கற்றது காதல்

ர்றவனை காதலிக்கனும் என்ற ஒரு முடிவோடதான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன். இதற்கு மேலும் நான் இந்த வீட்டில் கல்யாணம் செய்யாமல் இருந்தால் அம்மா அப்பாவோட வாழ்க்கை நரகமாயிடும். அதுதான் நான் கல்யாண முடிவுக்கு வர ஒரே காரணம். மத்தபடி இந்த கல்யாணத்தில் மனலயிப்பு ஏதும் இல்லை.

நான் கல்யாணத்தை ஆவலாய் ஆசையாய் ஏக்கமாய் எதிர்பார்த்த ஒரு காலம் இருந்தது. இன்னும் மனதில் ப்ரின்ஸை நான் முதன் முதலில் என் முதல் பணி ஸ்தலத்தில் சந்தித்த காட்சி, அவன் பேசிய முதல் வார்த்தை, அவனுடன் வந்த முதல் வாய் போர் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறது.

அடுத்தும் தொடர்ந்த அவனது தொடர் கால் வாரல்கள், எனது பதிலடிகள், அதற்கு உடன்பணி புரியும் நல்நண்பர்கள் எனக்கு கொடுத்த அறிவுரைகள், பின்னே சி.இ.ஓ.வின் ஒண்டவுன் ப்ரின்ஸை புது ட்ரெயினி  நான் பலர் முன் மூக்குடைத்தால் ….எல்லாம் கூட ஞாபகம் இருக்கிறது.

அத்தனை தளங்களுள்ள அந்த பெரிய அலுவலகத்திற்குள் இயல்பாய் நடக்கும் எங்கள் சந்திப்புகள் அவனது திட்டமிட்ட ஏற்பாடு என்று மெல்ல மெல்ல என் மரமண்டைக்கு புரிய ஆரம்பித்தது, அவன் என்னை சுற்றி வருகிறான் என நான் அறிய ஆரம்பித்தது, அதன் காரணம் அவன் என் மேல் கொண்டுள்ள காதல் என நான் உணர ஆரம்பித்தது எல்லாம் கூட ஞாபகம் இருக்கின்றது.

அந்நொடியே எனக்கும் அவனிடம் உள்ள பயமே அவனை நான் விரும்பி அதை அவன் ஏற்காமல் காயபட்டுவிடுவேனோ என்பதுதான் என விளங்கியதும் கூட ஞாபகம் இருக்கிறது.

காதலில் நான் கவிழ்ந்த பொழுது அது.

இத்தனை சண்டைக்கும் பின் அவனிடம் போய் எப்படி காதலை உணர வைக்க என தவித்ததும் அதனால் இரண்டு மூன்று முறை அவனிடம் உண்மையை சொல்ல சென்று, உளறி கிளறி மூடி திரும்பி வந்ததும் கூட ஞாபகம் இருக்கிறது.

இந்த மொத்த உளறல் சந்திப்புகளின் நிமித்தம் எங்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு நிலை ஞாபகம் இருக்கிறது. அதன் பின் நிகழ்ந்த சுமுக சந்திப்பில் இயல்பாய் நான் என் பின்புலம் என் பெற்றோரைப் பற்றி கூற அவன் என்னை தவிர்க்க ஆரம்பித்தது ஞாபகம் இருக்கிறது.

நாங்கள் இருவரும் பணி புரிந்த அலுவலகத்தின், தொழிலின்  மொத்த உரிமையாளர் என் தந்தை என்பதை அறிந்ததும் அவன் விலக நான் தவித்த தவிப்பும் துடிப்பும் ஞாபகம் இருக்கிறது.

என்  காதலை சொல்லி நான் கதறியதும் அவன் என் தந்தையை சொல்லி மறுத்து விலகியதும் அதே நேரம் அவன் எனக்காய் தவித்ததும் ஞாபகம் இருக்கிறது. மறுப்பை சொல்லும் பொழுது அவன் அனுபவித்த வலி அதன் பிரதிபலிப்ப்பாய் தவித்த அவன் முகம் ஞாபகம் இருக்கிறது.

 ன்னதான் விலகி ஓடினாலும் காதல் கொண்ட மனதல்லவா அவனது, என் வேதனை துக்கம் அவனைத் தாக்க  உன் தந்தையை விருப்புடன் சம்மதிக்க வைப்போம் அதுவரை பொறுத்திருப்போம் என்று அவன் இறங்கி வந்ததும் ஞாபகம் இருக்கிறது.

விரல் நகம் கூட படாமல் விலகி நின்று மனதில் கூட எல்லை மீறாமல் காதல் கொள்வோம். மன சுத்தம் இறைவனுக்கு ப்ரியம் அவர் இறங்கி இரங்கி உதவினால் தான் ஆனந்த கண்ணீரில் நடக்கும் நம் கல்யாண வைபவம் என்று  அவன் சொன்னது இன்னும் கூட நினைவில் இருக்கிறது.

ஒரே அலுவலகத்தில் ஒருவர் பார்வையில் ஒருவர் வேண்டாம், மன சுத்தம் கனவாய் போகும். விழகூடாத வகையில் உன் தந்தை காதில் தகவல் சென்றால் கல்யாண கனவு கானலாகி விடும் என என்னை அவன் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரித்து அனுப்பியதும் ஞாபகம் இருக்கிறது.

மாதம் ஒரு நாள் 2 நிமிடம் அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என நாங்கள் எடுத்த முடிவும் அதன் படி இரு முறை இரண்டு நிமிட சந்திப்பிற்காக அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி நான் சென்றதும் ஞாபகம் இருக்கின்றது.

“நதி…அப்பாயிண்ட்மெண்ட்னு சொல்லாதடா…ப்ளீஸ், யூ நோ ஆல் மை லைஃப் ஸ் யுவர்ஸ்” என்று அவன் சொன்னதும் அந்நேரம் அவன் கண்கள் கெஞ்சியதும் ஞாபகமிருக்கின்றது.

அந்த சந்திப்புகள் நடந்த அந்த கண்ணாடி கேபினும் அதன் இட ஓரத்தில் இருந்த அவன் பிறந்த நாளுக்காக நான் வங்கி பரிசளித்த ‘ கிறிஸ்துவின் ராப்போஜனம்’ சிறு சிற்பமும் கூட ஞாபகம் இருக்கின்றது. அங்கு எனைப் பார்த்ததும் அவன் முகம் தவிப்பும் காதலுமாக மலரும் பாவம் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அப்படி அனுமதி வாங்காமல் ஒரு நாள் மனம் கேளாமல் நான் அவனை சந்திக்க சென்றதும், நேர்காணல் நடத்திக் கொண்டு இருந்தவன் அடுத்த கேண்டிடேட்டை எதிர்பார்த்து நிமிர, எதிரில் நின்ற என்னைக் கண்டு கனவென்று  சில நொடிகள் குழம்பி பின் நிதானித்ததும், பின் மௌனமாக தன் பணியை தொடர, என் வார்த்தையின் சத்தத்தில் அவன் விழிகளும் இதழ்களும் மாத்திரம் அல்லாமல் மொத்த வதனமும் மலர்ந்ததும், “ஹேய்….நீ இங்க என்ன பண்ற..” என அவன் மொழி துள்ளியதும்,  அவன் அடிக்கடி என் உருவத்தை  இப்படி காண்கிறான், என வார்த்தையின்றி எனக்கு புரிய,  சொல்லாமல் வந்ததற்காக திட்டுவானோ என்றிருந்த என் பயம் பறந்ததும், அன்று அவன் கேட்டதற்காக அலுவலக காஃபி மெசினில் நான் முதலும் கடைசியுமாக அவனுக்கு கலந்த காஃபியும் ஞாபகம் இருக்கின்றது.

எவ்வளவு சுகர் என்றதற்கு “காஃபி ஷுட் பி அஸ் ஸ்வீட் அஸ் யு” என்ற அவன் பதிலும் ஞாபகம் இருகின்றது.

எத்தனை முறை நான் அலைபேசியில் அழைத்தாலும் ஞாயிறு அன்று மதியம் தவிர மத்த நாட்களில் அவன் ஏற்றதே இல்லை என்பதும் ஞாபகம் இருக்கின்றது. ஆனால் மற்ற நாட்களில் அழைத்ததற்காக குறைபட்டதும் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கின்றது.

சாப்பிட்டாச்சா? தூங்கு, ப்ரே ஃபார் மீ, ஐ’ம் இன் மீட்டிங் வித் யுவர் டஅட் என்பதாய் மட்டுமே நாங்கள் பரிமாறிய குருஞ்செய்திகள் ஞாபகம் இருக்கிறது.

மூன்றாம் மாதம் அன்று அவன் தவிப்புடன் பேசியதும், “என்னமோ தெரியலை நான் ஆசை படுற எல்லாமே நடக்குது இப்போ கொஞ்ச நாளாவே….ஒரு வேளை பூமியில என் வாழ்க்கை முடியப்போதோன்னு எனக்கு தோணுது…..நாளைக்கு என்னை பார்க்க வரியாடா ப்ளீஸ்” என அவன் சொன்னதும்….நான் அவனை அதட்டியதும், “இல்லடா ஜீசஸ் கம் டு மை கிங்டம்னு சொல்ற மாதிரி கனவு வந்தது, ரொம்ப ரியலா இருந்துச்சு….அவர்ட்ட போக கொடுத்து வச்சிருக்கனும்…உன்னை விட்டுட்டு போறது….அதுதான்…நாளைக்கு என்னை பார்க்க வாயேன்டா…”என அவன் அதற்கு பதில் சொன்னதும், மாலை நாலு முப்பதுக்கு அலுவலகத்தில் சந்திப்பது  என நேரம் குறித்ததும் ஞாபகம் இருக்கின்றது. அன்று மாலை அவன் அலுவலகம் நோக்கி கிளம்பிய என் அழைப்புகளை அவன் ஏற்காமல் இருந்ததும் அதன் நிமித்தம் நான் கோபம் கொண்டதும் கூட ஞாபகம் இருக்கின்றது.

அவன் அலுவலகத்து பிற எண்ணில் அழைத்து அவன் அங்கு இல்லை அவன் கார் அங்கு இல்லை என்பதை நான் உறுதி செய்து கொண்டதும், மனம் முழுவதும் அவன் மேல் கோபமாய் பாதி வழியிலேயே நான் வீடு திரும்பியதும், 669 முறை அதன்பின் நான் அவன் எண்ணை அழைத்ததும், அதன் பின் அவன் எண் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும் ஞாபகம் இருக்கின்றது.

மறுநாள் காலை வழக்கம் போல் அவனுக்கான எனது ஒரு மணி நேர ஜெபத்தை செய்து முடித்து நான் எழுந்து நின்ற நொடி,  ஐந்து முப்பது மணிக்கு எங்கள் காதல் விஷயம் தெரியாத என் தோழியிடம் இருந்து முந்திய மாலை அவன் விபத்தில் மரித்த விஷயம் குறுஞ் செய்தியாக வந்ததும் அதை படித்துவிட்டு என் உலகம் நின்று போனதும் ஞாபகம் இருக்கின்றது.

அடுத்து வந்த காலங்களை ஞாபகம் இருக்கின்றது. அவனை காண,  அவனோடு ஒரு வார்த்தை பேச, அவன் குரலை கேட்க நான் தவித்த தவிப்பும் துடித்த துடிப்பும் ஞாபகம் இருக்கின்றது.

வீட்டில் வெளியில் யாருக்கும் தெரியாமல் வாய்விட்டு அழக்கூட வழியின்றி ஜெப அறையில் நெஞ்சுவெடிக்க நான் விழுந்து கிடந்ததும் ஞாபகம் இருக்கின்றது. உயிர் போகாமல் எப்படி கடந்தேன் என் தெய்வமே இன்னும் கூட தெரியவில்லை.

மூன்று மணிக்கு விழிப்பு வர, மூச்சுவிட முடியாமல் மொத்த நெஞ்சும் அடைத்திருக்க, ரண ரணமாய் நுரையீரல் விரிய, அதற்குள் கல்லாய் அவன் மரணம், பிரிவு, இனி பார்வைக்கு கூட அவன் இல்லை என்ற பெரு உண்மை எல்லாம் சமைந்திருக்க “ஐயோ யேசப்பா என்னால தாங்க முடியலையே…ஐயோ என்னால முடியலையே…”  என் இருகை உயர்த்தி முழந்தாளிட்டு சுவரில் முகம் புதைத்து  நான் கதறிய கதறல் இன்னும் ஞாபகம் இருக்கின்றது.

மெல்ல புரிய நான் யேசுவின் மார்பில் அணைப்பில். அவர் அழுதுகொண்டிருந்தார் என்னோடு.

“நீ ஏன் அவனை காதலிச்ச?” என்று அவர் குற்றம் குறை சொல்லவில்லை.

அழுதார்.

“மகளே உன் வலி, உன் வேதனை அதன் ஒவ்வொரு துகளும் அடி ஆழமும் அனைத்தும் எனக்கும்” என்றது குரலற்ற அவர் மொழிதல்.

அவர் அழுகையில் கரைந்து மறைந்ததோ என் வலி? என் அழுகை நின்று போனது. மந்திரம் போல் மறு நொடியே நான் ஆடி பாடிடவில்லை. ஆனால் அன்றிலிருந்து நான் எனக்குள் மீண்டுமாய் உயிர்க்க தொடங்கியது ஞாபகம் இருக்கின்றது.

அவனை பற்றிய வலி வேதனை தவிப்பு துடிப்பு தனிமை தாங்கமுடியாமை எல்லாம் மெல்ல மெல்ல மறைய தொடங்கியது.

“மரணமே உன் கூர் எங்கே? “ என்ற வசனம் போன்று ப்ரின்ஸின் மரணம் அதன் கூரை, அதன் கத்தி குத்தலை, அது என் உணர்வுகளில் ஏற்படுத்திய கொலை தாக்குதலை இழக்க தொடங்கியது.

இதோ இப்போதும் ப்ரின்ஸின் ஞாபகம் நன்றாக இருக்கின்றது என் நினைவுகளில். ஆனால் என் உணர்வுகளில் அவன் இல்லை. காதல் என்பது உணர்வானால் அவன் மீதிருந்த காதல் கர்த்தரின் கண்ணீரோடு. இங்கு என்னிடம் இல்லை.

னால் மறுபடியும் திருமணமா? இன்னொரு காதல் கொள்ள என் ஆன்மாவால் இயலாது. காதல் இன்றி கணவனுடன் காலம் தள்ள ….ம்கூம் முடியாது. கூடவும் கூடாது. அது கணவனாய் வரும் மனிதனுக்கு செய்யும் அநியாயம் அல்லவா? இப்படியாய் ஒரு முடிவு.

காரணம் புரியாமல் அப்பா கொதித்தார். அம்மா என் கால் பட்ட தரையில் விழுந்து இரவெல்லாம் அழுதார்.

பெற்றோர் பற்றிய நியாய உணர்வு திருமணத்திற்கு சம்மதிக்க செய்தது. முதல் வரியில் கொண்ட தீர்மானத்திற்கும் அதுவே காரணம்.

மணப்பவனை காதல் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் சம்மதித்தேன் திருமணத்திற்கு.

இவனை காதலிக்க வேண்டும் என முடிவெடுத்தால் அவன் மீது வந்துவிடுமா காதல்?

அப்படி ஒருவேளை காதல் வந்துவிட்டாலும் அதன் பின் இவனும் எனக்கில்லாமல் போய்விட்டால்…? குழந்தை என்றான பின்பு குழந்தை இறந்து விட்டால்…..ஒரு வேளை விபத்தில் எனக்கோ இவனுக்கோ கை கால் போய்விட்டால்…ஒரு விபத்தின் தாக்கம் எல்லாவற்றையும் யோசிக்க செய்கிறது.

இந்த மரணத்தை என் உயிருக்கு இணையானவனை இழந்த இந்த மரணத்தை, இத்துன்பத்தை, இழப்பை என்னால் தாண்டி மீண்டுமாய் எழ முடிந்திருக்கிறது எனில் இனி என்னால் தாங்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. எதுவந்தாலும் மீண்டுமாய் உயிர்ப்பேன்..இன்று வந்த தெய்வம் இனியும் துணை வரும் .மனதிற்குள் ஒரு தைரியம் விடுதலை.

துணிந்து இறங்கிவிட்டேன் மீண்டும் காதலுற.

தோ இன்று பெண் பார்க்கும் நிகழ்வு. இருவரும் முக முகமாய் பார்க்க மட்டுமே இது. அப்பா மட்டுமல்ல நானுமே எனது கருத்துகளை, உயிர் போயினும் மீற மாட்டேன் என்ற சில கொள்கைகளை கணிணி வழியாய் கண்ணியமாய் முன்பே அவனுடன் பகிர்ந்து முடித்தாயிற்று.

இதோ வெளியே வர சொல்கிறார்கள். இதன் பெயர்தான் கால் பின்னுதல் என்பதா? கதையில் சொல்லபடும் இன் நிகழ்வு நிஜத்திலும் உண்டா? முதன் முதலாக என் கால் நடை பின்னி துவண்டு இப்படி ஒரு அனுபவம் சாத்தியம் என நிருபிக்கிறது. ஆச்சர்யம். மனதில் எந்த படபடப்பும் பட்டாம் பூச்சியும் இல்லை என்பது என் உணர்வு. பின் இந்த காலுக்கு என்ன வந்ததாம்?

.ஸோஃபாவின் ஒரு ஓரத்தில் அவன். பெயர் தற்சொரூபன்.

யேசுவின் பெயர் என்பதால் பெயரை விமர்சிக்க மனதிற்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் இப்படியும் ஒரு பெயர் வைப்பார்களா என்ற ஒரு எண்ண ஓட்டம் முதலில் எழுந்தது இப்பொழுதும் ஞாபகம் வருகிறது.

அவன் பார்வை முழுவதையும் என் மேல் மாத்திரமே நிறுத்தி இருக்கிறான். எனக்கு என் கண்களை எங்கு நிறுத்த என தெரியவில்லை. சுற்றிலுமாய் அதை ஓடவிட்டேன். ஒரு வயதான தம்பதி, இவனுடன் இன்னொரு இளைஞன்.

“இது ஸ்வரூப், இது அவனோட தம்பி…” அறிமுக படலம்.

ஒரு சிறு புன்னகையுடன் அவனுக்கு எதிரில் எனக்கான இருக்கையில் அமர…இன்னும் அவனது சிறு புன்னகையுடனான பார்வை என் மீதே.

“நீ எப்பமா ஏசுவை உன்னோட ஸேவியரா ஏத்துகிட்ட?” அந்த பெரியவர் கேட்க அவரைப் பார்த்தே பேச தொடங்கினேன். இவர்கள் என்னை  கேட்கும் கேள்விகளை நான் அவனைக் கேட்கும் முன்னமே அதற்கான பதில்களை அவன் மெயில் செய்திருந்தது ஞாபகம் வருகிறது.

எல்லாம் முடிந்து “கிளம்புறோம் அங்கிள்” என்றபடி அவன் விடை பெற என் தந்தை முகம் செத்து போனது.

பின்னே அடுத்து என்ன என சொல்லாமல் கிளம்பினால்….எனக்கு இப்படி எதையும் யோசிக்க கூட தோணவில்லை. அவன் சம்மதமும் சம்மதமின்மையும் ஒன்றாய் தான் தோன்றும் போலும். மனதில் எந்த தளும்பலும் இல்லை. ஒருவேளை நிச்சயமாக அவனுக்கு சம்மதம் தான் என்று எனக்கு தோன்றிவிட்டதா?

வந்தவரை வழி அனுப்ப செல்லும் வழக்கத்தில் வாசல் வரை நானும் செல்கிறேன் என் பெற்றோருடன். போர்டிகோவிலிருந்த அவனது காரை நோக்கி நடந்தவன் வாசலில் நின்ற என்னை நோக்கி திரும்பி வந்து “எங்கேஜ்மென்டுக்கு என் பேமிலியை கூட்டிடுட்டு வரட்டுமா” என்றான். அவன் கண்களில்  மின்னல்.

“ம்” இயல்பாய் நான் தலை அசைக்க “அப்பாட்ட பேசிட்டு அவங்களுக்கு எந்த டேட் வசதியா இருக்கும்னு சொல்றேன் அங்கிள்..உங்க வீட்டிலேயே சின்னதா எங்கேஜ்மென்ட் வச்சிடலாம்…” மகிழ்ச்சியாய் என் அப்பாவிடம் அவன். அப்பா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்.

முதல் முறையாக அவனை எனக்கு கொஞ்சம் பிடித்தது. நாங்கள் ஒரே டீம் என்பதுபோல் ஒரு நெருக்கம். அத்தனை பேரையும் தாண்டி என்னை நேரடியாக கேட்டதினாலா?

றுநாள் மாலை அலுவலகம் விட்டு படி இறங்கி காருக்காக பார்த்திருக்க ஒரு பைக்கில் இருவர் என் எதிரில் வந்து நின்றனர்.

பில்லியன் ரைடர் கையில் பூங்கொத்து. “நீங்கதான ஸ்வரூப் ஃபியான்சி?, இதை சார் கொடுக்க சொன்னார்…” அந்த நபர் நீட்ட ஏனோ என் கண்கள் பூக்களை பார்க்காமல் பைக் ஓட்டுனர் மீதே சென்று மொய்க்கிறது. முழு முகம் மறைத்து ஹெல்மெட் அணிந்திருந்தான் அவன். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு. அவன் கண்களில் என் கண்களை நிறுத்தினேன். அதில் சிரிப்பு இருந்தது.

புன்னகைத்தேன். கவசத்தை கழற்றி விட்டான். “ஹேய் புதுப் பொண்ணு, கண்டு பிடிச்சிட்டியே….என்றவன்..ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் மேடம் எனக்காக தர முடியுமா…?.”

அப்பா முகம் என் மன கண்ணில். என் முகபாவத்தைக் கண்டு கொண்டான் போல. ஜஸ்ட் “ஒரு ஸ்வீட் சாப்பிடுட்டு வீட்டுக்கு போயிடலாம்…7மின்ஸ்.” எப்படி சாத்தியம் இது என என் மனதில் எண்ண ஓட்டம்.

அதை படித்தான் போலும். “இதே ரோட்டில் ஒரு ஸ்வீட் சென்டர் இருக்குது” அவன் கண்களை மறுக்க முடியவில்லை.

“நீ காரை எடுத்துட்டு வா மாப்ள….” தன் பின்னிருந்தவனை இறக்கிவிட்டு என் முகம் பார்த்தான்.

அடுத்த நிமிடம் நான் அவன் பின்னால். முதன் முதலாக அப்பா தவிர ஒரு ஆண் பின் நான்!! இந்த உறவுக்கு பெயர் என்ன?

வார்த்தை மாறாமல் ஏழாம் நிமிடம் இனிப்பு முடித்து “தினமும் ரொம்ப பேசுவேன்…என் கால்ஸுக்கு மட்டும் இந்த மொபைல்…” என்றபடி

அவன் தந்த ஒரு மொபைலையும் பரிசாக பெற்றுக்கொண்டு என் காரில் நான் ஏறிவிட்டேன். “ஸீ யு டா,”  இருகண்களையும் சிமிட்டி  சிரித்தான்.

என்னுள் ஒரு புத்துணர்வு. வலி இழந்திருந்த மனதில் முதல் உற்சாக ஊற்று. புது நட்பு விதை தாண்டி மண் நீங்கி முளைவிட்டது.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்தான் அலை பேசியில். 11.45 இரவு பணி முடிந்து தினம் அவன் கிளம்பும் நேரம் தொடங்கும் ஒரு நீள உரையாடல். பேசுவது அவன் பணி. கேட்பது என் செயல். ஏன் பேசுகிறான் என ஒரு போதும் தோன்றியதில்லை.

தனிமை சாபம் நீக்க வந்த சகோதரம் கண்டேன் அவனில்.

நிச்சயதார்த்தம். புடவை வாங்க வேண்டும். அவன் உறவினர் கிளம்பிவிட்டனர். வீட்டில் அக்காவிற்கு உடல் நிலை சரியில்லை. பிரசவத்திற்கு வந்திருக்கிறாள் அவள்.  அம்மா அப்பா இருவரும் வரமுடியாத சூழல்.

அலுவலகத்தில் இருந்த எனக்கு தகவல் தந்தனர். அவனிடம் தெரிவித்தேன். அப்பாவிடம் அவனே பேசிவிட்டு என்னை குறிப்பிட்ட கடைக்கு வரச்சொன்னான். வாசலில் என்னை தனியாக வரவேற்றவன் என் காரை திருப்பி அனுப்பிவிட்டான். “மேடத்தை நானே வந்து டிராப் பண்ணிடுவேன்.”

“ஆன்டீஃஸ் என்ன சொல்லுவாங்கன்னுல்லாம் பார்க்காத…உனக்கு என்ன பிடிக்குமோ அதுதான் வாங்கனும்…நாம ரெண்டு பேரும் மட்டுமா வரலாம்னு நினச்சேன் பட் அது யாருக்கும் சரியா படலை..அதான்..” சொல்லிக்கொண்டே கூட்டி போனான். என் கண் பார்த்து பார்த்து ஒரு புடவை செலெக்க்ஷன்.

அனைவருமாக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தவர்களை வழி அனுப்பிவிட்டு அவனுடன் கிளம்பினேன். கொடும் மழை. வெள்ளம். சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே.

“இதுக்கு மேல கார் எங்கயாவது ஸ்ட்ரக் ஆகிடும், மாட்டிகிடுவோம்”. யார் யாரையோ அலைபேசியில் அழைத்தான். “எலெக்ட்ரிக் ட்ரெய்ன் மட்டும் உங்க ஏரியாவுக்கு போகுதாம். ரோட் ப்ளாக். கம்.”

இரவு மணி 10. என்றாவது ஒருநாள் உறவினர் திருமண ரிஷப்ஷனுக்காக, அவசர மருத்துவதேவைக்காக தவிர நான் வெளிவராத நேரம். இன்று  இவனுடன் தெருவில். வாங்கிய புடவையை அதன் ப்ளாஸ்டிக் உரையுடன் தன் நெஞ்சோடு சட்டைக்குள் வைத்தான். இதை உங்க வீட்டில் குடுக்கனும்…கையில் வைத்திருந்தால் என்னவாம் நான் நினைக்கும் முன் அடுத்து அவன் இடுப்பில் சொருகியது பிஸ்டல்.  மிரண்டேன்.

என் கண்ணை படித்திருப்பான் போலும். “இத்தனை மணிக்கு உன் கூட தனியா….கண்டிப்பா வேணும்…” சில விஷயங்களில் இவன் நிச்சயமாக என் அப்பாதான். மனதில் தோன்றியது.

மெல்ல நடக்க ஆரம்பித்தோம். மழை நின்றிருந்தது. சிறு சாரலும் ஆங்காங்கே காலுக்கடியில் ஓடும் நீரும், இரவும் அவனும். எதோ ஒரு பாதுகாப்பு உணர்வு.

நிச்சயமாய் இப்படியும் ஒரு நாள் என் வாழ்வில் வரகூடும் என கற்பனையிலும் கண்டதில்லை.

அவன் நடை கம்பீரம், அழகு என்று அப்பொழுதுதான் கவனித்தேன். கால்களும். ஆனால் என் உணர்வுகளை அவை தொடவில்லை. அலையடிக்கவில்லை மனம்.

சிறு வெளிச்சத்தில் அவன் பக்கவாட்டு தோற்றம் பார்த்தேன். சின்னதாய் சிரித்தபடி  ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.  பேசியபடி ரயில் நிலையத்தை அடைந்தோம். எலெக்ட்ரிக் ட்ரெயினில் என் முதல் பயணம்.

மணி 11. “இந்த நேரத்தில் லேடிஸ் கம்பார்ட்மெண்ட் வேண்டாம். இங்க வா” சில ஆண்கள் குழுவாக ஒரு புறம் நிற்க மறு புறம் வாசலருகில் நான்.

அடித்து மோதி முக முற்றம் பெருக்கி, சாரல் நீர் தெளித்து கூந்தல் கோலமிட்டது காற்று.

என் மேல் படாமல் கண்ணிய தொலைவில் பிறை நிலவாய் என்னை முப்புறம் சூழ்ந்திருந்தான் அவன். வெளிச்சத்தில் அவன் சிரிக்கும்போது பற்கள் மீது தோன்றும் ஒளிசிதறலை கவனித்திருந்தேன் நான். இவன் அருகாமையில் ஏன் பயம் வர மறுக்கிறது?

மீண்டுமாய் ரயில் நிலையத்தில் இருந்து இருபது நிமிட நடை. நேரம் போனதே தெரியவில்லை. வீடு தூரத்தில் கண்ணில் தெரிந்ததும் “உன் அப்பாக்கு ஃபோன் செய்து கேட்டை திறந்து வைக்க சொல்லு…கார் இல்லன்றதால செக்யூரிட்டிக்கு நம்ம நிக்றது  தெரியாம போய்ட போகுது.” அப்பாவை அழைத்தேன்.

கேட் திறந்து வாகன வெளிச்சம் பரவியது. காரை எடுத்துக் கொண்டு அப்பா எங்களுக்காக கிளம்பி கேட்டை அடையும் போது நாங்களும் அங்கே நின்றிருந்தோம். அப்பாவிற்கு நான் இவ்வளவு தாமதமாக வந்தது பிடிக்கவில்லை. ஆனால் யாரை குறை சொல்ல? மழையையா?

“கார்ல ஏறுங்க”  இருவரையும் பார்த்து சொன்னார்.

“இல்ல அங்கிள். இது நல்லா இருக்குது.  ‘ஜெ’ நாம நடந்தே போலாம்தானே?”

அப்பா முகம் பார்த்தேன். அவர் முகத்தில் மென்முறுவல். காரை எடுத்துக் கொண்டு ஷெட்டை பார்த்துப் போய்விட்டார். கேட்டிலிருந்து மெல்ல நடந்து இருவரும் வீட்டை அடைந்தோம்.

அப்பாவை பிடிக்கும் தான். ஆனாலும் அவரிடம் இருந்து கூட விடுதலை கிடைப்பதாய் இது என்ன உணர்வு. இவனும் நானும் மட்டுமே ஒரு குழுவாய். அதற்கே மொத்த விடுதலையும் கொள்முதலாய். இது என்ன?

இரவு இந்த நாள் எனக்கு ரொம்ப பிடிசிருந்தது என்ற நினைவுடன் தூங்கினேன். வெகு நாளைக்கு பின் இப்படி ஒரு நினைவு.

நிச்சயம் முடிந்தது.

“இன்னைக்கு பீச் போலாமா?” மாலை ஆறரை மணிக்கு கேட்டான்.

“நான் நைட் பீச் போனதில்லை.”

வானம் பார்த்தேன். போய் சேரும் முன் இருட்டிவிடும் என நன்றாக தெரிந்தது.

அங்கிள்ட்ட நான் பேசிக்கிறேன். அப்பாவை அழைத்து அனுமதி வாங்கினான். “நானே ஜெ வ வீட்டில் கூட்டி வந்து டிராப் பண்றேன். பை அங்கிள்”

முதன் முறை இருட்டில் மெரினா.  ஆங்காங்கே பஜ்ஜி கடை, ஐஸ், மக்காச்சோளம் இன்ன பிற வெளிச்ச குடைகள்.

அவைகளை கடந்து இருட்டுடன் விளையாடிய அலைகரைக்கு கால் நடத்தினான்.

என் உள்ளத்திற்கு எதிர்பதமாய் கடல். அலையடித்துக் கொண்டிருந்தது அது. மௌனமாய் நின்றவள் கண்களில் பக்கவாட்டில் சற்றுத் தொலைவில் இருந்த அவர்கள் பட்டனர். காதலுக்கு நான் வைத்திருக்கும் வரையறைக்கு உட்படாத விளையாட்டில் அவர்கள்.

பதறிவிட்டேன். மூச்சடைத்தது. சற்று தடுமாற கால் எதிலோ இடறி நான் சரிய என் இடையோடு அவன் கரம் வளையப்போவதை உணர்ந்து துள்ளி விலகினேன்.

“ஹேய்…” ஒரு கணம் வித்யாசமாக பார்த்தான். எனக்குமே அப்போதுதான் புரிந்தது அவன் செயல் என் மன ப்ரமை என்று.

அவனுக்கும் புரிந்துவிட்டது போலும். முகத்தில் சிறு குறும்பு இழையோட சொன்னான் “கல்யாணம் வரைக்கும் என் கை உங்க மேல படாது மேடம். தாராளமா என்னை நம்பலாம்.”

அவன் வார்த்தை மனதுக்கு பிடித்தது. சற்று வெட்கம் வேறு வந்தது.

அப்பொழுதுதான் அவன் கண்ணில் அவர்கள் பட்டனர் போலும். என்னை பயம் காட்டியவர்கள்.

“இந்த இடம் சரி படாது…வா” திரும்பி நடந்தோம்.

“எதாவது சாப்டுறியா? “

“இங்கயா?!!” என் வீட்டில் அது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

“அப்போ இங்க சாப்டுறவங்க எல்லாம்..?”

ஒரு பஜ்ஜி கடையில் உட்கார்ந்தோம். திறந்த வெளி. கடல் காற்று. இரவு முதன் முதலாய் நான் சுவைத்த மிளகாய் பஜ்ஜி. வானத்தைப் பார்த்தேன். இந்த நேரத்தையும் எனக்காக வைத்திருந்தாயா? நன்றி தெய்வமே.

வழியில் பேசிக்கொண்டு வந்தான். “எனக்கு எந்த வேலையும் ஒழுங்கா செய்யனும்…இப்போ கடவுள் உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சுகிடுற வேலையை என்னை நம்பி தந்திருக்கிறார்….நான் அதை ஒழுங்கா செய்யனும்…”

இயல்பாய் அவன் பேசிக் கொண்டு போக விக்கித்து நின்றேன்.

இப்படி ஒரு குறிக்கோளோடு ஒருவனை அனுப்பியது நீதானா தெய்வமே. ஆனாலும் என் உணர்வுகள் இவனோடு உலை ஏறவில்லையே?

இது காதலின் முகவரி கிடையாதே!

வீடுவரை கொண்டு வந்துவிட்டான்.

நியூ இயர்.

இன்னும் 7 நாளில் திருமணம்.

ஈ சி ஆர் ரைட். மாமல்லபுரம் வரை சென்று திரும்பினோம். மாமல்லபுரத்தில் கூட நிற்கவில்லை. காரில் ஒரு சுற்று அவ்வளவே. மீண்டும் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

“இன்னும் நம்ம வெட்டிங் 6 டேஸ்தான் இருக்குது. 7த் டே வெட்டிங்“

“ம்”

“உன்ட்ட ஒன்னு பேசனும்..இப்ப பேசலாம்னு நினைக்கேன்..”

“சொல்லுங்க..”

“மேரேஜுக்கு அப்புறம் ஒரு ஒன் இயர் குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்….”

“……………”

“உனக்கு வேற ஒப்பினீயன் இருந்தா சொல்லு.”

“……………………..”

“நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க இந்த ஒன் இயர்.

பின்னால நீ கன்சீவா இருக்கிறப்ப உன்னை நான் நல்லா பார்த்துக்க, அது யூஸ்ஃபுல்லா இருக்கும்”

“…………….”

அதனால ஃபமிலி ப்ளா….”

அவன் சலனம் உணர்ந்து திரும்பி பார்க்கும்போது நான் அழுது கொண்டிருந்தேன்.

“ஹேய்….என்னாச்சு ஜுஜ்ஜூ”

என் அழுகை குறையவில்லை.

“வீட்டுக்கு போகனும்.”

“என்னாச்சுடா…”

“இதெல்லாம் நீங்க பேசுனா எனக்கு பிடிக்கல…”

வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

னக்கு ஜுரம் ஆரம்பித்தது.

ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன், படுத்துவிட்டேன். இரவெல்லாம் மனதில் அலை. குழப்பம். பிரட்டி எடுத்த கடும் ஜுரம்.

இவனோடு வாழ முடியாது. அதுதான் நான் கண்ட முடிவு.

மறுநாள் ஜுரத்தில் இழுத்து போர்த்தி சுருண்டு உட்கார்ந்திருந்தேன். எப்படியும் இத்திருமணத்தை நிறுத்த சொல்ல வேண்டும். எப்படி சொல்ல?

அம்மாவும் அக்காவும் என் கட்டில் மெத்தை முழுவதும் திருமணத்திற்காக எனக்கு வாங்கி இருந்த நகை பெட்டிகளை திறந்து வைத்து எதை எப்பொழுது போட வேண்டும் என ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

இடையிடையே என்னிடம் ஏதாவது சொல்லியபடி. அறை கதவு அடைத்திருந்தது. அதில் தட்டலின் சத்தம்.

யார்?

தயங்கி அக்கா சிறு இடைவெளியாக எட்டி பார்க்க நின்றது அவன்.

பட்டென திறந்து “வாங்க வாங்க” என்றவள்

என்னிடமாக திரும்பி “ஸ்வரூப்” என்றாள்.

முதன் முறையாக என் அறைக்குள் அவன்.

என்னை கண் இமைக்காமல் பார்த்தான்.

“ஹாலோ ஆண்டி, ஹலோ அண்ணி…”

“வாங்க வாங்க” அம்மா மருமகனை உபசரிக்க

என் வாயில் கொழுகட்டை.

சிறு அளவளாவளுடன் மற்றவர் வெளியேறே அவன் என் முகம் பார்த்தபடி மௌனம் காத்தான் சிலநொடி.

“ஃபீவர்னு அங்கிள் சொன்னாங்க….” தகவல் என் வழியாக செல்லவில்லை என்ற குறை கூறல் அதில் இருப்பது எனக்கு தெளிவாக புரிந்தது.

“ம்…..அது வந்து எனக்கு இந்த மேரேஜ் சரி வராது…..நாம மேரேஜ நிறுத்திருவோம்……”

இதற்குள் என் கண்ணில் மழை. ஐயோ இப்போ எதுக்கு அழுகை வருது?

அவன் ரியாக்க்ஷன் நான் எதிர்பார்த்த எப்படியும் இல்லாமல் புன்னகையாக வெளிப்பட்டது.

“இப்படி கூட ஐ லவ் யூ சொல்ல வழி இருக்கா? செம” ….என் ஆரம்பித்தவன் சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினான்.

நான் பேந்த விழித்தேன்.

“உன் அம்மா அக்கா ரெண்டு பேரும் இங்க தான இருந்தாங்க…வெட்டிங் அரேன்ஜ்மென்ட் தான பேசிட்டு இருந்தாங்க….அவங்கட்டல்லாம் எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு உன் மனசில என்ன இருக்குன்னு என்ட்ட மட்டும் சொல்றியே இதுக்கு என்ன அர்த்தம்?”

நிச்சயமாய் இது நான் யோசிக்காத விஷயம் தான்.

இத்தனை நாள் பழக்கத்தில் மற்ற அனைவரை விடவும் இவனிடம் மனம் திறப்பது எளிதாயிருக்கிறது என்பதை நானும் உணர்ந்திருந்தேன். காரணம் கடித்து குதற மாட்டான் என்பதிலிருந்து எனக்கு பிடித்தமான முடிவுகளை செயல்படுத்துவான் என்பது வரை பல.

அப்பாட்ட அம்மாட்ட காரியம் சாதிக்ககூட இவன் தான் வழி.

இவன் எனக்கு என்னதாய் இருக்கிறான்? கடலில் அலைந்து வந்த கப்பலுக்கான சுக துறைமுகம்?

அடைக்கல பாறை?

இதுவரை இவனால் எனக்கு மன கஷ்டம் வந்ததில்லை. பிறர் மூலம் வரும் தொல்லைகளும் இவனைத்தாண்டி என்னை தீண்டும்போது அதன் வலுவிழந்திருக்கும்.

என்னை சூழ்ந்து நிற்கும் கோட்டை? அரண்? பூமி காக்கும் வளி மண்டலம்?

ஓ காதலிக்கபடுதலென்பது இது தானா?

சாரிடா…உன் மனசு தெரியாம நான் கொஞ்சம் அவசர பட்டுடேன் போல…மேரேஜ்க்கு அப்புறம் இதை பத்தி பேசிருக்கனும்….இதுக்காக ஃபீவர் வர்ற அளவு டென்ஷனாயிகிட்டு…

பச்…ஃபர்ஸ்ட் மேரேஜ் பாரு அப்பப்ப இப்படி சொதப்பிடுறேன்…நெக்ஸ்ட் டைம் நோ சொதப்பல்ஸ்…” கண் சிமிட்டினான்.

கண்ணில் தேங்கி இருந்த கண்ணீரோடு எனக்கு ஏன் சிரிப்பு வந்தது என்று தெரியவில்லை. எழுந்து ஒரு குத்து அவன் மார்பை குறிபார்த்து.

அவன் உடல் தொட்டநொடி என் மூடிய கையை இரு கைகளால் பிடித்தான் “ வார்த்தை காப்பாத்தனும்…” அவன் இருகை விரல்களுக்குள் என் கை பத்திரமாய். இப்படித்தான் நானும் இவனுக்குள் என்று தோன்றுகிறது.

“உங்க வார்த்தையை நீங்கதான் காப்பாத்தனும்…நீங்கதான் தொட மாட்டேன்னு சொன்னீங்க….”

வாய்விட்டு சிரித்தான். என் கையை விட்டிருந்தான். சிந்திய சிரிப்பை காரணமின்றி சேமித்தது பெண் மனது.

“இப்படியே இரு கடைசி வரைக்கும்…மாறிடாத…” என் தலையில் கை வைத்து லேசா என் தலையை ஆட்டிவிட்டு தன் தலை அசைவால், மொழி பார்வையால் விடை பெற்றான்.

உச்சந்தலையில் இறங்கியது ஒரு ஆறுதல் அபிஷேகம்.

திருமணம்.

ரிஷப்ஷன் முடிந்து உணவு உண்ண சென்று மீண்டுமாய் மணமகள் அறைக்குள் நான் உடை மாற்ற நுழையும் வரையும் என்னைவிட்டு ஒரு நொடி பிரியவில்லை அவன். உடை மாற்றி கதவை திறக்கும் போது அவனும் உடைமாறி வாசலில் நின்றிருந்தான்.

அங்கிருந்து கையோடு முதலிரவிற்கு ரிசார்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். தோழியரின் கேலியின்றி அவனுடன் சென்றேன். அதுதான் அவன் திட்டமும். என் மனம் பிறர் வார்த்தையில் வாடிவிட கூடாதாம்.

விவரம் அறியும் வயது வந்த பின் முதல் முறையாக என் படுக்கை அறை பங்கிடபடுகிறது. அதுவும் ஓர் ஆணுடன். இனம் புரியாத பதற்றம். அதே நேரம் அவன் அருகாமையில்  எப்போதும் தோன்றும் ஓர் எல்லையற்ற பாதுகாப்புணர்வு.

சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். விழிப்பு வந்த போது அவன் மேல் கை போட்டிருந்தேன். அவன் விழித்தபடி படுத்திருந்தான்.

“குட்மார்னிங் ஜுஜ்ஜூ”

என் கையை அவன் மார்பிலிருந்து நீக்கிவிட்டு அவன் முகம் பார்த்து திரும்பி படுத்தேன். இன்னும் தூக்கம் எனக்குள் மிச்சமிருக்கிறது.

“தூங்கனும் ஸ்வரூப்”

“ம்..நானும்….நைட் ஃபுல்லா தூக்கமே வரலை…”

“ஏன்?”

“இதுவரைக்கும் என் பெட்ல யாரும் தூங்கினது கிடையாதா…நீ வேற உன் கைய என் மேல போட்டியா….” இயல்பாய் சொன்னான். அவன் பேச்சு தாபத்தை பற்றியதல்ல. புதிய பழக்கத்திற்கு தகவமைதலை குறிப்பிட்டான்.

என்னைப் போலவே இவனும். மனதிற்குள் எண்ணம்.

ஏனோ அந்நொடி அவனுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஒரு மெல்லிய சுவர் உடைந்ததாக இப்பொழுது தோன்றுகிறது.

நாங்கள் ஒரு டீம் என்ற உணர்வு தாண்டி நானும் இவனும் ஒன்றே என்ற நிலைக்கான முதல் அடி அந்த நொடிதான். இவனும் என்னை போன்றவன் என்ற அந்த உணர்வுதான். அவன் ஆண் என்ற ஒதுக்கம் என்னுள் அடியோடு காணாமல் போனது.

ருகில் தெரிந்த அவன் முகத்தின் கேசகற்றை கை நீட்டி கலைத்தேன். மனதில் தாய்மை..

இழுத்து அவன் மார்பிற்குள் புதைத்தான். மறுக்க தோன்றவில்லை. தூங்கிப் போனோம்.

மீண்டும் விழிப்பு வரும் போது அவன் அணைப்பிற்குள் என்னை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். தொட்டால் வராத தூக்கம் இப்பொழுது வந்ததெப்படி?

புன்னகை என் இதழில். மனமோ அவனுக்கு தாய், சகோதரிகள் கிடையாது என்ற ஒரு நினைவை கொண்டு வந்து கோடிட்டது.

அவனது தேவை அன்பு.

அணைப்பில் அவன் தூங்கிய காரணம் புரிந்தது.

என் தனிமை கடலின் முடிவுத் துறை அவனானால் நானும் அவனுக்கு அதுவாய் மாற அழைக்கபட்டவள்தானே?  ஆனால் அதற்கான சிறு எதிர்பார்ப்பை கூட வெளிபடுத்தாமல் என்னை மட்டுமே அவன் பயணத்தின் இலக்காக கொண்டு இவன் இந்த ஸ்வரூப் என்ன செய்கிறான் இத்தனை நாள்?

அவன் மேல் மரியாதை ப்ராவகம். அவன் என் கணவனாய் இருப்பதில் ஒரு ஜெய உணர்வு. பெருமிதம். ஆசீர்வதிக்கப் பட்டவள் நான். கடவுள் என்னை வெறுக்கவில்லை.

முதன் முதலாக அவன் மேல் அக்கறைப் பட தொடங்கினேன். இத்தனை நாளாய் அவன் பக்கத் தேவையை நான் யோசிக்கவே இல்லையே? குற்ற உணர்ச்சி மனதில். அந்த நொடியில் இருந்து அவனுக்கு என்ன வேண்டும் என கவனிப்பது என் முதல் வேலை ஆயிற்று.

மனம் சொன்னது இதன் பெயர் அன்பு. காதல் என்று வரும்?

Next Page