இளமை எனும் பூங்காற்று….

டிசம்பர் 2004:

அகில்:

ஏய்…முதல்ல நீ இப்படி லூசு மாதிரி உளர்றத நிறுத்து….மாமா பொண்னுன்னு பார்க்கேன்….இல்ல…உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா….உங்க வீட்லயும் என் வீட்லயும் எப்படி பழகுறாங்க…அது உனக்கு பிடிக்கலையோ…? சண்டைக்கு வழி சொல்ற….உன் அம்மா அப்பா உன் கல்யாணத்துக்கு ஆயிரம் கனவு வச்சிருப்பாங்க…அதுமாதிரி என் அம்மா அப்பாவுக்கும் என் விஷயத்துல எதிர்பார்ப்பு இருக்கும்…நீ எப்படியோ…எனக்கு பெரியவங்க மனச கஷ்ட படுத்தி வாழ்க்கை அமச்சுகிட விருப்பம் இல்ல…எனக்கு என் அம்மா அப்பா அக்கா எல்லோரும் கடைசி வரை வேணும்…மனோ அத்தானுக்கு இந்த காதல் கத்தரிக்கான்னா சுத்தமா பிடிக்காது…உனக்காக என் அக்க வீட்டோட உறவ முறிச்சுக்க சொல்றியா…போ…போய்…எதுக்காக உங்க அம்மா அப்பா உன்ன ராம்நாட்ல இருந்து சென்னைக்கு அனுப்புனாங்களோ அந்த வேலைய பாரு…ஒழுங்கா படிச்சு முடிச்சுட்டு ஊர் போய் சேரு….என்ன விட நல்ல மாப்பிள்ள பார்ப்பாங்க…

என் சம்பளம் எவ்ளவுன்னு தெரியுமா? நீ வாங்குற விலைக்கு இரண்டு சேலைக்கு கூட பத்தாது என் இன் கம்…போ..போய் உருப்பட பாரு..

தரங்கிணி:

அம்மா…எனக்கு கொஞ்சம் ஃபீவரிஷா இருக்குதுமா…..இங்க ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவே இல்லமா…கஷ்டமா இருக்குது…வீக் எண்ட் மட்டும் அத்த வீட்ல இருந்து வந்து கூட்டிட்டு போக சொல்லுங்கம்மா… அகில் ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போற வழிதான்மா எங்க ஹாஸ்டல்….அத்த வீட்ல சன்டே நான் வெஜ் ரொம்ப நல்லா இருக்கும்….

மஞ்சுளா:

மதி அண்ணி… நம்ம தரங்கிக்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலையாம்…உங்க வீட்டு சாப்பாடு தான் நல்லாருக்குமே….கொஞ்சம் சிரமம் பாராம பிள்ளய வெள்ளி கிழம சாயந்தரம் கூட்டிட்டு வந்துட்டு ஞாயிறு சாயந்தரம் கொண்டுபோய் விட்டுடுங்க….

வளர்மதி:

டேய்…தம்பி  அகில்…ஆஃபீஸ்விட்டு வர்றப்ப அப்படியே நம்ம தரங்கிய கூட்டிட்டு வந்துடுப்பா…பாவம் ஹாஸ்டல் சாப்பாடு அவளுக்கு பிடிக்கல போல…சண்டே கொண்டு போய் விட்டுகிடலாம்…

அகில்:

போங்கம்மா….வேற வேல இல்ல…குடுக்கிறத சாப்பிட்டுட்டு சும்மா இருக்க சொல்லுங்க அவள….இல்லனா அவ பெரியப்பா வீடு இங்க தான இருக்கு அங்க போக சொல்லுங்க…இங்க எதுக்கு அவ?

வளர்மதி:

என்னடா நீ….அவ வீட்டுக்கு போறப்பல்லாம் மஞ்சுளா எப்படி பார்த்துபா நம்மள…அதோட எங்க அண்ணன் கூட ஒத்து போகாம தான தரங்கிக்கு லோக்கல் கார்டியனா நம்ம அப்பாவ குடுத்துருக்கான் என் தம்பி……போறப்ப மறக்காம அந்த லோக்கல் கார்டியன் கார்ட எடுத்துட்டு போ அகில்….

தரங்கிணி:

என்ன ….எங்க வீட்ல…. உங்க வீட்ல உள்ள எல்லா பெரியவங்களுமா சேர்ந்து மாப்பிள்ள சார போய் பொண்ண கூட்டிட்டு வர சொல்லி அனுப்பிட்டாங்க போல…நாமல்லாம் சொந்தம் அகி….வீட்ல சந்தோஷமா சம்மதிப்பாங்க….கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க…அப்புறம் நீங்க சொன்ன சம்பள விஷயம்…..ஃபர்ஸ்ட் ஜாப்ல எல்லோருக்கும் சம்பளம் உங்கள மாதிரி தான் வாங்குவாங்க…நம்ம கல்யாணத்துக்குத் தான் இன்னும் வருஷம் இருக்கே…..

அதோட எங்க வீட்ல எனக்குன்னு ஒரு 25 லட்சம் சேர்த்து வச்சிருக்காங்களாம்…அத வச்சு அவங்க எப்படியும் உங்க வீடு அளவுக்கு தான மாப்பிள்ள பார்க்க முடியும்…அது ஏன் நீங்களாவே இருக்க கூடாது..?

அகில்:

கிறுக்கு மாதிரி கற்பன செய்றத முதல்ல நிறுத்து….இன்னைக்கு நான் உன்ன கூப்பிட வந்திருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் நம்ம பெரியவங்களுக்கு இடையில உள்ள பாசம் அதோட சேர்ந்த கடமை உணர்ச்சி… பாசத்துகுள்ள மரியாத காதலுக்கு கிடையாது நம்ம குடும்பங்கள்ள…அத முதல்ல நீ புரிஞ்சுக்கோ….

அதோட எங்க வீட்ல இருக்குற வசதி எங்கப்பா சம்பாதிச்சது…அத பார்த்துட்டு உன்ன கல்யாணம் செய்து குடுக்க உங்கப்பா என்ன லூசா? அதுமாதிரி நானும் என் அப்பா சம்பாத்யத்த வச்சு கல்யாணம் செய்றதுக்கு லூசு கிடையாது…தரிசுக்கு தண்ணி பாய்க்கிறத முதல்ல நிறுத்து…

தரங்கிணி:

குடும்பத்த சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு…கடைசி வரைக்கும் என்ன சமாளிக்கிறது உங்க பொறுப்பு மாப்ஸ்….

அகில்:

போ…கிறுக்கு…

அகில்:

அம்மா…நான் இன்னும் ஒரு சர்டிஃபிகேஷன் வாங்கினாதான்மா   கேரியர் குரோத் நல்லா இருக்கும்….அதனால வீக் எண்டல க்ளாஸ்ல ஜாய்ண்ட் செய்துருக்கேன்மா…ஃப்ரைடே இவ்னிங் நான் பிரபு ரூம்க்கு போய்டுவேன்…அவன் கூட சேர்ந்து படிக்க வசதியா இருக்கும்…ஸன்டே நைட் வந்துடுவேன்….

வளர்மதி:

அதெல்லாம் சரி…ஆனா சண்டே மதியம் சாப்ட வந்துட்டு போயிரு….

அகில்:

போங்கம்மா..மனுசனுக்கு சாப்பாடுதான் இப்போ ரொம்ப முக்கியம்…படிக்கனும்மா!! சர்டிஃபிகேட் வந்த பிறகு சேர்ந்து சாப்பிட்டுகிடுறேன்…

 

 

பிப்ரவரி 2005:

தரங்கிணி:

என்ன மாப்ஸ்  எனக்கு பயந்து ஃப்ரெண்டு வீட்ல செட்டில் ஆகிட்ட மாதிரி தெரியுது…..பிரவாயில்ல இந்த மீன் டைம்ல உங்க வீட்ட நான் ட்யூன் செய்துகிறேன் …நம்ம மேரேஜுக்கு தான்…இப்படி ஒரு மருமக கிடைப்பாளான்னு உங்க வீட்ல அத்தனை பேரையும் மூக்கு மேல விரல் வைக்க வச்சுடுவோம்…

அதே நேரம் போன இடத்துல நீங்க வேற யாருக்காவது  ரூட் போடுற மாதிரி தெரிஞ்சிது  மவனே உன்ன போட்டு தள்ளிட்டு நானும் வந்து சேர்ந்துடுவேன்…

அகில்:

பிள்ளயாவ வளர்ந்திருக்க நீ…இஷ்டம் இல்லன்னு சொல்றேன்ல விடேன்… புது புது நம்பரா வாங்கிகிட்டு மாத்தி மாத்தி கால் பண்ணிகிட்டு…சீ…

 

மார்ச் 2005

தரங்கிணி:

அத்த இந்த சிக்கென் ரொம்ப நல்லா செய்றீங்க…எனக்கும் சொல்லித் தாங்கத்த….

 

ஏப்ரல் 2005

அகில்:

அம்மா….எனக்கு ரிசல்ட் வந்துட்டுமா…ரொம்ப நல்ல ஃஸ்கோர்மா….ரொம்ப சந்தோஷமா இருக்குதுமா..

 

மே 2005:

அகில்:

அம்மா நான் கம்பனி மாறுறேன் மா..நான் கேட்ட மாதிரியே…புனேல போஸ்டிங் கிடச்சுட்டு…..இதுல்லாம் பெரிய கம்பனிமா….ஸலரி டீசண்டா இருக்கும்…

 

ஆகஸ்ட் 2005

தரங்கிணி:

அம்மா…ப்ரியா பேங்களூர் ஷாப்பிங்க் போய்ட்டு வந்து இருக்காமா….டிரஸ் எல்லாம் சூப்பரா வாங்கி இருக்கா….ராகிணி அண்ணி அங்க தான இருக்காங்க…இங்க சென்னைல இருந்து பேங்களூர் பக்கம் தான்மா…அங்க போய்ட்டு வரட்டுமா..? ப்ளீஸ்…..மனோ அண்ணா வீட்டுக்கு வர்றவங்கள ரொம்ப நல்ல பார்த்துபாங்கன்னு நீங்க தானமா சொன்னீங்க..போட்டுமா…?

தரங்கிணி:

மனோ அண்ணா….எனக்கு கூட பிறந்த அண்ணா கிடையாது….நீங்க தான் எனக்கு இருக்கிற ஒரே அண்ணா….வர்ற வீக் எண்ட் பேங்களூர் வர்றேன்….. ராக்கி…அதான் உங்கள பார்க்கனும்…

 

டிசம்பர் 2006:

தரங்கிணி:

அகி…தயவு செய்து கால கட்பண்ணிடாதீங்க அகி…ரொம்ப கஷ்டமா இருக்குதுபா…தயவு செய்து புரிஞ்சிக்கோங்க….உங்கள பார்த்து எவ்ளவு காலம் ஆகிட்டு…மெசேஜ் எதுக்கும் ரிப்ளை இல்ல…போன் செய்தா உங்களுக்கு கோபம் வருதுன்னுதான் இவ்ளவு நாளும் செய்யல..ப்ளீஸ் ….வலிக்குது அகி…ப்ராஜக்ட் பேங்களூர்தான் போறேன்…ராகி அண்ணி வீட்ல தான் இருப்பேன்….5மாசம்….ஒரு தடவையாவது வந்து பார்த்துட்டு போங்க.. ப்ளீஸ்

அகில்:

ஏய்… உனக்கு இன்னும் புத்தி தெளியலயா..? இந்த நினப்புலதான் இன்னும் எங்க வீட்டுக்கு போய்ட்டு இருக்கியா….போ…5மாசம் என் அக்கா வீட்டுக்கு வர முடியாம பண்ணிட்ட…போ…

தரங்கிணி:

எனக்காக..எங்க வீட்ல சம்மதிக்கனும்கிறதுக்காகத்தானே  இவ்ளவு ஹார்ட் வொர்க் செய்துட்டு இருக்கீங்க….அது எனக்கு புரியாம இல்ல…அத என்ட்ட ஒத்துகிட்டா என்னவாம்…இதெல்லாம் புரியாம இருக்க நான் என்ன உங்கள மாதிரி மக்கு ப்லாஸ்திரியா மாப்ஸ்…?

அகில்:

நீ மக்கு இல்ல…கிறுக்கு… கற்பன செய்தாலும் ஒரு அளவா செய்யனும்….போ…

தரங்கிணி:

நான் தரங்கிணி…கடல் அலை…திரும்ப திரும்ப உங்கட்ட வந்துட்டேதான் இருப்பேன் அகி…ஆனா இப்படியே போனா…நீங்க திரும்பி தேடுறப்ப இல்லாம போயிடுவேன்…வாழ்க்கைக்கும் உங்களுக்குத்தான் வலிக்கும்…

அகில்:

ஆமா…இப்படி இல்லாம போறதுக்குதான உங்க வீட்ல இப்படி ஆசையா வளர்க்கிறாங்க…கிறுக்கு உனக்கு அடுத்தவங்கள பத்தி என்ன அக்கற….வெறும் சுய நலம்…ரொம்ப சினிமா பார்ப்பன்னு தெரியுது…முதல்ல அத நிறுத்து உருப்பட்டுறுவ….

தரங்கிணி:

அது!! அந்த அக்கற இருக்குல்ல உங்களுக்கு…. அது போதும்…நான் சாக மாட்டேன்…நூறு வருஷம் இருந்து உங்களதான் கழுத்தறுப்பேன்…

 

மார்ச் 2007:

மனோ:

 ராகி…  கவனிச்சியா இந்த தரங்கிணி பொண்ண….ரொம்ப நல்ல டைப்பா தெரியுது….என்னமோ எங்கம்மாவுக்கு பெண்குழந்த இல்லையேன்னு ஒரே வருத்தம்…இப்போ அவங்க இருந்திருந்தாங்கன்னா நம்ம தரங்கிய பார்த்து சந்தோஷ பட்டிருப்பாங்க…

ராகிணி:

ஆமா…நீங்க சொல்றதும் சரிதான்….இவ டீனேஜில்லாம் கொஞ்சம் உர் உர்ன்னு இருக்கிற ஆள்தான்…ஆனா இப்போ நல்லா பழகுறா…

 

ஜூன் 2007:

தரங்கிணி:

கடைசி வர வரலைல..?.என் வலி உங்களுக்கு புரியல…எல்லாம் விளையாட்டா இருக்குதுல….இதோட எனக்கு கோர்ஸ் முடியுது…அம்மா மாப்ள பார்க்கனும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க…ஆனா உங்க வீட்ல இப்போதைக்கு உங்களுக்கு பார்க்கிற எண்ணம் இல்ல..அதான் அத இத சொல்லி மேல படிக்கிறதுக்கு பெர்மிஷன் வாங்கி இருக்கேன் அப்பாட்ட… ஆனா அப்பா மதுரைல சீட் வாங்கி இருக்காங்க… தம்பியும் அங்க படிக்கிறதால எனக்கு அங்கயே வாங்கிட்டாங்க போல…..சென்னைய விட்டு கிளம்புறதுக்கு எனக்கு  ரொம்ப பயமா .. .என்னவோ போல இருக்குது…அந்தரத்தில ஊஞ்சல் ஆடுற மாதிரி…ஒரு முடிவு தெரியாம நான் இங்க இருந்து கிளம்ப மாட்டேன்….இன்னும் நாலு நாள்ல ஸட்டர்டே….. அதுக்குள்ள நீங்க உங்க மனசுல உள்ள காதல ஒத்துகிடனும்…இல்லனா வர்ற சண்டேவ பார்க்க நான் இருக்க மாட்டேன்…நெக்ஸ்ட் வீக் ஊருக்கு கிளம்ப டிக்கெட் புக் செய்துறுக்காங்க… உங்க சம்மதம் தெரியாம ஊருக்கு போற தைரியம்… தெம்பு எனக்கு இல்ல..

அகில்:

என் நிம்மதிய கெடுக்கிறதுக்குன்னே பிறந்த போல….உன் தொல்ல தாங்காமதான்… சென்னைல அத்தனை வேலை இருந்தும் இந்த புனேல வந்து கிடக்கிறேன்…என் அம்மாவ விட்டுட்டு…இது போதாதுன்னு இன்னும் வேற….ஜெயிலுக்கும் அனுப்பனும்னு நினச்சுட்ட போல….பிசாசு…

தரங்கிணி:

அப்படில்லாம் ஒன்னும் பயபட வேண்டாம்….யாரும் காரணம் இல்லைனு தெளிவா எழுதி வச்சுட்டேன்….

அகில்:

அப்போ எனக்கு தொல்லவிட்டது… நிம்மதி.. ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரீட் கொடுக்க போறேன்… பை

அகில்:

வித்யா உன் ஃப்ரெண்ட் சூசைட் அது இதுன்னு கன்னா பின்னானு பேசிட்டு இருக்காமா….எதாவது கிறுக்குதனம் செய்துக்க போறா…கொஞ்சம் கவனமா பார்த்துகோங்க…உன்ன கொஞ்சம் கூட கண்டுகாம செத்தா ட்ரீட் கொடுப்பேன்னு சொல்றவனுக்காகவா சாக பொறேன்னு எதாவது சொல்லி மனச மாத்துங்கப்பா…

வித்யா:

அகிலண்ணா இவ்ளவு அக்கற இருக்கிறவங்க…அவ மனச புரிஞ்சிகிடலாமே…அவ சூசைட் பண்ணுவேன்னு மிரட்டறது தப்புதான்…ஆனா…பாவம்ணா அவ…நீங்க எதோ கோபத்துல சினிமா பார்க்கிறத நிறுத்துன்னு சொன்னீங்கன்னு அத கூட நிறுத்திட்டா தெரியுமா…?

அகில்:

அவங்க வீட்ல இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்கம்மா…அவங்க வீட்ல  பணம் தான் சந்தோஷத்தோட அளவு கோல்னு நினைக்கிறவங்க…எங்க வீட்டு மைன்ட் செட்டுக்கும் அதுக்கும் கொஞ்சமும் ஒத்து போகாது…என் அம்மாவும் அவங்க தம்பியும் அந்த விஷயத்துல எதிர் எதிர் துருவம்… எங்க வீடு ஃபினான்ஷியலி உங்களுக்கு ஓகேவா தெரியலாம்…நான் இப்போ 40,000 வாங்கிறேன்…இன்னும் 2 இயர்ஸ்ல ரொம்பவே டீசண்டா இருக்கும் என் சேலரி…என்னால என் ஃபமிலிய நல்லா பார்த்துக்க முடியும் தான்…ஆனா அவங்க எதிர்பார்ப்பு ரொம்ப பெருசுமா….இந்தியா லெவல் பணக்காரங்க யாராவது கிடைப்பாங்களான்னு பார்பாங்க….அதிக பணம் இருந்தா அதிகமா சந்தோஷமா இருக்கலாம்..அப்படின்னு ஒரு ஃபார்முலா அவங்க வீட்ல…

வித்யா:

அதெப்படிண்ணா…அந்த பணக்காரங்களும் அப்படியே எதிர்பார்பாங்கல்ல…?

அகில்:

அது உங்களுக்கும் எனக்கும் மட்டும் புரிஞ்சி என்ன ப்ரயோஜனம்…அவங்க வீட்டுக்குல்ல புரியனும்…அதோட சொந்தத்துக்குள்ள செய்தா ப்ரச்சனைனு வேற தெரியுது….எதுக்கு தேவை இல்லாம..ஸட்டர்டே கொஞ்சம் கவனமா இருந்துகோங்க…நான் உங்கட்ட இப்படி பேசினேன்னு சொல்லாதீங்க…இன்னும் கற்பனைய வளர்த்துகிடுவா…பார்த்துகோங்க…

வித்யா:

அ..அண்ணா…பயாமா இருக்குன்னா…இவ…தரங்கி…எ..என்னமோ…மாதிரி..பேசுறா….சேர்த்த மா..மாத்திரைலாம் போட்டுடேன்…என் அகில பார்க்காம போறேன்னு….கூடவே தான் இருந்தேண்ணா…பாத்ரூம் போனவ…பயமா இருக்குண்ணா…மால்ல இருக்கோம்ணா….

அகில்:

ஹேய்…முதல்ல வெளிய போய் ஆட்டோ எடுங்க..ட்ரைவர்ட்ட நான் வழி சொல்றேன்….நான் சொல்ற ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க…என் ஃப்ரெண்டுது தான்…அதுக்குள்ள மத்தத நான் பார்த்துகிறேன்…நெக்ஸ்ட் ஃப்ளைட்ல நான் வர்றேன்…

அகில்:

தரங்கி குரங்கு…நீ…மனுஷன உயிரோடு கொல்றதுல பிஎச்டி செய்துறுப்ப போல…

தரங்கிணி:

ரொம்ப பயந்துட்டேன் அகி…எங்க இனி உன்ன பார்க்கவே முடியாதோன்னு….இனி…நான் கண்டிப்பா இப்படி செய்ய மாட்டேன் அகி…உன்ன பார்க்காம என்னால இருக்கவே முடியாது…சாகவும் முடியல….நீங்க இல்லாம இருக்கவும் முடியல….நான் என்ன செய்ய அகி…..?என்னால தாங்கவே முடியலையே….

அகில்:

லூசுக்கு அப்படித்தான் தோணும்…இதெல்லாம் மொமன்ட்ரி….. உனக்கு அழகு மேல இருக்கிற ஆசை அப்படி…..அழகா இருக்கனும்னு உன் ஒவ்வொரு ட்ரஸுக்கும் நீ எவ்ளவு செலவு செய்றன்னு பாரு…உங்க வீட்டு நிலைக்கே இது ரொம்பவே அதிகம்…உனக்கு அழகு மேல அப்படி ஒரு வெறி…உன்ன சுத்தி ஒரு கூட்டம்…உன் அத்த பையன் மாடல் மாதிரி இருக்கான்னு சொல்லி ஏத்திவிட்டதால வந்த கிறுக்கு இது.. பாரு …இத பாரு….விட்டலிகோவா இருக்கும்னு டாக்டர் சொல்றாங்க…இன்னும் கொஞ்சம் வருஷம்தான்…அப்புறம் இது உடம்பெல்லாம் பரவி உரிச்சு வச்ச வெள்ள கோழி மாதிரி இருப்பேன்….அப்போ இந்த காதல் கத்தரிக்கா எல்லாம் காணாமல் போயிடும்…

தரங்கிணி:

என்ன இப்படி நினச்சிட்டியே மாப்ஸ்…நீ எவ்ளவு அழகா இருக்க…நான் பாரு….கண்டிப்பா உன் அளவுக்கு அழகாவே இல்ல….உன் பக்கத்தில நன் வர்றப்ப…இவனுக்கு போய் இப்படி ஒரு வைஃபான்னு சொல்லிடுவாங்கன்னுதான்…டிரெஸ்க்கு இவ்ளவு செலவு செய்தேன்…உனக்கு பிடிக்கலைனு சொலிட்டல்ல…இனி கண்டிப்பா செய்ய மாட்டேன்….

அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு நீ எப்படி இருந்தாலும் அழகுதான்….

அகில்:

சினிமா மாதிரி எதோ நோய்னு ஃபிலிம் காட்றேன்னு நினச்சுடாத…இது முழுக்க முழுக்க நிஜம்….

தரங்கிணி:

அப்படில்லாம் பொய் சொல்ற அளவுக்கு உனக்கு சாமர்த்தியம் போதாதுன்னு எனக்கு தெரியும் மாப்ஸ்….இதுனாலதான் நான் உன்ன நிஜமாவே விரும்புறேன்னு உனக்கு தெரியும்னா..இது வந்ததுக்காக நான் கடவுளுக்கு ரொம்ப தேங்க் பண்றேன்…

அகில்:

போடி  லூசு…அத இத சொல்லி கடைசில என்னய கவுத்துட்டியேடி…எப்படித்தான் உங்க வீட்ட சம்மதிக்க வைக்கவோ….? எப்படித்தான் என் அம்மா முகத்த பார்க்கவோ…?

தரங்கிணி:

அகி…அப்படின்னா…? நிஜமாவா அகி…ஐயோ அகி என்னால தாங்கவே முடியலையே அகி…இப்படியே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே….

அகி:

போடி…போய் குப்புற படுத்து கனவு கானு…அப்படியே பக்கத்தில இருக்கிற வித்யாட்ட ப்ளேடு போடு…உனக்கென்ன உன் காட்ல மழை….நான் போய்…அடுத்து என்ன செய்யன்னு வழிய பார்க்க போறேன்…இப்பவே கண்ண கட்டுதே…

 

ஆகஸ்ட் 2007:

தரங்கிணி:

அகி…ஐ மிஸ் யூ….இங்க காலேஜ் சேர்ந்துட்டேன்….

அகில்:

ஏய் பிள்ள பூச்சி….நான் ப்ளைட் போர்ட் பண்றேன்… பாஸ்டன் ரீச் ஆனதும் கால் பண்றேன்….ஐ மிஸ் யூ டா… பட் நாம அப்ராட்ல செட்லாகிறதுதான் சரியா வரும்…அத நினச்சா இது…உன்ன பிரிஞ்சி இருக்கிறது… வொர்த்…பைடா…

 

ஆகஸ்ட் 2008:

தரங்கிணி:

மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ..

அகில்:

படிடா…

அகில்:

கார் வாங்க பொறோம்டா நாம…மெயில் பார்த்து எந்த கலர்னு ஓகே பண்ணு……நீ நெக்ஸ்ட் இயர் இங்க வர்றப்ப இதுலதான் ஊர் சுத்துவோம்…

 

டிசம்பர் 2008

அகில்:

சென்னை வீட மாடிஃபை செய்யலாம்னு நினைக்கிறேண்டா…ப்ளான் அனுப்பி இருக்கேன் பார்த்து உன் சஜஷன் சொல்லு… பார்க்க பக்காவா இருக்கனும்…அப்பவாவது உங்க வீட்ல எங்க வீட்ல பொண்ணு கொடுக்கிறது பந்தாவா தோணுமான்னு தான் இந்த அரேஞ்ச் மென்ட்…..

 

ஃபெப்ரவரி 2009

அகில்:

விசிட்டர்ஸ் ரூம் போ…அங்க ஒரு கண்ணாடி போட்டவன் ஒல்லியா குட்டையா திரு திருன்னு முழிச்சுகிட்டு இருக்கானா…அவன்ட்ட போய் ஹாய்…நான் தரங்கிணின்னு சொல்லு…ஒரு பாக்ஸ் தருவான்…ரூம்ல வந்து திறந்துபாரு….

அகில்:

பார்த்துட்டியாடா…பிடிச்சிருக்கா…எனக்கு பிடிச்சிது உனக்கு நல்லா இருக்கும்னு தோணிச்சு…சாரி பர்த்டே அன்னைக்கு ரீச் ஆகிற மாதிரி அனுப்ப வழி இல்ல…இங்க வந்த பிறகு எனக்கு போட்டு காண்பி…

 

ஏப்ரல் 2009:

தரங்கிணி:

அகி …சென்னைல நம்ம வீட்ல இருந்துதான் பேசுறேன்….வீடு பக்காவா இருக்குது…எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம் இன்டீரியர்லாம் பக்காவா இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காங்க….கிரகபிரவேசம்…எல்லாரும் இருக்காங்க…நீ மட்டும் இல்ல… எனக்காக எங்க அம்மாவ சிரிக்க வைக்க அங்க நீ தனியா கிடந்து  இழுபடுற…எனக்காக நீ இத்தன செலவு செய்ததுக்கு…ஃப்ளைட் டிக்கெட்க்கு செலவு செய்து வந்திருந்தன்னா ரொம்பவே சந்தோஷபட்டிருப்பேன்….நான் சந்தோஷமாவே இல்ல அகி…என் ஆசைக்கு உன்ன பலி ஆக்றதா வருத்தமா இருக்குது…

அகில்:

இவ்ளவு தூரம் தள்ளி இருந்துட்டு நீ அழுது வழியிறத கேட்க ரொம்ப சந்தோஷமா மனசுக்கு குளுகுளுன்னு இருக்குது…

 

மே 2009:

தரங்கிணி:

இங்க தீவிரமா மாப்ள பார்க்க ஆரம்பிக்காங்க அகி…உங்க வீட்ல எப்போ பேச போற?

அகில்:

சென்னைக்கு ப்ளைட் போர்ட் ஆறேன்… திரும்பி வர்றப்ப உன் கூடதான் வருவேன்..

தரங்கிணி:

அகி..நீ…வந்து ரெண்டு நாள் ஆகுது. இன்னும் உங்க வீட்ல பேசலை நீ.. ஏன் இவ்ளவு பயப்படுற ..? அத்தைட்ட நான் பேசட்டுமா?

 ராகிணி:

என்ன தரங்கி…அகில் என்னல்லாமோ சொல்றான்…? இவ்ளவு நாள் இங்க வந்து போய் இருந்திருக்க…இதபத்தி மூச்சு விட்டதில்ல….என்னமோ  யோசிச்சு செய்ங்க…பண விஷயத்துல உங்க வீடு மாதிரி கிடையாது எங்க வீடு…

தரங்கிணி:

நான் அகி வேலைக்கு போறதுக்கு முன்ன இருந்தே அவங்கள விரும்புறேன் அண்ணி..பணம் எனக்கு ஒரு விஷயம் கிடையாது…மனோ அண்ணா எதுவும் எதிரா சொல்லாம பார்த்துகோங்க அண்ணி…ப்ளீஸ்

ராகிணி:

வேற பொண்ணுனா சண்ட போட்டுறுப்பாங்க…பொண்ணு நீ ஆச்சே…என்ன சொல்லன்னு தெரியாம விழிச்சுகிட்டு இருக்காங்க…

தரங்கிணி:

அண்ணி…அத்த அப்பாட்ட விஷயம் சொல்லிட்டாங்க போல…அப்பா என்ன அவசரமா எங்க மாமா வீட்டுக்கு அனுப்புறாங்க…நாளைக்கு கிளம்பனுமாம்…அங்க போனா திரும்பி வர முடியாது..நான் ஏர்போர்ட் வந்துடுறேன்…அகிய வந்து என்ன பிக்கப் செய்ய சொல்லுங்க…அகிய ட்ரை பண்ணேன் அவன் போன் ரீச்ல இல்ல…

வளர்மதி:

இப்படி செய்றது எனக்கு சரியா தெரியல…குடும்ப சொந்தங்கள கூட்டிட்டு போய் பொண்ணு கேட்போம்….தரங்கி சம்மதம்  இல்லாம  என் தம்பியால அவளுக்கு வேற கல்யாணம் எப்படி செய்ய முடியும்…? அதனால பயபட தேவை இல்ல…

 

ஜூன் 2009

வளர்மதி:

என்ன தரங்கி நீ தான் அகில விரும்புறதா சொன்ன…இப்போ உன் அப்பா உனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லனு சொல்றான்…?

தரங்கிணி:

சாரி…அத்த….நான் சாதாரணமாத்தான் உங்க வீட்ல பழகினேன்…நீங்களே பார்த்திருப்பீங்க  எப்பவாவது நானும் அகில் அத்தானும் பேசி பார்த்திருக்கீங்களா?  அவங்களுக்கு என் மேல ஏன் இப்படி ஒரு எண்ணம்னு எனக்கு புரியல…ராகிணி அண்ணி தான் எதையாவது தப்பா புரிஞ்சிகிட்டு அகில் அத்தான்ட்ட இப்படி சொல்லிட்டாங்க போல…சாரி….எனக்கு வீட்ல மாப்பிள்ள பேசி முடிச்சிட்டாங்க…தயவு செய்து என் வாழ்க்கைய கெடுக்காதீங்க….உங்க கால்ல விழுறேன் நான்…

 

ஜூன் 2010

அகில்:

ஹிம்…அவளே இப்படி சொல்லனும்னா எப்படி ஒரு நிலையில அவ இருக்காளோ? அவ இஷ்டம் இல்லாம பூட்டி வச்சிருக்காங்க…அடுத்து என்ன செய்யன்னு பார்கனும்…

அகில்:

ஒரு வழியும் இருக்கிற மாதிரி தெரியலக்கா…கடவுள சுத்தமா புரிய மாட்டேங்குது…விட்டலிகோ…ட்ரீட்மென்ட்டே இல்லன்னாங்க…அத ஆரம்பிச்ச அடையாளம் கூட தெரியாம போக வச்சுட்டு….முறைப்பொண்ண கல்யாணம் செய்ற சாதாரண விஷயத்துல கால வாரிட்டாரோன்னு பயமா இருக்குதுக்கா….

 

வித்யா:

தரங்கிட்ட வேற மொபைல் இருக்குது அதுவழியா எல்லார்ட்டயும் பேசிட்டுதான் இருக்கா…அவ கல்யாணதுக்கு மத்தவங்கள சந்தோஷமா இன்வைட் செய்துகிட்டு இருக்கா….நமக்குதான் தெரியாம..இப்படி கவல பட்டுட்டு இருக்கோம்…மணிஷா தரங்கியோட  புதுநம்பர் கொடுத்தா… இன்னைக்கு தரங்கிய கூப்பிட்டேன்…வினித்…அதான் அவளுக்கு நிச்சயம் செய்திருக்க மாப்பிள்ள…அவன் ரொம்ப க்யூட்டா இருக்கான்…அவனும் நல்லவந்தானு தரங்கி சொல்றா…

 

ஆகஸ்ட் 2010

அகில்:

எல்லாவகையிலும் விசாரிச்சுட்டேன் ஸ்வீட்டிக்கா…நிஜமாவே அவ விரும்பி தான் இந்த கல்யாணம் செய்றா….என்னாலதான் தாங்கவும் முடியல…நம்பவும் முடியல….  என்னை கன்வின்ஸ் செய்யவும் என் வீட்ட க்ன்வின்ஸ் செய்யவும் இத்தன வருஷம் போராடினவ…வெறும் முப்பது நாளுக்குள்ள…..அவங்க வீட்ல உள்ளவங்க சொன்னதுல மனச மாத்திகிட்டானானா….இத எப்படி எடுத்துகிடனும்னு சுத்தமா புரியல…

நிம்மதியா இருந்தவன இழுத்து நடு தெருவில நிறுத்திட்டா…தெருவும் புரியல…திசையும் தெரியல…எங்க போகனும்னே தெரியலைக்கா…வீட்ல ஒருத்தர் முகத்தையும் பார்க்க முடியல…இழவு விழுந்த வீடு மாதிரி இருக்குது…அதான் கிளம்பி பாஸ்டன் வந்துட்டேன்…நடந்து நடந்து எங்கயோ வந்துட்டேன்…எனக்கு இப்ப வீட்டுக்கு போக தெரியல…மணி இங்க நைட் ரெண்டு…..எத நினைக்கனும் எதை நினைக்க கூடாதுன்னு தெரியலைக்கா…வீட்டுக்கு வழி கேட்கனும்னா யார்ட்ட கேட்கனும்…? டிரிங்க்ஸ் அடிச்சா நல்லா இருக்கும்னு அவன் அவன் சொல்றாங்கக்கா…அவளால நான் இவ்வளவு சீரழிஞ்சது போதாதா? இல்லாத பழக்கத்த வேற பழகனுமான்னு இருக்குது…?ஆனா எதையும் தாங்க முடியலைக்கா….இப்போ ..நான் என்ன செய்யனும்? நீங்கதான் எல்லாத்லயும் நியாயம் பேசுவீங்கல்ல எனக்கும் நியாயம் சொல்லுங்கக்கா?

ஸ்வீட்டி:

ஏய் சாம்…அகில் தம்பி இன்னொரு லைன்ல இருக்காங்கப்பா….தயவு செய்து கொஞ்சம் போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்கப்பா…நாங்க இப்ப  துபை வந்திருக்கோம்…இல்லனா வீட்ல அவரயே போக சொல்லிருப்பேன்…

சாம்:

ஸ்வீட்டி அக்கா…அந்த குரங்குக்கு பார்த்திருக்க மாப்பிள்ள பிஸினஸ் மேனாம்…சூர்யவம்சம் மாதிரி நூறு நாள்ல நூறுகோடி சம்பாதிக்க இதுதான் சரியான ப்ரஃபஷன்னு அவ அம்மா சொன்னாங்களாம்….மாத சம்பளக்காரன் வீட்ல கணக்கு பார்த்து செலவு செய்யனும்…இந்த இடம்னா பிள்ள பிறந்தா அத கையால கூட தொடாம வளக்கலாம்…அப்படி எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்…விரும்பினவன விட்டுட்டு போறப்ப முதல்ல கஷ்டமா இருக்கும் அப்புறம் ஒன்னும் தோணாது…ஆனா இப்படி வசதி தினம் தினம் தேவைனு அவங்க அம்மா சொன்னாங்களாம்..அது எதுல இவ கன்வின்ஸ் ஆனான்னு தெரியலன்னு இந்த வித்யா புலம்பிக்கிட்டு இருந்தா…அத கேட்டுட்டுதான் இவன் வெளிய போனான்க்கா…. எனக்கும் ஒன்னும் புரியலைக்கா….ஓரளவுக்கு மேல பணம் எவ்ளவு அதிகம் இருந்து என்ன…அப்படி என்ன வித்யாசம் வந்துடும் வாழ்கையில…? இரண்டு வீல்ட ஒரே நேரத்துல தூங்க முடியுமா….நாலு ஷூவ ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா…?ஒன்னும் புரியலக்கா…

 

அக்டோபர் 2010

அகில்:

ஸ்வீடிக்கா எனக்கு நீங்கதான் ஒரு ஹெல்ப் செய்யனும்…..என் மனசு இப்ப அளவுக்கு எப்பவுமே காலியா இருந்தது கிடையாது…ரொம்ப வெறுமையா இருக்குது…மனச எதுல கொண்டு வைக்கிறதுன்னே தெரியல…ராகிட்ட எனக்கு பொண்ணு பார்க்க சொன்னேன்…அவ இது டூ ஏர்லி…உனக்கு வர்ற வைஃப சரியா ட்ரீட் செய்ய கஷ்டமா இருக்கும்..கொஞ்ச காலம் போகட்டும்னு சொல்றாக்கா….நீங்களாவது புரிஞ்சுகோங்க…எப்படியும் எனக்கு ஒரு நாள் கல்யாணம் செய்யதானே போறாங்க…அத இப்போ செய்ய சொல்லுங்கக்கா…நீங்க சொன்னா ராகி கேட்பா….காலி மனசு முழுக்க வர்றவளுக்குதாங்கா…அவ மனசு கஷ்டபடாம பார்த்துபேன்கா…என்ன வேண்டாம்னு சொல்லிட்டு போனவள நினச்சு.. என்ன விரும்பி கல்யாணம் செய்றவள நான் கஷ்டபடுத்துவேன்னு நீங்க நினக்கிறீங்களாக்கா…?

ராகிக்கு தான் எனக்கு யார் சரின்னு புரிஞ்சி பார்க்க முடியும்…அவள பார்க்க சொல்லுங்கக்கா…

 

ஜனவரி 2011

அகில்:

நித்யா.. இதுதான் ஸ்வீட்டி அக்கா…ராகியோட ஃப்ரெண்ட்…அக்கா நீங்க எங்க கல்யாணத்துக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது…

 

பெப்ரவரி2012

நித்யா:

என் வாழ்க்கையில நடந்ததுலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம்னா அகில் எனக்கு கிடச்சதுதான்…அடுத்துதான் எங்க நிலா குட்டி எங்களுக்கு கிடச்சதுகூட…

 

ஜூன் 2012

அகில்:

ராகி…. அத்தான் உன்ன பார்த்துகிடுற அளவு நான் நித்திய  பார்த்துகிடுறனான்னு எனக்கு தெரியல…ஆனா அவளுக்கு பிடிக்காத எதையும் என்னால செய்ய முடியலன்னு மட்டும் நல்லா தெரியுது…

 

ஜனவரி 2013

வித்யா:

ஸ்வீட்டிக்கா….தரங்கி வீட்டு பிஸினஸ் இப்போ ரொம்ப அமோகாமா போகுதாம்….சீக்கிரமே இந்தியா லெவல்ல அவ பேரும் வந்துடுமாம்…அவ ஹஸ்பண்ட் பிஸினஸ்ல தரங்கியும் பாட்னராம்….அவளோட அம்மா அப்பா கூட அதுல பாட்னர்ஸாம்.. அறியாம புரியாம நாம எடுத்த முடிவு தப்புன்னு தெரியுறப்ப அத மாத்திகிடுறது தப்பில்லன்னு சொல்றாக்கா…எனக்குத்தான் மனசுக்கு ஒத்துக்க முடியல… வைத்தெரிச்சலா இருக்குது….

ஸ்வீட்டி:

வித்யாமா… வாலிபனே! உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி..அப்படின்னு தன் வாலிபத்தில் உலகிலேயே பணக்காரர இருந்த ஒரு பெரிய ராஜா எழுதி வச்சிருக்கார்….அவர் அனுபவம் பேசியிருக்குது…

அதனால தேவன் அவர்க்கு பிடிச்சமாதிரி தரங்கிக்கு நியாயம் தீர்க்கட்டும்… ஏன்னா ஒருவேளை தரங்கி பக்கம் நியாயம் கூட இருக்கலாம்…நமக்கு எதுவும் முழுசா தெரியாதே…ஆனா நீ நல்ல  ப்ரெண்டா தரங்கிக்கு  நல்லது நடக்கட்டும்னு  மட்டும் நினை…

வித்யா:

போங்கக்கா நீங்க எப்பவும் இப்படித்தான் சொல்வீங்க…அவ அப்போ அகிலண்ணாவுக்காக அழுதப்ப நான் எவ்ளவு மனசு கஷ்டபட்டிருப்பேன் தெரியுமா…பின்னால அவ வேற கல்யாணம் செய்தப்ப எனக்கே அவ என்னை ஏமாத்துன மாதிரி இருந்துது….அப்படிங்கிறப்ப அகிலண்ணாவுக்கு எப்படி இருந்திருக்கும்…? இதுக்கெல்லாம் நியாயம் வேண்டாமா…?

 

மார்ச்2013

வளர்மதி:

தரங்கி நல்லா இல்லாம போனா அகில் பட்ட கஷ்ட்டம்…நாமபட்ட அவமானமெல்லாம் இல்லனு போயிடுமா?….எப்படியும் அவளுக்கு கல்யாணம் ஆகிட்டு…. ஒரு பெண்பிள்ள லைஃப்  நல்லா இல்லாம போகட்டும்னு நினைக்க எனக்கு பிடிக்கல… எனக்கும் மக இருக்கா…. அதோட அவ வேண்டாம்னு சொல்லபோய்தான நித்தி மாதிரி ஒரு பொண்ணு நமக்கு கிடச்சா….நித்தி பிறந்த வீடு மாதிரி ஒரு குடும்பம் அகிலுக்கு கிடச்சாங்க… இல்லனா இப்படி பணம் பணம்னு அலைறவங்க கூடதான இவன் காலம் தள்ளி இருக்கனும்…?

 

நவம்பர் 2013

அகில்:

நித்தி ….நீ பக்கத்துல இல்லனா என்னால எதையும் செய்ய முடியல…நாளைக்கு அந்த ஜப்பானீஸ் மீட்டிங்…கூட வாயேன்…. இந்த ப்ராஜக்ட் எப்படியும் நமக்கு கிடைக்கனும்…

 

செப்டம்பர்2013

ராகிணி:

அம்மா பேப்பர் பார்த்தீங்களாமா….? தரங்கி  ஹஸ்பண்ட் பிஸினஸுல எதோ பப்ளிக் மனிய ஏமாத்திட்டாராம்… அரெஸ்ட் வாரண்ட்…அதுவும் தரங்கி….உங்க தம்பின்னு மொத்த குடும்பமும்னு…எல்லாரும் பார்ட்னர்ஸாமே….

வளர்மதி:

ஆன்…என் தம்பி  அவன் சொத்தெல்லாம் விலை பேசிட்டு இருக்கானாம்… வித்து கொடுத்துறுவான்…அரெஸ்ட் அளவு போகாம பார்த்துப்பான்…இத பத்தி நாம பேசி என்ன ஆக போகுது ராகி..?

 

மார்ச்2014

வளர்மதி:

தரங்கி டைவர்ஸ் அப்ளை செய்துருக்காளாம் ராகி….இதுவரைக்கும் இவ வீட்ல இருந்து  போட்ட பணம் திரும்பி வந்தா போதும்னு நினைக்காங்களாம்….எனக்குதான் மனசே கேட்கல…என் கைல சாப்ட்டு வளந்தவடி… என்ன எனக்கும் என் பிறந்த வீட்டுக்கும் உறவு இல்லன்னு ஆக்கினவதான்….இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது….

 

ஃபெப்ரவரி 2015:

அகில்:

என்ன கேட்டீங்க…இதுவரைக்கும் நான் எடுத்த டெஷிஷன்ஸ்லயே ரொம்ப வைஸானதா …அது நித்யாவ கல்யாணம் செய்ததுதான்.

முற்றும்

 

Advertisements

8 comments

 1. First rendu pera and intro padichathume “ippo mani rathiri 2 enga irukiren enna yosikarenu theriyala eppadi en veetuku povenu theriyala ” dialogue mandai kulla olichukitte irunthathu .
  Antha vitalico kathai ku aduthu ithuvum one of the completed diff material from you .

 2. Sweety sis Different story from you. Ellarukum etho oru situation avanga enna seithangalao athu kandipa thirumba kidaikum athu nallatho kettatho. Practical ah elathayum edukava ila emotional ah edukava nu elarkume oru confusion irukathan seiyuthu. Enna than ketathunalum yarum nalla irka kudathu nu nama nenaika kudathu nu solrathu azhagu. Nalla story sis.

 3. I’ve always known your outlook towards love before marriage, as it is quite evident in your writings. Adhu oru vagaila acceptable dhan, irundhalum there’s another side to every story nu thonudhu. Rombave touching story a irundhudhu. Priorities change, people change… Man proposes God disposes apdinradhu pola, kadaisila aandavan podura mudichu dhan irudhiyum kuda, even though we may not know the repercussions of our decisions now, theres always something good in everything that God decides for us. Kandipa lighthearted story ila, nerayave artham podhinju iruka story. Akil oda manasu avanoda artha raathri call and akka kita ponnu paka solrapo theliva puriyudhu. Great going ma’am.

 4. Paraparapa oru kadhai padichu mudicha feel..😊😊😊
  Adhavadhu ovvoru dialogue um Vera Vera idathil suthi kaati, kondu vandhu vita pola irundhu unga narration. Different experience ji.. 👏👏👏
  And idhu pola Sila incidents parthum iruken..😶
  Enaku niraya… Tharangini ah pidikala.. Immaturity.. Pidivaadham.. Suya nalam.. muttalthanam.. 🙄😒
  Kandipa idhu ponunga nu matum accuse Panra pola ilayum Dan.. Oru individual vaazhra valarura soozhal ku avanga nature maarumae..
  Aghil ku enavagumo nu padhari.. wise aana decision ah parthu paratanum nu matum Dan thonudhu🤗
  Verse.. Nyayathil kondu vandhu niruthuvar.. 😍😍😍
  Yes.. adhanala anga accuse Panamal vitadhu romba pidichadhu.. 😍👏👏👏
  Thelivaava mudivu.. Clean…😇
  Mixed feel.. Nalla iruku ji😊😊

 5. Wow really good… tharangini yenna solla, yellarum innaiki pozhutha than parkaranga nalaiya pozhutha ninaikarathilla…
  Akil ku nan solla ninaichitu, Yellam nanmaike… ithuvum kadanthu pogum….
  Very nice story !

 6. யதர்த்ததை அப்படியே உள்ளபடி சொல்லும் கதை.

 7. Ayyo story nachunu irunthuchu,reality a apidiye solli irukeenga.god is there to judge who r we to take that in our hands,so true.

 8. எதார்த்தமான கதை.தரங்கினி போன்ற வர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.நித்தி அவன் வாழ்வில் வந்தது அவன் அதிர்ஷ்டம்.அதனால் மீண்டு வந்து விட்டான்.இல்லை என்றால் அவன் நிலை……nice story

Leave a Reply