இடம் பொருள் காதல் (3)

ன்று பகலில் தனக்கு தெரிந்ததை சமைத்து சாப்பிட்டாள் அஞ்சனி. முழு வீடையும் பெருக்கி முடிப்பதற்குள் மூச்சு வாங்கிப்போனது. நேற்றைய தன் உடைகளையும் அவன் கழற்றி வீசிவிட்டு போயிருந்த அவனது இரவு உடையையும் துவைத்து முடிக்கும்போது மாலை மூன்று மணி ஆகி இருந்தது.

மறு நாளைக்கு தேவையான காய்களை வாங்கி வந்து வைத்தால் நாளை காலை சமைக்க வசதியாக இருக்கும். கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தாள்.

காரை எடுத்துச்செல்வது உசிதம். ஃஸ்டார்ட் செய்து பார்த்தால் பெட்ரோல் போடு என்றது அது.

ஆட்டோபிடித்து கடைக்கு சென்று வந்தாள்.

மனமெங்கும் அவன் வந்ததும் விஷயத்தை நேரடியாக சொல்லாமல் இப்படி சண்டை போட்டதிற்காக எப்படியெல்லாம் வாதாட வேண்டும் என்ற எண்ண சிதறல்.

ஆனால் நேரமாக ஆக அவன் இன்னும் வரவில்லை என்றாகியதும் மனம் கோபத்தை துறந்து ஏக்கத்திற்கு போனது. அவனைப் பார்க்க வேண்டும்….அவன் வேண்டும்.

அவன் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். சுவிட்ச் ஆஃப்.

இரவு ஏற ஏற அவனுக்கு தன் மீது என்ன கோபமாயிருக்கும், எதை செய்தால் அவன் சமாதானமாவான் என்று ஓடியது மனது. யேசப்பா என் தப்பு என்னன்னு சொல்லுங்க…மாத்திக்க ஹெல்ப் பண்ணுங்க….

இரவு முழுவதும் அவன் வரவில்லை.

மறுநாள் பகல் முழுவதும் அவன் எண்ணை அழைத்துப் பார்த்தும் ப்ரயோஜனம் இல்லை. இன்னுமொரு இரவு அவனின்றி இவ்வீட்டில் தாங்காது. மாலை தனது சித்தப்பா வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் அஞ்சனி.

வீட்டின் கேட்டை பூட்டிய நேரம் தெருவில் வந்தது ஆட்டோ. நிறுத்தினாள்.

“ஆதம்பாக்கம் போகனும்…எவ்ளவு?”

“250 ரூபா மேடம்… “ ஆட்டோ கதவை திறந்துவிட்டார் ஆட்டோ டிரைவர்.

“என்னங்க  இப்டி சொல்றீங்க…200 ரூபாயே ரொம்ப ஜாஸ்தி…” அவளிடம் மொத்தமே 200 ரூபாய் தான் இருக்கிறது.

“சரி 210 ரூபாயா தாங்க….ஏறுங்க…”

“இல்லீங்க 200 ரூபாதான்…”

“இவ்ளவு பெரிய வீட்ல இருக்கீங்க…ஒரு பத்து ரூபாய்க்கு கணக்கு பார்க்கீங்க…” ஆட்டோ டிரைவரின் வார்த்தையில் எதோ புரிவது போல் இருந்தது அவளுக்கு.

“இல்லைங்க…என்ட்ட 200ரூபா தான் இருக்குது…”

இவளை ஒரு மாதிரியாய் பார்த்த ஆட்டோகாரர் “சரி வாங்க…” என்றபடி ஆட்டோவை கிளப்பினார்.

 

னி சித்தப்பா வீட்டிற்கு வருவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்ற நினைவுடன் இவள் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பிச்சென்று மொத்தமாய் மூன்று நாளில் சுவற்றில் அடித்த பந்தாய் வந்து நிற்கிறாள்.

இவளது இருப்பிடமும் இவளது வாழ்வின் பொருளுமாய் இருப்பான் காதல் கணவன் என்று இவள் நினைத்து கிளம்பிச்சென்ற கதையென்ன?

மீண்டுமாய் வந்து நிற்கும் கோலமென்ன?

முன்பும் இப்படித்தான் அனாதரவாய் வந்து நின்றாள்.

அப்பொழுது அவள் அப்பா இறந்த நேரம். அப்பாவின் இறுதிச்சடங்கு கூட அடுத்தவர் தயவில் நடந்தேறியது. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பி குடும்பத்துடன்  கிளம்பிச்செல்ல வேண்டிய நிலை இவளுக்கு. முன்பின் அவர்களை இவள் பார்த்ததே இல்லை என்று சொல்லலாம்.

இவள் படித்துக்கொண்டிருந்த கல்லூரியில் ஹாஸ்டலில் இருந்து இவளை படிப்பை தொடர சொல்லமாட்டார்களா அந்த சித்தப்பா குடும்பத்தினர் என்றிருந்தது அவளுக்கு. ஆனால் அவர்கள் அப்படி ஒரு வழி இருப்பதாக யோசிக்க கூட இல்லை.

மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தாள்.

அன்று அதற்கு அவர்கள் மேல் எரிச்சல் இருந்தது. ஆனால் இன்று வேறு விதமாக தோன்றுகிறது.

சித்தப்பாவிற்கு ஆதம்பாக்கத்தில் இரண்டு பெட் ரூம் கொண்ட அப்பார்ட்மென்ட் சொந்தமாக இருக்கிறது, கார் இருக்கிறது.

அவள் ஊரில் ‘அவர்களுக்கு வசதிக்கென்ன குறைச்சல்….வரவு செலவு பார்க்க வேண்டிய பொம்பிள பிள்ளன்னு கவலப்படாம கூட்டிட்டு போறங்க…நமக்கு முடியுமா’ ன்னு மத்த சொந்த காரர்கள் சொல்லியது காதில் விழ சித்தப்பா குடும்பத்துடன் கிளம்பி வந்திருந்த அஞ்சனிக்கு சித்தப்பாவிற்கு வசதி இருந்தும் இவளுக்கு தேவையான அளவு செய்யவில்லை என்ற எரிச்சல் உள்ளுக்குள். அதுதான் ஆரம்பம்.

அதன்பின் இஞ்சினியரிங்கில் இவளை சேர்க்கவில்லை, இவளுக்கு தனிகட்டில் தராமல் அவர்களது 8வயது மகளுடன் கட்டிலை பகிர்ந்துகொள்ள சொன்னார்கள், அடுப்படியில் எடுபிடி வேலை ஏவினார்கள், ஞாயிறு மதியம் சர்ச்சிலிருந்து பசியுடன் வந்தால் பாத்திரம் கழுவ சொன்னார்கள், தினமும் மாலை வீட்டிற்கு வந்ததும் நவிராவுக்கு டியூஷன் எடுக்க சொன்னார்கள் இப்படி அடுக்கடுக்காய் இவளுக்கு அவர்கள் மீது குற்றமும் குறையும் மனகசப்பும் உண்டு.

ஆனால் இன்று “இத்தனை பெரிய வீட்டில் இருந்து கொண்டு 10 ரூபாய்க்கு பார்கீங்களே” என்ற ஆட்டோகாரரின் கேள்வி சித்தப்பா வீட்டிற்கும் பொருளாதார கஷ்டங்கள் இருந்திருக்க கூடும் என்று இப்பொழுது சிந்திக்க வைக்கிறது. அத்தனை பெரிய வீடு அவளது கணவனுடையது என்றாலும் இவள் இப்பொழுது வெறும் கையுடன் நிற்கவில்லையா? உலகத்தின் பார்வைக்கும் உள்நிலைக்கும் எத்தனை வித்யாசமிருக்கிறது?

ஞ்சனியின் சூழலுக்கு சித்தப்பா பணக்காரர்தான். ஆனால் சித்தப்பா குடும்பத்திற்கு இவளுக்கும் சேர்த்து செலவு செய்யும் வசதி இருந்திருக்குமா என்று இப்பொழுது தோன்றுகிறது.

அதோடு அவர்கள் இவளுக்கு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் என்ன? மற்ற உறவினர்களைப் போல விலகி நின்றிருக்கலாமே…? இத்தனைக்கும் சித்தப்பா அப்பாவின் சொந்த தம்பி கூட கிடையாது….. ஆனால் இவளுடன் பகிர்ந்து கொண்டதால் அவர்களும்தானே கஷ்டபட்டிருப்பார்கள். நவிராவிற்கு இவளுடன் கட்டிலை பங்கிட வேண்டிய அவசியம் என்ன? சித்தி இவளுக்கு சமைக்க வேண்டிய அவசியம் என்ன? இவள் படிப்புக்கு அவர்கள் செலவழித்திருக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இவளுக்கு இருந்திருக்க வேண்டிய நன்றி உணர்ச்சி எங்கே போனது?

கூட வைத்து, சாப்பாடு போட்டு, பிகாம் படிக்க வைப்பது அவர்களுக்கு பெரிய விஷயமா என்று யோசித்த மனது அது தன் வரையில் எவ்வளவு பெரிய விஷயம் என்று ஏன் எண்ணிப்பார்க்கவே இல்லை?

அதை அவர்கள் செய்யாமல் போயிருந்தால் இவள் நிலை என்னவாகி இருக்கும்?

அவர்களுடன் தொடர்புடைய அத்தனை மனகசப்புகளும் பணத்தோடு சம்பந்தமுடையாதாக தோன்றுகிறதே….இல்லையோ….இவளை வேலை சொல்லி வதைத்தது?

முன்பெல்லாம் தினமும் காலை, இரவு மட்டுமின்றி, ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வந்ததும் பசிக்க பசிக்க சமையலறையில் சித்தியுடன் சேர்ந்து பத்துபேருக்காவது சமைக்க வேண்டும். சாப்பிட்ட பின் அந்த வாரத்திற்கான இவளது துணிகளை துவைக்க வேண்டும். முறுமுறுப்பாய் இருக்கும்.

இப்பொழுதோ சித்திக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதோடு வெகு தூரத்திலிருந்து ஹாஃஸ்டலில் வந்து தங்கி படிக்கும் பிள்ளைகள் சிலரை ஒவ்வொரு ஞாயிறும் வீட்டிற்கு கூட்டி வந்து வீட்டு சாப்பாடு போடுவார் சித்தி. அந்த சமையலில் இவள் உதவுவாள்.

அதற்குதான் இவளுக்கு எரிச்சலாக வரும். ஆனால் சித்தியின் உதவும் குணம் இன்றுதான் புரிகிறது. பசியோடு நின்றுகொண்டு அடுத்தவருக்கு சந்தோஷமாக சமைப்பதென்றால்……ஒரு நாள் இவள் அப்படி நின்றதில் தலை சுற்றிப் போகவில்லையா?

ஆக நிவந்துடன் இவள் திருமண விஷயத்தில் அவர்கள் நடந்து கொண்டதை தவிர அனைத்திலும் சித்தி சித்தப்பாவின் நடவடிக்கைகள் நியாயமென்றாகிறதே…

 

நிவந்த் விஷயத்திலும் உண்மையில் நியாயம் தவறி நடந்திருக்கிறார்களா?

படித்து முடித்த காலத்தில் தான் இந்த நிவந்தின் அலுவலகத்தில் ட்ரெய்னியாக தேர்வானாள். 6 மாதம் பயிற்சி காலம். அதன்பின் ஸ்க்ரீனிங் எக்ஸாம். தேர்வானால் வேலை நியமனம் என்ற நிலையில்,

முதல் முறை நிவந்தை கண்டதுமே இவள் மனம் சரிய தொடங்கியது என்றால், அவனது ஒவ்வொரு நடவடிக்கை, பிறரிடம் பழகும் பாங்கு, நியாமான சிந்தனை, வேலை பார்க்கும் திறன் ஒவ்வொன்றையும் காண காண காதலில் சரணாகதி ஆனது.

நிவந்த் மீது இவள் மனம் அலைபாய்கிறது என்று உணர்ந்த சித்தி இப்படி ஆசையை வளர்த்துக்கொள்ளாதே…இது நிலாவை பிடிக்கும் முயற்சி என்று  அறிவுரை சொன்னதன் நோக்கம் இவளின் நன்மை என்று இப்பொழுது புரிகிறது. அன்று எரிச்சல் மட்டுமே வந்தது.

அடுத்தும் நிச்சயமே முடிந்த பின்பும் ஆயிரம் நிபந்தனைகள். அலுவலகத்தில் ட்ரெய்னிங் பீரியட் அப்பொழுதுதான் முடிந்திருந்தது அஞ்சனிக்கு

இனி வேலைக்கு போக்கூடாது, இவர்களிடம் கேட்காமல் அஞ்சனியை நிவந்த் எங்கும் அழைத்துப் போக கூடாது…இரவு ஏழு மணிக்குள் அவள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இப்படி ஏகபட்ட கெடுபிடிகள்.

நிவந்தையும் இவளையும் எவ்வளவாய் அவர்கள் நம்பவில்லை, எத்தனை கீழ்தரமாய் நினைக்கிறார்கள்  என்று அப்பொழுது இவளுக்கு கோபமாய் வரும்.

ஆனால் கடந்த இரு இரவுகளில் தனியாய் உட்கார்ந்திருந்தபொழுது என்ன என்ன நினைவுகள் எல்லாம் வந்து இவளை பயம் காட்டின? நிவந்திற்கு ஆக்சிடெண்ட் ஆகி இருக்குமோ….இனி வரவே மாட்டானோ…இப்படி எத்தனை எதிர்பதமான நினைவுகள்….? அவன் தன் பார்வைக்குள் இருந்தால் போதும் என்று இவள் இன்னமும் தவிக்கவில்லையா?

கண்ணால் காணமுடியாத சூழலில் மனம் பாதுகாப்பிற்கான உறுதியை பலமடங்கு எதிர்பார்ப்பதும்….எதிர்பதமாய் நினைத்து கலங்குவதும் அன்பின் அடையாளமன்றோ…. பாதுகாப்பு முயற்சி தாய்மையின் வெளிப்பாடு அன்றோ….குஞ்சுகளை தாய் சிறகில் அடைப்பது குஞ்சின் மீதான அடக்கு முறையோ, அவநம்பிக்கை செயலோ கிடையாதே…. அது தாய்மையின் தியாக அடையளமல்லவா? எதுவானாலும் என்னை தாண்டியே என் பிள்ளைகளை தொடவேண்டும் என்ற நினைவின் செயலாக்கம் அன்றோ….

ஆக சித்தி இவளை மகளாக பார்த்திருக்கிறாள் ஆனால் இவள் அவர்களை தன்னிடம் கடன் பட்ட வேலைக்காரர்கள் போல் பார்த்திருக்கிறாள்….

அப்படித்தானா? ஆனால் நிவந்தின் தந்தையிடம் சென்று இத்திருமணம் வேண்டாம் என்று சித்தி சொன்னதாக நிவந்த் சொன்னானே…?

Next Page

Advertisements