்… ஜாலியா இருக்கும்” கிருபாவின் அறிவிப்பைக் கேட்டு அவள் பிடியிலிருந்து உதறினார் அவளது அம்மா.

“விடுடி… விடுன்னு சொல்றேன்ல… “

“அதெல்லாம் இல்ல… மீ ஹேப்பீ சோ ஜெசிய தூக்கி” இப்போது தன் அம்மாவை தன் இரண்டு கைகளாலும் வளைத்து தூக்கி இருந்தாள் கிருபா.

“ஏய் இப்ப நீ விடல… உனக்கு மேரேஜ் ரெண்டு வருஷம் கழிச்சுதான்னு சொல்லிடுவேன்” அம்மாவின் அந்த மிரட்டலில் டபக்கென அவரை தரையில் விட்ட கிருபா,

“ஜெசி எதுல வேணும்னாலும் விளையாடு… இதுல மட்டும் விளையாடாத…  போரடிக்கு லைஃப்… சீக்கிரம் ஒரு பையன பிடி… இந்த உன் சத்யமூர்த்தி, உன் பெரிய பொண்ணு ஷீபாக்கான செல்வின் எல்லாம் உன்  செலக்க்ஷன்தானே… எனக்கும் பக்காவா செய்வ நீ.. கோ அகெட்… ஐ’ம் வெய்ட்டிங்…” அவள் இன்னுமே தன் விளையாட்டை தொடர…

டப் என ஒரு செல்ல அடி கிடைத்தது கிருபாவுக்கு அவளது அம்மாவிடமிருந்து “அப்பாவ பேரச் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கனே…” என்றவர் அடுத்து ஒரு வகை அமைதியும் சிறு பதற்றமும் முழு நம்பிக்கையுமாய் மகளைப் பார்த்து “அம்மா பார்க்க ஆரம்பிக்கட்டுமா கிருபா? உனக்கு  சரியா வரும்னு தோணுதா?” எனக் கேட்டார்.

இது விளையாட்டல்ல, கேலியும் இல்லை, நிஜம் என கிருபாவுக்கும் தெரியும்தானே?!

“எனக்கு என்ன தோணுதுன்னா மம்மி, மேரேஜ்ன்றது எனக்கு புரியுற வரைக்கும் ஒரு மேஜிகல் வேல்ட்… டோர் ஆஃப் விஸ்டம்… அங்க போனதும் நாம நாமளா இருக்றதே இல்ல… ரெண்டு பேருமே மாறித்தான் போறோம்… அப்ப ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்க்கு இடையில் அன்பு மட்டும் இருந்துட்டா போதும் மத்த எல்லாமே சந்தோஷமா மட்டும்தான் இருக்கும்னு படுது.

நம்ம ஷீபாவப் பாருங்க… கல்யாணத்துக்கு முன்ன பார்லர் போகமாட்டா… பீச் போறது போர்னு சொல்லுவா… இப்ப இதெல்லாம் கட்டாயத்துக்குன்னா செய்றா? அத்தானுக்கு பிடிக்கும்னு  அவளாவே சந்தோஷமாதான போய்ட்டு வர்றா… அத்தானுக்கு மேரேஜுக்கு முன்ன மால்ல சுத்றது, வீடியே கேம் விளையாடுறதெல்லாம் பயங்கர இஷ்டமாம்… இப்ப நம்ம ஷீபாக்கு போர் ஆகும்றதால அவங்களே அதையெல்லாம் யோசிக்கிறதே இல்லை.

ரெண்டு பேருமே இதெல்லாம் எதோ தியாகம்னு நினச்சு கான்ஷியஸா செய்றதும் இல்ல… இயல்பாவே மாறிகிடுறாங்க… சின்ன விஷயம் பெரிய விஷயம்னு எல்லாத்திலும் இந்த சேஞ்ச் அதாவே வந்துடுது… அந்த வகையில் அன்பில்லாத லைஃப் மட்டும்தான் மம்மி கஷ்டம்னு தோணுது.

அதனால என் டேஸ்ட்ல ஒருத்தங்க இருக்கனும், நான் இப்ப இருக்க மாதிரியேதான் மேரேஜுக்கு பிறகும் இருப்பேன்னு எல்லாம் நினச்சு  ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க… ரொம்பவும் லவ்விங்  ஹார்ட்டடா ஒரு பையனப் பாருங்க… அதுவும் அவங்க அம்மா அப்பாட்ட பாசமா இருக்கான் அதனால உன்ட்ட நல்லா இருப்பான் அப்டின்னு எல்லாம் பார்க்காதீங்க… அவனுக்கு சம்பந்தம் உள்ளவங்க இல்லாதவங்கன்னு எல்லார்ட்டயுமே அன்பா, தன்மையா நடந்துக்கிற ஒருத்தன பாருங்க… அவன் கண்கலங்காம நான் பார்த்துப்பேன்” வெகு நிதானமாக, மனபக்குவத்தின் மொத்த அடையாளமாக பேசிக் கொண்டு வந்த கிருபா, கடைசி வரியில் கண்சிமிட்ட,

சற்றாய் மலைத்தும், மகளை முழுவதுமாய் ரசித்தும் பார்த்தபடி நின்றிருந்த அவளின் அம்மாவின் முகத்தில் இப்போது சிரிப்பு. அவரது தவிப்பு முழுவதுமே அடங்கி இருந்தது. மெல்ல திரும்பி தன் கணவரைப் பார்த்தார். கிருபாவின் அப்பா முகத்திலோ பெருமிதம்.

“நல்ல பொண்ணா வளந்து நிக்றது  நான்… என்னமோ அவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கே மெடல் கொடுத்துக்குறாங்க”  தன் மொபைல் வீடியோ கேமில், தன் வளர்ப்புப் பிராணியாக தான் வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு அனிமேட்டட் புறாவிடம் கதை சொல்லிக் கொண்டே இடத்தை காலி செய்தாள் கிருபா.

றுநாள் பீச்சில் அலைகளில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் கிருபா. தன் வாட்சைப் பார்த்தவள் நேரம் மாலை 6 மணி எனவும் காரை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அவள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓரளவு உயரமாக மணல் மீது ஏறினால்தான் சமபரப்புக்கு வர முடியும் என இருக்க… தன் வெண்ணிற 3/4த் நீள ஸ்கர்ட்டை ஒரு முறை ஆராய்தலாய் பார்த்துக் கொண்டவள்… அது அழுக்காகா வண்ணம் பிடித்தபடி துள்ளலாக அந்த மணல் மீது ஏற,

அதே நேரம் அப்போதுதான் கடலைப் பார்த்து வந்து கொண்டிருந்த ஒரு  குட்டி வாண்டு அந்த மணலில் மேலிருந்து வேகமாய் சறுக்கியது.

“ஹேய் கேர்ஃபுல் “ என இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவளுக்கு நியாபகம் வந்துவிட்டது அந்த சின்ன குட்டி யார் என.

“ஹாய் மிஷா கேர்ள்…” இவள் சொல்ல…

அதற்குள் குழந்தையும் “ஹாய் ஆன்டி” என உற்சாகமாக இவளிடம் வந்தது.  “ஹை சேம் பிஞ்ச்” என  படு சந்தோஷமும்பட்டது இவளது உடையைப் பார்த்து. வெண்ணிற ஃபினஃபோர் ஜம்ப்சூட்டும், பிங் டாப்ஸும் அணிந்திருந்தாள் குழந்தை.

கிருபா அதே வண்ணங்களில் ஸ்கர்ட் அண்ட் டாப்ஸில் வந்திருந்தாள்.

“சேம் பிஞ்ச் சொல்றவங்கல்லாம் எனக்கு ஃப்ரெண்ட்… சோ இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்…” தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ப்ளாக் சாக்லெட்டை வேறு எடுத்து நீட்டினாள் மிஷா.

கொடுக்ற பழக்கத்தை குழந்தைகளுக்கு பழக்குறது கஷ்டம்… அதை தடுக்க கூடாது என்பதற்காக “ஃப்ரெண்ட்ஸ்” என்றபடி சாக்லெட்டை வாங்கிக் கொண்டாள் கிருபா.

“யார் கூட வந்துருக்க குட்டிமா? இங்கல்லாம் இப்படி தனியா ஓடக் கூடாது” சொல்லியபடி மிஷாவின் கையை பற்றியும் கொண்டாள்.

பீச்சில் குழந்தைகள் காணாமல் போவதும் கடத்தப்படுவதும் படு சகஜம் எனக் கேள்விப்பட்டிருந்ததால், இப்படி குழந்தையை பற்றிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள் கிருபா.

அப்போதுதான் பார்வையில் கிடைத்தான் அவன். தேட எந்த அவசியமும் இன்றி இவர்களையே பார்த்தவண்ணம், இவர்களுக்கு வெகு அருகில்தான் நின்று கொண்டிருந்தான் அந்த மீரட்.

அதே நேரம் இவளது கேள்விக்கு பதிலாக “நான் என் சித்தப்பா கூட வந்துருக்கேன் ஆன்டி” என்றது அந்த மிஷா.

அந்த அவனைப் பார்க்கவுமே இவன முன்ன எங்க பார்த்தோம்? என்ற கேள்விக்குள் பயணப்பட்டிருந்த கிருபா… குழந்தையின் இந்த பதிலில்தான் தான் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாள்.

கொஞ்சமே கொஞ்சமாய் அவன் மீது ஒரு நல்ல எண்ணம் இவளுக்கு உண்டாகியது. அண்ணன் குழந்தையை பார்க் பீச் என தூக்கிக் கொண்டு சுற்றும் குடும்ப பாங்கான சித்தப்பா.

இவளது அக்கா மகள் அபியோடு தனியாக சுற்றுவது இவளுக்கு பிடிக்கும்.  அதைப் போலத்தான் அவனும் போல.

அவனைப் பார்க்கவா? அடுத்த புறம் திரும்பவா என இவள் இப்போது ஒரு கணம் தடுமாற…  இவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனோ இந்நேரம் சின்னதாய் புன்னகைத்து வைத்தான்.

சென்ற முறை மாலில் இவள் சின்னதாக கூட அவனைப் பார்த்து புன்னகைக்கவில்லைதான்… அது சரியென்றும் பட்டது இவளுக்கு. ஆனால் இம்முறை இது இரண்டாவது சந்திப்பு இல்லையா…? ஆக கர்டசிக்கு சின்னதாகவாவது புன்னகைக்க வேண்டும் எனத் தோன்ற.. அதை செயல் படுத்தியவள்,

“ஹேவ் அ நைஸ் டைம் மிஷா கேர்ள்.. பை” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.

“பை ஆன்டி “ என்ற குழந்தையின் சத்தம் காதில் விழுந்து தேய்ந்தது.

‘இப்ப சாக்லைட்ட வாங்கினது போல அடுத்த மீட்டிங்க்ல உன் மொபைல் நம்பர தருவியாம்… ஒன் ஃஸ்டெப் அட் அ டைம்’  என சொல்லிக் கொண்டிருந்த மீரட்டின் மனக் குரல்தான் அவள் காதிற்கு வரவே இல்லை.

டுத்த இரண்டு நாட்களுக்குப் பின் அது ஒரு சனிக் கிழமை. கிட்டார் ஒன்று புதிதாக வாங்குவதற்காக  அந்த மதியவேளையில் ஒரு மியூசிகல் ஷாப்பிற்கு சென்றிருந்தாள் கிருபா. அங்கிருந்த கிட்டார்களில் ஒன்றை எடுத்து இவள் ஆராய்ந்து கொண்டிருக்க… இவள் காதில் விழுகிறது அந்த கின் கின் சத்தம்.

“வாவ்” என வாய்விட்டு கூவியேவிட்டாள் கிருபா.

கையிலிருந்த மொபைலை அவள் பார்க்க… அதன் திரையின் ஓரத்தில் விட்டு விட்டு தோன்றிய அந்த குட்டி புறா இமேஜ் அவள் புரிதலை உறுதி செய்தது.

இது ஒரு ஜப்பானிய மொபைல் கேம்… இந்த கேமில் இவளுக்கு என ஒரு அனிமேட்டட் புறா இருக்கும்… இந்த புறாவுக்கு இவள் நேரம் பார்த்து உணவு கொடுப்பது… தண்ணீர் கொடுப்பது… பொழுது போக்குக்கு வழி செய்வது என எல்லாம் செய்து, இவள் விரும்பும் காலம் வரை அதை மானசீக வளர்ப்பு பிராணியாக வளர்த்துக் கொள்ளலாம்.

இதே கேமை தங்கள் மொபைலில் விளையாடும் வேறு நபர்களில் யாரவது ஒருவரின் புறா மட்டுமே இவளது இந்த புறாவுக்கு நட்பாக முடியும்… அந்த புறா வளரும் மொபைல் எதோ சந்தர்ப்பத்தில் இவளது மொபைலுக்கு அருகில் வந்தால் மட்டுமே இந்த கின் கின் சிக்னல் வருமாம்.

இங்கே சென்னையில் இந்த விளையாட்டை விளையாடுபவர்களே கோடியில் ஒருவர் இருந்தால் அதிசயம்… இதில் அந்த நபர் வளர்க்கும் புறா இவளது புறாவுக்கு நட்பாக முடியும் புறா என்றால் பேரதிசயம்… அந்த நபர் இப்படி இவளுக்கு அருகில் வருவது என்றால் எத்தனை எத்தனை அதிசயம் இது!

அதற்குத்தான் அவளது அந்த கூவல்.

அவசர அவசரமாய் சுற்று முற்றும் பார்த்தாள் கிருபா… ‘நம்ம போல ரசனை உள்ள ஒருத்தர பார்க்கிறதுன்னா குஷிதானே!’

நிச்சயமா எதாவது ஒரு டீனேஜ் பொண்ணுதான் இப்படியெல்லாம் விளையாடுமாயிருக்கும். ‘ஹி ஹி குழந்தைக்குதான் ரொம்பவே செட் ஆகுற கேம்… ஆனா சின்ன பிள்ளைக்கு சொந்த மொபைல் இருக்காதுல்ல இப்படி டே அண்ட் நைட் கூடவே தூக்கிட்டு சுத்த!’ என்ற அறிவுப் பூர்வ சிந்தனையோடு இவள் கண்கள் ஆவலாய்த் தேட…

இப்போது இவளிடம்  மூச்சிளைக்க இளைக்க ஓடி வந்து நின்றாள் மிஷா.

“ஹையோ ஆன்டி நீங்களா? என் ப்ரியானோட ஃப்ரெண்ட் உங்கட்டதான் இருக்குதா?” என படு கொண்டாட்டமாக விசாரிக்கவும் செய்தாள். “அது நேம் என்ன?” ஆசை ஆசையாக கேட்டாள்.

“ச்சோ ச்வீட்… இவ்ளவு சேம் பிஞ்சா நமக்குள்ள…? மிஷா குட்டியும் இந்த கேம் விளையாடுறீங்களா?”  கிருபாவுக்குமே படு சந்தோஷமே!

“ஆமா செல்லகுட்டி உன் ப்ரியானோட ஃப்ரெண்ட்  இங்கதான் இருக்கு” சொல்லியபடி தன் மொபைலை தூக்கி காட்டினாள்.  “ஆனா நான் அதுக்கு நேம் எதுவும் வைக்கலையே” குழந்தையின் கேள்விக்கு பதில் சொன்னாள்.

மிஷா அவளது அப்பா அல்லது அம்மா யாருடனாவது வந்திருக்கலாம்தானே… அதெல்லாம் தோன்றாமல்… ஏன் என்று தெரியவில்லை அனிச்சையாய் இவள் கண்கள் அருகில் அந்த மீரட்டை தேட… அவனும் ஏமாற்றம் தராமல் அங்குதான் நின்று கொண்டிருந்தான். ஒரு வித மௌன ரசனை அவனது கண்களிலும் களையான முகத்திலும்.

இவள் பார்வைப் படவும் அவனது ட்ரேட் மார்க் புன்னகை அவன் இதழ்களில் உதிக்க… இப்போது கிருபாவும் புன்னகைத்து வைத்தாள்.

இவளப் போல இந்த கேம் விளையாடுறது இந்த மீரட்தானாமா? என்னதான் மிஷாதான் விளையாடுகிறாள் என்றாலும் மீரட் செய்து கொடுக்காமல் குழந்தைக்கு இந்த கேம் கிடைத்திருக்க வழி இல்லையே. அவள் மனம் அந்தப் புள்ளியை தொட்டுப் பார்க்கிறது. ‘நம்மளப் போல இவனும் கொஞ்சமே கொஞ்சம் கழன்ட கேஸ்தானோ?!’

“உன் ப்ரியானோட ஃப்ரென்ட் நேம் ப்ரியாணி… சரிதானே” என்றபடி இப்போது மிஷாவுக்கு  அருகில் வந்து நின்றான் அவன்.

‘என்னது ப்ரியாணியா?’ என ஒரு எகிறல் மனதுக்குள் தோன்றினாலும் “க்ளுக்” என சிரிக்கவே வருகிறது இவளுக்கு. கேம்க்கு பேர் வைக்கிறப்ப இப்படித்தானே ஜாலியா இருக்கனும்.

“ஹை எனக்கு ப்ரியாணி ரொம்ப பிடிக்குமே… நாம இதையே நேமா வச்சுக்கலாம் ஆன்டி” மிஷாவும் அங்கீகரிக்க… அடுப்பு சட்டி மசாலா இல்லாமலேயே ப்ரியாணியானது இவளது புறா.

அடுத்து சில நிமிட உரையாடலுக்குப் பின் தன் மொபைல் எண்ணை குழந்தையிடம் கொடுத்திருந்தாள் கிருபா. மிஷா விளையாடும் மொபைல் எண் இவளுக்கு கொடுக்கப் பட்டது.

ப்ரியோனும் ப்ரியாணியும் ஹேப்பியா இருக்க அப்ப அப்ப இரண்டு மொபைல்ல இருந்தும் ஒருத்தர்க்கு ஒருத்தர் கேம்ல உள்ள கிஃப்ட் அனுப்பனும், குட்மார்னிங் குட் நைட் மெசேஜ் எல்லாம் அனுப்பனுமே… அதற்குத்தான் இந்த எண் பரிமாற்றம்.

கிருபாவுக்கு இப்படி மொபைல் நம்பரை கொடுக்க பயம் என்று இல்லை. பொதுவாய் அவளுக்கு மனதுக்கு நெருக்கம் இல்லாத யாருக்கும் அவள் எண்ணை தருவதில்லை என்றாலும்… இங்கு மிஷா வகையில் இந்த எண்ணை கொடுப்பது கிருபாவுக்கும் இஷ்டமே… இதோட மூன்று முறை சந்தித்துவிட்டதால் வந்துவிட்ட ஒரு இலகு நிலை… கூடவே ‘ஹி ஹி இந்த கேம் கிருபாவுக்கும் ரொம்ப இஷ்டமாச்சே’

அதோடு இவளது மொபைல் முழுக்க முழுக்க கண்காணிப்பில் இருக்கும் எண். சின்ன வகையில் கூட யாரும் எதுவும் தவறாக இவள் எண்ணை பயன்படுத்த எண்ணினாலும், அடுத்த நிமிடமே அந்த நபரை சாட்சியோடு பிடித்துவிட முடியும்… ஆக பயப்பட என எதுவும் இருப்பதாக தெரியவில்லை அவளுக்கு.

ஆக சென்று மாட்டினாள் மீரட் விரித்திருந்த வலையில்.

தொடரும்…

Advertisements

13 comments

  1. Ipathan padikiren sis ipdyelam kooda game iruka enna. Mrg pathiya kirubavin purithal alagu. Valakam ponga unga narreting super sis ipave adutha epi padikaporen sis

Leave a Reply