கற்றது காதல் (2)

“அப்பா நாம யுஎஸ் மூவாகிறது நல்லதுன்னு நினைக்கிறார். இப்போதான் அங்க நம்ம நியூப்ராஜக்ட்ஸ் லான்ச் செய்றோம். எனக்குமே நம்ம பிஸினஸுக்கு அதுதான் சரின்னு தோணுது….தம்பி இந்த இயர்ல இருந்து இங்க அப்பா கூட பிஸினஸ் பார்ப்பான்….நாம டெட்ராய்ட் போலாமா?”

அவன் கேட்ட விதத்தில் எனக்கு சிரிப்பு வந்தது. போக தேவை என்றால் போய்த்தானே ஆக வேண்டும். இதில் என் சம்மதம் கேட்டு கொண்டு இருக்கிறான்.

கிண்டலாக தான் சொன்னேன். “எனக்கு பிடிக்கலைனா?”

“யூஎஸ் ப்ராஜக்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவேன்…..” சாதாரணமாக சொன்னான். அவன் வார்த்தை நூறு சதவிதம் உண்மை என எனக்கு புரிந்தது. நிச்சயம் செய்வான். அதிர்ந்து போனேன்.

அதையும் விட என்னை அதிகமாய் தாக்கியது அவனுக்கு என் மறுப்பில்  வருத்தமோ வலியோ எரிச்சலோ எள்ளளவும் இல்லை என்பதுதான்.

நான் விழித்த விதத்தைப் பார்த்து விளக்கம் சொன்னான்.

“தனக்கு பிடிக்காத இடத்தில போய் யாராலயாவது வருஷ கணக்கா இருக்க முடியுமா? அதுவும் பணத்துக்காக என் பொண்டாட்டி போய் இருக்கனும்னு என்ன அவசியம்? “

என்னை விட என்னை அதிகமாக நேசிக்க ஒரு ஆணால் முடியுமா?

என் பிறந்த வீட்டிலும் தொழில் காரணமாக சிலமுறை இடம் பெயர்ந்திருக்கிறோம்தான். ஆனால் ஒரு பொழுதும் என் உணர்வுகள் பற்றி நான் உட்பட யாரும் ஆராய்ந்ததில்லை. தேவை என்றால் சென்றாக வேண்டும். அவ்வளவே.

பிறந்த வீடு என்பது குழுவில் ஒருவராக நேசிக்கபடும் வகை. திருமணம் என்பது நீ மாத்திரமே என் மொத்த காதலின் கொள்கலன் என்றாவதா?

For this reason a man will leave his father and mother and be one with his wife

என்று வேதாகமம் சொல்லும் நிலை இவன் காதல் வகை.

காதலிக்கிறேனோ காதலிக்காமல் போறேனோ ஆனால் இவனுக்கு பதில் செய்ய வேண்டும்.  இந்த அளவுகடந்த அன்பிற்கு  எப்படி பதில் செய்ய?

டெட்ராய்ட் கிளம்பிவிட்டோம்.

 

டெக்ஸ்டைல் படித்த என்னை அவனது ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனத்திற்கு தினமும் அழைத்துக் கொண்டு போவான்.

அத்தனை பற்றியும் என்னிடமும் விளக்கி அவன் கருத்தையும் தெரிவித்து அதன் மீது என் பார்வையையும் கேட்ப்பான்.

“இதில எனக்கென்னப்பா தெரியும்…?”

“தெரிஞ்சிருக்க வேண்டியது நிர்வாகம்தான் ஆட்டோ மொபைல்ஸ் இல்ல..”

அவன் பார்வை சூழலைத் தாண்டி இருக்க இதுவரை நேர்ந்ததில்லை.

தினமும் இரவு வீடு வந்ததும், டின்னருக்குப் பின்,  சோஃபாவில்  படுத்துக் கொண்டு டி.வி பார்ப்பான். நியூஸ்.

அவன் தலைப்புறம் அமர்ந்து முடியை காலைப்பதில் எனக்கும் ஆர்வமே. சில நாட்கள் கலைத்த என் கரம் பற்றியபடி அப்படியே தூங்கியும் போயிருக்கிறான். அவன் தாயை சில மணி நேரங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்த உணர்வு தோன்றும் என்னுள். அப்படி அவன் என் கைபிடித்து தூங்கிய ஒரு நாள் அவனாய் விழிக்கும் வரை காத்திருந்ததற்குதான் முதன் முதலாய் அவன் கோபத்தைக் காண நேர்ந்தது. சிரிப்பு வந்தது எனக்கு.

“போடி என்னைப் பார்த்தா கோமாளியாவா தெரியுது….கோபபட்டா சிரிக்கிற…”

என் வீட்டில் வாடி போடி என்று டி போட்டு பேசும் வழக்கம் தபூ. என் முன் மற்றவரை பேசினாலே எரிச்சல் படுவேன். என்னை யாராவது பேசிவிட்டால் பாவம் அவர்கள். கடி நாயை  என்னில் பார்க்க நேரிடும். ஆனால் இவன் சொல்லும் இந்த போடி மனதிற்குள் உரிமை நிலை, கிளர்வு மழை எல்லாவற்றையும் கொண்டு வருகிறது.

 

தினமும் படுக்கையில் மனதிற்கு தோன்றியதை எல்லாம் அலசுவோம். அப்படி ஒருநாள்.

“என்னை முதல்ல எப்படிப்பா தெரியும்? எப்ப பார்த்தீங்க? எப்படி கல்யாணம் செய்யனும்னு முடிவு செய்தீங்க…“

முன்பும் இதுபோல் கேட்டிருக்கிறேன் தான். ஆனால் ஏதோ ஒன்று இல்லாமல் ஒன்று என இதற்கு பதில் கேட்கும் சூழல் இல்லாமலே போயிருக்கிறது.

இன்று என்னை இழுத்து அணைத்தான். திருமண இரவிலிருந்து இப்படி ஒரு பழக்கம். அவ்வப்பொழுது அணைப்பான்தான். என் மனம் கனியுமே தவிர இப்படியாய் பதறியதில்லை. இன்றைய அணைப்பு என்னை எதிலிருந்தோ பாதுகாப்பதற்கான ஆயத்தம். ஆக வரப்போவது துன்பமா?

“சொல்றதை சரியா புரிஞ்சிகிடனும்டா….தப்பா எடுத்துக்க கூடாது…”

“ம்” வாய்சொல்ல மனமோ என்ன வரப் போகிறது என்ற தவிப்பில் நின்றது.

“மெட்டில்டா மேரேஜ்க்கு நானும் போயிருந்தேண்டா….”

தாய் பறவை இறகிற்குள் சிறைப் பட்டிருந்த குஞ்சாய் அவனுக்குள் இருந்த நான் தலை நிமிர்த்தி விழி உயர்த்தி அவன் கண்பார்க்க முயற்சித்தேன்.

இன்னுமாய் இறுகியது அவன் பிடி. முதல் முறை சொன்னான்.

“ஐ லவ் யூடா”

என் உச்சந்தலையில் முதல் முத்தம்.

அவன் மார்பிற்குள் கண் மூடிக் கொண்டேன்.

நிச்சயம் விஷயம் பெரிது. ப்ரின்ஸ் பற்றியது.

திருமணத்திற்கு முன்பும் ஸ்வரூப்பிடம் ப்ரின்ஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அலுவலகத்தில் உடன் வேலை செய்தவர். நண்பர். இறந்து விட்டார் என்பதாக.

காதலை மறைத்ததின் காரணம் திருமணத்திற்கு நான் சம்மதித்த நாளிலிருந்துதான்  என் மீது உரிமை என்னை மணக்க இருப்பவனுக்கு வருகிறது. பழைய கதை அறிந்து தேவை இல்லாமல் எங்கள் வாழ்வை அவன் ஏன் வலியுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். அதோடு ப்ரின்ஸ் பற்றி நான் அணைத்தையும் குறிப்பிடவில்லையே தவிர பொய் என்றும் எதுவும் சொல்லவில்லை.

மற்றபடி ப்ரின்ஸ் பற்றி பேசிக்கொண்டதில்லை.

மெட்டில்டா மேரேஜ் சென்று திரும்பும் வழியில்தான் ப்ரின்ஸ் இறந்ததே.

ப்ரின்ஸ் பற்றி இவனுக்கு தெரிந்திருக்கிறது.

இனி வரப் போவது என்ன?

விழுமோ இடி தலையில் நான் ஆயத்தம் இவன் கரத்தில். இறுகினேன்.

 

“மேரேஜ் முடிஞ்சு திரும்பி ஈசி ஆர் ல வந்துட்டு இருந்தப்ப என் கார்க்கு முன்னால போன கார் ஆக்ஸிடெண்ட் ஆகிட்டு. இடிச்ச லாரி நிக்காம போய்ட்டான்.

மேரேஜ் முடிஞ்சதும் நாங்க அதாவது நானும் ப்ரின்ஸும் அவங்க அவங்க கார்ல கிளம்பி இருந்தோம்….மத்தவங்க ரிஷப்ஷ்னுக்காக வெயிட்டிங். ரோட்ல எங்களை தவிர வேறு கார் கிடையாது. அவர் அதுக்கு முன்ன அறிமுகம் கிடையாதுன்னாலும் கல்யாண வீட்டுக்கு வந்தவர்னு தெரியும்.

அவசரமா போய் ஃபர்ஸ்ட் எய்ட் செய்து ஆம்புலன்ஸ் போலிஸ் எல்லாத்துக்கும் ஃபோன் செய்தேன். உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். ப்ரின்ஸ் இறந்தது ஸ்பைனல் கார்ட் இஞ்சுரியில்.

சோ அப்ப அவர் லைஃப்க்காக ஸ்டரகிள் பண்ணிட்டு இருந்தார். அவர் பர்ஸில் இருக்கிற ஃபோட்டோவை எடுத்து டிஸ்கார்ட் செய்ய சொன்னார். அவரால…. அது முடியல.

தான் இறந்திடுவோம்னு அவருக்கு தெரிஞ்சிட்டு….அந்த போட்டோ போலிஸ் கைக்கோ மத்தவங்கட்டயோ போறது அவருக்கு இஷ்ட்டமில்லை. அதனால நான் எடுத்து வேகமா கிழிச்சு போட்டேன். அந்த நேரம் ஒரு செகண்ட் அந்த பொண்ணு ஃபேஸ் கண்ணில பட்டுது……

இயல்பில அந்த நேரம் இப்படி யாருக்கும் தோணுமான்னு தெரியல. ஆனா எனக்கு தோனிச்சு. அதுதான் என் வைய்ஃப்னு….

அடுத்த முத்தம் என் உச்சந்தலையில் பதித்தான் ஐஸ் கட்டியாய் பட்டது அவன் உதடுகள்.  என் தலை கொதித்துக் கொண்டிருந்ததே காரணம்.

 

“ப்ரின்ஸ்க்கு ஃபைனல் ப்ரேயர்… நானும் சேர்ந்து செய்தேன்….உனக்காகவும் அவர் செய்துகிட்டார்….”

சுட சுட விழுந்தது என் தலை மேல்  கண்ணீர். ஸ்வரூப் அழுகிறான்.

“நான் எதுவும் சொல்லலை ஆனா அவருக்கு என்ன புரிஞ்சிதுன்னு தெரியலை நதிய பார்துபீங்கன்னு தெரியுது என்றார். நிச்சயமான்னு சொன்னேன். சிரித்தபடியே ப்ரேயர் செய்துகிட்டே ஜீசஸ்ட்ட போய்ட்டார்…..

உன்னை ட்ரேஸ் பண்றது ஒன்னும் கஷ்டமா இல்ல. நீ ரெக்கவர் ஆகனும்னு ஒரு மூனு மாசம் கழிச்சு உங்க அப்பாட்ட பெண்கேட்டேன்….இல்லனா உங்கப்பா வேற மாப்ள பார்ப்பாங்களேன்னு…..”

ஆனா உங்கப்பா வச்ச சுயவர டெஸ்ட்தான் எனக்கு பக் பக்குனு இருந்தது.  அத்தனை கேள்வி அத்தனை ஆராய்ச்சி. ..அப்புறம் நீ எனக்கு மெயில் பண்ண பிறகுதான் நான்  செலக்ட் ஆகி இருக்கேன்னு…”

அவன் கைகளில் இருந்து என்னை உருவிக் கொண்டு கட கட வென அறையைவிட்டு வெளியேறினேன்.

“போங்க என்ட்ட பேசாதீங்க….எனக்கு உங்கள பிடிக்கல….சுத்தமா பிடிக்கல…நான்  போறேன்…”

“ஹேய்…என்னாச்சுடா…” அவன் பதறியபடி பின் வருவது புரிந்தது. அவசரமாக கீழ் தளத்திலிருந்த அறைக்குள் அடைந்து தாழிட்டேன்.

“உன்ன இரக்கபட்டெல்லாம் நான் கல்யாணம் பண்ணல ஜுஜ்ஜு…”

நெக்ஸ்ட் ஃப்ளைட்டில் டிக்கெட் புக் செய்யனும் இனி இவனைப் பார்க்கவே கூடாது….அது மட்டும்தான் அறிவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

 

ல்லாம் தெரிந்தும் இவன் என்னிடம் சொல்லவில்லை…..ப்ரின்ஸ் என் நண்பன் என்று இவனிடமே நான் சொல்லி இருக்கிறேன்…அதை  கேட்ட போது என்னைப் பார்க்க இவனுக்கு என்னவாக தோணி இருக்கும் …அவமானமாக உணர்ந்தேன்.

ஏமாற்றபட்டது போல் ஒரு உணர்வு. கோபம், அவமானம்.  இப்படி எதுவெல்லாமோ என்னில் அலை அடிக்க இங்கிருந்து ஓடி விட வேண்டும் என தோன்றுகிறது.

லாப்டாப்பை உயிர்ப்பித்தேன். கை நடுங்குகிறது. டிக்கெட் புக் பண்ணனும்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்…..என்ன பண்ற …தயவு செய்து வெளிய வா…..”

நடுங்கிய கையை இறுக்கினேன். ப்ரவ்சரை கிளிக்கினேன்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்…..என்ன பண்ற?”

தீவிரமாய் என் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தேன்.

வென் ஸ் த நெக்ஸ்ட் ப்ளைட்? தேட தொடங்கினேன்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்…..என்ன பண்றன்னுமட்டுமாது சொல்லு?..”

“ஊருக்கு போறேன்….டிக்கெட் புக் பண்றேன்….”

அடுத்து அவனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.

இப்போ நான் என்ன செய்துகிட்டு இருந்தேன்…?

கதவை தட்டுவதை கூட நிறுத்திவிட்டான்.

நான் டிக்கெட் புக் பண்ணனும். எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

கண் நிறைத்து நிற்கும் நீரைத்தாண்டி மானிட்டரில் என்ன எழுதி இருக்கிறது என தெரியவில்லை.

இது என்ன பேஜ்?

கண்ணை துடைத்துக் கொண்டு திரும்ப திரும்ப வாசிக்கிறேன். என்ன வாசிக்கிறேன் என்றே புரியவில்லை.

டிக்கெட் புக் பண்ணனும். மீண்டுமாய் ஞாபக படுத்துகிறேன்.

எந்த ஊருக்கு….? ஞாபகம் வரவில்லை.

.மரத்துவிட்டிருந்தது அறிவு.

எங்க போகனும்…? ஞாபகம் வரவில்லை

ஸ்வரூப்பை விட்டு போகனும் அது மட்டும்தான் இதயத்தில்.

நெஞ்சு அறுபடுவது போல் உள்ளே ஒரு உணர்வு.

உயிர் வலிக்கிறது.

ஓ உடலில் உயிர் இங்குதான் இருக்கிறதா?

கைகள் மட்டுமல்ல மொத்த உடலும் ஒத்துழையாமை இயக்கம்.

எல்லாம் துவள்கிறது.

.

ன் மொத்த மனமும் ஆன்மா அனைத்தும் அவனைப் பிரிய பேர்விளைவு கொள்ள எதோ ஒன்று என் மனம் அதன் வேரான ஆன்மா அனைத்தையும் தாண்டி படு வல்லமையாய் என்னை  அவனோடு சேர்த்து பிணைக்கிறது. முதல் முறையாக உணர்கிறேன் அந்த எதோ ஒன்றை.

அவனை விட்டுட்டு என்னால இருக்க முடியாது…அவன்ட்ட பேசாம என்னால முடியவே முடியாது…அவனைத்தவிர நான் போக விரும்புற இடம் ஒன்னுமே இல்ல…எதோ ஒன்று ஓலமிட

அவன் உன்னை கூப்பிடுவதை நிறுத்திவிட்டான் பார்….

நீ போறதில் அவனுக்கு ஒன்னும் இல்ல போல….மனம் அலையடிக்க

உள்ளிருந்த அந்த பிணைப்போ அவன் பேச நிறுத்தினதுல இருந்து உன் நிலைய யோசிச்சு பாரு…உன் மூளை உடம்பு ஒன்னுமே வேலை செய்யலை….அவன பிரிஞ்சு உன்னால ஒரு நொடி சமாளிக்க முடியல….இதுல எப்படி வாழ்க்கைக்கும்….

வாழ்கைக்கும் அவன பார்க்காமல்…நினைவில் மூச்சடைத்தது…..

அவன் சத்தமே இல்ல அவன் என்ன செய்றானோ…பிணைப்பு பேச

விழுந்தடித்துக் கொண்டு போய் கதவைத் திறக்கிறேன்.

கதவருகில் செயலற்று நிற்கிறான் அவன். அவனை செயலற்று பார்ப்பது இதுவே முதல் முறை.

அவனைப் பார்த்ததும் மனம் ஆன்மா அந்த எதோ ஒன்று எல்லாம் அதன் முன்னிலையாம் இயல்நிலை அடைய மூச்சிலிருந்து முழு உடல் வரை எல்லாம் சரி நிலை அடைய மனதில் மிச்சமிருப்பது ஒரே கேள்வியும் அது சார்ந்த கோபமும் தான்.

“நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா….செத்தா மட்டும்தான் உங்களுக்கு ப்ரச்சனையா?..” வெடித்தேன்.

அவன் அணைப்பின் வேகத்தில் எலும்பு நொறுங்கிவிடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் அது வலிக்கவில்லை.

“சொல்லுங்க…நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா?” கோபம் கூட காணமல் போய் இது வெறும் சிணுங்கலாய் செல்ல குழைவாய் வருகின்றது.

“லூசாடி நீ …ஊருக்கு போறதுன்னா இந்த வழியாதான வருவ….. “ சில நொடி மௌனம்.

ஒரு நிமிஷத்தில மனுஷன சாகடிச்சிட்ட…”

“ஐ லவ் யூ ஸ்வரூப்”

 

ஐந்து வருடங்களுக்கு பிறகு:

“இப்போ எங்களுக்கு 3 வயசில ஒரு பையன் இருக்கான். அடுத்த குட்டிக்கு ட்யூ டேட் வர்ற 31. கேர்ள் பேபின்னு ஸ்கேன் ரிப்போட் சொல்லுது. ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கோம். ”

அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு காதல் எப்பதான் வந்துச்சு? இதுதான் என் கண்டு பிடிப்பு.

கல்யாணத்துக்கு முன்ன கைசேராமல் கலையவென வர்ற காதலாகட்டும் கல்யாணம் செய்ய போறவன் மேல வர்ற காதலாகட்டும் அது காதலோட நறுமணம் மாதிரி. மனசுக்கு பிடிக்கும்.  அதை நம்மால உணர முடியுது. ஆனால் கல்யாணம் காதலோட உடல். இங்க காதல் மூச்சு திணறல் வந்தா மட்டும்தான் தனியா உணர்ற சுவாசம் மாதிரி. சாதாரண நேரத்தில் ரொம்ப இயல்பானது. தனித்து உணர முடியாது. பிரிவுன்னா மட்டும்தான் தெளிவா வலிக்கும். மூச்சு விட ஆரம்பிச்ச நொடிய எப்படி கண்டு பிடிக்க?”

அப்புறம் இந்த காதலை கற்றறிந்ததில் நான் புரிஞ்சிகிட்ட  இன்னொரு விஷயம் துன்பம் முடிவல்ல, அது நன்மையின் தொடக்கம். உங்களால் தாண்டமுடியாத தாங்க முடியாத துன்பம் உங்களுக்கு நேரிடாது. எந்த துன்பமும் இழப்பும் உங்களை நன்மையிடம் மாத்திரமே நடத்திச்செல்லும். எதை இழந்தாலும் ரெண்டு மடங்காய் நன்மை திரும்பி வரும். அதை அனுபவிக்க உங்களுக்கும் காலம் வரும். துன்பத்தை தாண்டிய பின் வரும் தைரியத்தின் மறு பெயர் விடுதலை.

                                                                                          இப்படிக்கு,                                                                                

                                         திருமதி. ஜீவநதி தற்சொரூபன்.

18 comments

  1. Hai sweety
    எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை முதல்முறையாக ஒரு கதை வாசித்ததால் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசித்து விட்டேன். இது முதல் அனுபவம்.
    நன்றி அன்னா.

Leave a Reply