கனியாதோ காதலென்பது 1

நிரல்யா தன் ஃபிளாட்டில் நுழைந்ததும் செய்த முதல் வேலை தொலைகாட்சியை உயிர்பித்ததுதான். தொலைகாட்சிக்கு எதிரே இருந்த ஃபோம் சோஃபாவில் புதைந்தவண்ணம் நீல ஜீன்ஸ்க்கு ஏற்றவாறு அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் மேலாடைக்கு மேலாக அலங்காரமாக உடுத்தியிருந்த வெண்ணிற நெட்டட் ஷ்ரகை மட்டும் கழற்றிவிட்டு கேன்வாஷை கழற்ற ஆரம்பித்தாள்.

ஏதோ ஒரு ஹெலிகாப்டர் அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக ரேடார் தெரிவிக்கிறதாம். ஆனால் அதன் பின் அந்த ஹெலிகாப்டர் எங்கிருக்கிறது என்ற தகவலே இல்லையாம். அதுதான் அப்போதைய பரபரப்பு செய்தி.

தொலைகாட்சியில் ஹெலிகாப்டர் சத்தமிட்டவாறு பறந்து கொண்டிருந்தது. ஏதோ இவள் வீட்டிலேயே பறப்பது போன்ற பிரமை.

கலீரென கண்ணாடி உடையும் சத்தம் பின்புறம். திரும்பி பார்த்தால் வரவேற்பறையின் பால்கனிக்கு செல்லும் கண்ணாடி கதவினை உடைத்துகொண்டு கனத்த துப்பாக்கியுடன் படு வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான் ஒருவன்.

இவள் கத்த தொடங்கும் முன்பே இவளது இரு கைகளையும் தன் ஒரு கையால் பின்னுக்கு இழுத்து மறுகையால் இவள் வாயில் பெரிய துணி பந்தை திணித்தான்.

இவள் திமிறல் யானையின் முன்பு எறும்பின் முயற்சியாயிற்று.

தர தரவென இழுத்துகொண்டு பால்கனி வழியாக வெளியே வந்தவன் அங்கு தொங்கிக்கொண்டிருந்த கயிறை பிடிக்க, கயிறு பறக்க தொடங்கியது. ஆம், அது ஹெலிகாப்டரிலிருந்து தொங்கி கொண்டிருந்ததே!

நொடியில் விஷயம் புரிந்துவிட்டது. அந்த ரகசிய ஹெலிகாப்டர் …… இவளைத்தான் கடத்த வந்தது போலும்.

வந்தவன் அசுர பலத்துடன் இருந்தான். இவளை சுமந்தபடி ஹெலிகாப்டரினுள் ஏறிவிட்டானே! அந்த சினூக் வகை ஹெலிகாப்டரினுள் நடுவில் ஒரு கம்பிதூண் இருந்தது. அதில் இவளை கொண்டுகட்டினான் அந்த தாடிகாரன்.

முகமே அடையாளம் தெரியாதபடி மூடி மறைத்திருந்தது காடாய் வளர்ந்து மார்புவரை நீண்டிருந்த தாடி. அடையாளம் வைத்துகொள்ள நினைத்தாலும் முடியாதோ?

ராணுவ வீரன் உடைபோல் ஒரு ஃபேன்ட்ஸும் கையில்லா பனியனும் அணிந்திருந்தான் அவன். கைகள் முறுகி இருந்தன.

இவளை கட்டிவிட்டு காக்பிட் நோக்கி நடக்க தொடங்கியவன் சட்டென திரும்பி மீண்டும் இவளிடமாக வந்தவன், ஒரு இளிப்புடன் இவளை நோக்கி இரு கரங்களை நீட்டியபடி இவள் மீது சாய்ந்தான்.

உயிரே போய்விட்டது நிரல்யாவிற்கு! அதுவரை அவளுக்கு ஆபத்தைவிட முதலில் புரிந்தது அதிர்ச்சியே.

இப்பொழுது முடிந்தவரை பலம் கொண்டமட்டும் திமிறியபடி போராட தொடங்கினாள். கைகளும் கால்களும் விலங்கிடபட்டிருக்க, வாய் அடைக்கபட்டிருக்க, என்ன போராட?

ஆனாலும் போராடினாள். அருவருப்பு, பயம், பீதி எல்லாம் திரள, தான் மிகவும் தைரியமான பெண் என்ற கர்வம் கரைய கண்ணீரோடும் ஜெபத்தோடும் மரண ஓலமிட்டாள். அது சிறு முக்கல் ஒலியாக வெளிபட்டது.

உதவி எங்கிருந்து வர முடியும்?

அந்நேரம் காக்பிட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். இந்த முதல் தடியனை போன்றே உடையணிந்து, அதே தாடியுடனும், முறுக்கேறிய உடலுடனும் வந்தான் அவன்.

ஐயோ! தெய்வமே! இரண்டாவது மிருகமுமா?

வந்தவன், இவள் எதிர்பாராத விதமாக, இவளை வேட்டையாட விரும்பிய மிருகத்தின் தலையை சுட்டான். அவன் சரிய தொடங்க, அடுத்த குண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்தது. ‘ஹக்’ என்ற ஒலியுடன் அவன் விரைத்தான்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது அனைத்தும். சிறுவயதில் கண் முன் தன் தாய் இறப்பதை பார்த்திருக்கிறாள் நிரல்யா. ஆனால் அது இயற்கை மரணம். அதன் பின் பார்க்கும் மரணம் இதுதான்.

எவ்வளவோ கொடியவனாக செத்தவன் நடந்து கொண்டிருந்தபோதும் அவன் மரணத்தை பார்க்கும்போது ஒன்றும் ரசிக்கும்படியாக இல்லை. கண்களை மூடிக்கொண்டாள் நிரல்யா. கண்களிலிருந்து அருவியாய் நீர்.  கடந்த சில நிமிடங்களில் அவள் வாழ்வில்தான் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது?

திடுமென இவள் வாயிலிருந்த துணி பிடுங்கப்பட, எதிரே அந்த இரண்டாம் மிரு….. தாடிகாரன், தண்ணீரை நீட்டியபடி. அவள் கைகளும் விடுவிக்கபட்டிருந்தது அப்பொழுதுதான் புரிந்தது. ஆனால் கால்கள் இன்னும் விலங்கிடப்பட்டுதான் இருந்தது.

தண்ணீரை வாங்கி பருகினாள். இதற்குள் இந்த இரண்டாம் தாடிகாரன் முதலாமவனின் மேலுடையை களைந்தவன், அதை இவளிடமாக நீட்டினான். இவள் கால் விலங்கை சாவியிட்டு திறந்தான்.

ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.

அவன் கண்கள்….. அப்படி ஒரு கண்களை ஆளுமை நிறைந்த, கூர்மையான, கருணை கடலாய், உயிர் கவரும், இராஜ கண்களை இவள் இதுவரை பார்த்ததே இல்லை. அந்த கண்கள் ஆயிரம் பேசின. இவளை உடை மாற்ற சொன்னதும் அந்த கண்கள்தான். அவனை நம்ப அறிவுறித்தியதும் அதே கண்கள்தான்.

அவன் மீண்டும் உள்ளே செல்ல சரசரவென தன் உடையை களைந்து அந்த முதல் மிருகத்தின் உடைக்கு மாறினாள். இடுப்பில் நிற்கமாட்டேன் என்ற ஃபேன்ட்ஸை பெல்டால் இருக்கினாள். மேலாடையின் கழுத்துபகுதி இவள் பயந்ததுபோல் கீழிறங்கி இல்லாதது இவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் கைகளுக்கான ஓட்டைதான் மிகவும் பெரியது. வழிந்து தொங்கியது ஆடை.

ஒரு கணைப்பொலியுடன் மீண்டும் காக்பிட்டினிலிருந்து வெளியே வந்தான் அவன். வருவதை அறிவிக்கிறானாம். வெல் மேனர்டு டெரரிஸ்ட்!

வந்து இவளை பார்த்தவன், மீண்டுமாக உள்ளே சென்றுவிட்டு வந்தான். கையில் ஒரு சட்டை. அதை வாங்கி அணிந்து கொண்டவள் நன்றி சொல்ல இயல்பாக வாயை திறக்க, மின்னல் வேகத்தில் இவள் வாயை பொத்தினான்.

அவன் முரட்டு கரத்திற்கும், இவள் பற்களுக்கும் இடையே மாட்டி கிழிந்தது இவள் மேல் உதடு.

சட்டென அருகில் கிடந்த துணி, அதாவது அதுவரை அவள் வாயை அடைத்திருந்த துணியை எடுத்து இவள் வாய்க்குள் திணித்தான். கைகளும் கால்களும் மீண்டும் விலங்கிடப்பட்டன. இவன் என்ன செய்கிறான்?

அந்த மிருகத்தை கொன்றதும் தீவிரவாதிகளின் திட்டபடிதானா? இவளுக்கு உதவுவதற்காக இல்லையா? ஒரே பார்வையில் இவளை எப்படி ஏமாற்றிவிட்டான்? முறைத்தாள் அவனை. அவளால் அப்பொழுதைக்கு முடிந்த ஒரே விஷயம்.

ஒரு லிக்கர் பாட்டிலுடன் வந்தான் அவன்.

அத்தியாயம் 2

லிக்கர் பாட்டிலை திறந்து பிணத்தின் மேல் ஊற்றினான் மிக கவனமாக, சிந்தாமல் சிதறாமல். அடுத்ததாக, இவள் களைந்து வைத்திருந்த ஜீன்ஸின் கால் பகுதிகளை நீளவாக்கில் வெட்டினான். இடுப்பு பகுதியில் அடுத்த வெட்டு. அதை விழுந்து கிடந்த சடலத்திற்கு அணிவித்தான். அதேபோல் இவளது மேலாடையும் தேவையான வெட்டுகளுக்குப்பின் விரைத்திருந்தவனுக்கு பொருத்தப்பட்டது. ‘இதுக்கெல்லமா ட்ரெயினிங் தர்றாங்க?’

அவனது அனைத்து செயல்களின் மேலும் அப்படி ஒரு ஆளுமை இருந்தது அவனுக்கு. எதையும் சிந்திக்க நேரம் எடுப்பதாகவும் தெரியவில்லை.

மீண்டும் சிறுது லிக்கரை அந்த சடலத்தின் மேல் ஊற்றியவன், இறந்தவனை இழுத்துச் சென்று ஒரு ஓரமாக வைத்துவிட்டு, காக்பிட்டிற்குள் சென்றான்.

இங்கு பின் பகுதி கதவு திறந்தது. அதன் வழியே பிணத்தை இழுத்து வெளியே எரிந்தவன் கையிலிருந்த துப்பாக்கியால் கடல் நோக்கி விழுந்துகொண்டிருந்த சடலத்தை நோக்கி சுட்டான். அது பிணத்திற்கு எரியூட்டியது.

கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறோம் என இவளுக்கு புரியும்படியாக அவள் கண்களுக்கு திறந்த கதவு வழியாக தெரிந்ததெல்லாம் கடல், கடல் மட்டும்தான்.

மீண்டும் காக்பிட்டிற்குள் அவன் செல்ல கடந்தது சில மணி நேரம்.

தன் நிலையை நினைத்து பயமாக, வேதனையாக, குழப்பமாக, இருந்தது நிரல்யாவிற்கு. அவளது தந்தை நாடாளும் பிரதமராக இருப்பதனால் இவள் கொடுக்க வேண்டிய விலை என்ன?

சிறு வயதில் தாயை இழந்து, படு தீவிர அரசியல்வாதியான தந்தையின் ஒரே மகளாக வளர்ந்தவள் நிரல்யா. பல நேரங்களில் தனிமையே துணை.

சங்கத் தமிழ் பெயர் என்ற காரணத்திற்காக மட்டும்தான் இவள் தாய் இவளுக்கு நிரல்யா என பெயரிட்டது. ஆனால் இவளுக்கோ பெயரின் பொருளைப்போல எல்லாவற்றிலும் பெர்பெக்க்ஷன் வேண்டும். தவறுகளை வெறுப்பவள். அதே நேரம் இரக்க சுபாவமும் அதிகம்.

அந்த குணாதிசயங்கள் தவறேதும் செய்யாமல் இப் புவியில் வாழ்ந்துகாட்டி, தவறு செய்யும் மனிதர்களின் மன்னிப்பிற்காய் தான் மடிந்து, மீண்டுமாய் உயிர்த்த யேசுவிடம் இழுத்தது அவளை.

பல இன, மத, மொழி மக்கள் வாழும் தேசத்தை, ஆளும் ஆட்சியாளன் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவையும் பின்பற்றகூடாது என்பது இவளது தந்தையின் கொள்கை. அவர் ஆத்திகரா, நாத்திகரா என்றுகூட இவள் உட்பட யாருக்கும் தெரியாது.

எதையும் இவள் மீது திணிப்பது அவர் சுபாவம் அல்ல. அதனால் இவள் கடவுள் நம்பிக்கையை அவர் மறுக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. ஆனால் இவளது கடவுள் நம்பிக்கை, அவரது அரசியல் கொள்கை வாரிசாக மகள் வரமாட்டாள் என உணர்த்தியதால் ஒரு சிறு மன தாங்கல் அவருள்.

அந்த மனதாங்கல் கசப்புணர்ச்சியாய் மாறிவிட கூடாதென, தன் இருப்பிடத்தை கல்லூரி படிப்பிற்கென தந்தையருகிலிருந்து,  இப்படி கடலருகிலிருக்கும் மாநகருக்கு மாற்றி வந்திருந்தாள் நிரல்யா.

ஒரு மொத்த அப்பார்ட்மெண்டும் இவளது. பாதுகாப்பின் நிமித்தம் இரண்டாம் தளம் மட்டும் இவளது வீடாக பயன்பட்டது. மற்றவை பாதுகாப்பு ஏற்பாட்டிற்கென ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கடத்தப்பட்டாயிற்று! இனி ……….மரணமா?

மரண பயம் துளியும் கிடையாது நிரல்யாவிற்கு.    ஆனால்………. மரணத்திற்கு முன்பாக வரும் மற்ற சித்ரவதைகள்?……..தெய்வமே!

 

தே நேரம் பின்புற கதவும் திறந்தது. அவன் வந்தான். இவளது கை விலங்குகளை அவிழ்த்தவன் இவள் கண்களை பார்த்தான். அவனை நம்ப சொன்னது அந்த கண்கள். திறந்திருந்த திறப்பின் வாசலுக்கு வந்தனர் இருவரும். பாராசூட் மாட்டியிருந்தான் அவன். இவளிடம் எதுவுமில்லை.

அடுத்தது என்ன? கடலில் குதிக்க போகின்றனர் இருவரும். கண்களில் மிரட்சி நிரல்யாவிற்கு. மெல்ல அவள் தோளை தட்டினான் அவன். ஒரு மனிதனால் அத்தகைய ஆறுதலை உணர்வது அதுவே முதல்முறை அவளுக்கு. கண்களை மூடிக்கொண்டாள்.

சட்டென அவளை தன்னோடு சேர்த்தணைத்தபடி குதித்துவிட்டான் அவன். பயம், திகில், குழப்பம், கூச்சம் எல்லாவற்றையும் தாண்டி அப்படி விழுவது சுகானுபவமாக இருந்தது அவளுக்கு.

அம்மாவின் அணைப்பில் இருப்பதாய் உணர்வு.

மெல்ல ஆடியபடி கடலில் விழுந்தனர் இருவரும். அவளையும் பிடித்தபடி நீந்தி கரையேறினான் அவன்.

அடர் புதரும், சகதியும், காடுமாய் இருந்தது அவ்விடம். கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி நடந்தாள் அவள்.

புதர்களையும் மரங்களையும் தாண்டி தடவியபடிச் செல்ல திடீரென கண்ணில் பட்டது அந்த வீடு. ஒரு வீட்டை அந்த இடத்தில் ஆறாம் அறிவுள்ள எந்த ஜந்தும் எதிர்பார்க்க வழியே இல்லை.

அருமையான மறைவிடம். எதிரியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் பயம் தந்தி வாசித்தது. அட்ரீனல் சுரப்பி அதன் வேலையை காட்டியது.

‘உள்ளே எத்தனை பேர்? இவளை எங்கே கொண்டு மாட்டிவிட போகிறான்?

பெரிய கட்டை அல்லது கல் எதையாவது எடுத்து இவன் பின் தலையில் போட்டால் என்ன?’ கண்கள் துளாவின….ஒரு நொடிதான். ‘இவனை அடித்துப்போட்டால் உள்ளே இருப்பவர்களிடமிருந்து இவளை காப்பது யாராம்? ஒருவேளை இவன் உதவகூடும். இவனும் செத்துவிட்டால் இவளுக்கு உதவிக்கென்று நிச்சயமாக யாருமில்லை. என்ன செய்ய?  அடிக்கவா? வேண்டாமா?’

மூடன் வன்முறையை நம்புகிறான் என்று படித்தது ஞாபகம் வந்தது. அசையாமல் சில கணம் நின்றவள் அவனை பின்தொடர்ந்தாள்.

கதவருகில் சென்றவன், தன் இட நெஞ்சில் வலகை வைத்தபடி வானத்தை பார்த்தான் ஒருநொடி. ‘ஓ ப்ரேயர் டைம்!!!!!’ என இவள் நினைத்து முடிக்கும் முன் கதவை திறந்து உள்ளே சென்றவன் முன்னறையிலிருந்த மூவருக்கும் ஆளுக்கு இரண்டு வீதமாக குண்டுகளை தானம் வழங்கினான். பாரபட்சமின்றி அனைவரின் மூளைகளையும். இதயங்களையும் சத்தமின்றி துளைத்திருந்தன அவை.

நடந்ததை இவள் முழுவதுமாக புரிந்து கொள்ளும் முன் இவளை இழுத்தபடி உள்ளறையை நோக்கி நகர்ந்தான். அங்கிருந்த ஆட்கள், தெரிய தொடங்கிய நேனொ செகண்டின் தொடக்கதில் சரிந்து விழுந்தனர். அதே! அதே! தலையும் இடமார்பும். இரு நொடி முடியும் முன் மொத்தம் ஆறு சடலங்கள்.

நிச்சயமாக உள்ளே இருந்தவர்கள் போல் இவளும் இதை எதிர்பார்க்கவே இல்லை. ‘கொல்வதென்பது இவனுக்கு குல்ஃபி சாப்பிடுற மாதிரியா?’ காதுகளை இரு கைகளாலும் பொத்தியபடி, சுவரோடு பல்லிபோல் ஒண்டினாள். கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர்.

அவனோ இவள் ஒருத்தி இருப்பதை சட்டை செய்யவே இல்லை. பின் கதவை திறந்து வைத்தவன் படுவேகமாக ஒவ்வொரு சடலாமாக கொண்டு சென்று அங்கிருந்த கறுப்பு நிற பேரல்களில் அடைத்து மூடினான். இந்த இடம் இவனுக்கு அத்துபடிபோல்!

பின்பு இவளிடமாக வந்தவன், அரண்டு பார்த்திருந்தவள் எதிர்பாரா விதமாக, இவள் இரு கைகளை பின்னால் வைத்து கட்டியவன், கால்களையும் கட்டி ஒரு அறையின் தரையில் உருட்டினான். ‘என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?’

‘இரட்ஷகனா? இராட்ஷசனா?’

 

ப்பொழுதுதான்  அவளுக்கு உறைத்தது அதுவரை அவள் தன் வாய் கட்டை தன் கைகளால் அவிழ்க்கவே இல்லை என. ‘என்ன நடக்கிறது தனக்குள்?’ ‘ம், அவன் தொடுறப்ப அம்மா ஞாபகம் வந்துச்சு உனக்கு.’ குத்திக்காட்டியது மூளை.

அதைவிட பெரிதாக குழப்பியது அவனின் நடவடிக்கைகள். அடுத்திருந்த அறையில் அங்கிருந்த கணிணியை அவன் குடைவது இவளுக்கு ஏதோ ஒரு கோணத்தில் தெரிந்தது.

மங்கலான வெளிச்சம். எவ்வளவு நேரம் சென்றதோ? பகல் முடிந்து இரவானது.

“சி. டி ஒன் ஹியர், சி. டி ஒன் ஹியர் ஃப்ரம் சி ஓ, ஃப்ரம் சி ஓ, ஓவர் ஓவர்…..”

அவன் சத்தம்தான்! வெகு நேரத்திற்கு பின் மரண அமைதிபோலிருந்த அந்த சூழலில் உயிரின் அடையாளமாக கேட்டது அக்குரல். காதை தீட்டிகொண்டு அவன் பேசுவதை கவனித்தாள். பல புதிர் முடிச்சும் அவிழ்ந்தாலும் குழப்பம் முழுமையாக நீங்கவில்லை.

அவன் ஏதோ ஒரு தேசத்தின் கமண்டோ! எப்படியோ இங்கே வந்திருக்கிறான். இங்கிருந்த அதி முக்கிய ரகசிய கோப்புகளை கண்டுபிடித்து அனுப்பிக்கொண்டிருக்கிறான். இன்னும் இவன் இங்கிருக்கபோகிறானா அல்லது கிளம்பவேண்டுமா என்ற தகவல் பின் இரவில் தெரிவிக்கபடும்.  காதை தீட்டி கவனித்து தன் அறிவை கோண்டு அதை அலசியதில்  புரிந்தது இதுதான் நிரல்யாவுக்கு.   ‘இந்த புரிதல் சரிதானா?’

அவன் பேச்சுமுறை அக்மார்க் ஆங்கிலேயன் என்றது. ஆனால் ஒருவகையிலும் அவனிடம் வெள்ளைகாரனின் சாயலில்லை. பெர்ஷியர்களின் நிறம். ‘அப்புறம் இவனெப்படி இதில்? உயரத்தில் நம்ம ஹீரோவை பக்கத்தில் நின்னு பார்க்கிற எல்லாருமே படிமேல நின்னுதான் பாக்கனும்போல! முகம்னு ஒன்னு வெளியே தெரிஞ்சாதானே மத்தபடி சொல்ல?.’ ஓடியது மனது.

‘ஹீரோன்னு முடிவே பண்ணிட்டியாடி குரங்கு? அவன் சீஃப்ட்ட உன்னைபத்தி சொல்லவே இல்ல பாரு?உன்னை என்ன பண்ணபோறானோ?’ வேற யாரு மண்டைக்குள்ள இருந்த மூளைதான் குறுக்க வந்தது.

ஆம், இவளை பற்றிய எந்த பேச்சும் அங்கே இல்லை. ‘அப்படியானால்?…………..’

‘ஒருவேளை இங்கு நடப்பது எல்லாமே நாடகமோ? இவளை ஏமாற்றி இவள் மூலம் ஏதாவது காரியம் சாதிக்க சதியா?’

‘காரியம் சாதிக்க நினைக்கிறவன் தான் இப்படி கட்டி தரையில் உருட்டிட்டு கண்டுகாம போவானாமோ?’ இப்பொழுது அவனுக்கு பரிந்து கொண்டு வந்தது மூளை.

‘உலகத்தை பொறுத்தவரை இவள் செத்தவளா? இவள் உடையுடன் ஒரு பிணம் கடலுக்குள் புதைந்ததே? இவன் இவளை என்ன செய்ய போகிறான்?’

அதே நேரம் அவனிருந்த அறையின் சிறுவெளிச்சமும் மறைய, மை இருட்டு. தூரத்தில் கடலின் ஆர்பரிப்பும் அருகில் ஊளையிடும் காற்றின் சத்தமும் மட்டும். பகலைவிட இப்பொழுது சூழ்நிலை பயங்கரமாய் தோன்றியது. வறண்டிருந்த நாவும், பசித்திருந்த வயிறும் பயத்தால் நிறைந்தது.

காலடி சத்தம். இவளிடமாக வந்து நின்றது.

 

மெல்லிய பச்சை வெளிச்சம் வட்டமாக பரவி அது அவனது கைகடிகாரத்திலிருந்து வருகிறது என்பதை காண்பித்தது. சான்ட்விச்சும் தண்ணீரும் அவள் முன் அமர்ந்தது.

“நாம் இருவரும் உயிருடன் வெளியேற வேண்டும் எனில் பேசாதே” என்று எழுதியிருந்த துண்டு பேப்பரை காண்பித்துவிட்டு கட்டை அவிழ்த்தான்.

மனதிற்குள் ஜெபித்துவிட்டு இவள் சாப்பிட, இவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். ‘ஓ அவன் சாப்பிட்டானா?’

சாப்பாட்டை அவன் புறமாக நீட்டினாள். மென்மை அவன் முகத்தில். ‘புன்னகைக்கிறானோ?காடாய் வளர்ந்திருந்த தாடியில் உதடை எங்கே தேட இந்த சிறு வெளிச்சத்தில்?‘

குளிர் நடுக்கியது. அவனோ உள்ளே சென்று சிறு கட்டைகளை எடுத்துவந்து போட்டு தீவைத்தான்.

“நீ எனக்கு ஒரு வார்த்தை கொடுத்தால் நான் உன்னை இங்கிருந்து பத்திரமாக அனுப்பிவிடுகிறேன்.” என ஒரு காகிதத்தில் எழுதி நீட்டினான்.

ஆமோதிப்பாக பலமாக தலை அசைத்தாலும், அவள் கண்களில் ஆச்சரிய குறி, முகத்திலோ மெச்சுதல். “இவளின் அங்குசத்தை கண்டுபிடித்துவிட்டானே!’

முதல் காகிதத்தை தீயிலிட்டுவிட்டு அடுத்ததில் “உங்கள் நாட்டிடம் உங்களை நான்  ஒப்படைத்துவிடுகிறேன். நம் இந்த சந்திப்பை பற்றி, நான் உங்களை காப்பாற்றியது பற்றி, உங்கள் உயிருள்ளவரை யாரிடமும் சொல்லமாட்டீர்கள் எனில்.”

இதற்குள் இவளும் உண்டு முடித்திருக்க தானும் ஒரு காகிதத்தை எடுத்து பதிலை எழுதினாள். “இந்த சந்திப்பு, உங்கள் உதவி குறித்து யாரிடமும் சொல்லமாட்டேன், உங்கள் தலைமை எது?, என்னை அவர்களிடமும் ஏன் மறைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நாட்டிற்காக வேலை செய்கிறீர்களா? அல்லது ஏதாவது போராளி குழுவை சேர்ந்தவரா?”

இவள் கையிலிருந்து வாங்கி அதை படித்ததும் அதை தீயிலிட்டு எரிந்து சாம்பலாகும்வரை பார்த்திருந்தவன், “என்னை பற்றி எதுவும் கேட்காதே” என எழுதி காண்பித்துவிட்டு, அந்த பேப்பரையும் தீயிலிட்டு சாம்பலாக்கிவிட்டு, எழுந்து சென்றுவிட்டான்.

 

         பின்பு கையில் பலவித கம்பி மற்றும் சிறு பொருட்களுடன் வந்தவன் அவைகளில் தன் கைவண்ணத்தை காண்பித்தான். இரண்டு மிகப்பெரிய காதணிகள் அவன் கரத்தில். இவளிடம் நீட்ட ஆச்சரியத்துடன் வாங்கி அணிந்துகொண்டாள்.

தேர்ந்த ஒப்பனை கலைஞன் போல அங்கிருந்த கரியை ஏதோ செய்து அவளுக்கு அடர் நீள் புருவம் வரைந்தான். சமையல் பொருள் எதுவோ ஐஷடோவானது. இவை எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் அவன் சொன்னால் இவள் செய்தாக வேண்டுமே! ஒத்துழைத்தாள்.

நீளமாய் இருந்த இவளணிந்திருந்த பேண்ட்ஃஸை வெட்டி பெடல் புஷராக்கினான். மேல் பனியனின் கைகள் நீக்கபட்டன. பின் ஒரு புர்காவைகொண்டுவந்து அணிய செய்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது. மூடி மறைத்துகொள்ள எதற்கு இத்தனை அலங்காரம்?

ஆனால் எழுதி கேள்வி கேட்க நேரமில்லை.

அதற்குள் அவனோ ஜீன்ஃஸ், டீ ஷர்ட் மாற்றி வந்திருந்தான். பெரும் தாடியை காணவில்லை. அதற்கு பதிலாக இரண்டு இட்லி அளவு கன்னங்கள் உப்பியிருந்தன. குறுந்தாடி தோன்றியிருந்தது. பெரும் தாடிக்கு மேலாக இந்த மாஸ்க்கை அணிந்திருப்பானாக இருக்கும். இவன் நிஜமுகம் எது?

அடுத்த அறைக்கு அவளை அழைத்து சென்றவன், அங்கிருந்த தரை விரிப்பை நீக்கி, உள்ளே தெரிந்த கதவை திறக்க, படிகள். அதன் வழியாக அவளை அழைத்துச் சென்றான். அதன் முடிவிலிருந்த நீர்நிலையை அதாவது கடலை அடைந்தனர். படகு கடலில் நின்றிருந்தது.

படகிலேறி சற்று தொலைவு சென்றதும் கடும் இருட்டான பகுதி. அவள் புர்காவை கழற்ற சொல்லி  பத்திரபடுத்தினான். அவளை அவனருகில் வந்து அமர சொன்னான். “என்ன செய்ய போறோம்?, யாராவது நம்ம பார்கிறாங்களா?”

“சாட்டிலைட் கேமிராவில் கண்காணிக்க வாய்ப்பு இருக்கிறது, பார்க்கிற யாருக்கும் இது நாம ரெண்டு பேரும்னு தோணவே கூடாது. ”

“அப்படின்னா நீங்க ஏதோ ஒரு நாட்டுக்காக வேலை செய்றீங்க”

திடீரென அவன் எதையோ ஆன் செய்ய பெரிய சத்தத்துடன் ராக் ம்யூசிக் வெடித்துகொண்டு கிளம்பியது. பிறர் கவனிக்கா வண்ணம் தப்பி ஓடுபவன் என்ன செய்கிறான்?

“எழும்பி ஆடு” என்றானே பார்க்கலாம்!

வேறு வழி ஆடத்தொடங்கினாள்.

சுற்றிலும் ஆள் நடமாட்டம் தெரிந்தது. அதாவது படகு போக்குவரத்து. ஊருக்கு ஒத்துவராத இவளது உடை, வம்பிழுக்கும் இசை, வாலிப பெண்ணின் நடனம்.

கவரபட்ட இளவட்டங்கள் சில படகுகளில் இவர்களது அருகே வர “ஹுப்ப்ப் ரேஸ்ஸ்ஸ்……” என்றபடி படகை பறக்க வைத்தான். ஹுயேஏஏஏஏஏ……….. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……………பலவித சத்தங்களுடன் இவர்களை துரத்தியது ஒரு சிறு கூட்டம்.

மிரண்டு போனாள் நிரல்யா. அவர்கள் கையில் கிடைத்தால் இவள் நிலை…….?

படகின் வேகமா, துரத்துபவர்கள் காரணமான பயமா, ஏதோ ஒன்று இவளை இழுத்து சென்று அவன் அருகில் உட்கார வைத்திருந்தது.கைகளோ அவன் தோளை ஆதரமாக பற்றியிருந்தது.

“பயமா இருக்கு ஜாஷ்வா ”

அத்தனை மென் வெளிச்சத்திலும் அவன் கண் விரிவது இவளுக்கு தெரிந்தது.

“நான் எப்ப ஜாஷ்வாவானேன்?”

“உங்க பேர நீங்க சொல்லமாட்டீங்க, அதான் என்னை காப்பத்தவந்த கடவுளுடைய பெயரையே உங்களுக்கு வச்சுட்டேன்.”

அவன் பல்வரிசை தெரிய சிரிப்பது அவளுக்கு தெரிந்தது. மனது பறந்து அந்த புன்னகையுடன் காணாமல் போனது.

                 “ஜாஷ் பின்னால் வர்ற கூட்டத்தை பார்த்தால் பயமா இருக்கு.”

“இப்போதைக்கு அவங்க நமக்கு பாதுகாப்பு, சட்டிலைட் கேமிராவில் பார்க்க ஒரு கூட்டம் விளையாடுவதாய்தான் தோணும். நம்மளை நினைக்கமாட்டங்க”

“ஜீனியஸ் நீங்க ஜாஷ்”

“………”

உரையாடல் ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அவளோ தமிழில் “சரியான சிடுமூஞ்சி சிங்காரம்” என முனங்கினாள்.

.   திரும்பி அவள் முகம் பார்த்தான். “என்ன குறை சொல்றியா?”

“உங்களுக்கு சிரிக்க தெரியலைனு சொன்னேன்”

மென் புன்னகை அவன் முகத்தில். “நன்றாக மேக்கப் போடுறீங்கன்னும் அர்த்தம்”

“…………………………”

“ஒரு தேங்க்ஃஸ் சொன்னால் என்ன?”

“புகழ்ச்சியே மனிதனுக்கு ஏற்படும் சோதனை”

“இதுக்கு மட்டும் பைபிளை சொல்லுங்க. கொலை செய்றது தப்பில்லையா?”

“தண்டனை கொடுக்க அரசாங்கத்தால் அதிகாரம் கொடுக்கபட்டிருப்பவர்கள், சட்டம் சொல்லும் தண்டனையை கண்டிப்பாக கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் தப்பவிடப்பட்டவனுக்கான தண்டனை இவன் மீதும், இவன் தலைமுறை மீதும் வரும்.அப்படின்னு அதே பைபிளில் சொல்லியிருப்பது தெரியுமா?”

“ஆக நீங்க ஏதோ ஒரு நாட்டிற்கான காமாண்டோ?”

ஒரு சிறு புன்னகை பதிலாக வந்தது.

“இத ஒத்துகொண்டால் என்னவாம், வாழ்நாளுக்கும் உங்கள பத்தி  பெருமையா நினைச்சுப்பேன்.  இல்லைனா புத்திகொடு தெய்வமே அந்த போக்கத்தவனுக்குன்னு தினமும் புலம்பிட்டு இருப்பேன்.”

“இன்னைக்கே என்னை மறந்திடு. நீ என்னை நினைக்கவே வேண்டாம். மனதில இருக்கிற விஷயங்களை வாய் வெளிய பேசும். என்ன பத்தி உளறிர போற” அழுத்தமாய், கட்டளை போலும், ஒரு வித நட்பான ஆலோசனை போலும் அவன் சொல்ல, திடுக்கிட்டது பெண் மனது.

மறக்கவா இவனையா?

 

 

  ண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்., இவர்களை படு சத்தத்துடன் துரத்தும் கூட்டம்.

திடீரென படகை திருப்பி துரத்தி வந்த கூட்டத்தை நோக்கி ஓட்டினான். பகீரென்றது அவளுக்கு. “ஜ்ஜாஆஆஷ்ஷ்ஷ்……….”

இவர்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் இடையே இருந்த இடைவெளி கொதிகலன் பட்ட தண்ணீர் துளியாய் சுருங்கியது. அக்கூட்டத்தின் இரைச்சல் அவளது உயிர் வரை சென்று உலுக்கியது.

அந்த இரைச்சலையும் தாண்டி ஒரு சத்தம் வளர்ந்தது. வானத்தில் ஹெலிகாப்டர் வெளிச்சம் பாய்ச்ச ஏதோ எச்சரிக்கை அறிவிப்பு.. முதலில் அம்மக்களின் தாய் மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும்.

அனைத்து படகுகளும் வந்த வழியே திரும்ப, இவனும் அதே போல் யு டர்ன் எடுத்து திரும்பினான். அதாவது பின் தொடர்ந்தவர்கள் திரும்பி போக இவர்கள் மாத்திரம் செல்ல நினைத்த திசையில் முன்னேறினர். இவர்களை இப்புறவாசிகளாக நம்பி விட்டனர் ரோந்து படையினர்.

ரோந்தை சமளித்தாயிற்று, இவர்களது பயண பாதையும் மாறவில்லை. கூட்டத்தையும் கழற்றிவிட்டாயிற்று.

“வாவ், ஜ்ஜாஷ்ஷ்………….., யு ஆர் சிம்ப்ளி சூப்பர்”

“இப்ப ரோந்து வரும்னு எப்படி தெரியும்? “

“இந்த தீவை பார்த்து பறந்துகிட்டு இருக்கேன்னதும், நிறைய டீட்டேய்ல்ஸ் கொடுத்தாங்க. நாம இருந்த வீட்டோட ப்ளூ ப்ரின்ட்ல இருந்து இந்த கூட்டம், ரோந்து வரை எல்லாம் அதில் அடக்கம்.”

“முதலில் ஹெலிகாப்டரிலும் கண்காணித்தாங்களோ?”

“என் மீது மைக்ரோ போன் இருந்தது. சாட்டிலைட் காமிராவில் ஹெலிகாப்டரை வெளிப்புறம் பார்த்திருப்பாங்க, அந்த வீட்டிற்குள் போனதும் என் காமிராவை வேற ஆன் செய்யனும். அதான் நீ மூவ் ஆகாம இருக்க கட்டி வச்சேன், காமிரா சார்ஜ் போனதும் தான் வந்தேன். மைக்ரோ போன் அதுக்கும் அப்புறம்தான் ஆஃப் ஆச்சு.”

“நல்லா சமாளிச்சீங்க”

“…………………………….”

 

“அப்பதான் ஹெலிகாப்டரில் வைத்து நீங்க அந்த தடியன்ட்ட பேசினதில இருந்தே உங்க மைக்ரோ போன்வழியா என்னைதான் கடத்திருக்கீங்கன்னு உங்க தலைமைக்கு தெரிஞ்சிருக்குமே! இப்ப நான் செத்துட்டதா நினைச்சுட்டு இருப்பவங்க நான் உயிரோட போனதும் உங்கள கண்டு பிடிச்சிரமட்டங்களா?” குரலில் பிராதனமாய் தெரிந்தது கவலை.

இவள் புறம் திரும்பவே இல்லாமல் பதில் சொன்னான்.

“கடத்தினவன் தப்பா வேற பொண்ணை கடத்திட்டான்னு நினைச்சுப்பாங்க.”

“வாவ், அப்படி என்ன செய்ய போறீங்க?”

“நானில்ல.செய்துட்டு இருக்கிறது உங்க அப்பா?”

“வாட்?”

“நீ காணாமல் போனது இன்னும் மீடியாவுக்கு வரலை.”

“அப்டின்னா, அப்பாவுக்கு நான் வேண்டாமா?”

“அறிவில்லாத மாதிரி பேசகூடாது, ரகசியமா தேடுராங்களா இருக்கும். அதனால பொண்ணை மாத்திட்டாங்கன்னு என் சீஃப் நினைச்சிகிடுவார்.”

“உங்க சீஃப்ட்ட எதுக்கு என்னை மறைக்கிறீங்க?”   அவங்க உங்களை நம்புறவங்க…………

“அப்ப ஒன்னு செய்யலாம், நீ இந்த கடல்ல அப்படியே குதிச்சுறு!”

“ஹான்!”

“இல்லைனா என்னத்தான் உன்னை தூக்கி போட சொல்லுவாங்க”

“……………………….”

“இந்த மிஷன் ரொம்பவும் ரகசியமா இருக்க வேண்டியது கட்டாயம், அதனால இந்த விஷயம் தெரிந்த உன்னை, கண்டிப்பா உயிரோடு விடமாட்டாங்க. பலபேர காப்பாத்த ஒருத்தர் சாகலாம்னுதான் முடிவு எடுப்பாங்க.”

“நான் யார்ட்டயும் பொய் சொல்லலை, பொய் சொல்லவும் மாட்டேன். சில விஷயத்தை மறைக்கிறேன் அவ்வளவுதான். உண்மைய சொல்லனுங்கிறதுக்கு அர்த்தம் எல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்றதுன்னு கிடையாது.

அதோட என் நாடு எனக்கு குடுத்த வேலைய குறையில்லாம செய்துட்டு இருக்கேன். தேவையில்லாம ஒரு உயிர் கொல்லபடுவதை தடுக்க முடியுறப்ப தடுக்காம இருந்திரகூடாதுன்னுதான் உன்னை காப்பாத்த இவ்வளவு முயற்சியும்.

உன்னை காப்பத்தனும்னு ஒரு இன்ஸ்டிங்க்ட், அத ஃபாலோ பண்றது எப்பவும் என் பழக்கம். அது கடவுளே சொல்ற மாதிரி எனக்கு. அதே மாதிரி சூழ்நிலையும் இப்பவரைக்கும் அதுக்கு ஃபேவரா இருக்குது.”

“ஹும், இதுக்கு இந்த முயற்சியை என்ன கிட்னஅப் செய்றதை  தடுப்பதில் காண்பிச்சிருக்கலாம்!”

“உன் வீடு பக்கத்தில் வரும் வரையும் உன்னை கடத்தபோறாங்கன்னு தெரியாது. 2 வருஷமா இவங்க ட்ரெயினிங்க் கேம்பில் காத்திருந்து  இந்த குரூப் தலைவர்கள சந்திக்க வந்தேன். கிளம்புறப்ப இந்த தலைவர்கள் இடத்துக்கு வர்றேன்னு மட்டும்தான் தெரியும். உன் வீட்டு பக்கம் வரவும்தான் இந்த தீவில்தான் அவங்க இருக்காங்கன்னும் அதிலுள்ள இந்த வீட்டபத்தியும் சொல்லிகொடுத்துட்டு உன்னை தூக்க வந்தான் அவன்.”

“அதான் சூப்பர் சான்ஃஸுன்னு, அப்படி அவன் வந்திருக்கப்ப அவனை போட்டு தள்ளிட்டு போயிருக்கலாமே?” ‘ஐன்ஸ்டீன்னுக்கே ஐடியா குடுக்குற பரம்பரையாங்கும் நாங்க’ மனது மார்தட்டி கொண்டது.

“உன் நாட்டு எல்லையில் வைத்து நான் அப்படி செய்தால். இப்படி ரகசியமா இந்த தீவுக்கு நான் வந்திருக்க முடியுமா?, பலபேரை காப்பத்திக்கிறதுக்காக இந்த மிஷன்னு சொல்லியிருக்கேன். உன் ஒருத்திக்காக அத்தனை பேரை விட முடியுமா?”

‘இதை யோசிக்காம போனேனேன்னு’ ஒரு க்ளீன் போல்ட அவன்ட்ட இருந்து இவள் எதிர்பார்த்திருக்க, பேட்டை வச்சு நடுமண்டையில் நச்சுன்னு போட்டமாதிரி இருந்தது அவன் பதில். பின்னே, உனக்காக மத்தவங்களை விட முடியுமான்னுட்டானே!

‘இதுக்குதான் பெரியவங்க விளையாடுறப்ப ஃபீல்டிங்க் பண்ண போகக்கூடாதுங்கிறது.’ லேட்டா அட்வைஃஸ் பண்ணியது மூளை.

“எனக்கு கொடுத்த வேலையைத்தான் செய்தேன், ஆனால் எப்படியோ அது உன்னையும் ஆபத்தில் இழுத்துவிட்டது, சாரி”

முதலில் என்ன உணர்ச்சியில் பேசுகிறான் என புரியவே முடியாத குரலில் பேச தொடங்கியவன், முடிக்கும் போது உண்மையாக வருந்தினான்.

“அந்த டெரரிஸ்ட் குரூப் என்னை கடத்தினதுக்கு நீங்க என்ன செய்வீங்க, அதுவும் இல்லாம உங்களை நான் மீட் பண்ணாமலே போயிருப்பேன். இட்’ஸ் ஒர்த்” இவள் மலர்ச்சியாய் சொல்ல,

திரும்பி பார்த்து முறைத்தான்.

தூரத்தில் கரை தென்பட கடும் இருளான இடத்தை நோக்கி படகை செலுத்தினான். இருளில் கரையில் இறங்கியவன் ஒரு புதரின் மறைவில் தானும் அமர்ந்து அவளையும் அமரச் செய்தான். அவளது காதணிகளை கழற்றி, மையை அழித்து, சாதாரண குடும்ப பாங்கான பெண்முகமாக மாற்றி, புர்ஹாவிற்குள் மறைத்தான் அவளை.

மீண்டும் ரோந்து ஹெலிகாப்டர். பதறிபோய் அவன் முகத்தை பார்க்க,

“அவங்களுக்கு நம் கால் வரைதான் தெரியும்” அவர்களது கால்களை கண்களால் சுட்டிய படி சொன்னான். ஆறுதல்படுத்தும் குரல். கால்கள் வரையாய் பட்ட வெளிச்சத்தை பார்த்தாள். எவ்வளவு கவனம் இவனுக்கு?

இவன் ஏதோ பதில் சொல்ல விலகி பறந்தது அது. இந்த மொழியும் தெரியுமா இவனுக்கு?

சற்று தள்ளியிருந்த அடர் புதருக்குள் சென்றவன் அடுத்த சில நிமிடங்களில் குர்தா, பைஜாமா, முகத்தில் குறுந்தாடியுடனும், தலையில் குல்லாவுடன்  வந்தான். இப்பொழுதும் உள்ளிருக்கும் பெருந்தாடி மேல்தான் மாஸ்க் அணிந்திருக்கிறான் என யூகிக்க முடிந்தது. முன்பிருந்ததை விட சற்று குறைவான வயதை காட்டும் தோற்றம். இருப்பினும் இவன் உண்மையான வயது இதை விட குறைவாகத்தான் இருக்கும்.

இவள் கரம் பற்றி எழுப்பி நடக்க தொடங்கியவன் தன் முந்தைய உடைகளுடன் அவள் காதணிகளை வைத்து பொதிந்து ஒரு பெரும் கல்லை அந்த உடையுடன் சேர்த்து தன் படகில் வைத்துவிட்டே, இவளை அழைத்துச் சென்றான்.

சற்று தொலைவிலேயே விளக்கு கம்பங்களுடன் சாலை தெரிய இருவரும் அதில் பாதை யாத்திரை தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றும் கார்கள் நிறுத்தபட்டிருக்க, சாலையில் ஆள் நடமாட்டமோ சொற்பம். திறந்திருந்த ஆகாயம். வீணாய் பொழிந்த பால்நிலா. மெல்ல வீசிய பூங்காற்று. கரம் பிடித்தபடி மௌனமான நடை. இப்படி ஒரு ஏகாந்த உணர்வை நிரல்யா இதுவரை அனுபவித்ததே இல்லை. ‘இப்படியே தொடாராதா இது?’

குடியிருப்பு பகுதி கண்ணுக்கு தெரிய தொடங்கியது. ‘எங்கே போகிறோம்?’ இந்த கேள்விக்கு நிரல்யாவால் பதில் காணமுடியவில்லை. அவன் முகத்தை பார்த்தாள். உணர்ச்சியற்று வருபவன் போல் வந்து கொண்டிருந்தான். ‘சரியான சீரியஸ் சின்னபாண்டி,  கொஞ்சம் சிரிச்சா என்னவாம்?’ மனது முனங்கியது.

“ஜாஷ்.” அவள் ஆரம்பிக்கவும் ஒரு கையால் அவள் வாயை பொத்தியவன், மறுகையால் அவளை தன் புறமாக இழுத்து, அவள்  காதில் மெல்ல, ஆனால் அழுத்தமாக “அப்படி கூப்பிடாதே!” என கட்டளையிட்டான்.

ஓ எப்படி மறந்தாள் இவர்களது வேஷத்தை………….? “சாரி ஆரிக்” என்றாள் அவள். திரும்பி இவள் முகத்தை நேராக பார்த்தவன் முகம் முழுவதும் அவளுக்கு பிடித்தமான புன்னகை.

“ இது யாரு இந்த ஆரிக்?”

“அந்த பெயருக்கு இரக்கத்தோடு ஆட்சி செய்பவன்னு அர்த்தம். நீங்க என்னை அப்படிதான் ஆட்சி செய்துட்டு இருப்பதாக தோணுது. அதான் ஆரிக்”

அவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது மெல்ல. ‘இயல்பாகவா அல்லது கோபமா அவனுக்கு?’ புரியவில்லை நிரல்யாவிற்கு.

அதற்குள் ஏதோ ஒரு கார் இவர்கள் அருகில் வந்து நிற்க, சட்டென ஒருகையால் அவளை தோளோடு அணைத்தவன், மறுகைவிரல்களால் அவள் விரல்களை பின்னிக்கொண்டான். அவன் உடல் இறுகுவதை இவளால் உணர முடிந்தது.

‘ஆபத்தா?’ இவள் மனம் அலறியது. காரிலிருந்தவன் ஏதோ பேச, நிரல்யாவின் விரல்கள் பிடித்திருந்தவனின் இரும்பு விரல்களால் பதம் பார்க்கப்பட்டது.

சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென ஒரு சுற்று, ஒரு காலை காரில் ஊன்றி, மறு காலை விர்ர்ர்ர்ர்ர்ரென  காற்றில் சுற்றி அந்த கார்கார கடலை பார்ட்டிக்கு கழுத்தில் விடுவான் ஒரு கா(க)ல்வெட்டு, என நிரல்யா நினைத்திருக்க,

இவள் சற்றும் எதிர்பாராத விதமாக குடியிருப்பு பகுதிக்குள் இவளை இழுத்துகொண்டு ஓடத்தொடங்கினான். “வேகமா வா” என்ற மென்குரல் கட்டளையோடு. எங்கேயோ நுழைந்து நுழைந்து ஓட்டம். 15 நிமிடமாவது தொடர்ந்து ஓடியிருப்பர் இருவரும். ‘ம்ஹும் இதற்கு மேல் முடியவே முடியாது,’ மனம் நிற்க சொல்லி கெஞ்சி கொஞ்சி கடைசியாக அரட்டி மிரட்டியது. இனியும் தொடர்ந்தால் மயக்கம் என்ற பெயரில் மறைந்துகொள்ளும் அது என இவளுக்கு புரிந்தது.

ஒரு வீட்டின் இருண்ட காம்பவுண்ட் சுவர் மீது இவளை சாய்த்து நிறுத்தினான்.

“குட் ஜாப், இவ்வளவு நேரம் தாக்கு பிடிச்சிட்டியே! உங்க நாட்டில் இளவரசிகள் போர்பயிற்சி எடுப்பாங்களாமே, அதுதானா இது?” மெச்சுதலாக சொன்னான் அவன்.

“அ அ…..து போ……….ர்பயிற்சி, இ இ………து பு பு………றமுதுகிடுற மு………யற்சி”

மூச்சிளைக்க கோபத்தை இன்ஸ்டால்மென்டில் வெளியிட்டாள். சிரிப்பான் என எதிர்பார்த்தாள்.

“இந்த இடத்தில் சண்டைபோட்டு அடுத்தவங்க உன்னை கவனிக்கிறபடி ஆகிடகூடாது.அதுவும் போலிஸ் வந்துவிட்டால் ரியல் ட்ரபுள். அதான்.” என படு சீரியஸான குரலில் சொல்லி முடித்தான் அவன்.

‘ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் சின்னசாமி ஆஜராயிட்டார்ப்பா’ மூக்கை சுழித்து பழிப்பம் காட்டினாள்.

“சிரிக்கவே மாட்டீங்களா நீங்க?”

“நியாயபடி நான் உன்ட்ட பேசியிருக்கவே கூடாது, நீ என்ன சரியா புரிஞ்சுகிடாம, பின்னால் பிரச்சனை பண்ணிட கூடாதேன்னுதான் இவ்வளவும் சொன்னது. வா போவோம்?”

“எங்க போறோம்?”

“உனக்கு டிரஃஸ் எடுக்க?”

ஏன்? புரியாது விழித்தாள்.

“நீ இப்ப போட்டிருக்கிற டிரஃஸுடன் உன் அப்பாவை பார்த்து கடத்தியவனுடன் கடலில் விழுந்தேன், நம்ம ராணுவம் வந்து காப்பத்திட்டுனு சொன்னால் நம்புவாங்களா?”

அப்பொழுதுதான் அது அவளுக்கு உறைத்தது. “கடைக்கு போறோமா?” “பணம்?”

“இல்ல, அது ரிஃஸ்க், ஏதாவது ஒரு காமிராவில் நாம பட்டாலும் ப்ரச்சனை, இந்த வீட்ல கேட்கலாம், அங்க காயபோட்டிருக்கிற டிரஸ்ஸில் உன் சைஸ் நிறைய இருக்குது.”

‘சே! என்ன கண்கள் இவனிது! ஓடும் போது காயபோட்டிருக்கிற துணிவரை  கவனித்திருக்கிறான்?’ பெண் மனம் சிலாகித்தது.

“ஆனால் இங்கே நான் போட்டிருந்தமாதிரி டிரஸ் கிடைக்குமா……?”

நீ கடத்தப்பட்டது எந்த கேமிராவிலும் இருக்காது….”

“அதெப்படி என் பால்கனியில் கேமிரா உண்டே!”

“உள்ளே வர்றப்பவே, பின்பக்க கேமிரா மூனையும் சுட்டுட்டுதான் அவன் வந்தான்.”

“ஓ!!”

“மாலிலிருந்து உன்னை கிளம்பச்சொல்லி உங்கப்பா போல் போன்பண்ணியது இந்த கூட்டம்தான். உள்ளே வந்ததும் டிரஸ் மாத்துவது உன் பழக்கம், டிரஸ் மாத்தும்போது நீ தனியா இருப்ப, அப்ப உன்னை கடத்தனும்ங்கிறதுதான் இவங்க திட்டம்.”

“ஓ….அதனால என் ஸைஸில் நான் எந்த டிரஸ் போட்டிருந்தாலும் அப்பா நம்பிடுவார்.”

“ம். உன் எல்லா டிரஃஸும் உன் அப்பாவுக்கு அடையாளம் தெரியாதுதானே……..”

“என்னை அடையாளம் தெரியுதே அதுக்கே திருப்திபட்டுகிடனும்.” என்ற நிரல்யாவின் பதிலில் நிரம்பி நின்றது ஏக்கம். அவன் ஏதாவது சொல்லவேண்டும் என எதிபார்த்தது மனது.

இவள் கரத்தை பற்றினான் அவன்.

தொடரும்…

அடுத்த அத்தியாயம் வரும் சனியன்று இரவு பதிவிடப் படும்

Leave a Reply