இடம், பொருள், காதல்

ஞ்சனிக்கு  நம்ப கூட முடியவில்லை. ஆசையும் காதலுமாக அருகிலிருந்த நிவந்தனைப் பார்த்தாள். அவன் கவனமாக காரை செலுத்திக்கொண்டிருந்தான். அவனது கம்பீரமான களையான முகத்தின் மேல் சென்று மொய்த்தன இவள் கண்கள்.

இவனுடன் தனக்கு திருமணம் நடந்தேவிட்டதா? இல்லை இது விழித்தவுடன் கலையபோகும் கனவா?

குனிந்து தன்னைப் பார்த்துக்கொண்டாள். ஒரு மாதமாய் வகை வகையாய் தயார் செய்த திருமண அணிமணிகளுக்குள் அவள். சில மணி நேரம் தொடர்ந்து மேடையில் நின்றதால் உளையும் கால்கள். அருகில் அவன் நிவந்தன்.

கனவல்ல நிஜம்தான்.

எத்தனை மாத கனவு இது. கலைந்து காயம் செய்ய மட்டுமே வந்துதித்த  கனவென்று அனைவரும் சொல்ல, அதிசயமாய் அற்புதத்திலும் அற்புதமாய், ஆண்டவர் அன்பின் நிமித்தம் கிடைத்துவிட்ட நித்திய பரிசல்லவா இவன். மரணம் வரை இனி இவன் இவளுக்கே தான்.

உயிர் வரை உவகை தித்திக்க, இனம் புரியா இன்ப ஊற்று இவளுள் நர்த்தன பயிற்சி. நாசியில் சுவாச முயற்சி.

எத்தனை மாத ஏக்கமிது? அவனது பொருளாதார உயரமும், பலத்த குடும்ப பிண்ணணியும், இவளது அனாதை நிலையும் அடிதட்டிவிட்ட பண நிலையும்…

ஆனாலும் திடீரென ஒரு நாள் இவளிடம் வந்து நின்றவன், உன்னைமணமுடிக்க விரும்புகிறேன், சம்மதமா என்றான். இவள் ப்ரமிப்புடன் தலையாட்ட,

ஒரு மாதத்தில் திருமணம் என்றவன், ப்ரமிப்பு விலகும் முன் மனைவியாக்கிவிட்டான். கடந்த மாதம் எப்படி கடந்தது என்று கேட்டால் தெரியாது என்பாள் அஞ்சனி.

ஆடை ஆயத்தம், ஆட்கள் அழைப்பு, முக்கியமானோர் சந்திப்பு என்று முடிந்தே போனது முழு மாதமும். அவனுடன் அலை பேசியில் கிடைத்த சில நாழிகைகளை தவிர அனைத்தும் விரயம் என்றே எண்ணுகிறது பெண் மனம்.

இனி இவனுடன் இவள். இடையில் எவருமில்லை, எதுவுமில்லை.

திருமணம் முடிந்து, கடற்கரை ரிசார்ட்டில் வரவேற்பும் முடிந்து முதலிரவிற்கென தனது வீட்டிற்கு அவளை அழைத்து சென்று கொண்டிருந்தான் நிவந்தன். எதோ ரிசார்ட்டில் தான் ஹனிமூன் சூட் புக் செய்ய போவதாக அவன் முன்பு குறிப்பிட்ட ஞாபகம். ஆனால் இன்று அவன் வீட்டில் என்றுவிட்டான்.

அஞ்சனிக்கு மகிழ்ச்சியே.

மணமாகிவிட்டது என்றாலும் நிவந்தனுடன் ரிசார்டிற்குள் நுழையும்போது அனைவரும் பார்க்கையில் குறுகுறுக்குமோ என்றிருந்த தடுமாற்றம் இப்பொழுது அவசியமற்றதாகிவிட்டதே.

வர்கள் செல்லும்போது வீட்டில் ஒருவருமில்லை. வரவேற்புக்கு என்று கூட யாருமில்லை. ‘வா’ என்ற நிவந்தன் திரும்பிப் பாராமல் உள்ளே சென்றான். சற்றே முனுக்கென்றது இவள் மனம்.

இந்த வீட்டிற்கு இதற்கு முன்பு ஒரு முறை வந்திருக்கிறாள்தான். ஆனால் அன்றைவிட இன்று இன்னும் மிக பெரிதாய் ஓ வென்று இருக்கிறது வரவேற்பறை. ஆட்கள் யாருமில்லை என்பதாலா?

மாடிப்படியேறியவனை பின் தொடர்ந்தபடி கேட்டாள் அஞ்சனி

“அப்பா, அனித்ரால்லாம் வரலையா நிவந்த்?”

“தனிக்குடித்தனம்னு முன்னமே சொல்லியிருந்தேனே….அப்ப மண்டைய மண்டைய ஆட்டுன…”

அவன் குரலில் மிரண்டு போனாள் அஞ்சனி. இத்தனைக்கும் அவன் கர்ஜிக்கவெல்லாம் இல்லை. ஆனால் கடுகடுப்பு இருந்தது.

“என்னாச்சு நிவந்த்…? நீங்க கோப படுற மாதிரி எதாவது சொல்லிட்டேனா…?”

“சும்மா இருக்கவனை பார்த்து கோபமா இருக்கியான்னு ரெண்டு தடவை கேளு அதிலயே கோபம் தானா வந்துறும்….இதான் உன் ரூம்…உன் திங்க்ஸ்லாம் இங்க தான் இருக்குது …” என்று ஒரு அறையை காண்பித்தவன்,

அருகிலிருந்த அடுத்த அறையை சுட்டி காண்பித்து “இங்கதான் நான் இருப்பேன், எதாவது வேணும்னா சொல்லு….நான் டயர்டா இருக்கேன்…தூங்கனும் ” என்றுவிட்டு போயேவிட்டான்.

அதிர்ந்து போய் நின்றிருந்தாள் அஞ்சனி.

நிவந்தின் இந்த முகத்தை இவள் இதுவரை கண்டதில்லை.

என்னவாயிற்று? ஏன் அலட்சிய படுத்துகிறான்? இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

அறைவாசலிலேயே நின்றிருந்தவள் மெல்ல தனது பொருட்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள். கண்ணில் கண்ணீர் கரை கடந்தது.

அத்தனை பெரிய அறையில் இவளது இரு சூட்கேஸ்களும் ஒரு பேக்கும் நடுவில் அமர்ந்திருக்க மொத்த அறையிலும் அவைகள் தவிர எதுவுமில்லை. ஆம் ஒரு சிறு கட்டிலோ, நாற்காலியோ படுக்கையோ பாயோ கூட இல்லை.

காலில் மிதிபட்டன தூசி.

வலித்த காலும் உளையும் மனமும் உட்கார வழி தேட, அடுப்படிக்கு சென்று துடைப்பம் கொண்டுவந்து அறையை சுத்தம் செய்து, தன் பேக்கிலிருந்து ஒரு புடவையை எடுத்து விரித்தாள். தன் பெட்சீட்டை வேண்டாமென விட்டுவிட்டு வந்திருந்தாளே.

ஏசியை ஆன் செய்தாள். அது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ஃபேனை சுழலவிட்டு, வழக்கம் போல் அறையை தாழிட்டு உடைமாற்றியவள் அயர்ச்சி காரணமாக படுத்தவுடன் தூங்கிப்போனாள்.

 

ம்டம் என முரசு அறையபடுகிறது. முரசிற்குள் இவள் அடைபட்டிருக்கிறாள். தாங்கமுடியவில்லை.

பதறியபடி விழித்தவளுக்கு மெல்ல சூழல் புரிந்தது. கனவு.

ஆனால் கதவு தட்டப்படுவது நிஜம். தட்டபடும் வேகம் தட்டுபவரின் கோபநிலையை கூறியது.

ஓடிச்சென்று கதவை திறந்தாள். கொதித்தபடி நின்றிருந்தான் நிவந்த்.

“ரூமை உள்ள பூட்டிட்டு தூங்கிற அளவுக்கு என்னை பார்க்க உனக்கு வில்லனா தெரியுது என்ன?….உன் இஷ்டம் இல்லாம அப்டி நான் என்ன பண்ணிருவேன்…?”

இதற்கு இப்படி ஒரு விளக்கம் கூட இருக்க முடியுமா…?

“இ…இல்ல…..நிவந்த்……அது ட்ரெஸ் மாத்றதுக்காக பூட்டினேன்….மறந்துட்டேன்…”

“அதையும்தான் கேட்கேன்….நாம ரேண்டு பேரும்தான இருக்கோம்…அப்புறம் எதுக்கு பூட்டனும்…?”

இதற்கு என்ன சொல்ல?

“எதுனாலும் கதவை சாத்தி வச்சிட்டு செய்தா போதும்….நாம ரெண்டு பேரும் தான் வீட்ல…கதவ தட்டாம உள்ள வர பழக்கம் எனக்கு கிடையாது…”

இதற்கும் தான் இவள் என்ன சொல்வாள்?

“என்ன பதிலை காணோம்….?”

பூம் பூம் மாடாய் தலை ஆட்டினாள்.

“மதியம் சாப்பாட்டுக்கு அப்பாவும் அனித்ராவும் இங்க வராங்களாம்….”

அவன் என்ன சொல்ல வருகிறான்? கேள்வியாய் பார்த்தாள்.

“சமைக்க தெரியும்தான…? இல்ல அதுவும் மறந்துட்டா…?”

இதில் எதோ உள்ளர்த்தம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது அஞ்சனிக்கு. என்னவென்றுதான் புரியவில்லை.

விழித்தாள்.

“இப்டியே முழுச்சுட்டு நில்லு…மதியம் வந்துடும்…..”

சமையலில் சூரப்புலி இல்லையெனினும் சுரைக்காய் கூட்டும், புளிக்குழம்பும் சமைக்க தெரிந்த அளவிற்கு  சமையல் பிடிபடும் அவளுக்கு.

“அதெல்லாம் சமைப்பேன்…”

அவ்வளவுதான் அவன் சென்றுவிட்டான்.

வேகமாக சென்று குளித்து, கொண்டு வந்திருந்த உடைகளில் ஒன்றை மாற்றினாள். தேவைப்படாது என்று பழைய உடைகளை தவிர்த்து புது உடைகள் சிலவற்றை மட்டும் கொண்டுவந்திருந்தாள். இதை உடுத்திக்கொண்டு சமைக்க வேண்டுமா?

அத்தனை பெரிய சமையலறையில் என்னவெல்லாம் இருக்கிறது, எதுவெல்லாம் இல்லை என்று கண்டுபிடிக்கும் முன் அவளுக்கு வேர்த்து கொட்டிவிட்டது.

மீண்டுமாக நிவந்தனை தேடி வந்தாள்.

“க்ராசரி எல்லாம் இருக்குது, ஆனால் வெஜிடபுள்ஸ் எதுவும் இல்ல…வாங்கிட்டு வந்தா சமைக்க ஆரம்பிச்சிருவேன்…”

சில நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான் அவன்.

“வீட்ல இருந்து லெஃப்ட் சைட் கொஞ்ச தூரம் போனா ஷாப்ஃஸ் இருக்கும்….வாங்கிட்டு வந்துடு….அப்பாக்கு ஃபிஷ் பிடிக்கும்…அதையும் செய்துடு…”

என்னவாயிற்று இவனுக்கு?

இதையெல்லாம் இவள் இதுவரை செய்ததே இல்லை.

Next Page

 

Advertisements