கனியாதோ காதலென்பது 10

விடைபெற தயாரானான் அகன்.

“பார்க்கலாம் ரக்க்ஷு” என்றவன் நிரல்யாவிடம் திரும்பி ஒரு தலையாட்டலில் விடை பெற்றான். ‘தெரிவித்துவிடு  அருகிலிருப்பவனிடம் அனைத்தையும்’ என்ற செய்தி அதில் தெளிவாக தெரிந்தது.

“தங்கை பத்திரம்” என்ற இரு பதத்தை மிரட்டலும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தன் நண்பனை பார்த்து சொல்லிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்த அகன் திரும்பி ரக்க்ஷத்தை ஆழமாக பார்த்தான்.

“என்ன ரக்க்ஷு….. எதையோ சொல்ல நினைக்கிறியோ?…என்ன விஷயம்……..”

“துவி, ஜேசன் மேரேஜ் அரேஞ்ச்மேண்டை கவனியேன்……அவளை எதுவும் துருவாத…..உன் தங்கயை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு…..” தொக்கி நின்றது ரக்க்ஷத்தின் அவ்வாக்கியம்.

அகன் நிதானமாக தன் நண்பன் முகம் பார்த்தான் ஒரு கணம்.

வார்த்தையின்றி தகவல் பறிமாற்றம் காதலில் மட்டுமல்ல நட்பில் கூட நடைமுறைபடும்.

மலர்ந்த  முகத்துடன் அகன் சொன்னான் “ உன் தங்கையை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு”

அகன் முகத்திலிருந்த அந்த மகிழ்ச்சி ரக்க்ஷத் முகத்திலும் அப்படியே பிரதிபலித்தது.

“ஆரா, அகன் மேரேஜ் அரேஞ்ச்மேண்டை கவனியேன்……அவளை எதுவும் துருவாத…..உன் தங்கயை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு…..” ரக்க்ஷத் சற்றுமுன் சொன்ன அதே வார்த்தைகளை அவனை போலவே சொன்னான்.

நண்பர்கள் இருவரும் தழுவிக் கொண்டனர்.

நிரல்யா மட்டும் தன் கண்சுருக்கி கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள் நடப்பதை.

‘கல்யாணம் காதலின் காரணமாய் நடக்கவேண்டும், அல்லது இறை தந்தது இது என இயல்பாய் வரும் சம்மதித்தினால் செய்யபடவேண்டும். இதென்ன விதம்?

இவர்களாக முடிவு செய்துகொண்டு, பெண்களை சம்மதிக்க வைப்பார்களாம்!!?? அதுவும் மண பெண்கள் சம்மதிக்கும் முன்பே திருமண ஏற்பாடு வேறு!! ஆக மண மகன்கள் சம்மதித்துவிட்டால் போதும் போலும்? இவளை நிச்சயம் செய்ய வந்தானே அதுபோலவா?

.இன்று கண் எதிரில் இருப்பவன் மீது கடலளவு காதல் இருந்தாலும், அந்த சிந்தனை அவள் பெண்ணிய உணர்வை குத்தியது அக்கணம். எப்படி பட்டவளையும் நினைத்தவிதமாய் வளைத்துவிடலாம் என்ற ஆணாதிக்க திமிரா இது?’

அகன் அப்படியே சிரித்த முகமாக வெளியேற, இவளிடமாக வந்தான் அவளின் காதல் ரட்சகன்.

 

“யுவராணி யுத்த ராணியாகிட்டீங்கன்னு தெரியுது” என்றவன்.

“இதென்ன கல்யாணம்?…. கல்யாண பொண்ணுங்க சம்மதம் கேட்காமலே அரேஞ்ச்மெண்ட்ஸ்… இந்த ஆம்பளைங்க அடாவடி தாங்கலப்பா…எப்படிபட்டவளையும் நினைச்சமாதிரி வளைச்சுடலாம்ங்கிற திமிர்…மேல்சாவனிசம்..இதான விஷயம்?” சிறு புன்னகையுடன் விளையாட்டாய் கேட்டான்.

ஒருகணம் மிரண்டுபோனாள் நிரல்யா. பின்னே அவள் நினைப்பதை அப்படியே அறிந்து கொண்டால்??..

அவள் முகத்துக்கு நேராக தன் முகம் வரும் விதமாக குனிந்தவன் அவளது கண்களில் தன் கண்களை கலந்தான். கண்கள் உள் உறையும் உயிரின் கோட்டை கதவுகள் என்பதை அனுபவமாய் உணர்ந்தாள் அவள்.

பாவையின் ஆத்துமத்தை தாண்டி ஆவியை தொட்ட அவனது பார்வை பகர்ந்தது,

“காற்றே நீ என் சுவாசம்,

என்னுள் புகுந்து கலந்து திரும்புகிறாய்

அறியாதோ உன் வாசம்

என் அத்தனை திசுக்களும்”

“உன் மனசு புரிஞ்ச மாதிரி என் தங்கைங்க மனசும் எனக்கு புரிஞ்சிருக்கும்னு கொஞ்சம் நம்பேன்” குறும்பு கலந்த கெஞ்சல் வார்த்தையில்.

பேசும் வகை இவனிடம்தான் அறியவேண்டும்.

“உன்னை நானறிவேன்

உன் மனம் அதுவும் அறிவேன்

எண்ண இழைகள் யாவும் புரிவேன்

கண்மணி நீயே என்

கண்களுக்குள் வசிப்பதால்

காதல் சிறை இருப்பதால்

அறியாதது உன்னிடம்

எதுவுமில்லை என்னிடம்”

அவன் புன்சிரிப்பின் புதைபொருள் இது.

இருகணம் இன்ப ஊற்று இதயத்தில் இடமின்றி ஊற்றெடுத்தாலும், ஓரமாக என்றாலும் ஓராயிரம் மடங்காய் நாண நதி கிளைபரப்பினாலும், இதயத்தில் பிறந்த காதல் சுவாசம் நாசி தொடும் முன் நடுவழியில் நின்றது நிரல்யாவிற்கு.

எல்லாம் தெரியுமா? இல்லையே!

ஆரு விஷயம் இவள் அறிந்த கதை தெரியுமா? இல்லை அதற்காக துப்பாக்கி தூக்கி இவள் துப்பறிந்த கதை தான் தெரியுமா?

“சும்மா நினைப்புதான்…..” யோசிக்காமல் வந்து விழுந்தன வார்த்தைகள். ஆரணியிடம் சொல்லிவிட்டு அனைத்தையும் இவனிடம் சொல்வதாகதான் இருக்கிறாள். ஆனாலும்  அவளிடம் இன்னும் சொல்லவில்லையே!

வெளிபட்ட வார்த்தை அதன் விளைவை ஏற்படுத்தாமல் திரும்புமா என்ன?.

“அப்படி என்ன எனக்கு தெரியாது, சொல்லேன் கேட்போம்….” இயல்பாய்தான் கேட்டான். ஆனாலும் இவளுக்குள் ஆயிரம் பதற்றம். ஆரணியை இப்பொழுதே அழைக்கலாமா என்று கூட ஒரு எண்ணம்.

அதற்குள்

 

“வா!” என்றபடி இவள் கை பற்றி அழைத்து சென்றான். சென்றது இவளது வீட்டிலிருந்த ஒரு ஓரத்து அறைக்கு. ஒரு பாக்க சுவர் முழுவது கண்ணாடியால் கட்டபட்டு கண்ணுக்கு விருந்தளிக்கும் அவ்வறை பல நேரங்களில் இவளது சிந்தனை கூடு.

ஆனால் இன்று அடையாளம் தெரியவில்லை.

அறை முழுவதும் ஆயிரமாயிரம் பிங்க் நிற ரோஜாக்கள். நடுவில் வட்டமாக அடுக்க பட்டிருந்தன அதே நிற டிசைனர் காலணிகள் பல.

‘உன் சிறு இழப்பும் நூறு மடங்காய் திருப்பித் தரப்படும்—ரட்சகன்’  என்றதாய் ஒரு குறிப்பு பார்வைக்கு படும் விதமாய்.

பார்த்தவள் இட கை அதுவாக வாய் பொத்த, தன் விழிகளை விரித்தாள் அதன் முழு எல்லைக்குமாக. அவளுக்கு பிடித்தமான பிங்க் நிற வெட்ஜெஸ் பிய்ந்திருந்தது சில நாள் முன்பு. செருப்புதான் என்ற போதும் மனதில் சிறு சலனம். மஞ்சள் வரும் எந்த பிங்க் நிற உடைக்கும் மிக பாந்தமாக பொருந்துமே.

அதை ஒற்றை வார்த்தையில்கூட இவனிடம் புலம்பிய ஞாபகம் இல்லை. உன் மனம் தொடும் சிறு விஷயமும் நான் அறிவேன் என்பதாய்…..இவன் என்ன செய்து வைத்திருக்கிறான்??

காதல் போர் தந்திரத்தில் கரை கண்டவன் நீ!!

 

காற்றென்றாய்!

காற்றுடனும் கண்ணாமூச்சி ஆடும் நீ யாரென்பேன்?

கள்ளனென்பேன்,

கன்னியின் ஆதி முதல் அந்தம் வரை அவளறியாமல் கவர்வதால்.

விளம்புகிறது மனம்

களவு கொடுப்பதில் விருந்து கொள்கிறாய், கள்ளன் பதம்  பொருட் பிழை என்பதாய்.

சுயம் அறுக்கும் சுடரே

சுற்றி எனை சுழல்பவனே

என் சுயமாய் நீ மாற

வஞ்சிக்குள் வந்து வாழ

வஞ்சிக்காமல் வருவாயா?

வரனே, என் உயிரே

சிறு கொடி கண்ட பெரும் கனிபோல்

உயிர் தாங்கா காதலுடன்

காத்திருக்கிறேன், கரம் பற்ற!!

உயிர் தேக்கி அவன் கண்களை பார்த்தாள்.

.

அவள் முன் ஒற்றை கால் மடித்து முழந்தாள் படியிட்டு கேட்டான்.

“வில் யூ மேரி மீ?”

அவன் நீட்டிய மோதிரம் கண்ணில் தெரியவில்லை, தெரிந்தது அவன் கண்கள் அரை நொடி.

அதுவும் மறைந்தது. மறைத்தது கண்ணீர்.

கை தொட்டு இவள் விரல் மீது அவன் இயற்றிய கணையாழி இவள் தான் கை நீட்டி இருப்பதை உணரச்செய்தது.

உணர்ச்சிகரமான பொழுது.

“நான் உங்கட்ட பேசனும் ரக்க்ஷத்”

“வாழ்நாளைக்கும்” நிறைவாய் சொன்னான்.

அவனும் உணர்வுகளின் பிடியில் இருக்கிறானோ?

சிறு நேரம் சென்றது.

 

மனபட்ட பின்பு கேட்டாள்.

“இதே ஜெஷுரன நான் வேண்டாம்னு சொன்னதும், அத்தன வருஷ நட்ப முறிச்சிட்டீங்க…இப்போ…..எதுவும் விளக்கமே கேட்காம….அதுவு ஆருட்ட கூட கேட்காம…” புரியாமல் கேட்டாள்.

நீ அன்னைக்கு ஜெஷுர் மேல வேற எந்த கம்ப்ளைண்ட் சொல்லி இருந்தாலும் நான் விசாரிப்போம்னுதான் சொல்லி இருப்பேண்டா…..விசாரிக்கவும் செய்திருப்பேன்….மத்த விஷயங்களை விட நட்பு ரொம்ப முக்கியம். அதோட ஜெஷுர்ட்ட தப்பு இருக்காதுன்னு நல்லா தெரியும்.

ஆனா நீ சொன்ன விஷயம் வேற…இதுல அவன்ட்ட தப்பே இல்லனாலும் கூட உனக்கு அப்படி தோணிய பிறகு, அவன பார்க்கிறப்பல்லாம் உன்னால நிம்மதியா இருக்க முடியாது. உன்ன விட நிச்சயமா நட்பு எனக்கு மேல கிடையாது. என் இடத்தில ஜெஷுர் இருந்தாலும் அதத்தான் செய்வான்.

அதோட போன வருஷம் ஜெஷுர்ட்ட ஆருவ அறிமுக படுத்தி வச்சப்ப அவளுக்கு அவன் மேல ஈடுபாடு இருந்திச்சுன்னு எனக்கு புரிஞ்சிது. அப்புறம் திடீர்னு துவி ஆரு ரெண்டு பேரும் வித்யாசமா நடந்துகிட்டாங்க. ஒருவகையில ஆரு, துவியால எதோ ஹர்ட் ஆகிட்டான்னு நினைச்சுகிட்டோம். ஜெஷுர்க்கும் துவிய சமாளிக்க வேண்டி இருந்தது.

அதனால இந்த கல்யாண பேச்சுக்கு ஒரு டெம்ரவரி ப்ரேக்.

இப்போ சூழ்நிலை ஒத்துவர மாதிரி இருந்தது, ஆருவும் நல்லா இருந்தா, ஜெஷுரும் வெளிப்படையா கேட்டான்….அதனாலதான் திரும்பவும் இந்த பேச்ச ஆரம்பிச்சது. ஆனால் அவ வித்யாசமா நடந்துகிட்டா….

துவிய நினைச்சு ஜெஷுர விலக்குறாளோன்னு பட்டது. என்ட்ட எல்லாத்தையும் அளப்புற ஆரு  ஏனோ இதபத்தி பேசலை. அதான் உன்னவிட்டு கேட்க சொன்னேன். நீ எடுத்ததும் சொன்ன காரணம் எனக்கு வேற மாதிரி புரிஞ்சிது.

ஜெஷுர்க்கு ஆரா மேல விருப்பம் இருக்குன்னு முன்னமே எனக்கு தோணும். எதுவும் அவட்ட…அளவுக்கு மீறி…அவளுக்கு பிடிக்காத மாதிரி…நடந்திருப்பானோன்னு….ஜெஷுர் நல்லவந்தான் , ஆனாலும் இந்த விஷயத்தில யார் எந்த சூழ்நிலைல தப்பு செய்வாங்கன்னு யாருக்கு தெரியும்? “

“இப்போ?”

அதிர்ச்சியாய் கேட்டாள் நிரல்யா. இப்போ இவனுக்கு எல்லாம் தெரியுமோ?

“அருணை பத்தி நிறைய தெரிய வந்திருக்குது அதான்.” அவன் குரலுக்குள் உள் ஓடியதோ இரும்பு நதி?

“நாளைக்கு எட்மாண்டன் போறேன்…நீயும் என் கூட வந்தன்னா நல்லா இருக்கும். ஆரு நம்ம கூடதான் இருப்பா….வர்றியாடா? அங்கிள்ட்ட நான் பெர்மிஷன் கேட்கிறேன்….”

மறுநாள் எட்மண்டன் பயணம்.

 

 

சென்று சேர்ந்ததும் இவள் எதிர்பார்த்தது போல் விமானநிலையத்துக்கு வரவேற்க ஆரணி வரவில்லை.  ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.

“அருண் எப்ப என்ன செய்வான்னு சொல்லமுடியாது. அதான் அவள வர வேண்டாம்னு சொல்லிட்டேன். ஸேஃப்டி ரீசன்ஸ்…” இவள் முகமறிந்து ரக்க்ஷத்தான் பதில் சொன்னான்

அங்கு தொடங்கிய ஸேஃப்டி ரீசன்ஸ் நொடிக்கு நொடி தொடர்ந்தது.

அங்கு வீட்டில் ஆரணி, அரண்யாவை கண்டதும் தான் சற்று இலகுவாகியது இவள் இதயம். அதுவரை தான் இறுக்கமாக உணர்ந்திருப்பதே அப்பொழுதுதான் புரிந்தது. இவள் அங்கு சென்றடைந்த சிறுது நேரத்தில் அக்க்ஷத் குடும்பம் விடை பெற்று எங்கோ சென்றது. ஏன்?

உணவு முடிந்ததும். வரவேற்பறையில் சிறு சல சலப்பு கேட்டு திரும்பி பார்த்தால்…இவளது அப்பா.

“அப்பா….” ஆச்சரியம் இவளிடம் மட்டுமல்ல, அனைவரிடமுமே!!

“மாப்பிள்ள பேசினப்போ ஏதோ  பாதுகாப்புக்காக தான் நிருவ இங்க கூப்பிட்டுட்டு வர்றார்னு தோணிச்சு. அதான் நானும் வந்தேன். என்னால முடிஞ்சத நானும் செய்றேன்” என்றார்.

உள்ளுக்குள் கொல்லும் இறுக்கம் ஏன் என புரிந்தது நிரல்யாவிற்கு. ஏதோ பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் சூழல் சுற்றிலும். என்னதது?

தன்னவனை துளிர்த்த கண்களுடன் காயம் பட்ட பார்வை பார்த்தாள்.

முதல் தளத்திலிருந்த லாஞ்ச் இவள் பாதம் காண காரணமாகியது அப்பார்வை.

 

“அருண் என்ட்ட வேல செஞ்சது. அவன் ஃப்ராடுலன்ஸ், அரெஃஸ்ட், பிரிஃஸன் எல்லாம் உனக்கு தெரியும்….அவன் அடுத்து ட்ரக் மாஃபியாவாகிட்டான்…..உலகம் முழுக்க அவன் பிஃஸினஸ் போய்ட்டு இருந்தது….என் மேல அவனுக்கு பொறாமை…பழி வாங்கனும்கிற வெறி…..அதனால் நம்ம குடும்பத்த டார்கட் செய்றான்…..

பயப்படாதே… அவன் இப்போ செத்த பாம்பு….

அவன் பிஃஸினஃஸ் எல்லாம் போச்சு…அந்தந்த கவர்மெண்ட்ஸ் அத செஞ்சு முடிச்சுட்டாங்க….இப்போ அவன்ட்ட ஒரு பைசா கிடையாது…ஆனா அவனால சம்பாதிச்ச சில கூலிகாரங்க சிலர் அவனுக்கு இன்னும் துணைக்கு இருக்காங்க…இவனால திரும்ப ஏதாவது கிடைக்குமான்னு அலையுறாங்க…

எப்ப வாய்ப்பு கிடச்சாலும் அருண்  நம்ம குடும்பத்த டார்கட் செய்றான்…லீகல் ஆக்க்ஷன்ல மாட்டிகிற மாதிரி பப்ளிக்கா செய்யாம…. எதையாவது செய்துட்டே இருக்கான்….இன்னைக்கு என்ட்ட பேச வர்றேன்னு சொல்லி இருக்கான்.

பேச போறேன்…..இது நிக்கனும்

அழுத்தமாய் சொன்னான்.

“இப்படி என்ன அங்க வர சொல்லிட்டு, இங்க  வீட்டில யாரையாவது கடத்தி வச்சு  மிரட்ட கூடாது….அவன் அதுமாதிரி ஏதாவது கண்டிப்பா செய்வான்…… அதான் எல்லாரையும்  ஸேஃப்டி ஸோனுக்கு கொண்டு வந்தாச்சு. எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ப்ரச்சனை…அந்த வீட்டை மட்டும் பிடிச்சான்னா போதுமே…அதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருக்கனும்னு…

உங்கப்பாவ நான் வர சொல்லலை…ஆனாலும் அவங்க வந்தது நல்லது.

நீ, ஆரு, உங்கப்பா இந்த வீட்டில இருந்து ரகசியமா நான் சொல்ற இடத்துக்கு போயிடுவீங்க…உங்கப்பா இங்க இருக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும் வெளிய இருந்து பார்க்க…”

அவன் சொல்லிகொண்டு போக “உங்க கூட யாரெல்லாம் வர்றாங்க?” அவளுக்கு தேவையான ஒரே தகவல் அதுதான் என்பதுபோல் வந்தது அவள் கேள்வி.

“கூட வர்றவங்க ஸேஃப்டி பத்தியும் நான் கவலபட வேண்டி இருக்கும்….அதனால..” அவன் தனியாளாக போகிறான் என்ற பொருள் புரிய, அதற்கு மறுப்பை அவன் சொல்லி முடிக்கும் முன் அறிவித்தாள்.

“நானும் கண்டிப்பா உங்க கூட வர்றேன். இது ஃபைனல்” இதுக்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல் அவள் திரும்ப எத்தனிக்க

“லயாம்மா  திரும்பி வருவேண்டா….கண்டிப்பா” என்றான் அவன்.

அவன் சொன்ன வார்த்தை உள்ளத்துள் எதை தொட்டது என அவளுக்கு புரியவில்லை. நூலகத்தில் ஒரு புத்தகம் எடுக்க முயலும் போது சுவர் முழுவதுமிருந்த மொத்த புத்தகமும் சரிந்து விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை வகை உணர்வுகளை, நினைவுகளை அது அவளுள் இழுத்து சரித்தது.

வாய் பொத்தி மௌனமாய் இருக்க வேண்டும் என்றது ஒரு மனநிலை, மறு மனமோ கதறி அழு என்றது. தனிமைக்கு கூட்டி போ என்றது ஒரு மனம், தாங்காது தோள் மீது சாய்ந்து அழு என்றது அடுத்தது.

மௌனமாய் அவன் முகம் பார்த்தவளின் கண்ணில் நீர்வீழ்ச்சி.

வேகமாக படியிறங்கி சென்றுவிட்டாள்.

அடுத்த சில நிமிட நேரத்தில் அங்கு வந்திருந்த குப்பை லாரியில் இரண்டு ஆண்களுடன், ஆண் வேடமிட்டிருந்த இரண்டு பெண்களும் பயணம் செய்தனர். அந்த பெண்கள் நிரல்யா, ஆரணி, ஆண்களில் ஒருவர் நிரல்யாவின் தந்தை. இது சொல்லி தெரிய வேண்டிய செய்தி இல்லை.

 

டுத்த சில மணி நேரத்தில் ரக்க்ஷத் அந்த வளாகத்தை அடைந்தான். சில நூறு ஏக்கர் பரப்பை சுற்றி ஓடியது அந்த வெள்ளை சுவர். அதன் தலை வாசல் வழியாக உள்ளே செலுத்தினான் தன் வாகனத்தை. உள்ளே பசும் பச்சை புல்வெளியில் பாந்தமாய் தூங்கிக்கொண்டிருந்தது நிசப்தம்.

தூரத்தில் தெரிந்தது அந்த ஒற்றை கட்டிடம். வெண்ணிறம் மாத்திரம் வர்ணமாய் பூசபட்டிருந்தது அதன் வெளிப்புறம். சர்ச் என்றது அதன் உச்சியிலிருந்த வசனம். ‘மை ரெடீமர் லிவ்ஸ்’

அவனை தவிர அந்த வளாகத்தில் இருந்ததெல்லாம் ஆறு அறிவை அடையாதவர்கள்.

உள்ளே கவனமாக நுழைந்தான். இரண்டாம் வரிசை இருக்கையில் சென்று அமர்ந்தான். சில நிமிடம் கழித்து ஆள் வரும் அரவம்.

திரும்பி பார்த்தான்.

வந்து கொண்டிருந்தவன் அருண். இவன் வயதுதான் அருணுக்கும். ஆனால் நாற்பது வயதுகாரன் போல் ஒரு தோற்றம். இரவல் வாங்கி அணிந்தது போல் ஒரு சூட். கண்களில் ரேபான். தலையில் ஒரு சமயம் பட்ட அடியின் அடையாளம் நேற்றி வரை ஒரு குழி ஓடியிருந்தது. அதை மறைக்க முடியை முன்னிழுத்து விட்டிருந்தாலும் இன்னுமாய் தெரிந்தது அது. எத்தனை அழகனாய் இருந்தவன் இப்படியா?

“நீ வார்த்தை தவற மாட்டன்னு தெரியும் ப்ரின்ஸ், அதான் நானும் தனியா வந்தேன்”

சொல்லியபடி மூன்றாம் வரிசை இருக்கையில் அமர்ந்தான். ‘ப்ரின்ஸ்’ என்றுதான் அவன் ரக்க்ஷத்தை அழைப்பது வழக்கம்.

“நீ பொய்க்கு பிதான்னு எனக்கு தெரியும், அதனால கதை சொல்றத நிறுத்திட்டு வந்த விஷயத்த பேசு”

“தெரிஞ்சுட்டா…அவனுங்க நம்ம பசங்க…வேற எங்க போவாங்க…அதான்….ஆனாலும் அவங்கள கூட காண்பிச்சு குடுக்க நான் ரெடி…..இதுவரை நான் ஹேண்டில் பண்ண அத்தனை ட்ரக் ஸ்மக்லர்ஸ், அவங்க ஃஸ்ட்ராங்ஹோல்ட்ஸ், அவங்க நெட்வொர்க், அவங்க மெத்தடாலஜி, வீக்னஸ் எல்லாம் டிடேய்லா சி.டில தாரேன்…..அதுக்கு எனக்கு ஒரு விலை வேணும்…”

“உலக போதை பொருள் கூட்டத்த ஒழிக்கிறதா நான் ஏதாவது சபதம் எடுத்திருக்கனா என்ன, இத விலை குடுத்து வாங்க…இதான் விஷயம்னா நான் கிளம்புறேன்…” அலட்சியமாய் கிளம்பினான் ரக்க்ஷத்.

‘பே’ என விழித்தான் அருண் ஒரு கணம். உண்மையிலேயே வேண்டாமா? நீதான் என் காண்டாக்ஸை ஊருக்கு ஊரு நாட்டுக்கு நாடு மாட்டிவிட்டுகிட்டு இருக்கன்னு நினச்சேன்,நீ இல்லயா….ஆராய்ச்சியாய் பார்த்தவன்….சரி இன்னொரு பேரம் இருக்குது, இத நீ கண்டிப்பா ஒத்துப்ப…”

.கிரமமாய் அமைக்கபட்டிருந்த இருக்கைகளுக்கு நடுவில் இருந்த நடைபாதையில், நடையை தொடர்ந்தான் ரக்க்ஷத்.

“என்ன இவ்ளவு பெரிய ஆள்னு நினச்சிருக்கியா ரொம்ப சந்தோஷம்…” எதிரில் தெரிந்த வாசலைவிட்டு விழியை திருப்பவில்லை அவன்.

தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற அருண், சென்றுகொண்டிருக்கும் ரக்க்ஷத்தின் முதுகை பார்த்து பேசினான்.

“உன் வீட்டில யார் மேலயும் இனி கை வைக்க மாட்டேன்…ஒதுங்கிர்றேன்….என்ன விலை தருவ?”

“உனக்கு பயந்து நான் இங்க பேரம் பேச வரலை…உறுப்படியா ஏதாவது இருந்தா பேசு…யூ நோ மை டைம் ஸ் டாலர்ஸ்” திரும்பி பாராது சொன்னான்.

வாசலை அடைந்திருந்தான் ரக்க்ஷத். வெளியே ஆராய்தலாக கண்களை ஓட்டினான். தன் ஸன் கிளாஃஸை எடுத்து மாட்டினான். காலை கட்டிடத்தை விட்டு வெளியே எடுத்து வைக்க இருந்த நொடி அருண் பேசினான்.

“துவியோட சி டிக்கு என்ன விலை தருவ?”

அதே இடத்தில் அசையாது இயல்பாய் நிற்பது போல் நின்றான் ரக்க்ஷத். “நான் என்ன அவ அண்ணனா?” திரும்பி பார்க்கவில்லை ரக்க்ஷத்.

“ அவ மேல உங்க வீட்டில உள்ளவங்களுக்கு பாசம் உண்டுண்ணு நினச்சேன்…..உன் அண்ணன் தானே அவள ஒளிச்சு வச்சதே…”

“அப்படியா இத நீ அண்ணாட்டதான் கேட்கனும்…”

“அவ என் கைல கிடச்சா இந்த சி.டி வச்சுதான் காலம் தள்ளலாம்னு நினச்சேன்…சரி போகுது…துவி சி.டியான்னு நீ அதிர்ச்சியாகல…அப்படின்னா உனக்கு விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்போல….ஸோ உன் அருமை தங்கச்சி…அந்த செல்லுலாய்ட் பொம்ம …ஆரணி அவ கதையும் தெரிஞ்சிருக்கனுமே….அவ சி.டிக்கு என்ன விலை தருவ….”

திரும்பி பார்த்தான் ரக்க்ஷத். .துவி நீ அவள லவ் பண்றன்னு நினச்சு உன் கூட சுத்துனா, அவ கன்சீவ் ஆனதும் நீ கழட்டி விட்டுட்ட…அதோட அவள மிரட்ட வேறு செய்த…இத இப்ப கொஞ்சம் முன்னால உன்னபத்தி தீவிரமா துருவினப்ப கேள்விபட்டேன்…அவ சி.டி…புரியுது….என் தங்கை….??  உன்னை…சான்ஸே இல்ல….”

“அதுல ஒரு ட்ரிக் இருக்கு ப்ரின்ஸ்…..

இந்த துவிய ஏமாத்துறது ரொம்ப ஈஃஸியா இருந்தது. அவங்க ஃபாமிலி பிஸினஃஸை துவி ஹேன்டில் பண்ண ஆரம்பிச்சப்பதான் அவ அறிமுகம். தினமும் ஒரு பூவ அனுப்பி, நாலு மெஸஜ்…அவ நம்புற மாதிரி ஒரு சூசைட் அட்டம்ட், ஆட்டமெட்டிக்கா ஐ லவ் யூன்னுட்டா……

உனக்கு தெரிஞ்ச பொண்ணு….கொஞ்சம் லூசா வேற இருக்கா… எதுக்கும் யூஃஸ் ஆகும்னுதான் அவள ட்ரை பண்ணதே……..எமோஷனல் பிளாக் மெயில் பண்ணா எல்லாத்துக்கும் அது தலைய ஆட்டும்…அப்படிதான் இந்த சி.டி எல்லாம்….சும்மா ஃப்ன்னுக்காக…

அவ குழந்த, கல்யாணம்னு சொல்ல ஆரம்பிச்சப்ப, அதே நேரம்தான் அவளும் உங்க வீட்டு இளவரசியும் பழக ஆரம்பிச்சாங்க…அடிச்சது எனக்கு ஜாக்பாட்…

எனக்கும் ரக்க்ஷத்துக்கும் ஆகாது…..தப்பு என் பேர்லதான்….இப்போ திருந்திட்டேன்….ரக்க்ஷத்ட்ட மன்னிப்பு கேட்க ட்ரை பண்றேன்…அவன் நம்ப மாட்டேங்கான்….

ரக்க்ஷத் ஒத்துகாம உன் அண்ணன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்…..ரக்க்ஷத்துக்கு அவன் தங்கை மேல ரொம்ப பாசம்…அவ ரக்க்ஷத்ட்ட பேசினா அவன் கேட்பான்….

நீ அவள என்ன பார்க்க உன் வீட்டுக்கு ஏதாவது சொல்லி கூட்டிட்டு வா….நான் அவ கால்ல விழுந்து கெஞ்சுறதுல அவ அண்ணன்ட்ட என்ன, உன் அண்ணன்ட்டயே பேசி நம்மளுக்கு கல்யாணம் செய்து வச்சிடுவான்னு ஒரு மனம் திருந்தின பாவி மாதிரி சூப்பர் டிராமா போட்டேன்….சரின்னுட்டா….

விஷயம் வீட்டில இருக்கிற வேலைக்காரங்களுக்கு தெரிய வேண்டாமேன்னேன், அத்தனை பேரையும் அனுப்பிட்டு,  உன் தங்கயை அவ அண்ணன் ஜெஷுரன் கூப்பிடுறதா சொல்லி கூட்டிட்டு வந்துட்டா.

அப்புறம் என்ன இந்த துவி முட்டாளுக்கு தலைல ஒன்னு போட்டேன்…அது மயங்கி விழுந்துட்டு…அவ சத்தத்த கேட்டு, இது ஓடி வந்து நான் ரெடிபண்ணி வச்சிருந்த வலைல மாட்டியாச்சு….அந்த சி.டிதான்….

அப்பவே உன்ட்ட வந்து அழுவா…நீ அப்படியே ரத்த கண்ணீர் வடிப்பன்னு பார்த்துகிட்டே இருந்தேன்…ம்கூம்….ஆனாலும் அப்பவே இந்த சி.டி பேரத்துக்கு நான் வரலை….காரணம்….அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு விலை பேசினா நிறைய தருவன்னு நினச்சேன்…..இப்பவும் பண நெருக்கடி….கைவசம் இந்த சி.டிக்கள தவிர வேற விக்கதுக்குன்னு எதுவும் இல்ல…அதான்…விக்கலாம்னு பார்க்கேன்….

சரி….கதை போதும்..பேரம் பேசலாமா….” கத்தரிக்காய் வியாபாரம் போல சாதாரணமாய் சொன்னான் அருண்.

ரக்க்ஷத்தும் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.

“என்ன விலை எதிர்பார்க்கிற…?”

“மத்ததுக்கெல்லாம் வெறும் ஆயிரம் கோடி கேட்டிருப்பேன்…இதுக்கு அதவிட அதிகாமா வேணும்…”

“நீ எவ்ளவு கேட்கிறன்னு புரியுதா உனக்கு…”

“அதான் முன்னாள் பிரதமரோட மகளதான கல்யாணம் பண்ண போற தாராளமா தரலாம்…”

“நீ இன்னும் என்ன விலைன்னு சொல்லல…”

“என்னால முன்னாடி மாதிரி சம்பாதிக்க முடியல…முடியவும் முடியாது….உடம்பும் போச்சு…தலைய பார்த்தியா…ஸ்கல்ல ஒரு போர்ஷன் மிஸ்ஸிங்…அதனால வாழ்க்கைக்கும் உட்கார்ந்து சாப்பிட நீ வழி பண்ணி தா…

தங்குற இடம்….சாப்பாடு…டிரஸ்ல இருந்து…நான் பண்ற அத்தன செலவுக்கும் நீ பொறுப்பு…அப்படி ஏதாவது ஒரு வழி வேணும்…என் ஒருநாள் செலவு எவ்ளவுன்னு உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்….நான் கேட்கிறப்பல்லாம் கேட்கிற அளவு தா…போதும்…”

“தங்குற இடம், சாப்பாடு, டிரஃஸ்…..நாட் அ பஅட் டீல்…..இத செஞ்சு தரலாம்தான்….., பை த வே…நான் நின்னு பேசினதுக்கு முக்கிய காரணம் என் ரெண்டு தங்கைங்க விஷயத்திலயும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க மட்டும்தான்…. இப்ப அன்டி நார்கோடிக் பீரோ வருவாங்க….நீ கேட்ட அந்த மூணையும் வாங்கி தராம விட மாட்டேன்…”

“சும்மா மிரட்டாத…உன்னை முழுக்க முழுக்க கவனிச்சுட்டுதான் வந்தேன்….உன்ட்ட பிஸ்டல் கூட கிடையாது இப்போ……கூட யாரும் வரலை….எந்த இன்ஃபோவையும் யார்ட்டயும் நீ பாஃஸ் பண்ண டிரை பண்ணல..பயந்து போய் உன் அண்ணன்  ஃபமிலிய ஒழிச்சு வச்சிருக்க, பெரிய இடம்னு உன் மாமனாரை வேற துணைக்கு உன் வீட்டில கொண்டு வந்து வச்சிருக்க, உன் அன்பு தங்கைக்கும், காதலிக்கும் அந்த கிழம் காவல்…எனக்கு பயந்து பம்மி இருக்கியே தவிர…எனக்கு எதிரா ஒரு துரும்ப கூட அசைக்கல….”

“ஆனா ஒன்னே ஒன்னு செஞ்சேன்…உன் ஆட்களை காமிச்சு கொடுக்கதான், நீ பேரம் பேச வர்றன்னு, உன்ட்ட பேச ஒத்துகிடுறதுக்கு முன்னாலேயே…கூட்டிட்டு வந்திருக்கியே உன் இம்மீடியட்ஸ் அவங்கட்ட சொல்லி இருந்தேன்..

உன்ன பத்தி தெரியாதா…இவ்ளவு நாளா பார்க்கனே…இததான் நீ செய்வன்னு எனக்கும் தெரியும்…..நீ என்ன பேசுனியோ அது இங்க இருந்து லைவ் வீடியோ டெலிகாஸ்ட் அவங்களுக்குதான். அவங்க அப்படி ஒரு அரேஞ்ச்மேண்ட் செய்து வச்சிருந்தாங்க….உன் ஆட்கள் பாரு.. உன்ன மாதிரிதான இருப்பாங்க….

முதல் டீலே நீ அவங்க தலைக்குதான விலை பேசுன….அத ரெக்கார்ட் செய்து இதுக்குள்ள ஆன்டி நார்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி இருப்பாங்க….. இவங்க அப்ரூவர்ங்கிற வகையில இவங்களுக்கும் ஈஃஸி ஆகிடும்….

எனக்கு ஃபைவ் மினிட்ஸ் பெர்சனல் விஷயம் பேச கொடுத்தாங்க….பேசியாச்சு……”

அரண்டு போய் நம்பிக்கை இன்றி பார்த்தான் அருண்..

”நோ…நீ சும்மா பயம் காட்டுற…உன் தங்கச்சி விஷயத்த பத்தி பேசுறத என் ஆட்கள் கேட்க கூட நீ சம்மதிச்சிருக்க மாட்ட…”

“அவ என்னடா தப்பு பண்ணா, பாயந்து அழுது மறச்சு வைக்க…தப்பு பண்ணது நீ, நீயே இறுமாப்பா பேசுறப்ப அவளுக்கென்னடா….”

தட தட என்ற சத்தம், ஹெலிகாப்டர் ஒலி…சைரன்கள்…

சுற்றி வளைக்கபட்டது தெரிந்தது அருணுக்கு.

“டேய்….” வெறிபிடித்தவனாய் தன் பிஃஸ்டலை உறுவி, ரக்க்ஷத்தை குறி பார்த்தான் அருண்.

சிரித்தான் ரக்க்ஷத். “முட்டாள்னா அது நீதான். இத்தன செட்பண்ண உன் ஆட்கள் உன் பிஸ்டலுக்கு ஒரிஜினல் புல்லட்ஸ் லோட் செய்ய விட்டுருப்பாங்களான்னு கொஞ்சம் யோசி…” சட்டை செய்யாது திரும்பி நடந்தான்.

வந்த ஆத்திரத்தில் அதை வீசி எரிந்து விட்டு அடுத்த வழியை தேடினான் அருண்.

அந்த பிஃஸ்டலை குனிந்து கையில் எடுத்தான் ரக்க்ஷத். புன்னகை முகத்தில்.

“உன் ஆட்கள் புல்லட் லோட் செய்ய விட்டுருப்பாங்களான்னு யோசின்னு தான சொன்னேன்…அந்த புல்லட் டூப்ளிகேட்னு சொல்லவே இல்லையே… “ என்றவன் அந்த பிஸ்டலை மேலும் கீழுமாக திருப்பி பார்த்தான்.

“ஒரு சின்ன ஃபைட் கூட இல்லாம உன் பிஃஸ்டலை வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி இருந்தேன் என் ஃப்ரண்டுட்ட…சும்மா ஒரு ஃபன்னுக்காக…அதான் ஜெஷுர்ட்ட….

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் எங்கே சூசைட் பண்ணி தப்பிச்சிடுவியோன்னு ஒரு சின்ன டென்ஷன்….இருநூறு வருஷத்துக்கு குறையாம ஜெயில் கிடைக்கும் இங்க…சாகுற வரை நீ ஜெயில்ல இருக்கனுமே…இப்படி செத்து தப்பிச்சுட்டனா…அதான்.”

காவல் துறை,அன்டி நார்கோடிக்ஸ் பீரோ அதன் கடமையை செய்தது.

 

Leave a Reply