கனியாதோ காதலென்பது 2

இவள் கைபிடித்தவனோ இவள் சொன்னதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவித முகபாவத்துடன் அந்த வீட்டின் முகப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். பீப் ஹோல் முன்பு இவளை நிறுத்தினான்.

“எதுவும் ப்ரச்சனையாயிராதே?!”

“இல்ல, ஆண்துணை இல்லாத வீடு, சமாளிச்சிடலாம்.”

“ஹான்!?…………எப்படி கண்டுபிடிச்சீங்க?….”

“காய்றது எல்லாமே லேடிஃஸ் வியர். குழந்தைங்க இல்ல. பொண்ணுங்களும் அம்மாவும் இருப்பங்களா இருக்கும்.”

“அதெப்படி………….இனிமே அவங்க துணியை துவைப்பாங்களா இருக்கும், இல்லனா முன்னமே துவச்சிருப்பாங்களா இருக்கும்?”

அப்படி தனி தனியா துவைக்கிறவங்க இப்படி மொத்தமா இவ்ளவு துணி காயபோட்டிருக்க மாட்டாங்க. ஒரு வாரத்துக்குள்ளது காயுது. வீட்டு பொண்ணுங்க வேலைக்கு போறாங்களா இருக்கும்”

“அ…”

அடுத்த கேள்வி இவள் ஆரம்பிக்கும்போது….ஆள் நடமாட்டம் கதவருகில் கேட்க்க பேச்சை நிறுத்தினாள்.

உள்ளிருந்து ஏதோ ஒரு கேள்வி கேட்டது ஒரு பெண்குரல். இவன் இவள் காதில் எதையோ அந்த பாஷையில் முனுமுனுக்க அதை அப்படியே ஒப்புவித்தாள். அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது.

திறந்த பெண்ணிண் முகத்தில் அவனையும் கண்டதும் திகைப்பு. அவனை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் ஏதோ நீளமாக சொல்ல அந்த பெண்முகம் இயல்பாகிவிட்டது. இவளிடமாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தாள்.

உள்ளே அழைத்து சென்று ‘குளிருக்கு இதமாக டீ சாப்பிடுங்கள்” என உபசரித்தவள் தன் மற்ற சகோதிரிகளையும், தாயையும் அறிமுகம் செய்துவித்தாள்.

உள்ளறை ஒன்றுக்கு அழைத்து சென்று தன் உடைகளை காண்பித்தாள்   ”துரத்தினவங்களுக்கு அடையாளம் தெரியாதமாதிரி இதில் ஏதாவது போட்டுகோங்க” என்றவாறு.

கண்கள் இயல்பாக அவனை தேடின.’எது சரியாக வரும்?’

அந்த பெண்ணோ சிறு புன்னகையுடன் “எல்லாமே உங்களுக்கு உங்க ஹஃஸ்பெண்ட் தான் போல” என்றபடி வெளியே சென்று அவனை அழைத்தாள்.

உள்ளே வந்தவன் ஆடைகளின் மேல் தன் கண்களை ஓடவிட்டான், மறுநொடி ஒரு மஞ்சள் நிற டாப்ஃஸையும், பெரிது பெரிதாய் மஞ்சள் நிற பூக்கள் வரைந்திருந்த க்ரீம் நிற ஸ்கர்ட்டையும் அவளிடிடம் காண்பித்தவன்

“டேக் திஸ் பேபி” என்றான். நடிப்பு என தெரிந்தாலும் அவனது பேபி இனித்தது.

அவன் சொன்ன உடையை இவள் கை எடுத்தாலும், அடுத்தவர் உடையை எடுக்கிறோமே ஏதாவது அந்த பெண்ணிற்கு கொடுக்கவேண்டுமே என மனம் பரபரக்க அதற்கும் அவனைத்தான் பார்த்தாள்.

அவனோ இவளை ஆறுதலாக பார்த்தான். அதில் ஒரு மெச்சுதலும் தெரிந்தது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற செய்தியும் இருந்தது. ஒரு மேடை போட்டு யாரும் பாராட்டு விழா நடத்தியிருந்தால் கூட அப்படி மகிழ்ந்திருக்கமாட்டாள் நிரல்யா, மிகவும் மகிழ்ச்சியாகி போனாள் பெண்.

மற்றவர் வெளியேற இவள் அந்த உடைக்கு மாறி அவள் களைந்திருந்த உடையை அவன் பேக்கிற்குள் திணித்தாள். கதவை திறந்து இவள் வெளியே செல்ல எத்தனிக்க சட்டென உள்ளே வந்து கதவை தன் பின் அடைத்தவன் “இப்படியா வெளியே வருவ?” என கடிந்தான்.

அங்கிருந்த ஒரு மஞ்சள் வண்ண துப்பட்டாவை எடுத்து இவள் கண்கள் மாத்திரம் தெரியும்படி முகத்தை மறைத்து முக்காடிட்டு பின் செய்தான். “பின்னால எப்பவாவதுகூட இவங்களுக்கு உன்னை அடையாளம் தெரிய கூடாது.”

இவள் கை பிடித்து வெளியே அழைத்து வந்தவன், அவளுடன் அடுத்த அறையில் படுக்கையிலிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்று ஏதோ பேசினான், அவர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். இவன் கன்னத்தை தன் நடுங்கும் கரத்தால் தொட்டவர் ஏதோ சொன்னார். அவர் ஆசீர்வதிக்கிறார் என மொழி தடைகளை தாண்டி புரிந்தது நிரல்யாவுக்கு. பெருமிதமாக உணர்ந்தாள் அவள்.

நன்றி கூறி விடை பெறும் போது ஒரு கற்றை பணத்தை எடுத்து இவர்களிடம் சகஜமாக உரையாடிய பெண்ணிடம் கொடுத்தான். முதலில் மறுத்தாலும் இவன் வார்த்தையில் கண்களில் நீர் பளபளப்புடன் அவள் வாங்கிக் கொண்டாள்.

மீண்டும் நடைபயணம் தொடங்கியது.

“அவங்க அம்மாட்ட என்ன பேசினீங்க?”

திரும்பி இவளை இது கூட தெரியாதா?ங்கிற மாதிரி ஒரு பர்வை பார்த்தவன், என்ன நினைத்தானோ பதில் சொன்னான். “தனியா படுக்கையிலிருக்கும் பெரியவங்களுக்கு தேவையான முக்கிய மருந்து விசிட்டர்ஸ். அடுத்தபடியா சந்தோஷமான பேச்சு. என்னால முடிஞ்சதை செய்தேன்”

அவனை பற்றிய மதிப்பும் பிரமிப்பும் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டு போனது இவள் இதயத்துள். ‘இந்த தலைக்கு மேல் கத்தியுள்ள சூழலில் இவனால் இப்படி எப்படி அடுத்தவர்களை பற்றி யோசிக்க முடிகிறது?’

“ம், உன்னால இப்ப அவன ஆராய்ச்சி பண்ணமுடியுதுல்ல அப்படிதான்……….”  அறிவு அதன் கடமையை செய்தது.

‘ம்ஹும், இது பேச்சை இப்ப கேட்டா இருக்கும் நிம்மதி போயிடும்.’ கவனத்தை திசை திருப்பினாள்.

“என்ன சொல்லி சமாளிச்சீங்க?”

“நடந்து பீச்சுக்கு வந்தோம், திடீர்னு யாரோ துரத்துறாங்க, அவ ரொம்ப பெரிய இடத்து பொண்ணு, ரகசியமாத்தான் வந்தோம், இருந்தும் இப்ப ப்ரச்சனை, அதனால, அவ அடையாளம் தெரியாத மாதிரி டிரஃஸ் மாத்திகிட்டா பத்திரமா போயிடுவோம்னு சொன்னேன்.”

ஒரு கணம் அவன் பேச்சை ரசித்தாள். ஒரு வார்த்தை பொய்யில்லை ஆனால் இவர்கள் ரகசியம் படு பத்திரமாக இருக்கிறது.

“இதையா நம்பிட்டாங்க?”

“நம்புறது நம்பாத்துங்கிறதே இங்க விஷயம் கிடையாது. தன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ப்ரச்சனைனா சராசரியான எந்த பொண்ணும் ஹெல்ப் பண்ணதான் செய்வாங்க. ரொம்ப யோசிக்கமாட்டாங்க. லேடிஃஸ், ரொம்ப உணர்ச்சி பூர்வமானவங்க, அவங்க எடுக்கும் முடிவுகள் உணர்ச்சி அடிப்படையில் தான் இருக்கும்.”

“அப்ப எங்களுக்கு அறிவில்லங்கிறீங்களா?” மிளகாய் கடித்தவள் முக பாவத்துடன் கேட்டாள்.

“நீ இதுக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசபடுற? உனக்கு அறிவில்ல, எனக்கு உணர்ச்சி இல்ல அப்படின்னலாம் நான் சொல்லவேயில்லையே! ரெண்டு பேரும் ஒரு பிரச்சனையை அணுகும் விதம் வித்யாசமா இருக்கும். ஆனா ரெண்டு வித அணுகுமுறையும் அவசியம். அறிவு பாதுகாக்கும்னா உணர்வுதான் உயிர் நாடி ஒவ்வொரு குடும்பத்துக்கும். பொண்ணுங்க கையாலதான் கடவுளே குடும்பத்த கட்றாருங்கிறது என் நம்பிக்கை. அதனால என் கூட சண்ட போடுறதை விட்டுட்டு, கிளம்ப பாரு.”

மே…………லே தூக்கி கீழே போடபட்டது போல் உணர்ந்தாள் நிரல்யா. ‘கிளம்பனுமா?’

“இப்ப என்ன செய்யனும்?” தளர்ந்து ஒலித்தது அவள் குரல்.

“உங்கப்பாவுக்கு நீ ஃபோன் செய்யனும்!”

“வாட்? பிறகு உங்கள பத்தி தெரிஞ்சிடாதா? நம்பரை டிரேஃஸ் பண்ணமாட்டாங்களா?”

“பார்த்துகிடலாம்” என்றவன் ஒரு இருளான இடத்தில் அவளோடு ஒதுங்கினான். தன்னிடமிருந்த ஒரு சிறு கையடக்க கருவியை கொடுத்தான். “இதிலருந்து உன் அப்பாகிட்ட பேசு, தமிழ்ழ பேசு. கடத்தி வந்தவன் என்னையும் சேர்த்து இழுத்துகிட்டு கடல்ல குதிச்சான், நான் தப்பிச்சிட்டேன். நான் இப்ப இந்த நாட்டு சீ ஷோரில் இருக்கேன். நம்ம எம்பசிக்கு போகவா, இல்ல கடலுக்குள்ள வந்துடுறேன், அங்கிருந்து கூட்டிட்டு போறீங்களான்னு கேளு, அவர் சொல்றதை செய்யலாம்.”

“பட் ஃபோன் பத்தி கேட்டால்…………”

“என்னை கடத்தினவன் ஃபோன்னு சொல்லு. இது அவனிதுதான்.”

“டிரேஃஸ் பண்ணிணால்………….உங்களை பத்தி……………..”

“தெரிய வராது, டிரேஃஸ் பண்ணவே முடியாது. இது லேட்டஃஸ்ட் டெக்னாலஜி”

“ஓ”

ஃபோனை கையில் வாங்கிக் கொண்டாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடல் தளும்பிக் கொண்டிருந்தது அவள் மனதை போல. ‘இன்னும் எவ்வளவு நேரம் இவனோடு?’ ‘இனி என்று பார்ப்போம் இவனை?’

“இனி நாம எப்ப மீட் பண்ணலாம்?”

அதிர்ந்து பார்த்தான் அவன்.

“ஹேய் உனக்கு ஏன் இப்படிபட்ட விபரீத ஆசையெல்லாம் வருது………… நான் உயிரோட இருப்பது உனக்கு பிடிக்கலையா?”

சட்டென தன் மென் கரத்தால் அவன் வாயை மூடினாள்.

“நான் உயிரோடு இருக்கிறவரை நீங்களும் இருக்கனும் ஆரிக்…… நீங்க எப்படி திரும்பி போக போறீங்க, எங்க போக போறீங்க, ஏன் உங்க பெயரென்ன எதுவுமே எனக்கு தெரியாது. தெரிஞ்சிகிடும் உரிமையும் எனக்கு கிடையாது. ஆனால் கண்டிப்பா நான் உயிரோடு இருக்கிறவரை நீங்களும் இருக்கனும்….நீங்க இல்லாத உலகத்தில என்னால இருக்க முடியாது..”

அவள் கண்களில் நீர் வழிய, உணர்ச்சியற்று பார்த்திருந்தான் அவன்.

“ப்ளீஃஸ் உங்க மெயில் ஐ டி யாவது தாங்களேன்………….”

“ப்ளீஃஸ் நிரல்யா, அது எனக்கு எவ்வளவு ரிஸ்க்னு யோசி..”

“சரி வேண்டாம் என் ஐ டி தாரேன் “ என தன் ஐ டி யை ஒப்புவித்தவள், “நீங்க ஸேஃபா உங்க வீட்டுக்கு போய்ட்டீங்கன்னு மட்டுமாவது மெயில் பண்ணுங்க……பெரிசாகூட வேண்டாம் ஒரே ஒரெ ‘எஸ்’ மட்டும் டைப்பண்ணி அனுப்புங்க, ஏதாவது ஒரு மெயில் ஐ டி யிலிருந்து அனுப்புங்க. என் வாழ்நாளுக்கும் அந்த ஒரு மெயில் போதும்..”

“நிரல்யா………… ப்ளீஸ்…………….”

“என் ஐ டிக்கு கூட அனுப்ப வேண்டாம்————912014னு ஒரு ஐ டி, ஜி மெயிலில் ஓபன் பண்றேன், அதுவும் ஏதாவது பப்ளிக் ஹப்பிலிருந்து. நீங்க அதுக்கு அனுப்புங்க போதும் ப்ளீஃஸ்  ப்ளீஃஸ்……………”

“நிரல்யா” என்றவன்  அவள் தந்தையின் எண்ணை அழுத்தியே அவளிடம் நீட்டினான். வாங்கி விஷயத்தை அவன் சொன்னவிதமாக சொல்ல அவரும் கடலுக்குள் ரகசியமாக வரச்சொன்னவர், இணைப்பை துண்டித்தார்.

“அப்பா இப்படிதான் சொல்லுவாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு……….எல்லார் மனசையும், நடவடிக்கைகளயும் புரிஞ்சிக்க முடியுற உங்களால என்னை புரிஞ்சிக்க முடியாதா ஆரிக்?……..ப்ளீஃஸ் உங்க பெயரையாவது சொல்லுங்களேன்.”

“நிரல்யா உன் பதினெட்டு வயது, உன்னோட சூழ்நிலைக்கு உன்னிடம் யார் நல்லா நடந்துகிட்டாலும் இப்படிதான் தோணும்….நாலைந்து வருஷம் கழிச்சி நினைச்சு பார்த்தால் உனக்கே இந்த ஆசை, தவிப்பு எல்லாமே யாருக்கோ நடந்ததுபோல உணர்ச்சி பாதிப்பு இல்லாம நினைவா மட்டும்தான் இருக்கும்……….சே இப்படி நடந்திருக்கோமேனு உனக்கே தோணும்…..”

“அப்படின்னா நாலைந்து வருஷம் கழிச்சும் நான் உங்களுக்காக காத்திருந்தால் வருவீங்களா? இன்னும் ஏழு இல்ல எழுபது வருஷமானாலும் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூடதான். நான் எங்கே போனாலும், என்னை எப்படி மீட் பண்ணனும்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க முடியும். நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பதை புரிஞ்சிக்க முடியும். அப்ப நீங்க என்னை தேடி வந்து கல்யாணம் பண்ணுங்க. நான் உங்களை தேட முயற்ச்சியே செய்ய மாட்டேன்… அது உங்களுக்கு ஆபத்துங்கிறதால…..”

அவள் குரலில் இரும்பளவு உறுதி வந்திருந்தது. மனதின் நிறைவை வாய் பேசியது.

“பட் ப்ளீஃஸ் இப்ப இந்த ப்ராஜக்ட் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு ‘எஸ்’ மட்டும் அனுப்பிடுங்க….ப்ளீஃஸ்……” மீண்டும் மன்றாடினாள்.

“நிரல்யா உங்க சாப்பர்ஸ் இந்த பக்கம் வர ஆரம்பிச்சிருக்கும்.”

நேராக சென்று அவர்கள் படகில் ஏறி அமர்ந்து கொண்டாள். சில நொடிகள் கழித்து வந்த அவன் இப்பொழுது காக்கி கார்கோ பேண்ட்ஃஸ் மற்றும் கறுப்பு டி ஷர்ட்டுக்கு மாறியிருந்தான். முகத்திலிருந்த சிறு ஒட்டு தாடி காணாமல் போயிருந்தது. உண்மையன பெருந்தாடியை மறைத்திருந்த மீசை தாடியற்ற மாஸ்க்கை மாஸ்க் என கண்டே பிடிக்காதபடி ஒப்பனை செய்திருந்தான் அவன். தலையில் ஒரு கறுப்பு தொப்பி.

படகு உள்நோக்கி செல்ல முன்பு கல்லோடு கட்டியிருந்த உடையோடு சற்று முன்பு அவன் அணிந்திருந்த குர்தா பைஜாமா, இவள் களைந்திருந்த உடைகள், அணைத்தையும் இணைத்து கடலினுள் புதைத்தான்.

“இத்தனை மாறுவேஷ ஏற்பாடு எப்படி?”

“என்ன பத்தி கேட்க்காத நிரல்யா………”

“ம்……………ஏழு வருஷம் கழிச்சு நீங்களே சொல்லுவீங்க……”

“ப்ளீஸ் இவ்வளவும் செய்துட்டு போறப்ப நான் மனகஷ்டத்தோட போணுமா?”

“ஓ.கே இனி இப்படி பேசலை. பட் அந்த ‘எஸ்’ ஐ மட்டும் அனுப்பிருங்க ஜாஷ்வா ப்ளீஸ்………..”

“என்ன திரும்பவும் ஜாஷ்வா?”

“அதான் கடலுக்கு வந்துட்டமே…………..”

தூரத்தில் ஹெலிகாப்டரின் ஒலி, இவள் முகம் மறைத்திருந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டவன் கடலினுள் குதித்தான்.

“ஜாஷ்வா ப்ளீஃஸ்………ஸேஃபா போங்க……அந்த ‘எஸ்’ ஐ அனுப்பிடுங்க……….நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணபோறேன்……………நீங்க இல்லாம எப்படித்தான் இன்னும் ஏழு வருஷம் கழிக்க போறேனோ?………… ரொம்பவும் உங்களை மிஸ் பண்ணுவேன் ஜாஷ்………….தயவு செய்து என்னை மறந்திடாதீங்க…………. நீங்க என்னை மறக்கமாடீங்க, ஆனால் நான் உங்களை தவிர யாரையும் நினைக்கவே மாட்டேன்…………அவள் கதற கதற தண்ணீருக்குள் திரும்பி பாராது மூழ்கி மறைந்தான் அவன்.

“’பை’ கூட சொல்லாம போய்டீங்களே………..ஜாஷ்..” என இவள் அழ சற்று தொலைவில் நீருக்கு மேல் எழுந்தவன் “குட் பை நிரல்யா” என்றுவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தான்.

பிறகென்ன ஹெலிகாப்டர் அவளை மீட்க்க, வீடு வந்து சேர்ந்தாள். மறு வினாடியிலிருந்து அந்த ‘எஸ்’ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் மறுநாள் ஒரே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த தீவிரவாத காம்புகள் அழிக்கப்பட்ட செய்தி வெளியானது. பல்வேறு நாடுகள் சேர்ந்து அதை நிகழ்த்தியிருந்தன. அதற்கும் இவளது ஜாஷ்வாவிற்கும் நிச்சயம் தொடர்பிருக்கும் என இவளுக்கு புரிந்தது. இத்தனைக்கும் மூளையாக செயல்பட்டது எந்த நாடு என கூட வெளியிடபடவில்லை. அவன் நாட்டின் பெயரே வெளிவராத போது அவன் பற்றிய தகவலா வெளி வரும்? அப்படி தகவல் வருவது அவனுக்கு பேராபத்தாகிவிடாதா?

கேம்ப் டேவிட் என அந்த ஆப்பரேஷன் அழைக்கப்பட்டது. அவனை சி டி ஒன் என குறிப்பிட்டது ஞாபகம் இருந்தது. ஆக அந்த சி டி  கேம்ப் டேவிட். 1 என்றால்……….இவன் தான் தலைவன் அல்லது ஒன் மேன் ஆர்மி. ஏற்ற ஆளைத்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மேல் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவள் முயற்சியும் செய்யவில்லை. இந்த கேம்ப் டேவிட்டில் இவர்கள் பக்க கேஷுவாலிட்டி என எதையும் குறிப்பிடவில்லை. அதனால் அவன் பத்திரமாகத்தான் இருப்பான் என இவள் மனதை தேற்றினாலும், நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக மாறி வருடங்களாக வழிந்தோடிய போதும் அவனிடமிருந்து அந்த ‘எஸ்’ வரவே இல்லை. ‘கல்நெஞ்சன்’ என ஒரு கணம் மனதிற்குள் குமைந்தால் மறுகணம் அவன் உயிருடன் இல்லையோ என எண்ணி துடித்தாள்.

சில வருடத்தில் இந்த உணர்வு உயிரற்றதாகிவிடும் என என்னவோ அவன் சொல்லிவிட்டு போய்விட்டான், ஆனால் இதோ இத்தனை வருடங்களாகிவிட்டது அப்படி எந்த மறதியும் வரவே இல்லை இவளுக்கு.

என்ன ஒருவிதமாக தனக்குள் இறுகி இருந்தாள். எதன் மீதும் ஒருவித பற்றற்ற மனப்பான்மை. ஆனால் விரக்தியோ வெறுப்போகிடையாது. ஆண்டவருடனான உறவு அவளை காப்பற்றி வந்தது. இந்த காதல் விஷயத்தில் கடவுளின் விருப்பம்தான் என்ன? அவசரப்பட்டு மனதை கொடுத்ததின் பலனை பாடாக அனுபவித்தாள்.

அவன் இவளை தேடி வருவான் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ‘வரமாட்டானா’ என்ற ஏக்கம் கொன்றது நிஜம். வேறொருவருடன் திருமணம் வாழ்நாளில் கிடையாது என்பது மட்டும் இவளுக்கு உறுதி.

பி. எச். டி வரை படித்து முடித்தாயிற்று. தந்தையிடம் அனுமதி பெற்று இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் நிறுவ முடிவு செய்து, ஆரம்பகட்டமாக முதல் நிறுவனத்தை அவளது பூர்வீகமான கோயம்புத்தூர் மாநகரில் தொடங்க திட்டமிட்டாள்.

கோயம்புத்தூரில் இடம் பார்த்து முடித்தாயிற்று. பலவித விளம்பரங்கள் ஜெ.சி.டி அகாடமி வரவை கட்டியம் கூறின. ஆம் அதுதான் இவள் நிறுவனத்திற்காக இவள் தெரிந்தெடுத்த பெயர்.

ஜாஷ்வா என வைக்கத்தான் விருப்பம். அவள் அப்பா மறுத்ததோடு, மட்டுமல்லாது ஜெ.சி என வேண்டுமானால் வைத்துக்கொள் என சொன்னபோது பிறந்ததுதான் இந்த பெயர் ஜெ.சி.டி., காரணம் கூட கேட்க்காது அப்பா சம்மதித்துவிட்டார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளை உள்ளடக்கிய வளாகமாக ஜெ.சி.டி ஐ திட்டமிட்டிருந்தாள். அப்பாவே தங்களுக்கு கட்டிட வேலை செய்து தரும் ஒரு மேற்கத்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கூட செய்திருந்தார். கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டிய நேரம். “வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி கலந்து கொள்ள வா” என்றழைத்தார் தந்தை.

என்று இவளுக்கு கடவுள் நம்பிக்கை வந்ததோ அன்றே அவர் இவள் பற்றிய அரசியல் கனவுகளை கைவிட்டிருந்ததால், இப்படி இவளை விருந்து, விழா என எதற்கும் அழைக்கும் வழக்கம் அவருக்கு கிடையாது. கூட்டம், கும்மாளம் இதில் இவளுக்கும் சிறிதும் நாட்டமில்லைதான். ஆனால் அப்பாவை அவ்வப்பொழுது பார்க்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிட விருப்பமில்லை. கிளம்பிவிட்டாள்.

அவர்கள் வீட்டு புல்வெளியில்தான் விழாபோலும். படு படோபடமான அலங்காரத்தில் அது அவள் வீடுதானா என அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்பா முகத்தில் ஒரே ஆரவாரம். அவரை இவ்வளவு சந்தோஷமாக பார்த்து ஞாபகம் இல்லை. ‘அதுவும் எலெக்க்ஷன் பக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில்?’

இவளுக்கான உடை தேர்வு கூட இந்த முறை அப்பாவினுடையதுதானாம். வழக்கமாக உடை வாங்கும் ஊழியர்கள் சொன்னார்கள் “ஸாரே கொண்டு வந்தாங்க!” இது கூட அப்பாவுக்கு தெரியுமா? அவ்வளவு அழகாய் இருந்தது அந்த ஆரஞ்சு வண்ண காக்ரா மை நிற வேலைப்பாடுகளுடன்.

இவளது மூன்று சாண் நீள கற்றை முடியை அழகாய் கொண்டையிட்டிருந்தனர் அலங்கார நிபுணர் குழு. வைரமும் மரகதமுமாய் நீள காதணிகள் அதற்கேற்ற நெக்லெஸ், அடுக்காய் வளையல்கள். அதே போன்ற மெல்லிய ஒட்டியாணம்.

ஏற்ற அணிமணி அணிந்து, அலங்காரம் முடித்து, இவள் நின்றபோது, இவள்தானா இது, என்ற சந்தேகம் இவளுக்கே வந்தது. கண்ணாடி பார்த்து அலங்காரம் செய்து பல காலமாகியிருந்ததும் காரணமாக இருக்கலாம்.

“இந்த சுட்டியும் வச்சுட்டா மேக்கப் முடிஞ்சிடும் மேம்.” அந்த மேக்கப் உமன் சொல்ல  “நோ வே இதுவே அதிகம், சுட்டியெல்லாம் வேணாம்” இவள் மறுத்த நேரம் அவளது அறைக்குள் அப்பா வந்து நின்றார்.

“என்னம்மா முடிஞ்சுதா, எல்லோரும் வந்துட்டாங்க, வாம்மா”

விழி விரிய ஆச்சரியமாக அப்பாவை பார்க்க, அவரோ இவள் கைபற்றி அழைத்து சென்றுவிட்டார்.

கூட்டமாக விருந்தினர்கள் சூழ்ந்து நிற்க அவர்கள் முன் சென்றதும், “ஒரு அறிவிப்பு, இன்று என் மகள் நிரல்யாவிற்கு நிச்சயதார்த்தம்” என்றார்.

தொடரும்..

Leave a Reply